கடைசி அத்தியாயமும், கதாசிரியரின்
முடிவுரையும்!
32-ம் அத்தியாயம்:
புயலுக்குப் பின் அமைதி!
சிவநேசரிடமிருந்து
கடிதம் எதுவும் வராதது பற்றி ‘அமராவதி’யில் அடிக்கடி பேச்சடிப்பட்டுக்
கொண்டேயிருந்தது. ஒரு நாள் தாய் பாக்கியத்துடன் செங்கழுநீர்த் தொட்டியின் கரையிலே
உட்கார்ந்து
சிவநேசரின் புள்ளி மானுக்கு உண்பதற்குப் புல் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீதர்,
“அம்மா, எனக்குக் கண் கிடைத்து எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்ட போதிலும்
மனதிலே பெரிய குறை
ஒன்றிருக்கவே செய்கிறது. எனது கண்ணின் சந்திர சிகிச்சைக்கு அப்பா பக்கத்திலே
இல்லாததொன்று. என் கண்களால் அப்பா இப்பொழுது எப்படி இருக்கிறார் என்று இது வரை
பார்க்க முடியவில்லையே என்பது மற்றொன்று” என்றான்.
பாக்கியம் அவன் வார்த்தைகளை ஆமோதித்தபடியே “எனக்கும் பெரும் கவலையாய்த்
தானிருக்கிறது. உனக்குச் சந்திர சிகிச்சை செய்து இப்பொழுது என் பார்வை
திரும்பிவிட்டது என்று நான் சென்ற வாரம் சென்னைக்கு விமானக் கடிதமொன்று
அனுப்பினேன். நன்னித்தம்பியும் அது பற்றி ஒரு விவரமான கடிதம் எழுதினார். ஆனால்
எதற்குமே அவர் பதிலெழுதவில்லை. இது எனக்குப் பயத்தை உண்டாக்குகிறது. ஏனென்றால்
அவரால் எப்பொழுதுமே என்னையும் உன்னையும் பிரிந்திருக்க முடியாது. அவர் கடிதம்
எழுதாதற்கு என்ன காரணமோ தெரியவில்லை” என்று பெருமூச்சுவிட்டாள்.
சிவநேசர் கடிதம் எழுதாது ஸ்ரீதருக்கும் பாக்கியத்துக்கும் மட்டுமல்ல சுசீலா,
நன்னித்தம்பியர், சுசீலாவின் தாய் செல்லம்மா எல்லோருக்குமே கவலையாகத்தானிருந்தது.
சின்னைய பாரதி கூடப் பாக்கியத்தைக் காணும் போதெல்லாம், “ஐயா எப்பொழுது
வருகிறார்?” என்று கேட்கத் தவறுவதில்லை. ஆனால் இந்தக் கவலையுள்ளும் ஒரு பெரிய
இன்பமும் ‘அமராவதி’யில் நிலவியது. அது ஸ்ரீதர் கண் பார்வை பெற்றதாகும். நேற்று
வரை கல்லுப் பிள்ளையார் போல அங்குமிங்கும் ஆசனங்களில் வீற்றிருப்பதும், தட்டுத்
தடுமாறி நடப்பதுமாகப் பரிதாபக் கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீதர் இன்று
முரளியோடு தோட்டத்தில் விளையாடுவதும் அவன் ஓட அவனைத் துரத்திப் பிடிப்பதும்
அவனோடு பந்தாடுவதுமாகப் பலவித புதுக் கோலங்களில் காணப்பட்டான். இவ்வித விளையாட்டு
நேரங்களில் முரளி தனது முரளி தனது கீச்சுக் குரலில் சப்தம் செய்து மழலைச்
சிரிப்பொலி உதிர்ப்பது அந்த மளிகைக்கே ஒரு பொலிவைக் கொடுத்தது.
ஸ்ரீதர் இப்பொழுது தன் எதிர்காலத்தைப் பற்றி மனக் கோட்டைகள் கட்ட
ஆரம்பித்திருந்தான். தன் மேற்படிப்பை விரைவில் முடித்துக் கொண்டு சித்திரம்,
சிற்பம், நாடகம் என்று தனது பொழுதுபோக்குக் கலைகளில் மும்முரமாக ஈடுபட
வேண்டுமென்பதும், அத்துறைகளில் பெரிய வெற்றிகளை நிலை நாட்ட வேண்டுமென்பதும் அவனது
பேராசையாக விளங்கின. ஆனால் அவற்றிற்கு அவன் முதலில் கொழும்பு செல்ல வேண்டும்.
ஆனால் அதற்கு முன்னர் தந்தை சிவநேசரை ‘அமராவதி’யில் சந்தித்துச் சில நாட்களேனும்
அவரோடு காலம் கழித்து பின்னர் தான் வீட்டை விட்டுப் புறப்பட வேண்டுமென்பது அவனது
திட்டம். ஆனால் அவர் தான் இப்படி எங்கோ போய் ஒளிந்து கொண்டு வர மாட்டேன்
என்கிறாரே என்று எரிச்சலுற்றான் அவன். பொதுவாக ஒரு காலமுமே வீட்டையும்
குடும்பத்தையும் வீட்டு நீண்ட பயணம் போக விரும்பாத அவர் இந்த நேரத்தில் இப்படிப்
போயிருக்கலாமா?” என்று அவன் குறைப்பட்டான்.
சில சமயங்களில் ஸ்ரீதர், பாக்கியம், சுசீலா எல்லோருமே சுரேஷிடம் சிவநேசரைப்
பற்றிப் பேசுவார்கள். அந்த நேரங்களில் அவன் நிலைமை மிக எக்கச்சக்கமாயிருக்கும்.
அவர்களது வார்த்தைகளுக்குச் சரியான பதில் கூற முடியாது திண்டாடுவான்.
இவ்விஷயத்தில் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையில் அவன் இருந்தான்.
இதன் காரணமாகத் தனக்கும் கையிலே அதிக வேலைகள் இருப்பதாகக் கூறி ‘அமராவதி’க்கு
வருவதையே அவன் குறைத்துக் கொண்டான். அவன் இவ்வாறு நடந்து கொண்டதற்கு இன்னொரு
காரணமும் இருந்தது. சிவநேசரைப் பற்றி அவர்கள் பேசும் போது
அவரது மரணமும் அவருக்குத் தான் கொள்ளியிட்ட சம்பவமும் அவனுக்கு ஞாபகம் வரும்.
அந்த ஞாபகம் அவனது நெஞ்சையும் கண்ணையும் ஒரே சமயத்தில் கலங்க வைக்கும். நெஞ்சின்
கலக்கத்தை மறைக்கலாம். கண்ணின் கலக்கத்தை எப்படி மறைப்பது? இதற்காக அவன் பல
தடவைகளில் பெரும்பாடுபட வேண்டியதாகிவிட்டது. இவற்றின் காரணமாக, ஸ்ரீதரின்
கடிதத்துக்கும், அஸ்திகளை ‘அமராவதி’க்குக் கொடுப்பதற்கும் சிவநேசர் விதித்திருந்த
இரண்டு மாத கெடு அணுகும் வரை ஸ்ரீதரையும் பாக்கியத்தையும் அடிக்கடி
பார்க்காமலிருப்பதே நன்று என்று முடிவு செய்தான்
அவன்.
ஓரோர் நேரத்தில் வல்வெட்டித்துறையில் வீட்டு விறாந்தையில் தனியே இருக்கும் போது
சிவநேசரின் நினைவு அவனுக்கு வரும். சிவநேசர் உயிரோடிருக்கும் போது அவருக்கு முன்
அவன் நேரிலே நின்று பேசியது வெகு சில தருணங்களில் மட்டும்தான், அவையும்
பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதருக்கு வைத்தியம் செய்ய ‘அமராவதி’க்கு வந்திருந்த
போதாகும். ஆனால் அப்போது கூட அவர் முகத்தை நன்கு அவதானித்துப் பார்த்து, அவன்
பேசியது மிக மிகக் குறைவேயாகும். உண்மையில், சிவநேசருடைய முகத்தில் முழு
விலாசத்தையும் அவன் அவதானித்தது ஸ்ரீதரால் வரையப்பட்ட அவரது
சித்திரத்திலும் ‘அமராவதி’ மாளிகையில் அங்குமிங்கும் காணப்பட்ட சில
புகைப்படங்களிலும் தான். இவை தவிர அவன் சிவநேசர் முகத்தை நன்கு அவதானித்தது
சென்னையில் அவர் மருந்தூட்டிப் பிணமாக வைக்கப்பட்டிருந்தபோது தான், பீர் மேடு
குமரப்பா நர்சிங் ஹோமில் அவர் அவரது அந்தஸ்துக்கேற்ற விலை உயர்ந்த சவப்
பெட்டியில் வெண்பட்டுத் துணியின் மத்தியில் நிம்மதியாகப் பள்ளிக் கொண்டிருந்த
காட்சி அவன் மனதில் இடையிடையே தோன்றிய போது அவர் முகமும் அவனோடு சேர்ந்து அவன்
மனதில் தோன்றியது. பிணம் பழுதாகி விடாமல் மருந்தூட்டியவர்கள் அவர் முகத்தை
மிகவும் சீரான முறையில் தயார் செய்திருந்ததோடு அவரது தலைமயிரையும் மாப்பிள்ளை
போல் ஒழுங்காகச் சீவி விட்டிருந்தார்கள். இவற்றின் காரணமாகச் சிவநேசரின்
முகத்தில் பிரேதக்
களையே காணப்படவில்லை. எவ்விதக் கவலையுமற்ற ஒருவர் தூங்குவது போன்ற் ஒரு பாவனை
மட்டுமே அவர் முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. சிவநேசர் அத்தோற்றத்திலேயே
அவன்
முன்னே வந்து கொண்டிருந்தார்.
சில சமயங்களில் சென்னை மயானக் காட்சியும் அவன் நினைவுத் திரையில் வந்தது.
ஆஜானுபாகுவான அவர் நீண்டு நிமிர்ந்து சிதையில் படுத்திருந்த தோற்றத்தையும் அவனால்
மறக்க முடியவில்லை. மரணத்தில் கூட என்ன கம்பீரம் என்று பாராட்டும்படி அல்லவா அவர்
அன்று விளங்கினார்?
இப்படிச் சிவநேசரின் நினைவு வரும்போதெல்லாம் சுரேஷ அவர் தனக்குக் கடித மூலம்
பணிந்த கடமைகள் கடமைகள் யாவற்றையும் தான் திறமையாக நிறைவேற்ற வேண்டுமே என்ற
கவலையால் பீடிக்கப்பட்டான். அத்துடன் அவர் குறித்த இரண்டு மாதத் தவணை முடித்து
‘அமராவதி’யின் தலைவரது மரணத்தைத் தான் பிரகடனம் செய்வதைக் கேட்டு, பாக்கியமும்
ஸ்ரீதரும் அதிர்ந்து விடக் கூடாதே என்றும் கலங்கலானான் அவன்.
“இந்தப் பயங்கரமான செய்தியைக் கேட்டு அவர்கள் இடிந்து விடாதிருப்பதற்கு அவர்கள்
மனதை முன் கூட்டியே ஓரளவு தயார் செய்ய முடியாதா?” என்றெண்ணிய அவனுக்கு அதற்குரிய
சந்தர்ப்பம் எதுவுமே கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் கெடுவுக்கு முதல் நாள் அவன்
‘அமராவதி’க்குச் சென்ற போது இதைப் பற்றிக் குறிப்பாக உணர்த்துவதற்கு ஒரு சிறிய
சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவே செய்தது.
அன்று அவன் ‘அமராவதி’க்குப் போயிருந்தபோது ஸ்ரீதரும் பாக்கியமும் அவனோடு
சிவநேசரைப் பற்றிப் பேசினார்கள்.
“சுரேஷ், சென்னை விலாசத்துக்கு எத்தனையோ கடிதம் எழுதியும் பதில் கிடைக்காததால்
சென்ற வாரம் ஸ்ரீதரைக் கொண்டு நான் மைசூர் மாஜி திவான் சூரியப் பிரசாத்துக்கு
அவர் சுகமாயிருக்கிறாரா என்று விசாரித்துக் கடிதம் எழுதும்படி சொன்னேன்.
ஸ்ரீதரும் அவ்வாறே எழுதினான். ஆனால் அதற்கு அவர் எழுதிய பதிலோ
ஆச்சரியமாயிருக்கிறது. அவர் பெங்களுருக்கே வர வில்லை என்று சூரியப் பிரசாத்
எழுதியிருக்கிறார். இன்னும் அவர் மகள் கல்யாணத்தைப் பற்றி நாங்கள் எழுதியதற்கும்
அவர் தமது மகளின் கல்யாணம் அடுத்த வருஷம்தான் நடக்கும் என்று எழுதியிருக்கிறார்.
எல்லாம்
விசித்திரமாயல்லவா இருக்கிறது? நான் குழம்பிப் போயிருக்கிறேன்.” என்றாள்
பாக்கியம்.
ஸ்ரீதரும் “அப்பா கொழும்புக்குப் போனால் கூட நாளொன்றுக்கு இரண்டு தடவை ட்ரங்கோல்
போட்டுப் பேசுவார். அப்படிப்பட்டவர் இந்தியாவுக்குப் போய் இப்படி மெளனமாயிருப்பது
எனக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருக்கிறது” என்றான்.
சுரேஷ் சந்தர்ப்பத்தை உபயோகித்து “ஸ்ரீதர், நான் ஒன்றை உனக்குச் சொல்ல
மறந்துவிட்டேன். உன் அப்பா உன்னிடம் கொடுக்கும்படி எனக்கொரு கடிதம்
அனுப்பியிருக்கிறார். அக் கடிதத்தை நாளை இங்கு வரும்போது நான் உன்னிடம் கொண்டு
வந்து தருகிறேன்.” என்றான்.
“என்ன, எனக்கெழுதிய கடிதத்தை உனக்கனுப்பியிருக்கிறாரா? இன்னும் அக் கடிதத்தைப்
பார்க்க நாம் ஏன் நாளை வரை பொறுக்க வேண்டும்? இப்பொழுதே நாங்களிருவரும்
வல்வெட்டித்துறைக்குப் போய் வருவோமே?” என்றான் ஸ்ரீதர்.
“போய் வரலாம். ஆனால் கடிதத்தை நாளைக்குத்தான் உன்னிடம் கொடுக்க வேண்டுமென்று
எனக்கு ஆணையிட்டிருக்கிறார் அவர். ஆகவே அதை வாசிக்க நாளை வரை பொறுக்கத்தான்
வேண்டும்.” என்றான் சுரேஷ்.
சுரேஷின் இம்மொழிகளைக் கேட்டு, ஸ்ரீதரும் பாக்கியமும் கலவரமடைந்தார்கள். “இதென்ன
விநோதமான நிபந்தனைகள். இந்நிபந்தனைகளைப் பார்த்தால் இதில் ஏதோ மர்மம் இருப்பது
போல்
தோன்றுகிறது. சுரேஷ், ஸ்ரீதருக்கு எழுதிய கடிதத்துடன் அவர் உனக்கும் ஏதாவது
எழுதியிருப்பாரல்லவா? அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறார்? அவர் உடற் சுகம்
எப்படி? அவர் எப்பொழுது இலங்கை வருகிறார்?” என்று கேட்டாள் பாக்கியம்.
இக் கேள்விகளுக்குச் சுரேஷால் என்ன பதில் சொல்ல முடியும்? முதலில் இக்
கேள்விகளுக்கு எவ்வித விடையுமளிக்காமலே தட்டிக் கழிக்கப் பார்த்தான். ஆனால்,
பாக்கியமும் ஸ்ரீதரும் அதற்கு இடம் அளிப்பவர்களாயில்லை. ஆகவே அவன் வேறு வழியின்றி
“இந்தக் கேள்விகள் எதற்குமே என்னால் பதிலளிக்க முடியாது. ஸ்ரீதரின் அப்பா
இவ்விஷயங்கள் எல்லாவற்றிலும் எனக்கு வாய்ப் பூட்டுப் போட்டிருக்கிறார். நாளைக்கு
ஸ்ரீதரின் கடிதத்தைத் தரும் போது தான் இவ்விஷயங்களில் என் வாய்ப் பூட்டு அவிழும்.
அப்பொழுது தான் பல விஷயங்களை உங்களுக்குச் சொல்லுவேன். இன்னும் கடிதத்தை
மட்டுமல்ல, கடிதத்தை விட முக்கியமான பொருளொன்றையும் என்னிடம் அவர்
ஒப்படைத்துள்ளார். அதையும் நாளைக்கு நான் எடுத்து வருவேன். தயவு செய்து அதுவரை
நீங்கள் இவ்விஷயமாகப் பொறுத்திருக்கவே வேண்டும்,” என்றான்.
அடுத்த நாட் காலை பத்து மணிக்கு ‘அமராவதி’ மாளிகையில் இடி இடித்தது; மின்னல்
மின்னியது; புயல் வீசியது. சுரேஷ் ஸ்ரீதர் கையில் சிவநேசரின் கடிதத்தை,
ஒப்படைத்தான். ஒப்படைக்கு முன் பாக்கியம், ஸ்ரீதர் சுசீலா ஆகியவர்களை நோக்கி
“கடந்த இரண்டு மாதங்களாக என் மனதுள் வைத்துக் காத்த துக்ககரமான இரகசியங்களை இன்று
நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.” என்று கூறித் தனக்குச்
சென்னையிலிருந்து சிவநேசர் எழுதிய கடிதத்திலிருந்து தான் தனது வீட்டிலுள்
உள்ளவர்களுக்குக் கூடத் தெரியாது இந்தியாவுக்குப் போனதையும் அங்கு நடந்த
சம்பவங்களையும் ஒன்றொன்றாய் எடுத்து விவரித்தான். தனக்கு சிவநேசர் எழுதிய
கடிதத்தையும் அவள் அவர்களிடம் காட்டினான். பின்னர் சென்னை மயானமொன்றில் தான்
அவருக்குக் கொள்ளி வைத்த வரலாற்றையும் கண்ணீர் வரக் கூறினான் அவன்.
சிவநேசரின் தற்கொலையைப் பற்றிக் கேள்வியுற்றதும் ஸ்ரீதர் ‘ஓ’வென்று அலறிவிட்டான்.
பாக்கியம் தாலி களைந்து “ஐயோ” என்று எழுப்பிய கூக்குரல் அந்த ‘அமராவதி’
மாளிகையின் அஸ்திவாரத்தையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது. சுசீலாவோ தன்னிலை
இழந்து தவித்து ஸ்ரீதரின் தோள்களைத் தன் கைகளால் கட்டிக் கொண்டு “ஐயோ நான் என்ன
செய்வோம்” எனக் கதறினாள்.
அவர்களின் பரிதாப நிலையைக் கண்ட சுரேஷ் தன்னாலியன்ற வரை ஆறுதல் மொழிகள் கூறினான்.
“அழுது கூக்குரலிடுவதால் என்ன பயனுமில்லை. கடிதத்தை வாசி” என்று அவன் ஸ்ரீதரை
வற்புறுத்தினான்.
இறந்து போன சிவநேசர் கடிதத்தின் மூலம் தன் மகனோடும், மனைவியோடும் ஆசை மருமகளோடும்
பேசினார்.
'என் அன்புள்ள மகன் ஸ்ரீதருக்கும், பிரிய மனைவி பாக்கியத்துக்கும் ஆசை மருமகள்
சுசீலாவுக்கும் சிவநேசர் எழுதும் கடிதம். இக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும்
போது நான் இறந்து இரண்டு மாதம் பூர்த்தியாயிருக்கும். சுசீலாவைப் பார்க்கத்
தனக்குக் கண்ணில்லையே என்று ஸ்ரீதர் கவலைப்பட்டான். அக் கவலையைப் போக்க
அவனுக்குக் கண்ணளிக்க நான் சாகிறேன். நான் வயதானவன். இன்றில்லாவிட்டால், என்றோ
நான் சாகத் தானே வேண்டும்? இன்று இவ்வாறு இறப்பதில் எனக்கென்னவோ திருப்தி. ஆகவே
ஸ்ரீதர், பாக்கியம், சுசீலா - நீங்கள் யாருமே என் மரணத்தைப் பற்றிக்
கவலைப்படக் கூடாது. உங்கள் அலுவல்களை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டு
மகிழ்ச்சியோடிருக்க வேண்டும்.
ஸ்ரீதர், நீ இக் கடிதத்தை உன் கண்ணாலே தானே வாசிக்கிறாய்? அது எனக்கு மிகவும்
இன்பளிக்கும் செய்தி. ஆனால் உண்மையில் அக்கண் என்னுடையது - இது எனக்கு அதிக
பெருமையளிக்கும் விஷயமாகும். இன்னொன்று, தற்கொலை செய்து கொண்ட பின்னும் கூட நான்
முற்றிலும் செத்துவிடவில்லை. என் கண் இன்னும் வாழ்கிறது. அது இன்னும் நீண்ட காலம்
வாழ வேண்டும் என்பதே என் ஆசை. தற்கொலை செய்வது பெரிய துன்பமாயிருந்திருக்கும்
என்று நீங்கள் எண்ணக் கூடும். அது தான் இல்லை, தற்கொலைக்கும் எத்தனையோ
மார்க்கங்களுண்டு. அதில் மிகவும் சுலபமான
ஒன்றைத்தான் நான் தெரிவு செய்திருக்கிறேன். உரோமர் இம்முறையை அனுஷ்டித்ததாக நான்
சில நூல்களில் படித்திருக்கிறேன். இரத்த நாளமொன்றைத் தெரிந்தெடுத்து ஒரு கூரிய
சவரக் கத்தியால் வெட்டி விடுவதே அது. இதனால் உண்டாகும் நோவு மிகவும் குறைவாம்.
எதுவும் இன்னும் சில நேரத்தில் எனக்குத் தெரிந்துவிடும்.
ஸ்ரீதர், உன் நண்பன் சுரேஷைத் தான் எனக்குக் கொள்ளி வைக்க நான்
தெரிந்தெடுத்திருக்கிறேன். அதன் மூலம் அவன் எனது மகனாகிவிட்டான். அவனை இனிமேல்
உன் அண்ணனாக நீ நடத்த வேண்டும். எனது சொத்துகள் பற்றி நீ எவ்வித கவலையும் பட
வேண்டாம். நியாயதுரந்தார் குமாரகுரியரும் ஹரிசன் கம்பெனியாரும் அவற்றை கவனித்து
கொள்வார்கள். ஒழுங்கான மரண சாதனம் முடித்திருக்கிறேன். பாக்கியம், சுசீலா,
ஸ்ரீதர், உங்களையும் சின்ன முரளியையும் விட்டுப்பிரிவது எனக்கு மிகவும்
கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆனால் என்ன செய்வது? இதை விட நல்ல வழி
வேறில்லை. உங்கள் எல்லோருக்கும் என் அன்பு.
‘அமராவதி’ வாழ்க!
சிவநேசர்
டாக்டர் குமரப்பா நர்சிங்
ஹோம், சென்னை.'
சிவநேசரின் அஸ்திக் கலசமும் அன்று பிற்பகல் சுரேஷால் ஸ்ரீதரிடம்
ஒப்படைக்கப்பட்டது. மூன்று மாதங்களின் முன்னர் ‘அமராவதி’ வளவிலிருந்து தனது
இந்திய நண்பர் சூரியப்பிரசாதின் மகளின் திருமணத்துக்குச் செல்வதாகப் பொய் கூறிப்
புறப்பட்ட சிவநேசர் இந்தியாவில் தாம் வாங்கிய பரிசுப் பொருள்களுடன் தம்
மாளிகைக்கு வந்திறங்குவதற்குப் பதிலாகப் பிடி சாம்பலாக வெள்ளிக்
கலசமொன்றில் வந்திறங்கியதைக் கண்ட பாக்கியம் தன்னை மீறிக் கதற, ஸ்ரீதர் கலசத்தைத்
தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, அதனைத் தன் கண்ணீரால் கழுவினான்.
“அப்பா, நீ உன் கம்பீர உருவத்தில் மீளவும் வருவாய், நீ இப்போ எப்படி இருக்கிறாய்
என்பதை என் புதிய கண்ணால் பார்க்க வேண்டுமென்று ஆசையோடு எதிர்பார்த்திருந்த என்
முன் நீ இந்த உருவிலா வரவேண்டும்? இலங்கையை விட்டுப் புறப்பட்டு மூன்று
மாதங்களின் பின் பிடி சாம்பலாக உன் மாளிகைக்கு வரும் நீ இரண்டு மாதங்களின் முன்
என் கண்ணின் ஒளியாக இங்கு வந்தாயே - இது போன்ற ஓர் அற்புதமான தியாகக் கதையை நான்
கண்டதுமில்லை, கேட்டதுமில்லையே. அப்பா, நீ இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்? முரளி
“தாத்தா எங்கே?” என்று என்னைக் கேட்டால்
நான் என்ன பதில் சொல்வேன்?” என்றழுதான் அவன்.
பாக்கியம் அன்றே வெள்ளை உடுத்து விதவைக் கோலம் பூண்டுவிட்டாள். தகவல் தெரிந்ததும்
நன்னித்தம்பியர், அவர் மனைவி செல்லம்மா, சின்னைய பாரதி ஆகிய யாவருமே கவலையால்
பீடிக்கப்பட்டார்கள். இரக்கமே உருவான சுசீலா, எவர் என்ன சொல்லியும் இரண்டு
நாட்கள் அன்னாகாரம் அருந்த மறுத்துவிட்டாள். பெரியவரின் ஈமக் கடன்கள் கீரிமலையில்
அன்றிலிருந்து மூன்றாம் நாள் செய்யப்பட்டன. அவர் மரணச் செய்தி பத்திரிகைகளிலும்
சுருக்கமாக வெளியிடப்பட்டது. ஆனால் எந்தக் கவலையும் இவ்வுலகில் ஒரு சில
நாட்களுக்குத்தானே? அதன் பின் சீக்கிரமே சிவநேசரின் பிரிவால் ஏற்பட்ட வேதனை மனதை
விட்டகல வாழ்க்கை பழைமை போல் ஓட ஆரம்பித்தது. ‘அமராவதி’யில் மீண்டும் பழைய அமைதி
குடி கொண்டது.
இருந்தாலும் பழைய ‘அமராவதி’யில் இப்பொழுது பல புதுமைகள், சிவநேசரின் மரண
சாதனத்தில் கூறப்பட்ட பிரகாரம் சுரேஷ் ஸ்ரீதருடன் சம பங்காளியாகிவிட்டான்.
அத்துடன், சிவநேசர் அவனிடம் கேட்டுக் கொண்ட பிரகாரம் ஸ்ரீதருக்குத் துணையாக அவன்
‘அமராவதி’யில் வந்து குடியேறினான். பாக்கியம் ஸ்ரீதர், சுசீலா எல்லாருக்குமே இது
மிகவும் திருப்தியைத் தந்தது. சிவநேசர் வீட்டில் இல்லாத குறையை அது ஓரளவு ஈடு
செய்தது.
இவை நடந்து சில மாதங்களின் பின்னர், சுரேஷின் திருமணமும் நடை பெற்றது. அவன்
கிஷ்கிந்தாவில் ஒரு நாள் கூறியபடி, பல ஆயிரம் வருடங்களின் முன் தமிழ்ச் சமுதாயம்
செய்த முடிவின்படி தன் மாமன் மகள் செல்வமலரை அவன் திருமணம் செய்து, அதன் மூலம்
மேற்படிப்புக்காகத் தன் மாமனாரிடம் அவன் பட்ட பணக் கடனையும் தீர்த்துக் கொண்டான்
அவன். செல்வமலரும் சுசீலாவும் சீக்கிரமே உயிருக்குயிரான தோழிகளாகி விட்டார்கள்.
‘அமராவதி’யில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் அதன் பெரிய மதில்கள் சிறிய கைப்பிடிச்
சுவர்களாகிவிட்டதாகும். வீதியில், செல்லும் பாதசாரிகளுக்குக் கூட ‘அமராவதி’யின்
அகன்ற விறாந்தைகள் இப்பொழுது நன்கு தெரிந்தன. வாசலின் பெரிய இரும்பு
‘கேட்டு’களுகுப் பதிலாக சிறிய மர ‘கேட்டு’கள் போடப்பட்டன. மாறி வரும்
சமுதாயத்தின் புதிய எண்ணங்களின் சின்னமாக அவை காட்சியளித்தன. இன்னும் வாசலிலே
காக்கி உடையோடு காணப்பட்ட அந்த வாசல் காவலாளியையும் இப்பொழுது அங்கே காணோம்.
ஸ்ரீதர் தன் படிப்பை முடிக்க, சுசீலாவோடும், முரளியோடும் சீக்கிரமே கொழும்பு
போனான். சுரேஷோ பாக்கியத்துக்குத் துணையாக ‘அமராவதி’யில் தங்கி வைத்தியத்தோடு
சமுதாய சேவையையும் மேற்கொண்டான். ஸ்ரீதரும் தன் படிப்பை முடித்துக் கொண்டதும்
சமுதாய அரசியல் சேவைகளில் ஈடுபடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறான். இதை
எல்லோரும் வரவேற்றார்களென்றாலும் சுரேஷே மிக அதிகமாக வரவேற்றான் என்பதைக்
கூறவேண்டியதில்லையவா?
முற்றும்.
தொடர் நவீனம்: மனக்கண்
அறிஞர் அ.ந.கந்தசாமி
கடைசி அத்தியாயம்: கதாசிரியரின் முடிவுரை!
நாவல்
இவ்வாறு வர வேண்டியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நாவலின் முக்கிய
நேரங்களில் ஒன்று பாத்திரப் படைப்பாக இருப்பது. இரண்டு, கதை நிகழும் சூழலை
வர்ணனைகள் மூலம்
மனக் கண்ணின் முன்னர் கொண்டு வந்து நிறுத்த வேண்டியிருப்பது. சிறுகதைக்கு
இந்நோக்கங்களில்லை - ஒரு சிலர் தமது சிறுகதைகளில் இவற்றைச் செய்ய முயன்றாலும் கூட
நானிங்கே நாவலின்
இரண்டு முக்கிய நோக்கங்களையே சொன்னேனாயினும், டால்ஸ்டாய் போன்ற பெரு
நாவலாசிரியர்களில் சிலர் அறிவூட்டலும் நாவலின் பணி என்று கருதினார்கள். அதனால்
தான் யுத்த
விவரங்களையும், சரித்திர விவரங்களையும் மிகவும் அதிகமாக விளக்கும் அத்தியாயங்களை
“யுத்தமும் சமாதானமும்” என்னும் நூலில் டால்ஸ்டாய் சேர்த்திருக்கிறார். விக்டர்
ஹியூகோவின் “ஏழை படும் பாட்டி”ல் பாரிஸ் சாக்கடை பற்றிய செய்திகள் விரிவாகச்
சேர்க்கப்பட்டுப்பதும் இக் காரணத்தினாலே தான். சுருங்கச் சொன்னால் பார காவியம்
செய்யும் கவிஞனும் காத்திரமான நாவலை எழுதும் நாவலாசிரியனும் கதை சொல்லிச்
செல்கையில் வழியில் தென்படும் எந்த விஷயத்தையும் பற்றிப் பூரணமான விளக்கம்
கொடுக்காமல் மேலே செல்வதில்லை. ஆனால் இவ்வித விளக்கம்
கொடுக்க ஒருவன் கதை கட்டும் ஆற்றல் பெற்றவனாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. பல
விஷயங்களையும் தெரிந்து ஓர் அறிஞனாகவும் விளங்க வேண்டியிருக்கிறது. ஒருவனுக்கு
எவ்வளவுக்கு எவ்வளவு நூலறிவும், அனுபவ அறிவும் சமுதாய அறிவும், இருக்கிறதோ
அவ்வளவுக்கு அவ்வளவு இந்த விளக்கங்களை அவன் திறம்படச் செய்து கொண்டு போகலாம்.
சிறு கதாசிரியனுக்கோ இத் தொல்லை இல்லை. ஆனால் இங்கே நாம் மறக்கவொண்னாத ஒரு
விஷயமென்னவென்றால், என்ன தான் அழகான விளக்கம் கொடுத்தாலும் அவ்விளக்கம் கதைக்கும்
குறுக்கே வந்து விழக் கூடாது என்பதாகும். இதற்கு மிகவும் நுட்பமான ஓர்
அளவுணர்ச்சி நாவலாசிரியனுக்குத் தேவை. கதை தன் வழக்கமான ஓட்டத்தில் போய்க்
கொண்டிருக்க, அதனோடு கை கோத்துக் கதாசிரியனின் விளக்கங்களும் போய்க் கொண்டிருக்க
வேண்டும். இது விஷயமாக சாதாரணமாக உரையாடும்போது நாம் நம் நண்பர்களுக்குப்
பிரெஞ்சு புரட்சி போன்ற ஒரு பொருள் பற்றிக் கொடுக்கும் ஒரு விளக்கத்துக்கும்,
ஒருமேடையில் அது பற்றிச் செய்யும் சொற்பொழிவுக்கும் உள்ள வித்தியாசத்தை நினைவு
கூர்வது நன்று. நாவல்களில் வரும் விளக்கம் நண்பரோடு பேசும் போது நாம் கொடுக்கும்
விளக்கம் போல் அமைய வேண்டும். இல்லாவிட்டால் அவை சரித்திர நூல்களாகவோ, சமூக இயற்
பனுவல்களாகவோ, பொருளாதாரக் கட்டட நிர்மாண விவாத நூல்களாகவோ மாறிவிடும். உலகப்
பெரும் நாவலாசிரியர்கள் பலரும் தம் விளக்கங்களை அளவறிந்து கையாண்டிருப்பதே
அவர்களது படைப்புகளின் கலையழகு சிதைவுறாதிருப்பதற்குக் காரணம். உதாரணமாக விக்டர்
ஹியூகோவின்
பாரிஸ் நகரத்தின் சாக்கடை வர்ணனைகள் நீண்டவையாயிருந்தாலும் பரபரப்பான சம்பவங்களை
மிகுதியாகக் கொண்ட அக்கதையின் ஓட்டத்தை அவை எவ்விதத்திலும் தடுக்கவில்லை. இந்தத்
தன்மை இருப்பதால்தான் இன்றும் உலகெங்கும் விரும்பி வாசிக்கும் கதையாக இது இருந்து
வருகிறது.
நாவலியக்கத்தின் தன்மைகள் பற்றி நான் இங்கு இவ்வாறு விவரித்ததன் காரணம் நாவல்
தமிழுக்குப் புதியதோர் இலக்கிய உருவமாயிருப்பதுனாலேயேயாகும். புதிய இலக்கிய
உருவமொன்று
உருப்பெற்று வரும்போது அதை எவ்வாறு சுவைப்பது - எவ்வாறு விமர்சிப்பது என்பது
சொல்லிக் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றுதானே? இது வாசகர்களின் சுவைக்கும் திறனை
உயர்த்துவதோடு, எழுத்தாளர்களுக்கும் கூட அவர்களின் எழுத்துக்கு வழிகாட்டியாக
அமையும். என்னைப் பொறுத்த வரையில் ஆரம்பத்திலிருந்தே நான் ஆக்க எழுத்தாளனாக
மட்டுமல்ல, கலை இலக்கிய
விமர்சகனாகவும் பயின்று விட்டதால் இவ்வித பிரச்சினைகளை என்னால் தட்டிக் கழிக்க
முடியாமலிருக்கிறது.
நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்;
கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல்
இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல்
ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே
மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும்.
இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித
உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப்
பயன்படுத்தி அவளை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis
Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப்
பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர்
பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்”
என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே
ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles
Dickens) பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே
காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று
அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே
மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும்
பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது.
“மனக்கண்”ணைப் பொறுத்த வரையில் நாவல் பற்றிய மேற்கூறிய பிரக்ஞையுடனேயே நான் அதனை
எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்குச் சுவையான ஒரு கதையைச் சொல்ல வேண்டும்; அது
அவர்கள் அனுதாபத்தையும் இரக்க உணர்ச்சியையும் தூண்ட வேண்டும்; அதே நேரத்தில்
முடிந்த இடங்களில் வாழ்க்கையில் பிடிப்பைத் தரும் நகைச்சுவை, வேடிக்கை போன்ற
உணர்ச்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும்; சூழ்நிலை வர்ணனையையும் பாத்திர அமைப்பும்
சிறந்து விளங்க வேண்டும்; கதைக்கு இடக்கரில்லாது வரும் அறிவுக்கு விருந்தான
விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் இந்நாவலை எழுதும்போது என்னை
உந்திக் கொண்டேயிருந்தன. இன்னும் உலகப் பெரும் நாவலாசிரியர்களான டிக்கென்ஸ்,
டால்ஸ்டாய், சோலா, டொஸ்டோவ்ஸ்கி, கல்கி, தாகூர், விகடர் ஹியூகோ போலத் தெட்டத்
தெளிந்து ஒரு வசன நடையில் அதைக் கூற வேண்டுமென்றும் நான் ஆசைப்பட்டேன். இன்று
தமிழில் ஒரு சிலர் - முக்கியமாகக் கதாசிரியர் சிலர் இயற்கைக்கு மாறான சிக்கலான
ஒரு தமிழ் நடையை வலிந்து மேற்கொண்டு எழுதுவதை நாம் பார்க்கிறோம். இப்படி யாராவது
எழுத முயலும்போது அவர்கள் வசன நடை முன்னுக்கு வந்து பொருள் பின்னுக்குப்
போய்விடுகிறது.
நடை என்பது ஒருவனின் உடையைப் போல. சாமுவேல் பட்லர் என்ற ஆங்கில எழுத்தாளர் எந்தக்
கலையிலுமே “ஸ்டைல்” (Style) அல்லது “நடை” என்பது நாகரிகமான உடையைப் போல இருக்க
வேண்டுமென்று கூறியிருக்கிறார். அது பார்ப்பவர்களின் கவனத்தை மிக மிகக் குறைவாக
ஈர்க்க வேண்டுமென்பது அவரது கருத்து. அநாவசியமான “ஜிகினா” வேலைப்பாடுகள் உள்ள உடை
கூத்து மேடைக்கோ, வீதியில் வெற்றிலை விற்பனை செய்பவனுக்கோ தான் பொருத்தம்.
ஸ்டீபன் ஸ்பெண்டர் இதனை இன்னும் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். ஆகச் சிறந்த
எழுத்தாளர்களுக்கு நடையே இல்லையாம். எடுத்த இவ்விஷயத்தை எவ்விதம் சொன்னால்
தெளிவும் விளக்கமும் ஏற்படுகிறதோ அவ்விதம் சொல்லிச் செல்வதை விட்டு செயற்கையான
மேனிமினுக்கு வேலைகளை மேற்கொள்வதைப் பண்பும் முதிர்ச்சியும் பெற்ற எழுத்தாளர்கள்
இன்று முற்றாக ஒதுக்கி வருகிறார்கள்.
இயற்கைக்கு மாறான செயற்கை நடைகளை வருவித்துக் கொண்டு எழுதுபவர்கள் சொந்த
மயிருக்குப் பதிலாக டோப்பா கட்டிக் கொண்டவர்களை ஞாபகமூட்டுகிறார்கள். சிரில்
சொனோலி (Cyril Chonolly)
என்ற ஆங்கில விமர்சகர் இயற்கையான நடையில் எழுதுபவர்களை “அவர்கள் சொந்த மயிருடன்
விளங்குபவர்” என்று பாராட்டுகிறார். வீதியில் யாராவது இயற்கைக்கு மாறாக ராஜ நடை
போட்டு நடந்தால் நாம் அதைப் பார்த்துச் சிரிக்கிறோமல்லவா? இலக்கியத்திலும் இதே
நிலைதான்.
“மனக்கண்”ணை நேரிய ஒரு நடையிலேயே நான் எழுதியிருக்கிறேன். நான்
வாசகர்களுக்குக் கூற வந்த பொருளின் தெளிவே என் குறிக்கோள். அதனால் தான்
பாத்திரங்களின் பேச்சிற் கூட ஒவ்வொரு பிரதேசத்தினருக்கே விளங்கக் கூடிய பிரதேச
வழக்குகளை மிகவும் குறைத்து பொதுவாகத் தமிழர் எல்லோருக்குமே விளங்கக் கூடிய
சரளமான ஒரு செந்தமிழ் நடையை நான் கையாள முயன்றிருக்கிறேன். இதனால் தான் இக்கதை
யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மலை நாட்டிலும் ஏக காலத்தில் வாசகர்களின்
பேராதரவைப் பெற்றது.
ஆனால் நடையில் மட்டுமல்ல. “மனக்கண்” வேறு பல எழுத்தாளர்களின் நாவல்களுடன்
மாறுபடுவது கதை அமைப்பிலும் தான். நாவலில் பாத்திர அமைப்பும் சூழ்நிலையும் மிக
முக்கியமானவை என்றாலும் கூட இறுக்கமான நாடகத்தன்மை கொண்ட கதை அமைப்பும்
அவசியமாகும். இவ்வித கதை அமைப்பில்லாத பாத்திர சிருஷ்டி நாவலாகாது. வெறும்
வியாசமாகத்தான் விளங்கும். அடிசன் என்ற ஆங்கில எழுத்தாளர் இப்படிப்பட்ட பாத்திர
சிருஷ்டியில் வல்லவர். சர் ரோஜர் டிகவுர்லி, கறுப்புடை மனிதன் போன்ற பாத்திரங்களை
அவர் சிருஷ்டித்தார். ஆனால் அவர் தம் எழுத்தை நாவல்
என்று கூறவில்லை. வியாசங்கள் என்றே வர்ணித்தார். இன்று நாவலைப் பற்றிய ஒரு புதிய
கருத்தைச் சில விமர்சகர்கள் உலகின் பல பகுதிகலிலும் பரப்ப முயன்று வருகிறார்கள்.
நாவலில் கதை பின்னல் அவ்வளவு முக்கியமல்ல என்பது இவர்களின் கருத்து. இவர்களைப்
பற்றி சோமர்சேட் மோம், “இந்த அளவுகோவலின்படி பார்த்தால் வியாசமெழுதுபவர்களே
சிறந்த நாவலாசிரியர்கள். சார்லஸ் லாம்பும், ஹல்லீட்டுமே நல்ல நாவலாசிரியர்கள்”
என்று கேலி செய்திருக்கிறார்.
கதை அமைப்பற்ற சப்பட்டை நாவல்களை எழுதுபவர்களைப் பற்றி அவர் இன்னோரிடத்தில் பின்
வருமாறு கூறுகிறார்: “உயிருள்ள மனிதர்களைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் படைத்த
கெட்டிக்கார எழுத்தாளர் பலர், அவ்வாறு அவர்களைச் சிருஷ்டித்த பின்னர் அவர்களை
வைத்து என்ன செய்வதென்றறியாது மயங்குகின்றார்கள். அவர்களை வைத்து பொருத்தமான
கதையை உண்டாக்கும் ஆற்றல் இவர்களிடம் இல்லை. ஆகவே எல்லா எழுத்தாளர்களையும் போல
(எல்லா எழுத்தாளரிடமும் ஓரளவு பொய்மை (Humburg) இருக்கிறது) இவர்களும் தமது
குறைபாட்டை ஒரு நிறைபாடாகக்
காட்ட முயல்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை வாசகர்களே யூகித்துக்
கொள்ளட்டுமென்றோ, வாசகர்கள் இந்த விஷயத்தை அறிய முயல்வதே தவறென்றோ கூறி
விடுகின்றனர். வாழ்க்கைக் கதைக்கு முடிவு இல்லையென்றும், சம்பவங்கள்
செதுக்கப்பட்ட ஒரு முடிவை அடைவதில்லை என்றும், நிகழ்ச்சிகள் தொங்கிக்கொண்டுதான்
கிடக்கும் என்றும் கூறி விடுகின்றனர். அவர்களின் இக்கூற்று எப்பொழுதும்
உண்மையல்ல. ஏனென்றால் எல்லோர் கதைக்கும் சாவென்ற முடிவாவது இருக்கத்தான்
இருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்வது உண்மையாயிருந்தாலும் கூட அது நல்ல வாதமாகாது.
ஒரு சிறந்த கதையைப் படைப்பது கஷ்டமான ஒரு வேலைதான். ஆனால் அதற்காக அதை வெறுப்பது
நல்ல நியாயமல்ல. துன்பியல் நாடகங்கள் பற்றி அரிஸ்டாட்டில் கூறியது போல்
ஒரு கதைக்கு ஒரு தொடக்கமும் நடுவும் முடிவும் இருக்கவே வேண்டும்.
கதை அமைப்புப் பற்றி இக் கருத்தைக் கொண்ட சோமர்செட் மோம் நடையைப் பற்றி,
“தெளிவும் இனிமையும் எளிமையும் கொண்டதே நல்ல நடை” என்ற கருத்தைப் பல இடங்களில்
வெளியிட்டிருக்கிறார். கதை, நடை என்ற இரண்டிலும் மோமுடன் எனக்கு உடன்பாடு. ஏன்,
இவற்றில் டிக்கென்ஸ் தொடக்கம் தாகூர் வரைக்கும் உலகின் நல்ல நாவலாசிரியர்கள்
எல்லோருமே
இவ்வப்பிப்பிராயத்தையே கொண்டிருந்திருக்கின்றனர். “மனக்கண்”ணில் நான்
பின்பற்றியிருப்பதும் இக்கொள்கைகளைத்தான்.
நாவலே இன்று வழக்கிலுள்ள இலக்கிய உருவங்களில் மிகவும் பிந்தியது. இருந்த போதிலும்
அது மிகவும் வலிமை கொண்டதாக வளர்ந்து விட்டது. இன்னும் உலகின் எதிர்கால இலக்கியம்
பெரிதும் நாவலாகவே இருக்கப் போகிறதென்பதிலும் சந்தேகமில்லை. நாவல் இவ்வாறு வெற்றி
கட்டி வருவதற்குக் காரணம் மனிதரில் பெரும்பாலோருக்கு நாவல்தான் வாழ்க்கை
அனுபவத்துக்கே வாயிலாவது இருக்கிறது என்பதாகும். தன்னந்தனியாகத் தூரக்
கிராமத்தில் வாழ்பவள் நகரத்து அனுபவங்களை நேரடியாக அனுபவிக்காமலே நான்
அனுபவிக்கக் கூடியதாயிருப்பது நாவல்களின்
மூலம்தான். காதலை, நேரில் அனுபவியாதவள் காதலையும், தாய்மையின் அன்பை அறியாதவள்
தாய்மையையும், பிள்ளைப் பாசத்தை நேரில் காணாதவள் பிள்ளைப் பாசத்தையும் ,
யுத்தத்தை நேரில் காணாதவன் யுத்தத்தையும், தான் நேரில் துய்த்தது போல் இன்று
அனுபவிக்கக் கூடியதாயிருப்பது நாவல்கள் மூலமேயாகும். நாவல்கள் முழு உலக
அனுபவத்தையுமே நமக்குத் திறந்து காட்டி நம் உளப்பண்பை விருத்தி செய்கின்றன.
ஆனால் நாவலென்பது புற நிகழ்ச்சிகளை மட்டும் கூறும் ஓர் இலக்கிய உருவமல்ல. அது
மனதின் உட்புற நிகழ்ச்சிகளையும் காட்டுகிறது. அதனால்தான் சர் ஐவர் எவன்சன்ஸ் என்ற
இலக்கிய விமர்சகர் “நாவல் இன்று ஓர் உட்புறத் தனி மொழியாகவும் வளர்ச்சியடைந்து
வருகிறது” என்று கூறியுள்ளளார். “மனக்கண்”ணில் பல இடங்களில் சிந்தனையோட்டங்கள்
நீள வர்ணிக்கப்படுவதைக் காணலாம். பாத்திரங்களின் குணா குணங்களை விளக்கிக் கொண்டு
அவர்களின் அக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அவை நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
கதாசிரியனாகிய என்னைப் பொறுத்தவரையில் “மனக்கண்”ணை எழுதியது எனக்கு ஒரு பெரிய
அனுபவம். இதற்கு முன் சிறுகதைகளையும் , கவிதைகளையும், சிறுவர் நெடுங் கதை
ஒன்றையும், நாடகங்களையும் எழுதியுள்ள நான் எமிலி சோலாவின் “நானா” என்ற நாவலைத்
தமிழ்ப்படுத்தியிருந்த போதிலும் “மனக்கண்”ணை எழுதிய போது புதியதோர் உலகில்
சஞ்சரிப்பது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. பாத்திரங்களைச் சிருஷ்டித்து
அவர்களைச் சமுதாயப் பின்னணியிலே உலவ விடும்போது அவர்கள் முன்னில்லாத ஒரு
சக்தியையும் வலிவையும் பெற்று ஆசிரியனையே மலைக்க வைத்து விடக் கூடும் என்பதை நான்
அனுபவத்தில் கண்டேன். நாவலை வாசிப்பவர்கள் மட்டுமல்ல அதை எழுதும் ஆசிரியனும்
உணர்ச்சிப் பொங்கலில் அகப்பட்டுக் கொள்ளவே செய்கிறான். இந்தக்
கதையை உருவாக்கிய கடந்த ஒரு வருட காலமும் நான் “அமராவதி வளவில்” ஓர்
அங்கத்தினனாகவே ஆகிவிட்டேன். ஸ்ரீதர், சிவநேசர், பாக்கியம், சுசீலா, சுரேஷ்,
முரளி ஆகிய யாவரும் இரவும் பகலும் என்னோடிருந்தார்கள். அவர்களின் இன்பத்
துன்பங்களை நானும் அனுபவித்தேன். இப்படிப்பட்ட அனுபவமேற்பட்டு அதனை எழுத்தில்
வடிப்பதற்கு எழுத்தாளன் தன் உடல் சக்தி, மனச் சக்தி, நரம்பின் சக்தி ஆகியவற்றை
மிகவும் அதிகமாக ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. அதனாற்றான் ஆர்னால்ட் பெனட் என்ற
ஆங்கில நாவலாசிரியர் “நாவல் எழுதுவதற்கு நாடகம் எழுதுவதிலும் பார்க்க
அதிக நரம்புச் சக்தி தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.
“மனக்கண்”ணின் பாத்திரங்களைப் பற்றிப் பேசுகையிலே, என்னைப் பெரிதும் மலைக்க
வைத்தவர் சிவநேசரே. அவர் எவ்விதம் நடந்து கொள்வார் என்பது எனக்கு முன் கூட்டியே
தெரியாது. பெரிய மனிதரான அவர் தன்னிஷ்டம் போல் நடந்து கொள்வார். அவரை நினைத்தால்
வாசகர்களுக்கு எப்படியோ. என்னைப் பொறுத்தவரையில் எழுந்து நின்று மரியாதை செய்ய
வேண்டும் போன்ற உணர்ச்சி அவர் முன்னால் எனக்கு ஏற்படுகிறது.
முன்னர் கூறிய பாத்திரங்களைத் தவிர பத்மா தொடக்கம் வேலாயுதக் கிழவன் வரை, அதிகார்
அம்பலவாணர் தொடக்கம் அடுத்த வீட்டு அன்னம்மாக்கா, அவளது மகன் திராவிடதாசன்,
வாத்தியார் பரமானந்தர், கமலநாதன், தங்கமணி, அவள் தோழி ரெஜீனா, சின்னைய பாரதி,
நன்னித்தம்பி, பேராசிரியர் நோர்த்லி போல் ஏராளமான பாத்திரங்கள் மனக்கண்ணில் வந்து
சென்ற போதிலும் ’மோகனா’ என்னும் கிளியும் ‘ஸ்ரீதர்’ ‘சுரேஷ்’ என்ற மீன்களும் என்
மனதை விட்டு ஒரு போதும் அகலா. இதில் ‘மோகனா’ என்னும் கிளி மனிதரால் மாற்ற முடியாத
சிவநேசரின்
உள்ளத்தைத் தன் கிளிப் பேச்சால் மாற்றித் தனிப் பெருமை கொண்டதல்லவா? கருங்கல்லில்
ஈரத்தைப் பெய்த கல்லுருக்கு வேலையை அது செய்திருக்கிறது.
“மனக்கண்” முடிவோடு நாம் ஸ்ரீதர் தொடக்கம் ‘மோகனா’ வரை எல்லாப்
பாத்திரங்களிடமிருந்தும் விடை பெறுகிறோம். அத்துடன் பல்கலைகழகத்து நாடக மேடை
தொடக்கம், தேர்ஸ்டன் வீதி, கொட்டாஞ்சேனை, மவுண்ட் வவீனியாக் கடற்கரை, நொச்சிக்கடை
சுந்தரேஸ்வரர் கோவில், ‘அமராவதி வளவு, 'கிஷ்கிந்தா' இல்லம்,, பம்பலப்பிட்டி
‘எஸ்கிமோ’ ஐஸ்கிறீம் பார்லர் ஆகிய இடங்களில் நாம் ஸ்ரீதருடன் சுற்றித்
திரிந்ததற்கும் முடிவு வந்துவிட்டது. ஸ்ரீதரின் செயல்களில் என்னால் மறக்க முடியாத
ஒன்று அவன் கால்பேஸ் கடற்கரையில் பத்மாவுடன் மழை நீராடியமை. காவிய
நாயகர்கள் கடல் நீராடியமையையும் புனல் நீராடியமையையும் நாம் முன்னர் பல நூல்களில்
படித்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீதர் தான் முதன் முதலாக மழை நீராடிய கதாநாயகனென்று
நான் நினைக்கிறேன். “மனக்கண்” ஒரு விரிந்த நாவல். அதில் ஓர் இதிகாசத் தன்மை
இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். அதில் நான் எவ்வளவு தூரம் வெற்றி
பெற்றிருக்கிறேன் என்பதை நான் அறியேன். பெரிய படாங்கில் எழுதப்பட்ட பரந்த
சித்திரம் அது. ஆனால் சித்திரம் குறைவற்றதா? கலை இலக்கியத் துறைகளைப்
பொறுத்தவரையில் குறைவற்ற படைப்பு எதுவுமே இவ்வுலகில்
எவராலும் படைக்கப்பட்டு விடவில்லை. விக்டர் ஹியூகோ பற்றியும் டால்ஸ்டாய்
பற்றியும் கூட அப்படித்தான் சொல்கிறார்கள்.
இலக்கிய விமர்சனப் பிரச்சினையான இது பற்றி இங்கே விரிவாக எழுத இடமில்லை. இன்னும்
நூலாசிரியரே தந்து நூலின் சிறப்புகளையும் குறைகளையும் பற்றி எழுதலாமா என்ற
இன்னொரு கேள்வியும் பிறக்கிறது. அவ்வாறு அவன் எழுத முற்படும்போது, பொய்யான
அடக்கமும், தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற மனப்பாங்கும் சரியான விமர்சனத்துக்குப்
பாதகமாக அமையலாம். ஆகவே “மனக்கண்”ணை எவ்விதத்திலும் இங்கே விமர்சிப்பது என்
நோக்கமல்ல.
நான் இத்தொடர்கதையை எழுத ஆரம்பித்ததும் எனது சக எழுத்தாளரும் நாவலாசிரியருமான
செ.கணேசலிங்கனின் இந்திய விஜயத்தின் பயனாக, சென்னை இலக்கிய வட்டாரங்களில் எழுந்த
ஒரு கேள்வியைப் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு தொடர் நவீனம்
நல்ல இலக்கியமாக அமைய முடியுமா என்பதே அது. பத்திரிகையின் கொள்கை நாவலின் போக்கை
அமுக்கலாமென்பதும், வாராந்த வாசகனின் ஆவலைத் தூண்டுவதற்காக ஓர் எழுத்தாளன் நாடகத்
தன்மையற்ற இடங்களையும் நாடகமாகக் காட்ட முயலாமென்றும், இவ்விதம் விட்டுக்
கொடுப்பது
அவனது பண்பாகிவிட்டால் அவன் கலையில் பொய்மை புகுந்து விடுமென்றும் கனேசலிங்கன்
சுட்டிக்காட்டினார். இதில் ஓரளவு உண்மை அடங்கியிருக்கிறது என்பதை நான் மறுக்க
வில்லையாயினும்,
முழு உண்மையின் சொரூபமும் அதில் இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் இன்று
உலகப் பேரிலக்கியங்களாகக் கொண்டாடப்படும் பல நாவல்கள் தொடர் கதைகளாக
எழுதப்பட்டனவே.
டொஸ்டோவ்ஸ்கியின் “காம்சோவ் சகோதரர்கள்” நெக்ரசோவ் ரிவ்யூ என்னும் சஞ்சிகையில்
வெளிவந்த தொடர் கதைதான். எமினி சோலாவின் ‘ நானா’வும் முதலில் தொடர்கதையாகவே
வெளியிடப்படது. டிக்கென்ஸின் ‘ஒலிவர் டுவிஸ்ட்,’ ‘நிக்கலஸ் நிக்கல்பி,’ ‘இரு
நகரக் கதைகள்’ என்பனவும் ‘பென்ட்லீஸ் வீக்லி’ போன்ற சஞ்சிகைகளில் தொடர்கதைகளாக
வெளியிடப்பட்டவை தாம். ஏன், தமிழகத்தின் சிறந்த நாவலாசிரியர் என்று கருதப்படும்
‘கல்கி’யின் எல்லா நாவல்களுமே ‘ஆனந்த விகடனி’லும் ‘கல்கி’யிலும் தொடர் கதைகளாக
வெளிவந்தவை தாமே? ஆகவே ஒரு நாவல்
நல்ல இலக்கியமாக அமைகிறதா அல்லவா என்பதை, அது தொடர்கதையாக எழுதப்படுகிறதா அல்லது
நேரடியாகவே புத்தகமாக வெளியிடப்படுகிறதா என்பது ஒருபோதும் நிர்ணயித்து விடாது
என்பதே எனது கருத்து. சிறந்த இலக்கியப் புலன்வாய்ந்த எழுத்தாளனால் சிரமமான
சூழலிலும் நல்ல இலக்கியத்தைப் படைக்க முடியும்.
இவை போக முடிவுரையின் ஓர் அம்சம் நன்றி நவிலலாகும். ‘மனக்கண்’ நாவலை நான்
உருவாக்கித் தொடர் கதையாக வெளியிடுவதற்குத் ‘தினகரன்’ வார மஞ்சரி எனக்களித்த
வாய்ப்பை நான் ஒரு போதும் மறக்க முடியாது. இதற்காக எனது மனப்பூர்வமான நன்றியைத்
‘தினகரன்’ வார மஞ்சரிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
[ அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கவிதை,
விமரிசனம், மொழிபெயர்ப்பு, நாடகம், உளவியல் மற்றும் சிறுவர் இலக்கியமெனப் பல்வேறு
துறைகளிலும் கோலோச்சியவர். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின்
முன்னோடிகளிலொருவரான இவரொரு செயல்வீரரும் கூட. இவரது வெளிவந்த ஒரே நாவல்
'மனக்கண்'. இந்நாவல் ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர்
21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்த நவீனம். இந்நாவலின்
பிரதியினைப் பெறுவதற்காக நாம் பெற்ற சிரமங்கள் கொஞ்ச
நஞ்சமல்ல. இதன் பிரதியினை வைத்திருந்த திருமதி கமலினி செல்வராஜனுடன் தொடர்பு
கொண்டபொழுது அவர் அப்பொழுது கேட்ட பணத்தொகையினை எம்மால் கொடுக்க முடியாது போனதால்
அம்முயற்சி தடைபட்டுப் போனது. மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் அதனைக்
கிழக்கிலங்கையின் பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்து விட்டதாக அறியத்தந்தார்.
பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையத்தின் வாயிலாகத் தொடர்பு கொண்டு
மனக்கண் நாவலின் பிரதியினைப் பெற்றுக் கொண்டோம். அதனைத் தேடுவதற்கும்,
அத்தியாயங்களைப் பிரதியெடுப்பதற்கும் மட்டுமே மிகவும் நியாயமான கட்டணம்
அறவிட்டார்கள். ஆனால் அவர்கள் அனுப்பிய நாவற் பிரதி சாதாரண A1 பக்க
அளவிலமைந்தருந்ததனால் வாசிக்க முடியாத அளவுக்குச் சிறியதாகவிருந்தது. இதனால்
அப்பிரதியினை ததமிழகத்திலுள்ள சிநேகா பதிப்பக பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, அவர்
மூலம் அங்குள்ள ஒருவர் மூலம் மீண்டும் கட்டண அடிப்படையில் தட்டச்சு செய்து வரவழைத்தோம். அதே சமயம்
இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திடமிருந்து எமக்குக் கிடைத்த பிரதியில் அத்தியாயம்
30 விடுபட்டுப் போயிருந்தது. இதற்காக மீண்டும் பலமுறை இலங்கைச் சுவடிகள்
திணைக்களத்துடன் இணையம் வாயிலாக எடுத்த முயற்சிகள் பலனற்றுப் போகவே கொழும்பிலுள்ள
சில பதிப்பகங்களுடன் தொடர்பு கொண்டோம். அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
பின்னர் 'பதிவுகள்' இணைய இதழில் இதுபற்றி அறிவித்தல் கொடுத்து அ.ந.க.வின்
ப்டைப்புகளையும் மேற்படி அத்தியாயத்தையும் எமக்குப் பெற்றுத்தர உதவுவோருக்கு
செலவிடும் மணித்தியால அடிப்படையில் வேதனம் தருவோமென்று அறிவித்தோம்.
அதனடிப்படையில் கொழும்பிலிருந்து பேரின்பநாயகம் மயூரன் என்னும் தமிழ் இலக்கிய
ஆர்வலர் தொடர்பு கொண்டு அ.ந.கவின் ஆங்கிலக் கட்டுரைகள் சில, அ.ந.க.மொழிபெயர்த்த
நாவலான எமிலி சோலாவின் 'நானா' , மேலும் சில கவிதைகளையும் எமக்குப் பெற்றுத்
தந்தார். நண்பர் பலதடவைகள் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் மனக்கண் நாவலின்
முப்பதாவது அத்தியாயத்தைத் தேடிப்பார்த்தும் அதற்கான தடயமெதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பதிவுகளில் அ.ந.க.வின் மனக்கண் நாவலை அந்த அத்தியாயம் இல்லாமலே
வெளியிட முடிவு செய்தோம். யாராவது அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் 30இனை
வைத்திருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும். எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டிய
மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com
அல்லது editor@pathivukal.com.]