'காலம்': பேராசிரியர் கா.சிவத்தம்பி பவளவிழா
மற்றும் ஏ.சி.தாசீசியஸ் இயல்விருதுச் சிறப்பிதழ்!
செல்வம்
அருளானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'காலம்' சஞ்சிகையின் ஜூன் 2007 இதழ்
ஒரு கல்லில் மூன்று மாங்காய்களை அடித்தபடி வெளிவந்திருக்கிறது. வழக்கமான
அம்சங்களுடன் வெளிவந்திருக்குமிதழ் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பவளவிழச்
சிறப்பிதழாகவும், ஏ.சி.தாசீசியஸ் இயல்விருதுச் சிறப்பிதழாகவும் வெளிவந்திருக்கிறது.
பார்வைக்கு அன்றைய 'காலச்சுவடு' இதழின் அமைப்பினை நினைவூட்டுகிறது.
'காலத்'தின் வழக்கமான பகுதியில் அ.முத்துலிங்கத்தின இலக்கியக் குறிப்புகள்,
ஷோபாசக்தி, இளங்கோ, அம்பை மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் சிறுகதைகள், சேரன்,
நாவாந்துறை டானியல்ஜீவா, மனுஷ்யபுத்திரன், சோலைக்கிளி ஆகியோரின் கவிதைகள், வெங்கட்
சாமிநாதன், வெங்கட் ரமணன், மணி வேலுப்பிள்ளை, மு.பொன்னம்பலம், என்.கே.மகாலிங்கம்
மற்றும் இளைய அப்துல்லாஹ் போன்றோரின் கட்டுரைகள், மற்றும் 'பருத்திவீரன்' இயக்குநர்
அமீருடனான அய்யப்பமாதவனின் நேர்காணல் , 'டொராண்டோ' ஓவியர் 'டொன்னி ஹறிஸி'னுடனான
மனுவல் ஜேசுதாசனின் நேர்காணல் ஆகியன இடம்பெற்றுள்ளன.
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பவளவிழாச் சிறப்புப் பகுதியில் பேராசிரியருடனான
பா.துவாரகனின் நேர்காணல், பேராசிரியர்கள் வீ.அரசு, சி.மெளனகுரு, மற்றும் செல்வா
கனகநாயகம், ஜெயமோகன் போன்றோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பா.துவாரகனின்
நேர்காணல் நல்லதொரு நீண்ட நேர்காணல் பேராசிரியரின் மற்றும் அவரது துணைவியாரின்
அபூர்வமான இளமைக்காலப் புகைப்படங்களுடன் விரிந்து கிடக்கின்றது. மேற்படி
நேர்காணலில் பேராசிரியர் சங்ககாலத்திலிருந்து இன்றைய காலம் வரையிலான தமிழ்
இலக்கியப் படைப்புகள் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்தளத்தில் அவருக்குரிய நிலை என்பவை
பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பேராசிரியர் வீ.அரசு தனது 'அச்சுப்
பண்பாடு: புனைகதை: பேரா. கா.சிவத்தம்பி' என்னும் கட்டுரையில் பேராசிரியர்
கா.சிவத்தம்பி புனைகதையின் பண்புகளின் தன்மையினைக் குறிக்கப் பயன்படுத்திய 'அச்சுப்
பண்பாடு' என்னும் சொல்லாடல் பற்றிய தன் பார்வையினை இருபதாம் நூற்றாண்டின் புனைகதை
மரபைப் பற்றிப் பேச வந்தவர்கள் பாவித்த சொல்லாடல்களை நினைவுபடுத்துவதன் மூலம்
முன்வைக்கின்றார். 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்.. 'கட்டுரையில் பேராசிரியர்
மெளனகுரு பேராசிரியர் கா.சிவத்தம்பின் பேராதனைப் பல்கலைக்கழக அனுபவங்களைத் தனது
அவருடனான அனுபவங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்கின்றார். பேராசிரியர்
கா.சிவத்தம்பியை மார்க்சிய இலக்கியக் கோட்பாளராகக் காணுகின்றார். அத்துடன்
பேராசியரின் படைப்புகளை, இலக்கிய நோக்கின் பலம் , பலவீனங்களை ஓர் எழுத்தாளனாகவும் ,
இலக்கிய மாணவனாகவும் நின்று எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் ஆராய்கின்றார்.
'ஏ.சி.தாசீசியஸ் இயலவிருது'ச் சிறப்பிதழில் குழந்தை ம.சண்முகலிங்கன், முன்னாள்
மகாஜனாக் கல்லூரி அதிபர் பொ.கனகசபாபதி, பேராசிரியர் மெளனகுரு போன்றோரின் கட்டுரைகள்
வெளியாகியுள்ளன. சிறப்பிதழின் முக்கிய பகுதியாக ஈழத்து நாடக உலகில் தன் பங்களிப்பை
விபரிக்கும் 'உயிரோட்டமான நாடக உறவுப் பாலத்தில் என் பங்கு' என் கட்டுரை
முக்கியமானது.
'காலம்' சஞ்சிகையினைப் பெற விரும்பும் அனைவரும் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:
KALAM, 16 Hampstead Court, Markam, ON L3R 3SL, Canada.
Email: kalam@tamilbook,com
- ஊருலாத்தி - |