- சு.துரைக்குமரன், புதுக்கோட்டை -

‘பழையன கழிதலும்; புதியன புகுதலும் வழுவல’ என ஏற்றுக்கொள்வது தமிழ்மரபின் பரந்தபார்வை. தமிழ் மொழியின் விசாலப்பார்வை தமிழ் ஆர்வலர்களிடமும் வேண்டிய ஒன்று. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் ஒலிக்க அனைவரும் தன் பங்குக் கடமையாற்ற நல்ல தருணம் இது. அச்சில் வெளிவரும் படைப்புகளின் மீது உலகத்தமிழ் வாசகர் அனைவரின் பார்வையையும் விழச்செய்யும் கூறுகள் விவாதத்திற்குரியது. அதற்கான பொருட்செலவும் பெருமுயற்சியும் அனைவராலும் இயலாதது. ஆனால் அத்தகைய தடைகளைத் தகர்த்துவிட்டது கணினி. தமிழையும் அதன் பெருமையையும் உலகமெங்கும் உயர்த்திப் பிடிக்க இணையத்தின் மூலம் வழி
ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழியின் பன்முகங்களை உலகறியச் செய்யவும் தமிழ் மொழி வரலாற்றில் நமக்கான இடத்தைப் பதிவு செய்யவும் இணையத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

தமிழையும் தன்னையும் வளர்க்க நினைக்கும் ஆர்வலர்களை இணையத்தின் வாய்ப்புகள் வரவேற்கின்றன. புலம் பெயர்ந்த
தமிழர்களிடமும், புகலிடத் தமிழர்களிடமும் தான் தமிழ்ப்பற்று தளராது காலூன்றியுள்ளதோ என்ற ஐயம் எழுகின்றது. காரணம், இணையப் பயன்பாட்டில் அவர்களின் செயல்பாடு. தமிழையும் தமிழ்நாட்டையும் தாயாகக் கொண்ட தமிழர்களைக் காட்டிலும் வட அமெரிக்கா, சுவிஸ், பிரிட்டன், நார்வே, பாரிஸ், ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், கொரியா, ஜப்பான், மலேசியா, இலங்கை கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் இணையத் தமிழ் வளர்ச்சியில் முனைப்புடன் பங்காற்றுகின்றனர். அவர்களை ஒப்பிடும்போது தாய்த்தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.
உன்னதமானது. அதன் செயல் தன்மையை உணர்ந்து தாயகத் தமிழரும் கைக்கொள்ள வேண்டியது இக்காலத்தின் தேவை. தமிழைப் பயில்வோரும் புழங்குவோரும் அறிவியலையும் அதன் தொழில்நுட்பத்தையும் சரியாக கையாள முடியாது என்ற தாழ்வான எண்ணம் பரவலாக உண்டு. ஆனால், அனைவருக்கும் கணினியறிவு தேவை என்பது இக்காலத்தின் கட்டாயம்.
கணினியில் உலவ ஓரளவு ஆங்கில அறிவும் அடிப்படைக் கணினி அறிவும் தீராத ஆர்வமும் இருந்தாலே போதும். இன்று அரசும் பல்வேறு கணினி நிறுவனங்களும், தனியார் தமிழ் ஆர்வலர் அமைப்புகளும் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை மிகவும் எளிதாக்கி விட்டன. தட்டச்சுத் தொழில்நுட்பமும், முழுமையான ஆங்கில அறிவும் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழின் மீது தணியாத காதலும், உலகத் தமிழரோடு உறவாட வேண்டும் என்ற தீராத ஆர்வமும் இருந்தால் போதும். இவை ஆர்வலர்களைப் புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இணைய உலகில் தமிழ்ச் சிற்றிதழ்களின் பங்கிற்கு இணையான பங்களிப்பை இணைய இதழ்கள் செய்து வருகின்றன. அவற்றின் செல்நெறி தற்போது கண்டுகொள்ளத்தக்கது. இந்நெறியின் செம்மையை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. தமிழில்
வெளிவரும் குறிப்பிடத்தகுந்த சில இதழ்களின் அறிமுகமும் போக்குகளும் இக்கட்டுரையில் விவாதிக்கப்பெறுகின்றன.
திண்ணை: (www.thinnai.com)
‘திண்ணை ஒரு லாபநோக்கற்ற இணைய இதழ்’ என்ற வாசகத்துடன் உலாவரும் இவ்விணைய இதழைத் தமிழ்நாட்டிலிருந்து கோ.ராஜாராமும் அவருடன் இணைந்த ஆசிரியர் குழுவும் நடத்தி வருகிறது. இவ்விதழ் ஒரு வார இதழாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதுப்பிக்கப் படுகிறது. இவ்விதழ் அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில்நுட்பமும், கலைகள், சமையல், இலக்கியக் கட்டுரைகள், நகைச் சுவையும் வித்தியாசமானவையும், கடிதங்கள், அறிவிப்புகள் என்ற பகுதிகளைத் தாங்கி வருகிறது.
பதிவுகள்: (www.pathivukal.com)
‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்’ என்ற வாசகத்துடன் உலாவரும் இவ்விணைய இதழை கனடாவிலிருந்து
வ.ந.கிரிதரன் என்பவர் நடத்தி வருகிறார். மாத இதழாக வெளிவரும் இவ்விதழில் கட்டிரை, கவிதை, மொழிபெயர்ப்புகள், நாவல், சினிமா, நூல் அறிமுகம், விவாதம், இணையதள அறிமுகம், நிகழ்வுகள், அரசியல் என அனைத்துப் பிரிவிலும் ஆக்கங்கள் அமைந்துள்ளன.
வார்ப்பு: (www.vaarppu.com)
முழுக்க முழுக்கக் கவிதைக்கான இதழாக, ‘நீங்களும் எம்மோடு இணையுங்கள் ஒரே இடத்தில் ஒன்றாய் சேர்ந்து பலமாய் இருப்போம்’ என்ற வாசகத்துடன், இன்றுவரை 172 கவிஞர்கள், 634 கவிதைகள் என்ற செய்தியுடன் வார இதழாக வெளிவருகிறது. இவ்விதழில் கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் ஆகிய பகுதிகள் பார்க்கக் கிடைக்கின்றன. ஆசிரியர் குழு பற்றிய குறிப்புகள் இல்லை. அவை இடம் பெற்றால் நலம் பயக்கும்.
தமிழ்த்திணை: (www.tamilthinai.com)
‘முதல் ஆய்வு இணைய இதழ்’ என்ற வாசகத்துடன் முனைவர் நெடுஞ்செழியன் மற்றும் நண்பர்களால் தொடங்கப்பட்டு உலாவரும் தமிழ் ஆராய்ச்சிக்கான இணைய இதழ். இவ்விதழில் திணையினர், கட்டுரைகள், விருந்தினர் பக்கம், கருத்தரங்குகள், நூல் அறிமுகம், இதழ் அறிமுகம், தமிழ்ப் பேரவை, தளங்கள், தமிழாய்வுகள் என்ற பகுதிகள் அமைந்துள்ளன.
தோழி . காம்: (www.thozhi.com)
முழுக்க முழுக்கப் பெண்களுக்காக வாரம் இருமுறை வெளியாகும் இருமொழி வலைப்பத்திரிக்கை. தமிழகத்தின் ஆர்எம்கேவி (RmKV) ஆடை நிறுவனத்தின் முயற்சியில் வெளிவரும் இவ்விதழில் பெண்களுக்கென தனித்தனி வலைப்பூக்கள் (Weblogs) வசதி வழங்கப்படுகிறது. ஆளுமைகள், தாய்மை, அழகு, அறுசுவை, முன்னேற்றம், வாழ்க்கை, வாசிப்பு, நிகழ்வுகள், மனவெளி, என்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகளை வழங்குகிறது இவ்விதழ்.
தமிழம் - சிற்றிதழ்ச்செய்தி: (www.thamizham.com)
பொள்ளாச்சி நசன் என்பவரால் இலக்கிய இணைய இதழாக வெளிவருகிறது. இவ்விதழில் படைப்புகள் கவிதை, துணுக்குகள், சிறுகதை, கட்டுரை என்னும் பன்முக வடிவில் அமைகின்றன.
இவ்விதழ்கள் தவிர திசைகள், அம்பலம்,
ஊடறு, ஆறாம்திணை, தமிழோவியம், நிலாச்சாரல், தமிழ் சிபி,
மரத்தடி போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளி வருகின்றன.
இணைய இதழ்கள் பொதுப்பண்புகள்:
தற்போது வெளிவரும் இணைய இதழ்களை ஒப்பு நோக்கிப் பார்க்கும் போது
பின்வரும் பொதுப்பண்புகள் உள்ளன.
1. எழுத்துருப் பிரச்சனை என்பது எல்லோரும் எதிர்கொள்ளும் ஒன்றாக
இருப்பதால் அதனைச் சரிசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா
இதழ்களும் ஒருங்குறி (UNIOCODE) முறைக்கு மாறிவிட்டன. ( வார்ப்பு
இதழ் தவிர).
2. அச்சில் வெளிவரும் இதழ்களைப் போன்றே படப்புகளுக்கான பொறுப்பு
அந்தந்த படைப்பாளிகளைச் சார்ந்ததாக அமைக்கப்பெற்றுள்ளது.
3. தமிழ் மொழியின் கலை, பண்பாட்டுப் பகிர்வுகள், தேடல்கள்,
பார்வைகள், வளர்ச்சி குறித்த பன்முகப் பார்வைகளை உள்ளடக்கியதாகப்
படைப்புகள் பெரும்பாலும் அமைகின்றன.
4. உலக அளவில் உள்ள தமிழ் வாசகர்கள், படைப்பாளிகளை இணைய இதழ்
படைப்புகள் எட்டுகின்றன.
5. உலகத்தமிழர்களை, படைப்பாளிகளை, வாசகர்களை ஒருங்கிணைக்கும் உறவுப்
பாலமாக இணைய இதழ்கள் அமைகின்றன.
6. உடனடியாக மின்னஞ்சல் மூலமாக எழுதிய படைப்பாளியோடு கருத்துப்
பரிமாற்றம் நிகழ்த்தும் வசதி உள்ளதால் பன்முக
ஆய்வுகளுக்கு இணைய இதழ்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன.
7. ஒரு இதழில் தொடர்ந்து எழுதிவரும் படைப்பாளிகளின் படைப்புகளை
ஒருங்கே காண வழிசெய்யப்பட்டுள்ளது அச்சிதழ்களில் இல்லாத சிறப்பு.
8. இணைய இதழ்களில் எழுதும் படைப்பாளிகள் பெரும்பாலும் இணைய இதழ்களில்
மட்டுமே எழுதுபவர்களாக உள்ளதால்
படைப்புக்களின் தரத்தில் ஒரு நீர்த்த போக்கு காணப்படுகிறது. இதனால்
இலக்கிய விவாதங்கள் குறிப்பிட்ட மத, இனங்களைப்
போற்றுவதாகத் தூற்றுவதாக அமைவது தவிர்க்க இயலாததாகிறது. இது களையப்பட
வேண்டும்.
9. இணைய இதழ்களின் ஆசிரியர் பற்றிய குறிப்புகள் புகைப்படங்களோடு
வெளியிடலாம்.
இணைய இதழ்கள் மேம்பட:
1. இணைய இதழ்களை அறிமுகம் செய்து வைப்பதன் மூலம் தமிழகப்
படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், இணைய இதழ்களில்
பங்கேற்கலாம்.
2. இணைய இதழ்களில் பங்கேற்பதன் மூலம் அவற்றின் தரத்தை மேலும்
செழுமைப்படுத்தி ஆரோக்கியமான உடனடி விவாத களத்தை அமைக்க இயலும்.
3.தமிழ் மொழியின் கலை, இலக்கியம், பண்பாட்டுக் கூறுகளைச் சிதையாமல்
உலக அளவில் பதிவாக்க முடியும்.
4.தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் குறித்த விரிவான ஆய்வுகள் இணைய
இதழ்கள் மூலம் செய்யப்படும்போது தற்போது உள்ள நீர்த்த கருப்
பொருள்கள் மேம்படுத்தப்பெறும்.
5.இணைய இதழ்களின் பயன்பாட்டால் குறுகிய வட்டத்தை விட்டு உலக அளவில்
உயர்தனிச் செம்மொழியின் சிறப்பை எடுத்துக்காட்ட இயலும்.
6.பல்வேறு கருத்தரங்குகளை இணைய இதழ்களில் இணைய வலையேற்றத்தின் மூலம்
நடத்துவதால் தமிழ் இலக்கிய இலக்கணப் படைப்புகளை உலக அளவில் கொண்டு
செல்லமுடியும்.
இணைய இதழ்கள் குறித்த ஆய்வு என்பது விரிந்த களம். இணைய இதழ்களின்
கட்டமைப்பு, உள்ளடக்கம் போன்றவை தமிழகப்
படைப்பாளிகளால் மேம்படுத்தப் பெற்றால், தமிழின் பரப்பும் எல்லையும்
விரிவடைந்து உலக அளவில் நிலைத்த இடத்தைப்பெறும் என்பது உறுதி.
மின்னஞ்சல் முகவரி :
WWW.duraiaadav@yahoo.co.in