மீள்பிரசுரம்
http://periyardk.org
அம்பேத்கர் : உலகத் தரமிக்க தயாரிப்பு
ஒரு
வழியாக பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கர் படம்
தமிழில் மொழி மாற்றத்தோடு திரையரங்கிற்கு வந்துள்ளது. சென்னை நகரில் பல
திரையரங்குகளில் காலை 11 மணி காட்சியாகவோ, அல்லது விடுமுறை நாட்களில்
ஏதேனும் ஒரு காட்சியாகவோ தான் திரையிடப்படுகிறது. அதிகாரச் செல்வாக்கு
மிக்கவர்களால் விநியோகிக்கப்படும் “எந்திரன்கள்” என்றால், அந்தப்
படத்தைத் தவிர வேறு எந்தப் படமும் திரையரங்குகளில் ஓட முடியாது. ஆனால்,
அடக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய் திகழ்ந்த ஒரு மாபெரும்
புரட்சியாளருக்கு தமிழ்நாட்டில் இதுதான் நிலை.
இந்தப் படம் சர்வதேச திரைப்படங்கள் வரிசையில் இடம் பெறக்கூடிய
தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அம்பேத்கர் தனி வாழ்க்கை என்பதைவிட, அம்பேத்கரின் அரசியல் பணிகளுக்கு
கூடுதல் அழுத்தம் தந்திருப்பது இந்தப் படத்தின் சிறப்பாகும். இந்த
வகையில் திராவிடர் கழகம் தயாரித்த பெரியார் படத்தை, அம்பேத்கர் படம்
விஞ்சி நிற்கிறது என்று உறுதியாக சொல்ல முடியும். படத்தைப் பார்த்த
பலரின் ஒருமித்த கருத்தும் அப்படித்தான் இருக்கிறது. பெரியாரின்
போராட்டங்கள், பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவரது வாழ்க்கை நிகழ்வுகளே
பெரியார் படத்தில், அதிக காட்சிகளாக்கப்பட்டன.
அம்பேத்கராக நடித்துள்ள நடிகர் மம்முட்டி, அம்பேத்கராகவே வாழ்ந்து
காட்டியிருக்கிறார். அம்பேத்கரை படத்தில் மட்டும் பார்த்த இன்றைய
தலைமுறை, மம்முட்டியின் தோற்றப் பொலிவில் உணர்வு பூர்வமாக ஒன்றி
விட்டது என்றே கூறலாம். காந்தியார் மீது அம்பேத்கர் வைத்த நேர்மையான
விமர்சனங்கள், சென்சார் கத்தரிக்கோலுக்கு உள்ளாகாமல், இடம்
பெற்றிருப்பது படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பு அம்சமாகும். சாதிய
ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வறுமைச் சூழலில் பிறந்த ஒரு மனிதன் இந்த
இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு தமது அறிவாற்றலால் உயர்ந்து, அந்த
ஆற்றலையும் அறிவையும் சமூகத்துக்குப் பயன்படுத்திய உன்னத வரலாற்றை -
இப்படம், இளம் தலைமுறைக்கு எடுத்து விளக்குகிறது. அம்பேத்கர் படமாகி
விடக் கூடாது; அவர் பாடமாக வேண்டும் என்ற கருத்துக்கு உரமிட்டுள்ள
இத்திரைப்படத்தை குடும்பத்தோடும், நண்பர் களோடும் பார்க்க வேண்டியதை
ஒரு சமுதாயக் கடமையாகவே கருத வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.
இதில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.
திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அரசியல் நிகழ்வான லண்டன் வட்ட
மேசை மாநாடு இரட்டை வாக்குரிமைக்கு ஆதரவாக முடிவெடுத்தது பற்றிய
உரையாடல்கள் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தாலும் இரட்டை
வாக்குரிமைக்கான விரிவான விளக்கங்கள், இடம் பெறாத காரணத்தால் அது
தொடர்பான அய்யங்களை படம் பார்த்த பல இளைஞர்கள் எழுப்புகிறார்கள். எனவே
அது பற்றிய சில விளக்கங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.
1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் ‘கம்யூனல் அவார்டு’ என்று
அழைக்கப்படும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமைக்கான
அறிவிப்பு லண்டனிலிருந்து மன்னரின் ஆணையாக அறிவிக்கப் பட்டது. அதில்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமை பற்றி கூறப்பட்டுள்ள
பகுதிகள்:
“தாழ்த்தப்பட்ட வகுப்புகளை”ச் சேர்ந்தவர்களில் வாக்களிக்கும் தகுதி
படைத்தவர்கள் பொதுத் தொகுதிகளில் வாக்களிப்பார்கள். இவ்வழியில் மட்டும்
இவ்வகுப்பினர் சட்டமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கு அனேக
மாய் நீண்ட காலத்திற்கு வாய்ப்பிருக்காது என்ற உண்மைகளைக் கருத்தில்
கொண்டு அட்டவணையில் காட்டப்பட்டிருப்பது போல் அவர்களுக்கென்று இடங்கள்
ஒதுக்கப்படும். இந்த இடங்கள் தனித் தொகுதிகளில் நடைபெறும் தேர்தலைக்
கொண்டு நிரப்பப்படும்; இந்தத் தொகுதியில் வாக்களிக்கத் தகுதி படைத்த
“தாழ்த்தப்பட்ட வகுப்பினர்” மட்டுமே வாக்களிக்கும் உரிமை
பெற்றிருப்பார்கள். முன்பே கூறியதுபோல், இப்படியொரு தனித் தொகுதியில்
வாக்களிக்கிற எவரும் பொதுத் தொகுதியிலும் வாக்களிக்க உரிமை படைத்தவராய்
இருப்பார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெருந்தொகை யினராய் இருக்கும்
பகுதிகளைத் தெரிந் தெடுத்து அங்கெல்லாம் இந்தத் தனித் தொகுதிகள்
அமைக்கப்பட வேண்டும் என்பதும், சென்னையில் தவிர இத் தொகுதிகள்
மாகாணத்தின் முழுப் பரப்பையும் அளாவியதாய் இருக்கக் கூடாது என்பதே
நோக்கமாகும்.”
- இந்த அறிவிப்பை எரவாடா சிறையிலிருந்த காந்தி கடுமையாக
எதிர்த்தார்.லண்டனிலுள்ள தலைமை அமைச்சருக்கு 1932 ஆகஸ்ட் 18 ஆம் நாள்
(அறிவிப்பு வந்த அடுத்த நாளே) எரவாடா சிறையிலிருந்து காந்தி கடிதம்
எழுதினார். அதில் இடம் பெற்றிருந்த வாசகம்:
“சிறுபான்மையினரின் பிரதிநிதித்து வம் பற்றிய பிரிட்டிஷ் அரசின் முடிவை
நான் படித்துப் பார்த்தேன்; அது குறித்து ஆழ்ந்து யோசித்தேன். சர்.
சாமுவேல் ஹோருக்கு நான் எழுதிய கடிதத்தை ஒட்டியும் 1931 நவம்பர் 13 ஆம்
நாள் புனித ஜேம்ஸ் அரண்மனையில் வட்ட மேசை மாநாட்டின் சிறுபான்மையினர்
குழுக் கூட்டத்தில் நான் செய்த பிரகடனத்தை ஒட்டியும், தங்கள் முடிவை
உயிரைக் கொடுத்தும் எதிர்க்க வேண்டிய வனாய் உள்ளேன். நான் இப்படி செய்
வதற்குள்ள ஒரே வழி; உப்புடன் அல்லது உப்பு இல்லாமல் நீரும் சோடாவும்
தவிர வேறு எவ்வகை உணவும் உட்கொள்ளா மல் சாகும்வரை நீடித்து உண்ணாவிரதம்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பிரிட்டிஷ் அரசினர் தாமாகவோ, பொது
மக்களின் கருத்து நெருக்குதலுக்கு ஆளாகியோ தமது முடிவை மாற்றிக்
கொண்டு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வகுப்பு வழிபட்ட தேர்தல் தொகுதி
களுக்கான திட்டத்தை விலக்கிக் கொள் வார்களானால் உண்ணாவிரதம் முடிந்து
விடும்; தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகள், எவ்வளவு விரிவான
வாக்குரிமை என்றாலும் பொது வாக்குரிமைப்படி பொதுவான தேர்தல்
தொகுதியினால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேற்கூறிய முடிவை மேலே
சொல்லப் பட்ட ஆலோசனைப்படி மாற்றிக் கொள்ள வில்லை என்றால் அடுத்த
செப்டம்பர் 20 ஆம் நாள் நடுப்பகலிலிருந்து உண்ணா விரதம் ஆரம்பமாகும்.”
- இது காந்தி எழுதிய கடிதம். உண்ணாவிரதத்தையும் காந்தி தொடங்கினார்.
காந்தியின் உண்ணாவிரதத்தை மய்யமாக வைத்து காந்தியின் உயிரைக் காப்பாற்ற
அம்பேத்கருக்கு கடுமையான அழுத்தங்கள் தரப்பட்டன. (அப்போது வெளிநாட்டு
பயணத்தில் இருந்த பெரியார் மட்டும் - காந்தியின் மிரட்டலுக்கு பணிந்து
தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த உரிமையை இழந்து விடாதீர்கள் என்று
எச்சரித்து காந்திக்கு தந்தி அனுப்பினார்) அந்த நிலையில் அம்பேத்கர்
இரட்டை வாக்குரிமையை விட்டுத் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இது பற்றி தனது நிலையை அம்பேத்கர் இவ்வாறு விளக்கினார்:
“என்னைப்பொறுத்த வரை அப்போது எனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய மிகக் கொடிய
தரும சங்கடம் வேறு எவருக்கும் ஏற்பட்டதில்லை என்று சொல்வது மிகையாகாது.
எவரையும் திக்குமுக்காட வைக்கும் நிலைமை அது. இரு மாற்று வழிகளில்
ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியவனாய் இருந்தேன். பொதுவான மனிதத்
தன்மையான ஒருவன் என்ற முறையில் நிச்சய மரணத்திலிருந்து காந்தியைக்
காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கிருந்தது. தீண்டாத மக்களுக்குத் தலைமை
அமைச்சர் வழங்கிய அரசியல் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய சிக்கலும்
எனக்கிருந்தது. நான் மனிதத் தன்மையின் அறைகூவலை ஏற்றுக் காந்தியாரின்
உயிரைக் காப்பாற்று வதற்காக, அவருக்கு மன நிறைவு தரக் கூடிய விதத்தில்
வகுப்புநலத் தீர்ப்பை மாற்றியமைக்க உடன்பட்டேன். இந்த உடன்பாடுதான்
பூனா ஒப்பந்தம் என்று அறியப்படுகிறது.”
பூனா ஒப்பந்தப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ‘இரட்டை வாக்குரிமை’ முறை
நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக பொதுவான தேர்தல் தொகுதிகளிலேயே
தாழ்த்தப்பட்டோருக்காக தனித் தொகுதிகள் (ரிசர்வ் தொகுதி)
ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் எத்தனை தனித் தொகுதிகள் என்று
நிர்ணயிக்கப்பட்டன. இது பற்றி பூனா ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள
பகுதிகள் (தாழ்த்தப்பட்டோர் போட்டியிடும்): இந்த இடங்களுக்கான தேர்தல்
கூட்டுத் தேர்தல் தொகுதிகள் மூலமாய் நடைபெறும் என்றாலும் பின்வரும்
நடைமுறைக் குட்பட்டதாய் இருக்கும்;
“ஒரு தொகுதியில் பொதுவான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப் பட்டுள்ள
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அனைவரும் ஒரு தேர்தல் குழாம் ஆவர்; இந்தத்
தேர்தல் குழாம் ஒற்றை வாக்கு முறையில் இந்த ஒதுக்கீட்டு இடங்கள்
ஒவ்வொன்றுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த நான்கு
வேட்பாளர்களின் பட்டியல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்; இந்த ஆரம்ப நிலைத்
தேர்தலில் மிக அதிக வாக்குகளைப் பெறும் நால்வர் பொதுவான தேர்தல்
தொகுதியின் மூலமான தேர்தலுக்கு வேட்பாளர்களாய் இருப்பார்கள்.”
- இதுவே பூனா ஒப்பந்தத்தின் முக்கிய பகுதி.
இரட்டை வாக்குரிமை என்ற வகுப்பு நலத் தீர்ப்பு தந்த அழுத்தமான உரிமைகளை
பூனா ஒப்பந்தம் பறித்து விட்டது என்றே அம்பேத்கர் கருதினார். இது பற்றி
அம்பேத்கர் எழுதியது:
“பூனா ஒப்பந்தம் தீண்டாத மக்களுக்கு 148 இடங்கள் அளித்தது என்பதும்,
வகுப்பு நலத் தீர்ப்பு (இரட்டை வாக்குரிமை) அவர்களுக்கு 78 இடங்கள்
மட்டுமே கொடுத்திருந்தது என்பதும் மெய்தான். ஆனால் இதிலிருந்து
வகுப்புநலத் தீர்ப்பு கொடுத்ததைவிடவும் பூனா ஒப்பந்தம் அவர்களுக்கு
அதிகமாய் கொடுத்தது என்ற முடிவுக்கு வருவது வகுப்புநலத் தீர்ப்பு
தீண்டாத மக்களுக்கு என்ன கொடுத்தது என்பதைக் காணத் தவறுவதே ஆகும்.
வகுப்புநலத் தீர்ப்பு தீண்டாத மக்களுக்கு இரு நன்மைகளைக் கொடுத்தது:
"தீண்டாத மக்களின் தனித் தேர்தல் தொகுதியால் தேர்ந்தெடுக்கப்பட
வேண்டியவையும் தீண்டாத மக்களைச் சேர்ந்தவர்களால் நிரப்பப்பட வேண்டி
யவையுமான இடங்கள் நிர்ணயமான பங்களவு. 2) இரட்டை வாக்கு - தனித் தேர்தல்
தொகுதிகள் மூலமாகப் பயன் படுத்துவதற்கு ஒன்று, பொதுவான தேர்தல்
தொகுதிகளில் பயன்படுத்துவதற்கு மற்றொன்று. இப்போது பூனா ஒப்பந்தம்
இடங்களின் நிர்ணயமான பங்களவைக் கூடுதலாக்கியது என்றால், இரட்டை
வாக்கிற்கான உரிமையைப் பறித்துக் கொண்டது. இடங்கள் இவ்விதம்
கூடுதலாக்கப்பட்டதை இரட்டை வாக்கு பறி போனதற்கான இழப்பீடாகக் கருத
முடியவே முடியாது. வகுப்புநலத் தீர்ப்பு கொடுத்த இரண்டாவது வாக்கு விலை
மதிப்பற்ற சிறப்புரிமை ஆகும். அரசியல் கருவி என்ற முறையில் அதற்குள்ள
மதிப்பைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு தொகுதியிலும் தீண்டாத
மக்களின் வாக்கு வலிமை பத்துக்கு ஒன்று என்பதாகும். இந்த வாக்கு
வலிமையைச் சாதி இந்து வேட்பாளர்களின் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள
உரிமை இருக்குமானால், தீண்டாத மக்கள் பொதுத் தேர்தலுக்குரிய பிரச்சினை
இன்னதென்று கட்டளையிட முடியாவிட்டாலும் அதனை நிர்ணயிக்கக் கூடிய
நிலையில் இருப்பார்கள்” - என்று குறிப்பிட்டார்.
பூனா ஒப்பந்தத்தில்கூட போட்டியிடுகிற தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களின்
பட்டியலைத் தேர்வு செய்யும் உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே
வழங்கப்பட்டிருந்தது. அந்த உரிமையும் வி.வி.கிரி (முன்னாள் குடியரசுத்
தலைவராக இருந்தவர்) தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டது.
இப்போது கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு அவர்களால் நியமனம்
செய்யப்படும் வேட்பாளர்களே ரிசர்வ் தொகுதி வேட்பாளர்கள் என்ற நிலை
வந்து விட்டது!
http://periyardk.org/pm.php?subaction=showfull&id=1292687745&archive=&start_from=&ucat=1& |