31-ம் அத்தியாயம்: சுரேஷின் சங்கட நிலை!
யாழ்ப்பாணம்
சேர்ந்ததும் சுரேஷ் டாக்டர் நெல்சனைச் சந்தித்து, சிவநேசரின் கண்ணை அங்கு தகுந்த
பாதுகாப்போடு வைக்க
ஏற்பாடு செய்துவிட்டு, ‘அமராவதி’க்கு ஸ்ரீதரைச் சந்திக்கச் சென்றான். கண் எவ்வாறு
கிடைத்தது என்ற டாக்டர் நெல்சனின் கேள்விக்கு பம்பாயில் புதிதாக ஒரு கண் வங்கி
ஆரம்பித்திருப்பதாகவும் அங்குள்ள தனது நண்பன் ஒருவனின் உதவியால் ஸ்ரீதருக்குத்
தன்னால் அக்
கண்களைப் பெற முடிந்ததென்றும் கூறினான் அவன். அடுத்து இரண்டு மாதங்களுக்கும்
இந்தப் பொய்யையே எல்லோருக்கும் திரும்பத் திரும்பச் சொல்லுவதென்று முடிவு கட்டி
விட்டான் அவன்.
‘அமராவதி’ வளவில் ஸ்ரீதர் குரல் கண்டதும் சுரேஷ், “ஸ்ரீதர் நீ அதிர்ஷ்டசாலி.
பம்பாயிலுள்ள ஒரு கண் வங்கியிலிருந்து உனக்கு ஒரு கண் கிடைத்திருக்கிறது.
சீக்கிரமே உனக்கு சந்திர சிகிச்சை நடைபெறும். டாக்டர் நெல்சன் எல்லாவற்றையும்
கவனித்து கொள்வார். உன் சுசீலாவை, நீ இப்பொழுது உன் கண்களால் பார்க்கலாம்”
என்றான்.
இச் செய்தியைக் கேட்ட ஸ்ரீதரும் சுசீலாவும் அடைந்த இன்பத்துக்கு அளவேயில்லை.
பாக்கியமும் மெருமகிழ்வெய்தினாள். ஆனால் சந்திர சிகிச்சையின் போது தந்தை சிவநேசர்
பக்கத்தில் இல்லையே என்ற கவலை ஸ்ரீதரைப் பிடுங்கித் தின்னவே செய்தது.
இது நடந்த மூன்று தினங்களில் டாக்டர் நெல்சன் சந்திர சிகிச்சையை நடத்திவிட்டார்.
சுசீலா இரவும் பகலும் ஸ்ரீதருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பணிவிடைகள் செய்து
வந்தாள்.
“இந்த முறை கட்டவிழ்த்ததும் என்னைக் காண்பீர்கள். ஆனால், என்னைக் கண்டதும் சென்ற
முறை செய்தது போல் பழையபடி கண்ணைப் பிய்த்துக் கொள்ள மாட்டீர்களல்லவா” என்று
சந்திரசிகிச்சை முடிந்ததும் சுசீலா ஸ்ரீதரிடம் கேட்டான்.
“சீ, சீ நீ என்ன பேசுகிறாய்? எனக்கேன் இக் கண்? உன்னைப் பார்ப்பதற்காகத் தானே
சந்திர சிகிச்சை என்றும் இச்சித்திரவதையை நான் மேற் கொண்டிருக்கிறேன்.” என்றான்
ஸ்ரீதர்.
ஸ்ரீதர் சுரேஷிடம் பேசும் போது “சுரேஷ், என் கண்ணின் கட்டவிழ்த்ததும் நான்
சுசீலாவைப் பார்ப்பேன். முரளியைப் பார்ப்பேன், உன்னையும் பார்ப்பேன். ஆனால்
அப்பாவைப் பார்க்க முடியாதே. அப்பாவும் பக்கத்திலிருந்தால் எவ்வளவு
நன்றாயிருக்கும். அவர் இந்த நேரம் பார்த்து இந்தியச் சுற்றுப் பிரயணத்துக்குப்
போயிருக்கிறாரே. என்னுடைய துரதிர்ஷ்டந்தான் அது. அப்பா எப்போது வருவார்?” என்று
கேட்டான்.
இக் கேள்விக்கு என்ன பதிலளிப்பதென்று சுரேசுக்குத் தெரியவில்லை. “அப்பா வந்து
விட்டார். இதோ உன் கண்களில் வீற்றிருக்கிறார். சீக்கிரமே அவர் உன் பார்வையாக
கலந்து விடுவார்” என்று சொல்ல வேண்டும் போயிருந்தது அவனுக்கு. ஆனால் அந்த ஆசையை
அடக்கிக் கொண்டு முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டான் அவன். “அப்பா கல்வெட்டித்
துறையில் என் வீட்டில் இருக்கிறார். தன் புதிய மைந்தன் வீட்டில் இருக்கிறார்.
வெள்ளி கலசத்துள் அஸ்தியாக வீற்றிருக்கிறார். இன்னும் ஸ்ரீதர், அவர் இப்போது
அப்பா
மட்டுமல்ல, சிறு வயதிலேயே தந்தையை இழந்த எனக்கும் அப்பாவாகிவிட்டார் அவர். என்
முதல் தந்தையை அவரது சாவின் மூலம் நானிழந்தேன். ஆனால் எனது இரண்டாவது தந்தையை
அவர் செத்த பிறகு நான் பெற்றேன். ஆம் சிவநேசருக்குக் கொள்ளி போட்ட மகன் நான்”
என்றும் சொல்ல விரும்பினான் அவன். ஆனால் சொல்வதற்குரிய காலம் இன்னும் வரவில்லை
என்பதை நினைத்ததும் அவ்வாறு சொல்லாமல் தன் நாவை அடக்கிக் கொண்டான் அவன்.
ஸ்ரீதரின் கேள்விக்குத் தாய் பாக்கியம் பதிலளித்தாள். “அப்பா கடைசியாக எழுதிய
கடிதத்தில் தான் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் இந்தியாவில் சுற்றுப் பிரயாணம்
செய்யப் போவதாக எழுதியிருந்தார். அடிக்கடி கடிதங்களை எதிர்பார்க்க வேண்டாமென்றும்
எழுதியிருக்கிறார்.” என்றாள்.
டாக்டர் நெல்சனின் சந்திரசிகிச்சை நல்ல பலனையளித்தது. சீக்கிரமே பார்வையை பெற்று
உலகைப் பரவசத்தோடு நோக்கினான் ஸ்ரீதர். அவனது காதற் கண்ணுக்கு இப்பொழுது சுசீலா
அப்சரஸ் போல தோன்றினாள். முரளியோ, அவன் மனதை முற்றாகக் கவர்ந்துவிட்டான். முழு
உலகமும் அழகின் கோவிலாக, வண்ணக் காவியமாகக் காட்சியளித்தது அவனுக்கு. கண் பார்வை
தெரியத் தொடங்கிய அடுத்த நாளே அவன் ஓவியன் தீட்டும் தன் பொழுது போக்கை மீண்டும்
ஆரம்பித்துவிட்டான். அவன் தீட்ட ஆரம்பித்த
முதலாவது படம் சுசீலாவும் முரளியுமாகும். ஆனால் முரளியை ஓவியம் தீட்டுவதற்கும்
போதும் போதுமென்றாகிவிட்டது. அவன் ஓரிடத்தில் அமைதியாக இருந்து ஓவியனுடன்
ஒத்துழைத்தால் தானே.
கண் தெரிய ஆரம்பித்த ஸ்ரீதருக்கு இப்பொழுது ‘அமராவதி’யில் ஒதுங்கிக் கிடக்க
முடியவில்லை. முதலில் ‘அமராவதி’ முழுவதையும் பல தடவை சுற்றிப் பார்த்தான்.
மானையும் மயிலையும் காடுகளையும், தோட்டத்துப் பூக்களையும் தடாகத்தில் பூத்த
தாமரைகளையும் நீலோற்பலத்தையும் கண்டு களித்தான். குளத்தில் மீன்கள் துள்ளி
விளையாடுவதையும் ஆமைகள் தண்ணீருள் மெல்ல ஊர்வதையும் கண்டு குதூகலித்தான்.
தாயையும் மனைவியையும் முரளியையும் காரில் கூட்டிக் கொண்டு கோவில்களுக்குச்
சென்றான். அடிக்கடி கீரிமலைக்குப் போய் நீராடினான். அங்கே கதிரின் மறைவையும்
மதியின் குளிர்ச்சியையும் பார்த்து மகிழ்வதற்காக இருட்டும்
நேரம் எல்லோருமாக மேல் மாடியில் வீற்றிருப்பார்கள். ஓரிரவு மழை கொட்டுவதையும்,
மின்னல் வெட்டுவதையும் பார்த்தபோது அவன் அந்தப் புதுமையைச் சொல்லி முடியாது.
“சுசீலா, மழையைப் பார், மழையைப் பார்” என்று குழந்தை போல் கூச்சலிட்டான். அதைக்
கண்ட பாக்கியம் சிரித்துக் கொண்டு “இந்த வீட்டின் குழந்தை முரளியல்ல, ஸ்ரீதர்
தான்.” என்று கூறினாள். அதற்கு “போ அம்மா,” என்று
கோவித்துக் கொண்டான் ஸ்ரீதர். ஸ்ரீதரை வியப்பிலாழ்த்திய இன்னொரு பொருள் நிலைக்
கண்ணாடி. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகப் பார்க்காத தன் முகத்தை நிலைக் கண்ணாடியில்
அவன் பார்த்த போது அவனடைந்த அதிசயத்தைச் சொல்ல முடியாது. “நான் அப்பா
போலல்லவா இருக்கிறேன்” என்று கூறினான் அவன். இன்னும் அடிக்கடி குடும்பத்துடன்
சினிமா, நாடகம், நாட்டியம் முதலியவற்றைப் பார்க்கப் போவதும் அவனது வழக்கமாயிற்று.
பழையபடி அழகழகான உடைகளைத் தெரிந்தெடுத்து உடுத்திக் கொள்ளும் பழக்கத்தையும்
அவள் மீண்டும் மேற்கொண்டான். தனக்கும், சுசீலாவுக்கும், முரளிக்கும் துணி வாங்க
அடிக்கடி துணிக் கடைகளுக்கும் போக ஆரம்பித்தாள்.
ஆனால் இந்த இன்ப அனுபவங்களிடையேயும் தன் நண்பன் சுரேசும் அவள் ஒரு நிமிஷமும்
பிறக்கவில்லை. அடிக்கடி சுசீலாவிடமும் தாயாரிடமும் “அம்மா சுரேஷின்
ஊக்கத்தாலல்லவா நான் மீண்டும் கண் பார்வையைப் பெற்றேன். அவன் செய்த நன்றிக்குப்
பதிலாக நான் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறதே.” என்று கவலையோடு கூறுவான். அவன்
பேச்சை அவர்கள் எல்லோரும் ஆமோதிப்பார்கள். உண்மையில் சுரேஷ் ‘அமராவதி’ வளவிலுள்ள
எல்லோராலும் ஒரு தெய்வம் போலவே
கொண்டாடப்படலானான். சுசீலா அவனை இப்பொழுது சுரேஷ் அண்ணா என்று அழைக்க
ஆரம்பித்திருந்தாள். பாக்கியம் அவனைத் தனது மற்றொரு மகனாகக் கருதத்
தொடங்கிவிட்டாள்.
ஒரு நாள் சுரேஷ் ‘அமராவதி’க்கு வந்திருந்த பொழுது ஸ்ரீதர் அவனது கல்யாணத்தைப்
பற்றி விசாரித்தான். அதற்கு அவன் “அதுதான் உனக்குத் தெரியுமே. என் மாமன் மகளை
நான் கட்டவிருக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்களின் பின்னால் கல்யாணம்
நடைபெறவிருக்கிறது. நீயும் சுசீலாவும் தவறாது வர வேண்டும்.” என்றான்.
“வருவதா? நானும் சுசீலாவும் அம்மாவும் தான் உனது கல்யாணத்தை முன்னின்று
நடத்துவோம்.” என்று கூறினான்.
அதன் பின் நண்பர்கள் இருவரும் கிஷ்கிந்தா நினைவுகள் பற்றிப் பேசினார்கள். “நீ
கிஷ்கிந்தாவில் இருக்கும் போது சமுதாய விஷயங்கள் பற்றி அடிக்கடி பேசுவாயல்லவா?
ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தால் உலகில் எத்தனையோ இன்னல்கள் விளைகின்றனவென்று
சொல்வாயே. அதன் உண்மை எனக்குப் போகப் போகத்தான் தெரிந்தது. என் வாழ்க்கையையே
எடுத்துப் பார். சிறு
வயதில் என்னால் எல்லாருடனும் கலந்து சாதாரணமான பிள்ளையாக வளர முடியவில்லை.
பல்கலைக்கழகத்தில் கூட நான் பணக்காரனென்பதனால் மாணவர்கள் என்னுடன் நெருங்கிப்
பழகக் கூசினார்கள். இதனால் ஏற்பட்ட தனிமை தான் எடுத்த எடுப்பிலேயே பத்மா மீது
எனக்கு மோகம் ஏற்படும்படி செய்திருக்க வேண்டும். இன்றைக்கு யோசித்துப்
பார்த்தால், பத்மா என்னை நிராகரிப்பாள் என்பதற்கான பண்புகள் அப்பொழுதே அவளிடம்
இருந்தன என்பது எனக்குத் தெரியவே செய்கிறது. இருந்தும் நான் அவள் காதலைப் பெரிதாக
மதித்தேன். இதற்கெல்லாம் காரணம், பணக்காரனென்பதால் பலருடனும் பழகி மனித இயல்புகளை
அளவிட நான் அறிந்திராததல்லவா? அப்பா என்னை அந்தஸ்து என்றும் கூட்டுள் அடைந்து
வைத்து விட்டார்.”
சுரேஷ் புன்னகையுடன், “என்ன என்ன, நீ கண்களை மூடிக் கொண்டிருந்த காலத்தில் சும்மா
இருக்கவில்லை போல்தெரிகிறதே, அந்தக் காலம் முழுவதும் நீ ஆழ்ந்த சிந்தனையில்
அல்லவா ஈடுபட்டிருக்கிறாய் போலிருக்கிறது. இது விஷயங்களில் இப்பொழுது நீ எனக்கே
பாடம் படிப்பிப்பாய் போலிருக்கிறதே” என்றான்.
ஸ்ரீதர் சுரேஷிடம், “ஏன் நானும் உன் போல ஒரு பெரியவன் மாதிரிப் பேசுவது உனக்குப்
பிடிக்கவில்லையா? இன்னும் நான் பணக்காரனாதலால், எனக்கு ஒரு நல்ல நண்பன்
கிடைப்பதற்கு வழியில்லாமல் எவ்வாறு திண்டாடினேன்? நீ இன்று எனக்கு உயிருக்குயிரான
நண்பன். உன்னைக் கூட அப்பா தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தல்லவா
பிடித்துக் கொடுத்தார். என்னைப் பொறுத்தவரையில் அப்பா என் மீது அளவற்ற அன்பு
கொண்டவர் என்பது உண்மைதான் என்றாலும் நிச்சயம் கொள்கை அளவில் அவரை ஏற்றுக்
கொள்ளவில்லை. பணத்தின் சக்தி மீது, பரம்பரை அந்தஸ்து நாமே ஆளப் பிறந்தோம் போன்ற
கொள்கைகள் மீதும் அவருக்கு நம்பிக்கை. அதன் பயனாகப் பெரும் திறமையும் அறிவும்
படைத்த அவர் சமுதாயத்துக்கு உதவாதவராகிவிட்டார். அவரைக் கண்ட
எல்லோரும் அவரைக் கும்பிடுகிறார். ஆனால் எவரும் அவரிடம் மனம் விட்டு பேசுவதை நான்
இதுவரை கண்டதில்லை. இதனால் சமுதாயத் தொடர்பினால் ஏற்படும் மனித உறவுகளின் இனிமை
அவருக்குக் கிடைக்கவில்லை. இன்னும் பணம் என்ன அவ்வளவு சிறந்ததா? நான்
பணக்காரனாயிருந்தும் காதலிழப்பாலும் கண்ணிழப்பாலும் பட்ட இன்னல் எவ்வளவு? பணத்தை
விட மனித உறவுதான் பெரிது. என் கண்கள் மீளக் கிடைப்பதற்குப் பணம் ஓரளவு
உதவியிருந்தாலும் உன் நட்புத்தானே பெரிதும் உதவியது? நான் பணக்காரனாயிருந்ததோடு
பணக்கார மிடுக்குக் காட்டியிருந்தால் நிச்சயம் நீ என் நண்பனாகி இவ்வளவு உதவி
செய்திருக்க மாட்டாய்.
உன்மையில் சிறு விஷயங்களில் நான் சற்றுப் மிடுக்காக நடந்து கொண்டிருந்தாலும் கூட
“ஆ, பணக்காரனல்லவா? அது தான் இப்படி என்னைத் துச்சமாக நடத்துகிறான்” என்று கூட நீ
எண்ணியிருப்பாய். ஆம், சுரேஷ். பணக்காரனை மற்றவர்கள் எப்பொழுதும் அப்படித்தான்
பார்ப்பார்கள். பணம் மனிதர்களின் உறவைக் கெடுக்கிறது. ஏழை, பணக்காரன் என்ற
வேற்றுமை இல்லாவிட்டால், இவ்விதப்
பிரச்சினைகளுக்கே இவ்வுலகில் இடமில்லையல்லவா? அப்பொழுது மனிதனும் மனிதனும் நம்
உண்மை இயல்புகளோடு பழகி வாழ்க்கையின் மென்மையான இனிமைகளைச் சுவைக்க முடியும்”
என்றான்.
ஸ்ரீதரின் பிரசங்கத்தை வியப்போடு கேட்ட சுரேஷ் - அவன் எவ்வளவு தூரம் வளர்ந்து
விட்டான் என்று ஆச்சரியப்பட்டான்.
ஸ்ரீதர் மேலும் தொடர்ந்தான்: “நிச்சயம் இந்த வேலியடைத்த வாழ்க்கையை நான்
விரும்பவில்லை. அப்பா என்னை வளர்த்தது போல் என் முரளியை நான் வளர்க்கப்
போவதில்லை. ‘அமராவதி’யைக் கண்டு மக்கள் அஞ்சக் கூடாது. அன்பு செலுத்த வேண்டும்.
முரளியை மூலையில் நின்று விளையாடு என்று நான் வற்புறுத்த மாட்டேன். முற்றத்தில்
விளையாட இடமளிக்கப் போகிறேன். இன்னும்
இப்பொழுது என் கண்கள் சுகமாகிவிட்டதால் என் பட்டப்படிப்பை விரைவில் முடித்துக்
கொண்டு சமுதாய பணிகளில் ஈடுபடப் போகிறேன். அதற்கு முதற் படியாக என்ன செய்ய
எண்ணியிருக்கிறேன் தெரியுமா?” என்றான்.
அதற்குப் பதிலாக சுரேஷ் ஒரு கேள்வியைத் தனது முகத்தில் படர விட்டான்.
ஸ்ரீதர் “முதலில் இந்த ‘அமராவதி’யைச் சுற்றியிருக்கும் கண்ணாடித் துண்டுகள்
குத்திய பெரிய மதிலை இடித்துவிட்டுச் சிறு கைப்பிடிச் சுவராக அதை அமைக்கப்
போகிறேன்.” என்றான்.
அதைக் கேட்ட சுரேஷ் சிரித்தான். “பெரிய மதிலை சிறிய சுவராக்கிவிட்டால் போதுமா?
நிலையல்லவா மாற வேண்டும்.” என்றான்.
“அதுதான் மாறி விட்டதே. இது அக்கால நிலையின் வெளியுருவம்” என்றான் ஸ்ரீதர்.
சுரேஷ், “ஆனால் இது பற்றி உன் அப்பா என்ன நினைப்பார் என்று நீ யோசிக்கவில்லையே”
என்றான்.
அதற்கு ஸ்ரீதர் “அப்பா இப்பொழுது பெரிதும் மாறிவிட்ட மனிதர். இல்லாவிட்டால்
பத்மாவை எனக்குக் கட்டி வைப்பதற்கு இவ்வளவு முயன்றிருப்பாரா என்ன? இன்னும் நான்
கண்ணிழந்த பிறகு அவருக்கு என் மீதுள்ள அன்பு மிக மிக அதிகரித்து விட்டது. இப்போது
நான் செய்வது எதையுமே அவர் ஆட்சேபிக்க மாட்டார். இன்னும் நான் என்ன கெடுதியா
செய்ய எண்ணுகிறேன்” என்றான்
ஸ்ரீதர்.
அதன் பின் ஸ்ரீதர் சிவநேசர் இந்தியாவிலிருந்து வந்ததும் நான் கண் பெற்று
விளங்குவதைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சியடைவார் என்பது பற்றி விவரித்தான்.
“எல்லாம் நீ செய்த செயல் என்று தெரிந்ததும் அவர் ஆனந்தப் பரவசமடைவார். தன் சொத்து
முழுவதையும் உனக்குத் தந்தாலும் தந்து விடுவார்” என்றான்.
“சிவநேசர் தன் சொத்தை எனக்களிப்பார். கண்களையோ அவர் உனக்களித்துவிட்டாரே” என்று
இரகசியம் பேசியது சுரேஷின் உள்ளம். ஆனால் அதை வெளியே சொல்ல இது தருணமல்ல. அவர்
இறந்த திகதியிலிருந்து இரண்டு மாதம் கழிய வேண்டும். ஆனால் இரண்டு மாதம் கழிய,
அவன் சொல்லவிருந்த விஷயம். அதைச் சொல்வது மட்டுமல்ல அந்தச் சிவநேசரைச் சிமிழில்
அடைந்த பிடி
சாம்பலாக ஸ்ரீதர் கையில் நான் ஒப்படைக்க வேண்டியிருந்ததை நினைத்தும், சுரேஷின்
உள்ளம் நடுங்கியது. ‘அமராவதி’ இச் செய்தியை எப்படி ஏற்கப் போகிறது என்றெண்ணியதும்
எத்தனை பெரிய பொறுப்பைச் செத்துப் போன சிவநேசர் தன் தோளிலே வைத்துவிட்டுச் சென்று
விட்டார் என்பது அவனுக்கு விளங்கியது.
“அன்போடு எதிர்பார்க்கப்படும் அப்பாவுக்குப் பதில் இதோ அவரது எலும்புத்
துண்டுகள்.” என்று ஸ்ரீதரிடம் சிவநேசரின் அஸ்திக் கலசத்தை ஒப்படைக்க வேண்டும்.
அது இலேசான காரியமல்ல.” என்று எண்ணிய சுரேஷ் மேலும் அங்கே நிற்காது விடை பெற்றுக்
கொண்டு வல்வெட்டித் துறையிலிருந்த தன்னில்லத்தை நோக்கி காரை ஓட்டினான்.