புலம்பெயர் தமிழ் இலக்கியம்: வளர்ந்து வரும்
கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிச் சில குறிப்புகள்...
- பண்டிதர் பிரம்மராயர் -
 இலக்கிய அமர்வுகள் ஆக்கபூர்வமானவையாக, பயனுள்ள கருத்துப்
பரிமாற்றங்களைக் கொண்டவையாக இருக்க
வேண்டுமெனக் கருதுபவன் நான். ஆயினும் 'தொராண்டோ'வில் நடைபெறும்
பெரும்பாலான இந்நிகழ்வுகள் பயனற்ற , அரைத்தமாவையே
அரைக்கும் வகையிலான, எந்தவித தீவிர ஆய்வு
முயற்சிகளுமற்ற தட்டையான நிகழ்வுகளாகவே இருந்து வருவது ஏமாற்றத்தை
அளிப்பதாகவிருக்கிறது.
மேலும் மேற்படி நிகழ்வுகளில் பங்குபற்றும் படைப்பாளிகள் பலருக்கு தம் கருத்துகளைக்
கூறுவதிலுள்ள ஆர்வம், அவற்றுக்கெதிரான மாற்றுக்
கருத்துகளைக் கேட்பதில் இருப்பதில்லை. ஆயினும் அவ்வப்போது நடைபெறும் ஒரு சில
இத்தகைய இலக்கிய அம்ர்வுகளுக்குச் செல்வதுண்டு.
அண்மையில் ஸ்கார்பரோ சமூக மண்டப அரங்கொன்றில் நடைபெற்ற, 'கூர் கலை இலக்கியக்'
குழுவினரால் வெளியிடப்பட்ட 'நாடோடிகளின் துயர்
செறிந்த பாடல்' என்னும் தொகுப்பு மலர் வெளியீட்டு விழாவுக்கும் சென்றிருந்தேன்.
இந்தக் கட்டுரை அந்நிகழ்வு பற்றிய கட்டுரையல்ல. மாறாக,
அந்நிகழ்வில் கேட்ட, வாசித்த ஒரு சில விடயங்களைப் பற்றிய மிகவும் சுருக்கமானதொரு
குறிப்பே.கனடாத் தமிழிலக்கியமா புலம்
பெயர் இலக்கியமா!
மேற்படி விழாவில் சில விடயங்களைப் பற்றிக் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
புலம்பெயர் இலக்கியம் பற்றி, புலம் பெயர் மக்கள் பற்றி,
புலம்பெயர் இலக்கியம் கூறும் பொருள் பற்றியெல்லாம் அதிகளவில் பங்குபற்றியவர்கள்
கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார்கள். 'காலம்' செல்வம்
'ஏன் புலம்பெயர் இலக்கியம் என்று கூறுகிறார்கள். கனடா இலக்கியமென்று
கூறுகிறார்களில்லை'யென்று கவலைப் பட்டும் கொண்டார். அவர்
அவ்விதம் கவலைப் படுவதற்குப் பதிலாக அவ்வப்போது 'கனடாத் தமிழ் இலக்கியம்' என்னும்
பிரிவில் ஆக்கங்களை, ஆய்வுக் கட்டுரைகளைக் 'காலம்'
சஞ்சிகையில் பிரசுரித்தாலே கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய புரிதல் சற்று
அதிகமாகும். அவரது ஆதங்கமும் தீர்ந்து விடும். இதனால்தான் 'பதிவுகள்'
அவ்வப்போது 'கனடாத் தமிழ் இலக்கியம்' பற்றிக் கட்டுரைகளில் குறிப்பிடுகிறது.
அவ்வப்போது சு.ரா , ஜெயமோகன் போன்ற பல தமிழகப்
படைப்பாளிகளுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுத்து வெளிவரும் 'காலம்' இதழுக்கும்,
தமிழகத்தில் வெளிவரும் சிற்றிதழொன்றுக்கும் பெரியதொரு
அளவில் வித்தியாசமில்லை. மேலும் காலம் குறிப்பிட்ட வட்டத்தினுள்ளேயே வளைய
வருகின்றது. சு,ரா, மு.பொ., மு.த, ஜெயமோகன்,. ... இவ்விதம் ஒரு குறிப்பிட்ட
படைப்பாளிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் காலம் வெளிவந்தாலும் அவ்வப்போது கணேஷ்
போன்ற படைப்பாளிகள் பற்றியும் எழுதுகிறது. ஆயினும் 'தேடல்', 'தாயகம்',
'ழகரம்', 'நான்காவது பரிமாணம்' போன்ற>
சஞ்சிகைகளை, 'தமிழர் தகவல்' இதழின் ஒரு சில ஆண்டு மலர்களை, பழைய மாணவர் சங்கங்கள்
அல்லது ஊர்ச்சங்கங்கள் வெளியிடும் மலர்கள்
சிலவற்றை, 'வைகறை', 'ஈழநாடு', 'சுதந்திரன்', 'தமிழோசை', 'மஞ்சரி' போன்ற
பத்திரிகைகள் போன்றவற்றை, மற்றும் டி.செ.தமிழன், சும்தி ரூபன் போன்ற
படைப்பாளிகள் பலரின் வலைப்பதிவுகளை அத்துடன் இதுவரை வெளிவந்த பல்வேறு நூல்களைப்
படிப்பதன் மூலம் இதுவரை காலமும் உருவாகி
விரிந்து கிடக்கும் கனடாத் தமிழ் இலக்கியத்தின் பரந்துபட்ட, விரிவான் , ஏனைய
பக்கங்களின் வரலாற்றினை அறிந்து கொள்ளலாம்.
மேற்படி நிகழ்வில் ஒரு சில பேச்சாளர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளிலொன்று
புலம்பெயர்ந்த படைப்பாளிகள் இன்னும் தமது சொந்த மண்ணைப் பற்றியே எழுதி
வருகின்றார்கள். அவர்கள் புகுந்த நாட்டை உள்வாங்கி எழுத வேண்டும். குறிப்பாகக்
கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் இந்த நாட்டின் பூர்வீக குடிகளின் பிரச்சினைகள்
பற்றியெல்லாம் எழுத வேண்டும். இன்னும் எததனை இலக்கிய அமர்வுகளில் நீங்கள் இதனைக்
கூறிக் கொண்டிருக்கப் போகின்றார்கள்? இவ்விதம் கூட்டங்களுக்கு வந்து திருவாய்
உதிர்ப்பதற்குப் பதில் கொஞ்ச நேரமாவது இங்குள்ள படைப்பாளிகள் எழுதிய படைப்புகளை
வாசித்தார்களென்றாலே அவர்கள் கேள்விக்குரிய பதில் கிடைத்துவிடும். இங்குள்ள
படைப்பாளிகள் பலரின் படைப்புகள் பலவற்றில் புலம்பெயர்ந்து வாழும் மண்ணில்
எதிர்ப்படும் பிரச்சினைகள் பற்றியெல்லாம் விரிவாகவே ஆராயப்பட்டிருக்கின்றன.
இவ்விதமான படைப்புகளின் இல்க்கியச் சிறப்பு பற்றி இங்கு நான் குறிப்பிட வரவில்லை.
அதனைக் காலம் தீர்மானிக்கும். நான் கூறுவது இப்படைப்புகள் கூறும் பொருள் பற்றியதே.
ஆனால் நிச்சயம் பெருமைப்படத்தக்க படைப்புகள் அவை. அ.முத்துலிங்கம்,
தேவகாந்தன், 'அசை' சிவதாசன், குமார் மூர்த்தி, பவான், மைக்கல், அளவெட்டி
சிறீஸ்கந்தராசா, ஜோர்ஜ் குருஷேவ், சுமதி ரூபன், கடல்புத்திரன், டானியல் ஜீவா, குரு அரவிந்தன்,
வ.ந.கிரிதரன், ஆனந்த பிரசாத், சக்கரவர்த்தி, அ.கந்தசாமி, க.நவம்,
என்.கே.மகாலிங்கம், குறமகள், செழியன், மொனிக்கா ..... எனப் பலரின் படைப்புகளில்
அவர்கள் வாழும் மண்ணின் பலவேறு அனுபவங்கள் விவரிக்கப்படுகின்றன. இணையத்தில்
வெளிவந்த கனடாத் தமிழ் இலக்கியப் படைப்புகளை மையமாக வைத்தே சென்னைப் பல்கலைக்
கழகத்தில் ஒருவர் M.Phil ஆய்வுக் கட்டுரையொன்றினைச்
சமர்ப்பித்துள்ளார். அதில் அவர் எவ்விதம் மேற்படி படைப்புகள் புலம்பெயர்
அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன என்பதுபற்றிய அவரது ஆய்வுக்
கருத்துகளைக் குறிப்பிட்டிருப்பார். கனடாவிலிருந்து வெளிவரும் 'பதிவுகள்' இணையச்
சஞ்சிகையில் வெளிவரும் படைப்புகளை வைத்தெல்லாம்
பல்கலைக் கழகங்கள் பலவற்றில் ஆய்வுகள் ஆற்றுகின்றார்கள். [ இது இணையச் சஞ்சிகைகளின்
முக்கியத்துவத்தைக் காட்டும். அச்சு
ஊடகங்களுக்கீடாக இணைய ஊடகங்களையும் இன்றைய இலக்கிய மற்றும் அறிவுலகம் ஏற்றுக்
கொண்டுவிட்டதென்பதையே இது காட்டுகின்றது.]
கனடாத் தமிழ் இலக்கியம் கவிதையிலும் சாதித்துள்ளது. செழியன், சேரன், திருமாவளவன்,
பா.அ.ஜயகரன், தில்லைநாதன் சகோதரிகள், இளங்கோ, கலைவாணி ராஜகுமாரன்.. என கவிஞர்
பட்டாளமேயுண்டு. கனடாத் தமிழ் நாடக உலகிலும் குறிப்பிடத்தக்க படைப்பாளிகள்
(செழியன், பா.அ.ஜயகரன் போன்ற ) பலருள்ளனர். என்னைப் போன்ற பலரும் பல கவிதைகளை
எழுதியுள்ளனர். நிச்சயமாக என்னால் மிக்த் திறமையான தொகுப்பொன்றுக்கான தமிழ் இலக்கிய
உலகு பெருமைப்படத்தக்க ஆக்கங்களை (சிறுகதைகள், கவிதைகள், நாடகங்களை, ஆய்வுக்
கட்டுரைகளை) கனடாத் தமிழ் இலக்கிய உலகிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும்.
மொழிபெயர்ப்பிலும் என்.கே.மகாலிங்கம் போன்றவர்கள்
தங்களது பங்களிப்பினை நல்கியுள்ளார்கள்.
எனவே இவ்விதமான இலக்கிய அமர்வுகளில் புலம்பெயர் இலக்கியம் இன்னும் கடந்த காலக்
கழிவிரக்கத்தை மட்டுமே கக்கிக்
கொண்டிருக்கின்றதெனக் கூற வருமொருவர் அவ்விதம் கூறுவதற்கு முன்னர் அது பற்றிய
பூரணமானதொரு ஆய்வினை நடாத்தட்டும். அந்த ஆய்வின்
அடிப்படையில் அக்கருத்தினைக் கூறட்டும். எந்தவிதப் படைப்புகளையும் ஆழ்ந்து
படிக்காமல் எழுந்தமானத்திற்குக் கருத்துகளைக் கூறுவதைத்
தவிர்ப்பது கனடாத் தமிழ் இலக்கிய உலகின் வளர்ச்சிக்கு உதவுமொரு அம்சமாக அமையும்.
இவ்விதமாக ஒருவர் இத்தகைய அமர்வொன்றில்
அடுத்தமுறை குறிப்பிடும்பொழுது அவரிடம் கீழுள்ள வினாக்களைத் தொடுக்கவும்:
1. இத்தகையதொரு முடிவுக்குத் தாங்கள் வரக் காரணம்? அவற்றைத் தர்க்க அடிப்படையில்
விளக்குவீர்களா?
2. இவை பற்றிய விமர்சனங்கள் தமிழகத்திலுள்ள உங்கள் அபிமானத்துக்குரிய
படைப்பாளிகளால் வெளிவரவில்லையென்பது ஒரு காரணமா?
3. வாசிப்பின் அடிப்படையில் நீங்கள் இம்முடிவுக்கு வந்திருந்தால் நீங்கள் வாசித்த
படைப்பாளிகளின் பெயர்களை அவர்களது படைப்புகள் பற்றிய
விபரங்களை அறியத்தர முடியுமா?
மேலும் புலம்பெயர் படைப்பாளிகள் தமது இழந்த மண்ணைப் பொருளாகத் தமது படைப்புகளில்
கையாள்வதில் தவறேதுமிருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. பலவேறு காரணங்களுக்காகப்
புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய சமூகதினரான நைபால்,
வாசஞ்சி, சல்மான் ருஷ்டி, ரொபின்ஸ்டன் மிஸ்ரி போன்றவர்களின் முக்கியமான படைப்புகள்
பல அவர்களது பிறந்த மண்ணின் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு விளங்குவதை யாரும் மறந்து
விடக்கூடாது. அமெரிக்காவுக்குப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த போலந்து யூதரான
ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான 'நிறமூட்டப்பட்ட பறவைகள்' ('The Painted
Birds') இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ஐரோப்பாவில் சிறுவனாக அலைந்து திரிந்த
அனுபவத்தை விபரிக்கும். எனவே புலம்பெயர்ந்த படைப்பாளிகள் இதைத்தான் எழுத வேண்டுமென
வற்புறுத்துவதில் நியாயமேதுமிருப்பதாகத் தெரியவில்லை. படைப்பொன்றின் பொருள்
எதுவாகவிருப்பினும் அதன் சிறப்பு அதில் மட்டும்தான் தங்கியிருப்பதென்பதில்லை. அவை
கூறும்பொருளை வைத்து மட்டும் அவற்றை விமர்சிக்க முனைவது ஆரோக்கியமான விமர்சன
முறையல்ல. விமர்சகர்கள் ஒரு படைப்பினை விருப்பு, வெறுப்பின்றி அணுக வேண்டும்.
கனடாச் சிறுகதைகள் பற்றி தேவகாந்தன்...
இதனையொத்த இன்னுமொரு கூற்றினை மேற்படி நிகழ்வில் வெளியான 'நாடோடிகளின் துயர்
செறிந்த பாடல்' என்னும் மலரில் வெளியான ,
தொகுப்பாளர்களிலொருவரான எழுத்தாளர் தேவகாந்தனின் கட்டுரையிலும் காணமுடிகிறது.
மேற்படி மலர் அறிமுகக் கட்டுரையில் அவர் இவ்விதம்
கூறுவார்:
' ஏன் கனடாத் தமிழ்ப் பரப்பில் சிறுகதையின் வீறார்ந்த படைப்புகள்
மேலெழவில்லையென்பது நிதானமான யோசிப்புகளில் நமக்கும் புரிதலானதுதான்.
ஆனாலும் அதையெல்லாம் இங்கே எடுத்துரைக்கும் முயற்சியை நாம் செய்யப்போவதில்லை. ஒன்றை
மட்டும் சொல்லி மேலே செல்கின்றோம்.
படைப்பின் அதிமுக்கியமான அம்சம் நிகழ்வு அல்ல. அதை எடுத்துரைப்பதற்கான படைப்பின்
உத்வேகமும், பரிச்சயமும் தன் சமகால ஏனைய
படைப்புகளை வாசித்துக் கொள்ளும் அனுபவமும் என்ற அம்சங்களை அது படைப்பாளியிடமிருந்து
யாசித்துக் கொண்டிருக்கின்றது'
பிரச்சினையென்னவென்றால் இவ்விதமான பொதுவான் கூற்றுகளை எத்தனையொ இலக்கிய அமர்வுகளில்
கேட்டுக் கேட்டுக் காதுகள் சலித்து விட்டன.
'ஏன் கனடாத் தமிழ்ப் பரப்பில் சிறுகதையின் வீறார்ந்த படைப்புகள் மேலெழவில்லையென்பது
நிதானமான யோசிப்புகளில் நமக்கும் புரிதலானதுதான்'
என்று பொதுவாக முடிவொன்றினைக் கூறிவிட்டு 'ஆனாலும் அதையெல்லாம் இங்கே
எடுத்துரைக்கும் முயற்சியை நாம் செய்யப்போவதில்லை' என்று
கூறுவது ஏற்புடையதாகவில்லை. அந்த முடிவுக்குக் கட்டுரையாளர் ஏன் வந்தார்
என்பதற்குரிய காரணங்களை உள்ளடக்கிய ஆய்வுக்
கட்டுரையொன்றினை இத்தகைய இலக்கிய மலர்கள் வேண்டி நிற்கின்றன. அவ்விதமான ஆய்வுகளின்
அடிப்படையில் அவர் அந்தக் கருத்தினைக்
கூறியிருக்க வேண்டும். தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியதொரு படைப்பாளியாகத் தனது
ஆளுமையினைப் பதித்த அவரிடமிருந்து
இவ்விதமானதொரு பொதுவான முடிவினையுள்ளடக்கிய கூற்றொன்று வெளிவருவது கவலையளிப்பது.
கூர் அமைப்பினரின் அடுத்து வரும் மலர்களில்
கனடாத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகள் பற்றிய ஆய்வுக கட்டுரைகள் பல
வெளிவருமென எதிர்பார்க்கின்றோம். அவ்விதம் வெளிவருவது
அவர்களது நோக்கத்திற்கு மேலும் சிறப்பளிப்பதாகவேயிருக்குமென்பது என் எண்ணம்.
என்னைப் பொறுத்தவரையில் கனடாத் தமிழ் இலக்கிய உலகம் பெருமைப்பட்டத்தக்க வகையில்
நன்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இதற்காக
இதுவரை காலமும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் பங்காற்றிய (இப்பொழுதும் ஆற்றிக்
கொண்டிருக்கின்ற) கலை, இலக்கிய கர்த்தாக்கள், இலக்கிய
அமைப்புகள், சங்கங்கள், என அனைவரும் பாராட்டப் படவேண்டியவர்களே. என்னைப் பொறுத்த்
அள்வில் நான் கனடாத் த்மிழ் இலக்கிய உலகின்
முக்கிய குறைப்பாடுகளாக நான் கருதும் அம்சங்கள் வருமாறு:
1. சக படைப்பாளிகளின் படைப்புகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆயினும்
வாசிக்காமலே கருத்துகள் கூற விளைவது அல்லது
முடிவுகளையெடுப்பது.
2. பிரபலமான படைப்பாளியொருவரின் அல்லது விமர்சகர் ஒருவரின் விதந்துரைக்காக அல்லது
அங்கீகாரத்திற்காக அலைவது; அதன் அடிப்படையில்
படைப்புகளின் தரத்தை அடையாளம் காண விளைவது.
மேற்படி இரு விடயங்களிலும் இங்குள்ள படைப்பாளிகள் கவனம் செலுத்த வேண்டும். யாருடைய
அங்கீகாரமும் நமக்குத் தேவையில்லை. வெளிவரும்
அனைத்துப் படைப்புகளையும் இயலுமானவரையில் (ஏனெனில் எல்லாப் படைப்புகளும்
கிடைப்பதில் சிரமமுண்டு) மனம் திறந்து வாசியுங்கள்.
இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் ஆய்வுகளை ஆற்றுங்கள். உதாரணமாகக் 'கனடாத்
தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும், வளர்ச்சியும்', 'கனடாத்
தமிழ்க் கவிதைகள் கூறும் பொருள்', 'கனடாவில் தமிழ் நாடகம்'.. இவ்விதமான பல்வேறு
தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை இலக்கிய மலர்களை
வெளியிடுபவர்கள் அம்மலர்களில் வெளியிடட்டும். அல்லது இலக்கிய அமர்வுகளில் மேற்படி
தலைப்புகளில் கலந்துரையாடுங்கள். இவற்றைச் செய்ய
விளைவீர்களானால் இதுவரை காலமும் கனடாத் தமிழ் இலக்கிய உலகின் தோற்றம் பற்றியும்,
வளர்ச்சி பற்றியும் நிச்சயமாகவே பெருமைப்படுவீர்களென்பது மட்டும் நிச்சயம்.
என்னைப் பொறுத்தவரையில் இதுவரை காலமுமான கனடாத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி
பெருமைப்படத்தக்கது. சிறுகதை, கவிதை, மற்றும் நாடகம், மொழிபெய்ரப்பு.. என
இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் அதன் பங்களிப்பு பாராட்டுதற்குரியது. வெளிவந்த
பல தொகுப்புகள் தொகுப்பாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கனடாத்
தமிழ் இலக்கியத்தின் உண்மையான தோற்றத்தினைப் போதிய அளவில் பிரதிபலிக்காமல்
வெளிவந்திருக்கின்றன என்பதே எனது கருத்து. எதிர்காலத்தில் கனடாத் தமிழ் இலக்கியம்
மற்றும் ஏனைய புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளுக்குரிய தமிழ் இலக்கியம்
பற்றிய போதிய நூல்கள் , ஆய்வுகள் வெளிவருமென்று நம்புகின்றேன். அப்போழுது தமிழ்
இலக்கிய உலகு கனடாத் தமிழ் இலக்கியத்தின் உண்மையான வளர்ச்சியினைப் புரிந்து
கொள்ளும். அத்துடன் புலம்பெயர் தமிழ்
இலக்கியமென்பது கனடாத் தமிழ் இலக்கியம், பிரான்சுத் தமிழ் இலக்கியம்,
சுவிஸ் தமிழ் இலக்கியம், ஆஸ்திரேலிய்த் தமிழ் இலக்கியம், மலேசியத்தமிழ் இலக்கியம்,
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்... என நாட்டுக்கு நாடு
அவற்றுக்கேயுரிய தனித்தன்மைகளுடன் சிறப்புடன் வளர்ந்து வருவதை அறிந்து கொள்ளும்.
|