சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் - 3அந்தனி ஜீவா [ 'சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன்' என்னும் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில்12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். ] தொழிலாளர் நலனில் அக்கறை....(தொடர்ச்சி) தினசரிப்பத்திரிகையாக வெளிவந்த 'சுதந்திரன்' வாரப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியதும் அ.ந.கந்தசாமிஆசிரியர் கடமைகள் முழுவதையும் ஏற்றார். 2000 பிரதிகள் விற்ற சுதந்திரன் 12000 பிரதிகளாகவிற்பனையைப் பெருக்கிய பெருமை அவரையே சாரும். சுதந்திரனில் பணியாற்றிய காலத்தில் எமிலிஸோலாவின்'நானா' என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டு இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து 'பண்டிதர் திருமலைராயர்'என்ற புனைபெயரில் பிரச்னைக்குரிய பல கட்டுரைகளை எழுதினார். சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமிஎழுதிய கட்டுரைகள் பெரும் சர்ச்சைக்குள்ளாயின. பண்டிதர் திருமலைராயர் என்ற பெயர் இலக்கிய உலகில்அடிபடலாயிற்று. சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமி பண்டிதர் திருமலைராயர் என்ற பெயர்களில்வந்த கட்டுரைகளைத் தமிழகத்துப் பகுத்தறிவுச் சிங்கம் பெரியார் ஈ.வே.ரா அவர்கள் தனது குடியரசு பத்த்ரிகையில்மறுபிரசுரஞ் செய்ததுடன் மட்டுமல்லாது, அதைப்பற்றி ஆசிரியர் தலையங்கமும் வரைந்தார். மலேசியாப்பத்திரிகையும் அவற்றை மறுபிரசுரஞ் செய்தது. சுதந்திரனில் ஆர்.கே.சண்முகநாதன் ஆரம்பித்த 'குயுக்தியார்'கேள்வி-பதில் பகுதியை அவர் விட்டதும், அ.ந.கந்தசாமி அதை ஏற்று 'குயுக்தியார்' மூலம் அளித்தபதில்கள் குயுக்தியாருக்கு மேலும் ஆழமான மவுசை ஏற்படுத்தின என்பதனைப் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுள்ளபழம்பெரும் எழுத்தாளர்கள் எவரும்மறுக்க மாட்டார்கள். அ.ந.க சுதந்திரனில் பணியாற்றிய காலத்தை'சுதந்திரனின் பொற்காலம்' என்றே வர்ணிக்கலாம். தகவற் பகுதி... சுதந்திரனிலிருந்து வெளியேறிய பின்பு அரசாங்கத் தகவற்பகுதியில் மொழிபெயர்ப்பாளராக அ.ந.கந்தசாமி கடமையாற்றினார். தகவற் பகுதியிலிருந்து வெளிவந்தஸ்ரீலங்கா பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியற்றியுள்ளார். தகவற் பகுதியிலிருக்கும் பொழுதுதான்மணவாழ்க்கையில் ஈடுபட்டார். கொஞ்சக்காலம் மணவாழ்வில் திளைத்த கந்தசாமி தனியாக வாழ்க்கை நடாத்தினார்.அவர் தமது துணவியைப் பிரிந்து தனிமரமானாலும் தொழிலாளர் தோழர்களுடன் இரண்டறக் கலந்து இனியபண்புடன் பழகி வந்தார். பாராளுமன்ற அமைச்சர் முதல் பாதசாரி வரை அ.ந.கவிற்கு நண்பர்களுண்டு. நண்பர்களைச்சந்தித்தால் அவருக்கு உற்சாகம் பிறந்து விடும். வீதியில் அல்லது ஹொட்டலில் 'பிளேயின் டீ'யை அருந்தியவாறுஆயிரம் கதைகள் பேசுவார். இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதில் வல்லவர். தகவற்பகுதியில் 12, 13 வருட கால சேவையுடன் ஓய்வு பெற்றார்.ஓய்வு பெற்றவுடன் இலக்கிய உலகை விட்டு சிலகாலம் 'அஞ்ஞாதவாசம்' பண்ணிய அ.ந.க மீண்டும் புது வேகத்துடன்இலக்கியத் துறையிலீடுபட்டார். 'டிரிபியூன்' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சிலகாலம் பணியாற்றியபின்னர் முழுநேர எழுத்தாளராக 'பேனாவை' நம்பி வாழத் தொடங்கினார். ஆங்கில வார இதழான டிரிபியூனில் பணியாற்றிய காலத்தில்ஆங்கிலத்தில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியதுடன் திருக்குறளைப் பற்றிப் புத்தகம் போடுமளவிற்குநிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அ.ந.கந்தசாமியின் ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகள் காலஞ்சென்றஅறிஞர் ஆபிகாம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகளின் பாராட்டுதலைப் பெற்றன. பத்திரிகைத் துறை.... வீரகேசரி, தேசாபிமானி, சுதந்திரன், ஸ்ரீலங்கா, டிரிபியூன்ஆகிய பத்திரிகைகளில் ஆசிரிய பீடங்களிலிருந்த அ.ந.கந்தசாமிக்குப் பத்திரிகைத் துறையில் நிறையஅனுபவமுண்டு. விரல்விட்டு எண்ணக் கூடிய சிறந்த பத்திரிகையாளர்களில் அ.ந.கவும் ஒருவர். தினசரிப் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக இருப்பது கடினமானசெயல்.ஆனால் அஃது அ.ந.கந்தசாமிக்குக் கை வந்த கலை. அதில் அவர் மிகச் சுலபத்தில் வெற்றியீட்டினார்.'செய்தி' போன்ற வார இதழ்கள் சிறப்பாக வெளிவந்ததற்கு அவர் வழங்கிய ஆலோசனைகளே காரணமாகும்என்பது மறைக்க முடியாத உண்மையாகும். அறிஞர் அ.ந.கந்தசாமியைக் கட்சிக் கண் கொண்டு பார்ப்பவர்களேஅதிகம். இல்லாவிடில் இவரை ஆசிரியராகக் கொண்டு ஒரு சிறந்த தினசரிப் பத்திரிகை வெளிவந்திருக்கும்.ஆனால் அந்தப் பாக்கியம் அந்தப் பத்திரிகை ஸ்தாபனத்திற்கு இல்லாது போயிற்று. ஈழத்து இலக்கியஇரசிகர்கள் செய்த புண்ணியம் அவர் எழுத்தைத் தொழிலாக மேற்கொண்டார். பத்திரிகை ஆசிரியராகப்போயிருந்தால் அந்தப் பத்திரிகையின் வெற்றியில்தான் அவரது சிந்தனையைச் செலவிட்டிருப்பாரேயொழிய'மதமாற்றம்' போன்ற நாடகத்தையும்' 'மனக்கண்' நாவலையும் தந்திருக்க மாட்டார். முதல் சந்திப்பு.... பள்ளி மாணவனாக எழுத்துத் துறையின் ஆரம்ப அரிச்சுவடியைமனனம் பண்ணும் சிறுவனாக இருந்த வேளையில் அ.ந.கந்தசாமி அவர்களைத் தகவற் பகுதியில்தான் சந்தித்தேன். அப்பொழுது 'ஷெல்' கம்பனியில் சில்லையூர் செல்வராசன் பணியாற்றினார். அ.ந.கவின்மூலமே சில்லையூர் செல்வராசனின் அறிமுகம் ஏற்பட்டது. எனக்குக் கலையுலகில் நெளிவு சுழிவுகளை ஆரம்ப காலத்தில்அறிமுகப் படுத்திய கலைஞர் கலைதாசன் என்ற நண்பருடன் நடத்திய 'தேசபக்தன்' என்ர பத்திரிகைக்குஆலோசனையும் கட்டுரையும் கேட்பதற்கு அ.ந.க.வை சந்திக்கத் தகவற் பகுதிக்குச் சென்றேன். பிரபல எழுத்தாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமானஅ.ந.கந்தசாமி எப்படியிருப்பாரோ, நம்மிடம் முகம் கொடுத்துப் பேசுவாரோ அல்லது ஓரிரு வார்த்தைகளுடன்உரையாடலை முடித்துக் கொள்வாரோ என்று அஞ்சியபடி சென்றேன். ஆனால் அ.ந.க என்னை அகமும் முகமும்மலர் வரவேற்று என்னை பற்றி அதிக அக்கறையுடன் விசாரித்து, என்னுடைய ஆரம்ப இலக்கிய முயற்சிகள்பற்றிக் கேட்டு அதற்குரிய ஆலோசனைகளையும் கூறிய பின்னர் பத்திரிகைத்துறை பற்றி அவரின் சொந்தஅனுபவங்களை எடுத்துக் கூறினார். சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்-1...உள்ளே சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன் -2...உள்ளே [ தொடரும் ] |