இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2008 இதழ் 101  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
மீள்பிரசுரம்!
நேர்காணல்: அலிஸ் மன்றோ
காத்திராப்பிரகாரம்


சந்திப்பு: அ. முத்துலிங்கம்

அலிஸ் மன்றோடொரன்டோவில் ஒரு நாள் மாலை 'பென் கனடா' என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணியிருந்தது. கனடிய ஆங்கில எழுத்தாளர்களுக்கான கூட்டம் அது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒவ்வொரு எழுத்தாளராக மேடையில் தோன்றிப் பேசினார்கள்; சிலர் வாசித்தார்கள். சுருக்கமான பேச்சு. ஒருவர்கூடக் கொடுத்த நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. கடைசியாக ஓர் உருவம் மேடையை நோக்கி நடந்தது. பார்த்தால் அது அலிஸ் மன்றோ; கனடாவின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரைத்தான் நான் இரண்டு வருடங்களாகத் தேடித்தேடிக் களைத்துப்போயிருந்தேன். அந்த நேரம், அந்தக் கணம் என் மனத்தில் ஒரு வார்த்தை வந்து விழுந்தது. காத்திராப்பிரகாரம். ஐம்பது வருடங்களாக அழிந்துபோன அந்த வார்த்தைதான் என்னுடைய அந்த நேரத்து உணர்வைப் படம் பிடிப்பதாக இருந்தது.

அலிஸ் மன்றோவின் பேச்சு நிதானமாகவும் அழகாகவும் சுருக்கமாகவும் அமைந்தது. ஒரு புத்தகம் அச்சில் இருப்பதாகவும் அது வெளிவந்ததும் தான் எழுதுவதை நிறுத்திவிடப் போவதாகவும் அறிவித்தார். அரசியல்வாதிகள் இப்படி அறிவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓர் எழுத்தாளர் ஒய்வு பெறப்போவதாக அறிவித்ததை நேரிலே கண்டது எனக்கு அன்று தான் முதல் தடவை.

அலிஸ் காரணத்தைச் சொன்னார். 'எழுத்து எழுத்து என்று அலைந்தே வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. என் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ வேறு உதவி கேட்டு வரும் பொதுநலத் தொண்டர்களுக்கோ என்னால் நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. முன்பு சாதாரணமாகச் செய்த சிறிய காரியங்களும் இப்போது எனக்கு மலைபோலத் தெரிகின்றன. வயது 75 ஆகிறது. மாதக் கடைசியில் பில்களுக்குப் பணம் கட்டுவது, அந்த வாரக் குப்பையை அகற்றுவது, தேக அப்பியாசம் செய்வது, மருந்துகள் சாப்பிடுவது என்று எல்லாமே பெரிய சுமையாக மாறிவிட்டன. இனிமேல் கொஞ்சம் மற்றவர்களுக்கும் வாழ்வது என்று முடிவுசெய்திருக்கிறேன்' என்றார்.

நான் திகைத்துப்போன அளவுக்கு மற்றவர்களும் திகைத்திருக்க வேண்டும். பேச்சு முடிந்ததும் அவரைச் சுற்றிப் பலரும் சூழ்ந்துவிட்டார்கள். இந்தக் கும்பலில் போய் இவரை எப்படிச் சந்திப்பது என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டது.

இரண்டு வருடங்களாக இவரைச் செவ்வி எடுப்பதற்காக நான் அலைந்திருந்தேன். ஒரு நாள் அதிகாலையில் என்னை அழைத்துப் பேட்டி தருவதாகச் சொன்னவர் மறுபடியும் என்னைத் தொடர்புகொள்ளவேயில்லை. பீட்டர் மத்தீஸன் என்ற எழுத்தாளர் நேபாள மலைகளில் பல வருடங்கள் பனிச் சிறுத்தையைத் தேடி அலைந்து கடைசிவரையும் அதைக் காணவில்லை. ஆனாலும் அவர் 'பனிச் சிறுத்தை' என்று ஒரு புத்தகம் எழுதி, அது ழிணீtவீஷீஸீணீறீ ஙிஷீஷீளீ கிஷ்ணீக்ஷீபீ பெற்றது. அதுபோல நானும் அலிஸ் மன்றோ பற்றி அவரைச் சந்திக்காமலே ஒரு கட்டுரை எழுதி அது பிரசுரமாகியிருந்தது.

அலிஸ் மன்றோவைச் சுற்றி இன்னும் கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது. இதுதான் கடைசி. இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டால் இனிமேல் இவரைப் பிடிக்க முடியாது. இவரை நோக்கி நடந்தேன். அப்போது ஓர் அதிசயம் நடந்தது. மோசேக்குச் செங்கடல் பிளந்தது போலக் கூட்டம் வழிவிட்டது. காரணம் வேறு ஒன்றுமில்லை, என்னுடைய வயதும் நிறமும்தான். என் பெயரைச் சொன்னேன். அவர் வாழ்க்கையில் எத்தனை அப்பாத்துரை முத்துலிங்கங்களைச் சந்தித்திருப்பார். என்னை ஞாபகம்வைத்திருந்தார். எனக்குத் தருவதாகச் சொன்ன செவ்வி பற்றி வினவினேன்; உடனே சம்மதித்தார். அரை மணித்தியாலம் என்றார். நான் சரி என்றேன். மீண்டும் 'அரை மணித்தியாலம் மட்டுமே' என்றார். அதற்கும் சரி என்றேன். அவர் 200 மைல் தூரத்தில் இருப்பதால் என்னால் அவ்வளவு தூரம் வர முடியாது என்று சொன்னேன். தொலைபேசி மூலம் செவ்வி பதிவானது. அதுவே கீழே.

நீங்கள் ஒருமுறை அயர்லாந்துக்குப் பயணம் செய்து அங்கே ஆறு மாத காலம் தங்கி 70 பக்கச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தீர்கள். ஆனால், அதைத் திரும்ப வாசித்தபோது அதன் tone சரியாக அமையாததால் அதைத் தூக்கி எறிந்துவிட்டதாகக் கூறியிருக்கிறீர்கள். அது என்ன tone?

அ.மு.வும் அ.மு.வும்இதற்கு நான் எப்படிப் பதில் சொல்வது? சிறுகதையில் அடிநாதம் என்று ஒன்றிருக்கிறது, அது சரியாக அமையவில்லை. படிக்கும்போது நெருடலாக இருந்தது. கண்ணால் பார்க்க முடியாத ஒன்று சிறுகதையின் சமநிலையைக் குலைத்துப் போட்டுவிட்டது. திரும்பப் படித்துப் பார்த்தபோது அது என்னுடைய கதையாகவே தோன்றவில்லை. என்னுடைய வசனங்கள்கூட இல்லை. என் மனத்தில் இருந்த கதையும் பேப்பரில் பதிந்த கதையும் வேறு வேறாகத் தெரிந்தன. சொல்லப்போனால் என் மூளையில் இருந்தது பேப்பரில் வரவேயில்லை.

இன்னொரு காரணமும் இருக்கலாம். கதாநாயகியின் பெயரை மேரி என்று மாற்றியிருந்தேன். மேரி என்பது அயர்லாந்தில் மிகவும் பொதுவான ஒரு பெயர். நூற்றுக் கணக்கான அயர்லாந்துச் சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன். என்னையறியாமல் கதையில் அந்தச் சாயல் வந்து விழுந்துவிட்டது. என் கையை மீறி ஏதோ ஒன்று நிகழ்ந்திருந்தது. அதுதான் ஆறுமாத உழைப்பை ஒரு கணத்தில் குப்பையில் வீசிவிட்டேன்.

அது எப்படி உங்களால் முடிந்தது? அவ்வளவு சுலபமாகத் தூக்கி எறிய முடியுமா?

நான் எறிவேன். எனக்குப் பிரச்சினையே இல்லை. உண்மையில் எனக்கு அப்படி எறிந்துவிட்ட பிறகு பெரிய ஆசுவாசமாக இருந்தது. நிம்மதி பிறந்தது. இதை வைத்து என்ன செய்வது என்று திணறிக்கொண்டு இருந்தபோது அதை வீசி எறிந்தது என் பிரச்சினைக்குத் தீர்வாக இருந்தது. உண்மையில் நான் சந்தோஷமாக இருந்தேன்.

அதன் பிறகு வேறு கதை எழுதினீர்களா?

அயர்லாந்து விடுமுறையில் எழுதவில்லை. அங்கே எழுதியது அவ்வளவுதான். ஆறுமாத கால எழுத்து இப்படியானவுடன் எனக்குப் பயம் பிடித்தது. எழுத்து எனக்குச் சரிவரவில்லை, இனிமேல் என்னால் எழுத முடியாதோ என்ற கிலி என்னை ஆட்டியது. அதுதான் அதைத் தூக்கி எறிந்தவுடன் ஒரு சந்தோஷம் வந்து சூழ்ந்துகொண்டது.

ஆனால், திரும்பவும் டொரன்டோ வந்த பிறகு வேறு ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது இதே கதையின் பழைய பிரதி ஒன்று கிடைத்தது. படித்துப் பார்த்தபோது நன்றாக இருந்தது. அதையே கொஞ்சம் திருத்தி நேர்த்தியாக்கி விற்றுவிட்டேன். அதன் தலைப்பு 'The Love of a Good Woman;.

நீங்கள் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். அவற்றை நான் அவ்வப்போது படித்து வந்திருக்கிறேன். ஆனால் அவை ஒன்றும் புத்தகமாக வரவில்லையே?

இந்த செப்டம்பர் மாதம் ஒரு புத்தகம் வெளிவரும். அதில் நீங்கள் சொன்ன கட்டுரைகள் இருக்கும். எல்லாம் சேர்ந்த கலவை என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு விடுதியில் இளம் பணிப் பெண்ணாக வேலைசெய்த அனுபவங்களைப் பதிந்தது இந்தக் கட்டுரைகளில் மட்டும்தான். பல அனுபவக் கட்டுரைகளை இந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறேன். அவை கட்டுரைக்கும் சிறுகதைக்கும் இடையேயான வெளியை நிறைத்து நிற்கும். இது ஒரு புது வகையான இலக்கியம். இதில் உண்மையும் புனைவும் கலந்து இருக்கும். இடத்தையோ காலத்தையோ கதை மாந்தரையோ மாற்றி எழுத முடியாது. ஆனால் சுவாரஸ்யத்தைக் கூட்ட ஒரு மரத்தை உண்டாக்கலாம், மலையை வர்ணிக்கலாம்.

இன்னும் பல கட்டுரைகளில் ஆன்டரியோவின் நிலவியல் பற்றியும் நான் கண்டுபிடித்த ஒரு நூதனமான நிலவறைப் புதைவிடம் பற்றியும் எழுதியிருக்கிறேன். என் பிள்ளைகள் பற்றி நான் வழக்கமாக எழுதுவதில்லை. ஆனால் இதில் என் மகள் ஒரு நாள் நீச்சல் குளத்தில் மூழ்கிக் கிட்டத்தட்ட இறந்துபோன ஒரு சம்பவத்தையும் எழுதியிருக்கிறேன்.

நான் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது கையில் ஒரு பென்சிலைப் பிடித்து அதில் வரும் அழகான வசனங்களுக்கு எல்லாம் அடிக்கோடு இடுவேன். ஆனால், நீங்கள் எழுதிக்கொண்டுபோகும்போது ஓர் அழகான வசனம் வந்தால் அதை வெட்டி எறிந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மையா?

அழகான வசனம் அல்ல. கெட்டிக்காரத்தனமான வசனம் அல்லது திரும்பத் திரும்ப மினுக்கவைக்கப்பட்ட அலங்காரமான வசனம். அவை என் எழுத்தில் தலை காட்டினால் நான் அவற்றை அகற்றிவிடுவேன். என் பெற்றோர் என்னை அடக்கமானவளாக வளர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆடம்பரம் பிடிக்காது, அடக்கம்தான் பிடித்த குணம். ஆகவே என்னை விளம்பரப்படுத்துவதுபோல வரும் வசனம் எனக்குப் பிடிக்காது.

நான் ஒரு கதையைச் சொல்லும்போது அந்தக் கதைதான் எனக்கு முக்கியம். ஓர் அலங்காரமான வசனம் வாசகரைத் திசை திருப்புகிறது. கதையின் மையத்திலிருந்து அவருடைய கவனம் வேறெங்கோ போய்விடுகிறது. வாசகரைக் கதையை ரசிக்கவைப்பதுதான் என் முதல் நோக்கம். அதற்கு இடைஞ்சலாக வரும் வசனங்களை, அவை எவ்வளவு நேர்த்தியாக அமைந்திருந்தாலும், நான் வெட்டிவிடுவேன்.

ஆனால், கதை முடிவை நோக்கி செல்லும்போது வசன அமைப்பு முக்கியமாகிவிடுகிறது. அந்த வசனம் சொல்வது அதில் உள்ள வார்த்தைகளின் சேர்க்கையிலும் பார்க்க அதிகமாக இருக்க வேண்டும். அதை வரவேற்பேன், வெட்டி எறியமாட்டேன். அந்த வசனம் அது சொல்லவந்ததிலும் பார்க்கக்கூடச் சொல்ல வேண்டும். ஆனால் embroidery, வன்ன வேலை எனக்குப் பிடிக்காது.

ஓர் உதவி செய்ய முடியுமா? நீங்கள் அப்படி வெட்டியெறிந்த வசனங்களை எல்லாம் என்னிடம் தர முடியுமா?

(உரக்கச் சிரிக்கிறார்)

இப்பொழுதெல்லாம் பலர் புனைவு இலக்கியம் படிப்பதில்லை. புனைவு சாராத படைப்புகளைத்தானே படிக்கிறார்கள்?

என் முதல் கணவருடன் நான் ஒரு புத்தகக் கடை நடத்தியிருக்கிறேன். அப்பொழுது அங்கே புத்தகம் வாங்க வந்தவர்களில் பலர் என்னிடம் தாங்கள் புனைவு இலக்கியம் படிப்பதில்லை என்பதைக் கூறியிருக்கிறார்கள். இன்னும் சிலர், ஒரு கனடிய எழுத்தாளரைக்கூடப் படித்ததில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு சிலர் பெண் எழுத்தாளர்களைப் படித்தது கிடையாது. நானோ புனைவு இலக்கியம் படைக்கும் ஒரு கனடியப் பெண் எழுத்தாளர். எனக்கு எப்படி இருந்திருக்கும்?

இவர்கள் எல்லோரும் தீவிர வாசகர்கள். இவர்கள் ஒரு புனைவுப் படைப்பைப் படிக்கும்போது அதன் ஊடாக வெளிப்படும் உண்மைகளைக் கண்டுகொள்வதில்லை. நான் நேற்று இரவு March of Folly என்ற புத்தகத்தைப் படித்தேன். ட்ரோஜன் போரில் கிரேக்கர்கள் பயன்படுத்திய மரக் குதிரையில் இருந்து நூல் ஆரம்பிக்கிறது. எதிரி விட்டுச்சென்ற மரக் குதிரையை எதற்காக இவர்கள் கோட்டைக்கு உள்ளே இழுத்துச் சென்றார்கள்? எல்லோரும் கூத்தாடினார்கள். ஒரேயொரு குருட்டு மதகுருதான் அதன் உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது என்று கத்தினான். யாரும் அவன் பேச்சைச் சட்டை பண்ணவில்லை. தன் அழிவை நாடிப்போவது மனித இயல்பு. புனைவு படிக்கும்போது இப்படியான பெரும் உண்மைகளைக் காணத் தவறிவிடுகிறோம்.

நோபல் பரிசு புனைவு இலக்கியத்துக்கு மட்டும்தானே கொடுக்கிறார்கள்? அது அவ்வளவு முக்கியமானதா?

நான் புனைவு இலக்கியம்தான் படிப்பேன். அது முக்கியமானது. நல்ல இலக்கியத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தயங்கமாட்டேன். அவற்றில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. செக்கோவை நான் எப்பொழுது வேண்டுமானாலும் படிப்பேன். சமீபத்தில் தல்ஸ்தோயின் War and Peace நாவலை இன்னொரு தடவை ஆரம்பத்திலிருந்து ஆற அமரப் படித்து முடித்தேன். இது ஒரு தடவை படித்துவிட்டு மூடிவைக்கும் சமாச்சாரம் அல்ல. புனைவு படிப்பதுதான் என்னுடைய மூளைக்கு வேலை கொடுக்கிறது. என்னை ஆசுவாசப்படுத்த, மனநிலையைத் தளரவைக்க மட்டும் நான் non-fiction படிக்கிறேன்.

ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை மனிதன் புனைவு இலக்கியத்தில்தானே நாட்டம் செலுத்தியிருக்கிறான். தலைமுறை தலைமுறையாகப் புனைவுக் கதைகள்தானே சொல்லியிருக்கிறான். பழம்பெரும் இதிகாசங்கள் எல்லாம் புனைவுதானே.

Barbara Tuchman என்ற எழுத்தாளரின் கட்டுரை இலக்கியம் எனக்குப் பிடிக்கும். அவர் முப்பது வருடங்களுக்கு முன் பிரபலமானவர்; இரண்டு புலிட்ஸர் பரிசுகள் பெற்றவர். இவருடைய Guns of August என்ற நூலை ரசித்துப் படித்திருக்கிறேன். ஆனால், தீவிரமான படிப்புக்கு நான் எப்போதும் நாடுவது புனைவு இலக்கியத்தைத்தான்.

காலத்தை மாற்றிப்போடுவது (time shift) உங்களுக்கு நிரம்பப் பிடிக்கும். அநேகக் கதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். உதாரணமாக, A view from Castle Rock மற்றும் Tricks. இன்னும் சொல்லப்போனால் Hateship, Friendship கூட இதுதான். இது உங்கள் தனிப்பட்ட உத்தியா?

நான் அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொண்டது கிடையாது. வயது கூடி முதுமை வரும்போது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் பார்க்கும் ஆசை வரும்போலும். அதனால் நிகழ்காலத்தையும் முடிந்துபோன காலத்தையும் பின்னிப் பின்னிச் சொல்லிக்கொண்டுவருவேன். அது ஒரு புதிர்த் தன்மையைக்கூடக் கொடுக்கிறது.

(இந்த இடத்தில் அலிஸ் மன்றோ 'நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?' என்றார். சரி என்றேன். 'என்னுடைய சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பது சிரமமாக இருக்குமா?' என்றார். 'இல்லையே, உங்கள் வசன அமைப்பு மொழிபெயர்ப்பதற்கு இலகுவானது. ஆனால், பிரச்சினை உங்கள் கதைகள் நீண்டுபோய் இருப்பதுதான். பத்திரிகைகளில் பிரசுரிக்க இயலாது. நான்கூட உங்கள் சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்திருக்கிறேன்' என்றேன்.

'தமிழ் ஒரு பழமையான மொழி அல்லவா?' 'ஆமாம், 2000 வருடங்களுக்கு மேலான செவ்விலக்கியங்கள் தமிழில் இருக்கின்றன. நீங்கள் படித்தால் அசந்துபோவீர்கள்.'

'அப்படியா? நான் நம்புகிறேன், நான் நம்புகிறேன்' என்றார்.)

Hateship, Friendship கதையை எடுத்துக்கொள்வோம். அந்த முடிவு உங்களுக்கு எப்படித் தோன்றியது?

அதை நான் யோசித்துப் பார்த்தபோது எனக்கே புரியவில்லை. கதை எங்கேயெல்லாமோ போய் இறுதியில் அந்த இளம்பெண் பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தைத் தூக்கிவைத்து லத்தீன் மொழிபெயர்ப்பைச் செய்வதோடு முடிகிறது. கதையை எழுதிக்கொண்டு போனபோது திடீரென்று இந்த எண்ணம் எனக்குத் தோன்றியது. இப்பொழுது மறந்துவிட்டது. ஆனால், குறைந்தபட்சம் மூன்று விதமான முடிவுகளை நான் ஆராய்ந்திருப்பேன்.

ஒரு சிறுகதையை எழுதுமுன்பு நீங்கள் எவ்வளவு நேரம் ஆராய்ச்சியில் செலவிடுவீர்கள்? உதாரணத்துக்கு A view from Castle Rockஇல் நிறைய ஆராய்ச்சி...

அது என்னுடைய சொந்தக் கதை. என்னுடைய மூதாதையர் 1818ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திலிருந்து ஒரு பாய்மரக் கப்பலில் புறப்பட்டுக் கனடாவின் ஒரு பகுதியாகிய க்விபெக்குக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தப் பயணம் முடிவுக்குவர ஆறு வாரங்கள் எடுத்துக்கொண்டது. என் மூதாதையர் வறியவர்கள்; யாருமே திரும்பிப் பார்க்காத சாதாரண மனிதர்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. என்னவென்றால் அந்தக் கப்பலில் பிரயாணம் செய்த 17 வயது இளம் வாலிபன் ஒருவன் ஓர் அருமையான நாட்குறிப்பைப் பயணம் முழுக்க எழுதிவந்தான். அந்த டயரி விலைமதிக்க முடியாத பரம்பரைச் சொத்து. அது என்னிடம் இருக்கிறது. ஆகவே நான் அந்தக் கதையில் எழுதியது எல்லாமே உண்மைதான்.

ஆராய்ச்சி ஒன்றுமே செய்யவில்லையா?

சிறிது செய்ய வேண்டியிருந்தது. எப்படியான கப்பல் அது, எந்தப் பாதையைத் தெரிவுசெய்து அவர்கள் புறப்பட்டார்கள் என்பதற்கெல்லாம் ஆராய்ச்சி தேவைப்பட்டது. ஆனால் கப்பலில் நடக்கும் நடனமும் இன்னும் சில சம்பவங்களும் கற்பனையில் உதித்தவை. எனக்கு இன்னொரு அதிர்ஷ்டமும் கிட்டியது. அந்தக் காலத்தில் ஸ்காட்லாந்தில் வாழ்ந்த ஜேம்ஸ் என்ற நாவலாசிரியர் எழுதிய எழுத்துக்களிலிருந்தும் சில தகவல்களை என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

அந்தக் குழந்தையின் சாவு?

ஓ, அதைச் சொல்ல மறந்துவிட்டேன். நான் சமீபத்தில் அந்தக் குழந்தை புதைக்கப்பட்ட மயானத்தைப் பார்வையிட நேரிட்டது. மிகக் கொடூரமான அந்தக் கப்பல் பயணத்தை முடித்த குழந்தை, கனடாவில் கால் பதித்த ஒரு மாதத்தில் இறந்துபோயிருக்கிறது. அந்தக் கல்லறையைப் பார்த்தபோதுதான் எனக்கு இதை ஒரு கதையாக்கலாம் என்று தோன்றியது. அதுதான் உருக்கமான இடம். கடைசியில் பார்த்தால் அந்தக் கதை முழுக்கக் குழந்தையின் சாவை நோக்கி நகர்ந்திருக்கிறது.

இதை எழுத வேண்டும் என்று முன்பே தோன்றவில்லையா?

இதுதான் எனக்கும் ஆச்சரியம். குழந்தையின் சாவைக் கண்டுபிடித்த பிறகுதான் அந்த எண்ணம் உருவானது. நீண்ட காலமாகப் பொக்கிஷம்போல அந்த டயரி என்னிடம் இருந்தாலும் இந்த எண்ணம் தோன்றவில்லை. நான் இள வயதாயிருந்தபோது என்னைப் பற்றியும் என்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியுமே என்னால் நினைக்க முடிந்தது. வயது போகப் போக முன்னோரைப் பற்றி நினைக்கத் தோன்றுகிறது. இது எல்லோருக்கும் நடப்பதுதான். அப்பொழுதுதான் இதைக் கதையாக எழுதலாம் என்று பட்டது.

உங்களைப் பலர் செக்கோவுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். அவர் ஆறு பக்கத்தில்கூட அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார். ஆனால் உங்கள் சிறுகதைகள் மிக நீண்டவை. 40 பக்கம், 60 பக்கம் என்று அவை நீண்டுகொண்டே இருக்கும். ஆறு பக்கத்தில் உங்களால் ஒரு சிறுகதை எழுத முடியாதா?

எனக்குச் சரிவராது. செக்கோவுடன் என்னை அவர்கள் ஒப்பிடுகிறார்கள் என்றால் அவர் சிறுகதைகளாக எழுதிக் குவித்தவர். நானும் வாழ்நாள் முழுக்கச் சிறுகதைகளை மட்டுமே எழுதிவருகிறேன். அந்தக் காரணமாக இருக்கலாம். ஆனால், அவரைப் போல் சிறுகதை எழுதுவது என்னால் முடியாது. என்னுடைய சிறுகதை, நாவல் வடிவத்தை நோக்கி நகர்வது. எனக்குப் பின்னணி முழுக்கச் சொல்ல வேண்டும்; மூலை முடுக்கிலிருந்து எல்லாம் விஷயத்தைக் கூட்டி எடுக்க வேண்டும். என் பாதை வேறு. எனக்கு இதுதான் சரிவருகிறது.

இந்த வருடம் நீங்கள் கில்லெர் பரிசுக் குழுவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறீணர்கள். போன வருடம் நீங்கள் விழாவுக்கே வரவில்லை. ஏன் இதை ஒப்புக்கொண்டீர்கள்? உங்களுக்கு எங்கேயிருந்து நேரம் கிடைக்கும்?

இந்தக் கோடை காலம் முழுவதையும் நான் இதற்காக ஒதுக்கிவைத்துவிட்டேன். எழுத்தாளருக்கு ஒரு கடமையும் இருக்கிறது. இதுவே என் வாழ்நாளில் இப்படியான ஒரு சேவை செய்வதற்கு எனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு. நான் 38 புத்தகங்களைப் படித்து முடித்து விட்டேன்.

முன் அட்டையிலிருந்து கடைசி அட்டைவரை படித்தீர்களா?

நிச்சயமாக. படிக்க வேண்டும். மிகச் சாதாரணமாகத் தொடங்கும் நாவல் மூன்றாவது அத்தியாயத்தில் வேகம் பிடித்து உன்னதமாக மாறலாம். அதில் நான் கற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கிறது.

நீங்கள் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நான் சொல்வதற்கு ஒன்றிருக்கிறது, சொல்லலாமா?

தாராளமாக.

நான் உங்களைப் பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டிருக்கிறேன். இரண்டு வருடங்களாக நான் எடுத்த முயற்சிகள், உங்கள் அதிகாலைத் தொலைபேசி, நீங்கள் சுற்றுலா போனது, செவ்வி அப்படியே தள்ளிப்போனது இதையெல்லாம் பற்றி எழுதியிருக்கிறேன்.

இதில் என்ன சுவாரஸ்யம்?

நான் எழுதிய கட்டுரைக்கு 'ஆயிரம் பொன்' என்று தலைப்பு கொடுத்திருந்தேன். 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று ஒரு பழமொழி எங்கள் நாட்டில் வழங்குகிறது. அதுபோல உங்களைச் சந்தித்தால் எனக்கு ஒரு கட்டுரை லாபம், சந்திக்காவிட்டாலும் ஒரு கட்டுரை என்ற மாதிரிக் கூறியிருந்தேன்.

அவர் கல்லென்று சிரித்தார். 'அப்ப நான் ஒரு செத்த யானை.'

'இல்லை. இல்லை. நீங்கள் உயிருடன் இருக்கும் யானை. சிரிக்கும் யானை.'

என்னிடம் இன்னும் பல கேள்விகள் இருந்தன. அதிலே முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்பதற்குள் நேரம் முடிந்துவிட்டது. அந்தக் கேள்வி இதுதான்.

'உங்களுடைய சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது Tricks. ஒரு சிறு சம்பவம் அந்தக் கதையில் வரும் இளம் பெண்ணின் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிடுகிறது. அதுபோலவே உங்கள் வாழ்க்கையிலும் 19ஆம் வயதில் ஒரு சம்பவம் நடக்கிறது. மாணவன் ஒருவன் கடிக்கும்போது தெறித்து விழுந்த இனிப்புத் துண்டை எடுத்து நீங்கள் சாப்பிட்டீர்கள். அந்தக் கணமே காதல் வயப்பட்டு, படிப்பைத் துறந்து, அந்த மாணவனை மணமுடித்து 22 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து பிறகு மணவிலக்குப் பெற்றுக்கொண்டீர்கள். எப்போதாவது அதை நினைத்துத் துக்கப்பட்டதுண்டா?'

அவர் இதற்கு என்ன பதில் சொல்லியிருப்பார்? தெரியவில்லை. காத்திராப்பிரகாரமாக மீண்டும் ஒரு முறை அவர் எங்காவது ஒரு கூட்டத்தில் என்னிடம் சிக்கக்கூடும். 'அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று நினைத்துக்கொண்டேன்

நன்றி: காலச்சுவடு

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner