சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் - 2அந்தனி ஜீவா [ 'சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன்' என்னும் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில்12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். ] துள்ளி விளையாடும் பள்ளிப் பருவம்.... யாழ்ப்பாணத்தில்அளவெட்டியைப் (*இது உண்மையில் தவறு. அ.ந.க. உண்மையில் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.அந்தனி ஜீவா அளவெட்டி என்று குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் அ.ந.க.வின் தந்தையாரின் அடிஅளவெட்டியாகவிருந்ததால், சிறுவயதில் தனது பெற்றோரை இழந்த அ.ந.க. அளவெட்டியில் தனது பால்யகாலத்தின் சிறு பகுதியைக் கழிக்க நேர்ந்தது. அதன் விளைவாக அம்மண்ணின் மேல் கொண்ட பற்றுதலினாலும்,அளவெட்டியைச் சேர்ந்த நடராஜா என்பதைக் குறிப்பதற்காகவும் தனது பெயருக்கு முன்னால் அ.ந.வைச் சேர்த்துக்கொண்டார். இவரது குடும்பத்தவர்களுக்குச் சொந்தமான, கே.கே.எஸ்.வீதியில் அமைந்திருந்த நாற்சாரவீடுகளிலொன்றே (கடையுடன் கூடியது, கில்னர் கொலிஜிற்கு முன்பாக உள்ளது) பலர் கை மாறிப் பின்னர்பேராசியர் கைலாசபதியின் சகோதரர் ஸ்ரீபதியின் கைக்கு மாறியது.) பிறப்பிடமாகக் கொண்டஅ.ந.கந்தசாமியவர்கள் சிறு வயதில் தாய் தந்தையரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார்.[*இவரது தந்தையாரான நடராசா யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் வைத்தியராகக் கடமை புரிந்தவர்.கே.கே.எஸ்.வீதியீல் ,யாழ்நகரில், பல சொத்துகளுக்கு அதிபதியாகவிருந்தவர். இவற்றில் பலவற்றைபராமரிப்பாளராகவிருந்த உறவினர்கள் சிலர் பாட்டியின் மறைவுக்குப் பின்னர் அபகரித்துச் சீரழித்துவிட்டனர். இதற்கு உடந்தையாகவிருந்த பிரபலமான சட்டத்தரணியொருவர் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.இந்தச் சட்டத்தரணி இது போல் பல மோசடிகளைப் புரிவதற்கு உடந்தையாகவிருந்தாரென்றும் அதன் காரணமாகவேதற்கொலை செய்து கொண்டாரென்றும் கேள்வி. மன்னாரிலும் இவருக்கும் சகோதரர்களுக்கும் நிலபுலன்கள் இருந்தன.அதனை அப்படியே அதில் வசித்து வந்த முஸ்லீம்வாசியொருவரிடமே விட்டு விட்டார்கள். சிறுயதில் பாட்டிக்குவிகடனில் வெளிவந்த கல்கியின் 'தியாகபூமியை' வாசித்துக் காட்டுவது இவர்களது முக்கியமானதொருபொழுது போக்கு. இவரது ஒரே தங்கையான தையல்நாயகி என்பவர் ஈழகேசரி சிறுகதைப் போட்டியொன்றில்முதற் பரிசு பெற்றதாகவும் அறியப் படுகிறது. அதன் பின் அவர் ஏதும் எழுதியதாக அறியப் படவில்லை.இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆய்வு செய்பவர்கள் இது பற்றியும் ஆய்வு செய்வது நல்லது. அ.ந.க.வும் பதினேழு வயதில் தனியாகக் கொழும்பு சென்று விட்டதாகவும் அறியப்படுகிறது.கொழும்பில் இவரது ஆரம்பகால உற்ற நண்பனாகவிருந்தவர் சில்லையூர் செல்வராசன். இறுதிக் காலத்தில்பெரிதும் துணையாக இருந்தவர் பிரபல தமிழ் எழுத்தாளர் செ.கணேசலிங்கன். இறுதிக் காலம் வரையில்அ.ந.கவுக்கும் அவரது குடும்பத்தவர்களுக்குமிடையில் நேரடித் தொடர்புகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை].உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் சகோதரியும். எஸ்.எஸ்.ஸி.வரை கல்வி பயின்ற அ.ந.க. தன்சுயமுயற்சியால் ஒரு பட்டதாரியை விட அதிகம் கற்றிருந்தார். 'கண்டதும் கற்கப் பண்டிதனாவான்' என்றஆன்றோர் வாக்குப்படி கண்டதையெல்லாம் கற்றதால் பண்டிதர்களையும் பட்டதாரிகளையும் மிஞ்சும் அளவுக்கு அ.ந.கந்தசாமிபுலமை பெற்றிருந்தார். அதனால் தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கே தலைமை தாங்கும் அளவுக்குத் தகுதி பெற்றிருந்தார்.கதைகளையும், கவிதைகளையும் ,கட்டுரைகளையும் விரும்பிப் படித்தார். பழைய இலக்கியங்களையும் ஆர்வத்துடன்ஆழ்ந்து கற்றார். இளமையிலிருந்து இலக்கியத்திலிருந்து வந்த ஆர்வந்தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கு முன்னோடிஎன்றழைக்கப்படும் அளவுக்குச் சிறந்து விளங்க அவருக்குப் பக்கத் துணையாகவிருந்தது. அ.ந.க. ஆரம்பகாலத்தில் 'ஈழகேசரி' இலக்கியப் பண்ணையில்வளர்ந்தவர். சிவபாதசுந்தரம் ஈழகேசரி ஆசிரியராகவிருக்கும் பொழுதுதான் அ.ந.கந்தசாமி , அ.செ.முருகானந்தம்போன்றவர்கள் பள்ளிப் பருவத்தினராயிருந்தனர். ஈழகேசரி மாணவர் பகுதியில் நடத்திய போட்டியில்கந்தசாமி எழுதிப் பரிசில் பெற்று இலக்கியத் துறையில் நிலையான ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். எழுத்துத் துறையின் ஆரம்ப காலம்... இலக்கிய விமர்சகர்களின் கூற்றுப்படி 1930ஆம் ஆண்டளவில்தான்ஈழத்து இலக்கிய உலகில் இளைஞர் பலர் தோன்றினர். இவர்கள் இளமைத் துடிப்பின் காரணமாக ஒருவருக்கொருவர்போட்டி போட்டுக் கொண்டு எழுதினார்கள். அ.ந.கந்தசாமி இந்த இளைஞர் வரிசையில் முன்னோடியாகத்திகழ்ந்தவர். அ.ந.கந்தசாமி காலத்தில் எழுத்துலகில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்களாக அ.செ.முருகானந்தம்,தி.சா.வரதராசன் (வரதர்), சு.இராஜநாயகம், தாழையடி சபாரத்தினம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்தக் காலத்தைத் தொடர்ந்து இளைஞர் பலர் ஒன்று கூடி 'மறுமலர்ச்சி'என்ற இலக்கிய இதழினை வெளியிட்டனர். இஃது ஈழத்து இலக்கிய வட்டத்தின் 'மணிக்கொடியாகத்' திகழ்ந்தது.இந்த மறுமலர்ச்சிக் குழுவினர் இலக்கியத்தின் எல்லாது துறைகளிலும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர்.மறுமலர்சிக்குழுவில் பிரபல்யம் பெற்ற அ.ந.கந்தசாமியை முற்போக்கு இலக்கிய வட்டம் தம் முன்னோடிஎன்று கூறிக்கொள்ளும் விதத்தில் பிற்காலத்தில் அவருடைய இலக்கிய வளர்ச்சி அமைந்தது. 'மணிக்கொடி' யுகத்தைத் தோற்றுவித்த சிறுகதைச் சிற்பிபுதுமைப்பித்தன் தமிழக எழுத்தாளர்களின் போற்றுதலுக்கு உரியவராக விளங்குவது போல, மறுமலர்ச்சிக்குழுவைத் தோற்றுவித்த அ.ந.கந்தசாமியும் ஈழத்து எழுத்தாளர்களிடையே விளங்கினார். யாழ்பாணத்தில் மறுமலர்ச்சிக் குழுவின் முன்னோடியாகத் திகழ்ந்தஅ.ந.கந்தசாமி கொழும்பு வந்தார். கொழும்பு வந்ததும் கொழும்பு வாழ்க்கையின் பரபரப்பில் பங்கு கொள்ளாமல்அமைதியை விரும்பினார். சமரச சன்மார்க்க கருத்துகளில் மனதைப் பறிகொடுத்த அ.ந.க. அன்பு மார்க்கத்தில்அவாக் கொண்டார். ஆனால் வாழ்க்கைப் பிரச்சினை காரணமாக அரசாங்க உத்தியோகம் ஒன்றில் அமர்ந்துவிட்டு, பின்னர் 'ஒப்ஸர்வர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் புரூப் ரீடராக அமர்ந்தார். அங்கும் கொஞ்சக்காலம் கடமையாற்றினார். தமிழகத்துப் பெரியார் ஈ.வே.ராவின் பகுத்தறிவுக் கருத்துகளில்ஈடுபாடு கொண்டார். அ.ந.க. மனித்னை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற கொள்கையில் அக்கறை கொண்டவர்.இதனால் இடதுசாரி இயக்கங்களால் கவரப்பட்ட அ.ந.கந்தசாமி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவரானார்.மார்க்ஸிய தத்துவ நூல்களை விரும்பிப் படித்தார். பத்திரிகைத் துறையினை மிகவும் நேசித்த அ.ந.க. 'ஒப்ஸர்வ'ருக்குப்பிறகு 'வீரகேசரி' ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில்அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்துவிலக்கப் பட்டார். தொழிலாளர் நலனில் அக்கறை.... அச்சகத் தொழிலாளர்கள் எப்பொழுதுமே அ.ந.க.வின் மேல்பெருமதிப்பு வைத்திருந்தார்கள். அவருடைய மரணத்தின் பின்பு கூட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் மலர்வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் பிரேத ஊர்வலத்திலும் பெருந்தொகையான அச்சகத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். பின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான 'தேசாபிமானி'யின் முதலாவது ஆரம்பகால ஆசிரியர் அ.ந.கந்தசாமியே.'தேசாபிமானி'யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள்,அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றியகாலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின்எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார்.உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார்.அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள்மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்றுஉழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின்போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார்.தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமரஇலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார். கம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் காரணமாகஅ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் பேரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏறபட்டது. [இதுபற்றி அ.ந.க.வே என்னிடம் தெரிவித்தார்]. அங்கிருந்து வெளியேறி 'சுதந்திரன்' பத்திரிகையில்சேர்ந்தார். [ தொடரும் ] |