இளங்கோவின் 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதை
நூலுக்கு விருது! ஏலாதி இலக்கிய சங்கத்தின் கவிதை நூலுக்கான தெரிவு!
ஏலாதி
இலக்கியச் சங்கத்தின் (குமரி மாவட்டம்) கவிதை நூல்களுக்கான விருதுகளை தமிழச்சி
தங்கபாண்டியனின் 'வனப்பேச்சி'யும் இளங்கோவின் (டி.செ.தமிழன்) 'நாடற்றவனின்
குறிப்புக'ளும் பகிர்ந்து கொள்கின்றன. புலம்பெயர்ந்த தமிழ் இலக்கிய உலகிற்கு வளம்
சேர்ந்க்கும் படைப்பாளிகளில் டி.செ.தமிழனும் ஒருவர். அவரது கவிதைகளைப் போலவே அவரது
வலைப்பதிவும் இணையத்தில் பலராலும் விரும்பி வாசிக்கப்படுமொரு தளம். பதிவுகள்
வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களில் டி.செ.தமிழனும் ஒருவர். பதிவுகளின்
பாராட்டுகள்!
தகவல்:
elanko@rogers.com
இளங்கோவின் கவிதைகள் சில்!
வண்ணத்துப்பூச்சியைப்
புணர்ந்தவன்
*யசோதராவிற்காய்
வீடு திரும்பிய புத்தர்
நயாகராவின் வண்ணத்துப்பூச்சிககாட்டில் மீண்டுமலையக்கண்டேன்
பிரதிகளில் என்னைக்கொன்று மிதக்கவைத்த நீ
தொடர்ந்து பின்தொடர்வதற்கு
தன்னிடம் சிலிக்கனால் உருப்பெருப்பிக்கப்பட்ட
முலைகள் எதுவும் இல்லையென்றார் சினத்துடன்.
*வைன்கோப்பை-நீலோற்பலமொட்டு-விளாங்காய்
கவிதைகள் நிரம்ப வாசிக்க
புத்தர் எப்போது தமிழ்படித்தாரென
அகழ்வாராய ***கந்தரோடைக்குப்
பயணித்திருந்தேன் இருளில் ஒருநாள்;
கிழக்கில் தமிழரின்
அடையாளமழித்து
சாந்தத்தை வெற்றியின் சின்னமாக்கும் வாளேந்திய
சிங்கங்களுக்கெதிராய்
புத்தரின் ஒளிரும் குறியை அறுத்தெறிந்து
எனதல்லாத எனது ஊரில் பிணங்கள்தின்றபடியலையும்
மரநாய்களுக்கு காணிக்கையாக்கினேன்
பின்
த்மிழனெனும் தூயவாதம் பேசி
முஸ்லிம்களைத் துரத்திய பெருந்துயரொழிக்க
வண்ணத்துப்பூச்சியொன்றை
வெறியுடன் புணரத்தொடங்கினேன்
எவர்க்கும் சொந்தமில்லாது எவனாகவோ ஆகுமென்னை
யசோதரா
புத்தரையும் வண்ணத்துப்பூச்சியையும் சிதைத்தற்காய்
ஒரு குற்றவாளியென தூக்குக்கயிரை மாட்டிவிடுகின்றாள்.
இப்படித்தான்
எங்கள் நாட்டில் சமாதானம் வருவதற்காய்
ஒரு சுன்னத்துச்செய்யப்பட்ட தமிழ்ப்பவுத்தன்…
பைத்தியமாகி அலைந்தானெனும் குறிப்பு
அம்பனையின் பதுங்குகுழியிலிருந்த மண்டையோடென்றில்
பதியப்பட்டிருந்தது.
*
தொடர்புடைய முன்பு எழுதப்பட்ட கவிதை
** சேரன், திருமாவளவன்,
செழியன் கவிதைகளில் இச்சொற்கள் முலைகளுக்கு உவமிக்கப்படுகின்றன
*** தொல்பொருள் அகழ்வராய்வுகள் நடைபெற்ற இடம்.
தமிழர்கள் பவுத்தர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கான அடையாளங்கள்
சிலவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
(அய்யனாருக்கு…)
**************
அம்மாவிற்கு
பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க
வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்
அம்மா
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்
‘வலிகளைத்
தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென’
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.
(2006)
(இன்று
-Mar 08-
பிறந்தநாளைக் கொண்டாடும் அம்மாவிற்கு…)
****************
பனி
விழுங்கும் இரவுகள்
குளிரென் நெஞ்சை அமுக்கவெடியாய் அழுத்தியபோது
இலையுதிர்காலத்தின் கடைசிச்சாட்சியென
பறந்துசெல்லும் அவனைக் கண்டேன்
விபத்தில் இல்லாமற்போனவன் தீப்பிடிக்கும் காயங்களுடன்
துடிப்படங்காது அலறும் தன்செவ்விதயத்தை
உறைந்தபனிக்குள் பத்திரப்படுத்த
மாயன்காலத்தவர்கள் போரினை நிறுத்த
உயிருள்ளவர்களைப் பலியிட்டார்களெனும் குறிப்புகள்
குருதி நரம்புகளெங்கினும் ஓடுகின்றன
காளான்களாய்
குண்டுகள் முளைக்கும்
தேசத்தின் செம்மண் தெருக்களினொன்றில் பதியஞ்செய்கையில்
தொலைந்து போனவர்களின் நினைப்பொழிந்து
போர்துரத்தும் பயங்களைக் கலைக்கலாமென
தீயையொரு நாயைப்போல வருடியபடி கூறுகிறான்
தோழன்.
குருதி நிறத்திலிருந்து நீலம்பாரிக்கும் இதயத்தைக்காவியபடி
இரண்டு கடல்களும் மூன்று கண்டங்களும் தாண்டி
சிறுதீவொன்றில் புதைக்கும்போது
பூமிபிளந்து இருதேசங்கள் பிரிந்தன
இப்போது
மழைக்கால ஈசல்களைப்போல
பல்லாயிரம் இதயங்கள்
மாயன்காலத்து போர்க்குறிப்புக்கள் கலைத்து
மீண்டும் மனிதவுருக்கொள்கின்றன
தமிழும் சிங்களமும் பேசி
இரவுகளை கோரமாய் விழுங்கும்
பனியரசனின் தீயுமிழும் ட்ராகனை
கோடையில் சூரியன் விழுங்கியதுபோல்
நஞ்சூட்டப்பட்ட என்னுடலும் வார்த்தைகளும்
பொறி வைத்துக்காத்திருக்கின்றன
போர் அரக்கனுக்காய்.
(Jan 30, 2007)
************************
இன்மையின் இருப்பை இசைத்தல்
புத்தக அலுமாரியில்
பெயரறியாப் பூச்சிகள குடிபெயர்கின்றன
புததகமொன்றைத் தொலைப்பதென்பது
காலம் வரைந்த வரைபடத்தின் கோடொன்றை பறிகொடுப்பதாகும்
அன்றொரு பூச்சியை நசுக்கிக்கொல்கையில்
இரத்தம் வராதது ஆச்சரியமாயிருந்தது
பின்னாளில் என் வரைபடத்திலிருந்து
இந்நாட்டுப்பூர்வீகக்குடியொருவன் காணாமற்போயிருந்தான்.
************************
மாவிளக்குப்போட்டு சுவைக்க
திருவிழாக்கள் வரும்
எதிர்பார்க்காத் தருணத்தில்
விரலநீவி கண்ணசைத்து கற்றைகோதி கரைவாய்
என் நாசியைப் பின்தொடர்வது மாவிளக்கு நெய்யா
இல்லை நம்முடல்கள் நேற்றிரா பகிர்கையில் கசிந்த வியர்வையா?
கடவுளர் உக்கிரவிழி
உருட்டினாலும்
தூண்களில் விழித்திருக்கும்
முலைதிறந்த சிலைகளுக்கும்
பொங்கிப் பிரவாகரிக்கும் காமமுண்டு
விலக்கப்பட்ட மூன்றுநாட்களையும் சேர்த்து.
************************
சதுரம்
சதுரமாய் வரைந்த பெட்டிகளில்
முன்னும் பின்னுமாய் நகர்ந்தபடியிருக்கின்றான் சிறுவன்
அவனது தங்கையொருத்தி சதுரங்களில் வட்டங்களை வரைகின்றாள்
தோற்றுப் போக விரும்பா எத்தனத்துடன்
புதிது புதிதாய் சதுரங்களை ஆக்குகின்றான் சிறுவன்
யாரோவொருவர் இறுதியில் அழப்போவதை பார்க்க விரும்பாது
முகத்தை வேறுதிசையில் திருப்ப
அதிர்கின்றது மனது
சதுரங்களும் வட்டங்களும் முந்நூற்றறுபது பாகையினால் ஆனது.
************************
உன்னுடைய பட்டியலில்
இல்லாமற்போய்க்கொண்டிருக்கின்றேன் நான்
தவிர்க்கப்படும் சந்திப்புக்களிலிருந்து
உலர்ந்துகொண்டிருப்பது கதகதப்பான வாசம்
புரட்டாதிச் சனிக்கு காகாவென்று அழைக்க
வந்து தரைபரவும் ஊர்க்காகங்களின் அலகுகளுக்குள்
சிதைந்துகொண்டிருப்பது மனிதவுணர்வுகள்
அரளிக்காய் அம்மியில் அரைத்துக்குடித்தவளுக்கு
ச்வர்க்காரத் தண்ணீர் பருக்கியது போல
உனக்கும் எனக்குமான ஸ்நேகிதம்.
(2006)
நன்றி:
http://elanko.net/ |