அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள் - 2 அமரர் எஸ்.அகத்தியர் இமுஎசஊடாக அநக என் இறுக்க நெருக்கம், இயக்க இலக்கியப் பரிணாமம் ஒரு தோழமைக்குள்ள இலக்கணமாகத் திகழ்ந்தது.டானியலுக்கும் 'பாட்டாளிப் பாவலன்' என்ற இரத்தினசிங்கத்திற்கும் அடுத்து உள்ளார்த்தமாக இணைந்த உயிர்ப்பானஇலக்கிய உன்னிப்பு என்மட்டில் அநகவோடு தான் இருந்தது. வீதி, நடைபாதை, குச்சுத்தெரு,சாக்கடை, ஹொட்டல்,தேநீர்க்கடைஎன்றெல்லாம் அவர் முழக்கம் இலக்கிய மூச்சோடு இடையறாது கலந்து நிற்கும். அவர் எப்போதும் ஓர் அபூர்வவாதியாகஎனக்குத் தோன்றினார். எவரையும் இலகுவில் ஆகர்ஷிக்கும் தன்மை கொண்டவரெனினும், தான் சொல்வதைஒப்புவிக்கும் வரை ஒரு சர்வாதிகாரி போல் அட்டகாசிப்பார். அசட்டை, அசமந்தம், மறைத்து பேசுதல்,சிரித்துச் சமாளித்தல், மெளனித்தல் அவருக்கு ஆகாத விஷயங்களாதலால் சர்வாதிகாரத்தனம் அவர் பால்வந்து விடுவதில் நியாயமிருப்பதை உணர எனக்குச் சொற்ப காலம் எடுத்தது. சங்கீதக் கச்சேரி, சதுராட்டம்,நாடகம், சினிமாக் கலை,குச்சுவிட்டுச் சமாச்சாரங்கள் இந்தக் கனவானுக்கு இலக்கியக் கருவூலங்களாக அமைந்து விடுகின்றன. பாட்டாளி- தொழிலாளி வர்க்க மக்கள் 'இலக்கியம் என்றால் எந்தக் கடைச்சரக்கு?' என்று கேட்கக் கூடியவர்களுடனும்இவர் மணிக்கணக்கில் சம்பாஷிக்கையில் ஒரு தொழிற்சங்கவாதியாகவும் காண்போம். லடிஸ் வீரமணி, ஸ்ரனிஸ் கலைதாசன்,சுகந்தன், அந்தனி ஜீவா,ஓவியர் குமார், இக்பால் என்று கொழும்பு கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, கொம்பனித் தெரு, கொள்ளுப்பிட்டிஎன விரிந்த அவரின் இளவட்டச் சிஷ்யர்கள் நாளடைவில் என் தோழர்களாக - நண்பர்களாக ஆகினர்.மகா கவியின் கவிதா சாரங்களை லடிஸ் வீரமணி நாடகமாக வாலாயமாக்கிய வல்லமை அநகவிலிருந்துதான்பிறப்பெடுத்தது. அநகவால் பிரத்தியேகமாக ஆகர்ஷிக்கப்பட்ட தன்மையை - அதன் வளர்ச்சியை -இன்றுஅந்தனி ஜீவாவில் காணலாம். இலக்கிய உலகில் எவரையும் 'உருவாக்குவது' என்ற போலித்தனத்தை அவர் வெறுத்தார். 'ஊக்குவிப்பது', 'உருவாக்குவது' என்றெல்லாம் கோஷிக்கும் வணிகமயம் அவரிடம்ஒருபோதும் இருந்ததில்லை. லட்சிய ஆவேசிப்போடு எழும் கிளர்வுக்குக் களம் கொடுப்பது, நெறிப்படுத்துவது,வழிகாட்டுவது,விமர்சிப்பதும் என்றெல்லாம் சொல்லுகின்ற அநக, எழுத்தை விளக்கமாக, தெளிவாக, கலாபூர்வமாக ஆளுமைப்படுத்தும்விதம் அவர் சிறுகதை,நாவலில் பிசகின்றி வெளிப்பட்டது. எடுத்த ஈட்டி குறித்த ஆளை நோக்கி நேரிடைபாயும் முனைப்பாக அவர் கருத்தியலைச் செலுத்துகின்ற பாங்கு அவர் சமப் படைப்பாளிகளையும் வியக்கச்செய்தது. அவருக்குப் பின் தன் கருதுகோளை இயல்பான செல்நெறிகையினூடாகத் துணிந்து சொல்லும் முனைப்புடானியல் படைப்பில் அதிகம் வெளிப்பட்டது. எமது கால ஆரம்பத்தில் ஈழத்திலே சிறுகதையினை உயிர்ப்பாகப்படைத்தவர் டானியல். எனினும் அநக, எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் போல் வெவ்வேறு பாணியில் எழுதும்ஆற்றல் டானியல் எழுத்தில் இல்லை. 'சகல ஆக்கங்களுக்கும் ஒரே பாணியை - நடையைக் கையாள்தலை ஒரு'தனித்துவமாக'க் கொள்ளப்படுவது முழுப் பலவீனமே தவிர பலமல்ல' என்று அநகவும், எஸ்.பொ.வும், நானும்ஒருமித்த கருத்துக் கொண்டிருந்தோம். அநக கல்விமான் என்பதை விடப் படிப்பாளி, படைப்பாளி,நுட்பமான மூளைசாலி என்பதே சரி. புரியாத விஷயம் என்று எதுவுமே அவரிடம் மல்லுக் கட்டியது கிடையாது.ஆய்வு, தேடல், விமர்சிப்பு எதையும் அறிய அவாவும் மனம் அவர் இயற்கைப் பண்பாக இருந்தமையாலேயேஓர் இயக்கம் போல் அவர் வீறாகச் செயற்படவும் முடிந்தது. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு,பத்திரிகை ஆசிரியர் என்றெல்லாம் அவர் இலக்கியம் அளாவி நின்றது. அவர் கருத்தை எடுத்துச் சொல்லும் விறுத்தம் ஊசி முனையாகப்பாய்ச்சுகினும் இலக்கியம் அவர் உள்ளாத்ததிற்கு மாறாக ஒருபோதும் ஊறு செய்ததில்லை. அவர் பேச்சில்அகங்காரம் ஒறுப்பாகவும், ஆவேசத் தொனி அட்டகாசித்து வேகமாகவும் பாயும். போர்க்குணம் மிக்கஅவர் வீச்சான எழுத்து அவரின் இலக்கிய நயத்தைக் கெடுத்ததில்லை. கரு, உரு,அழகு, எளிமை, தெளிவுஅவர் படைப்புகளை உன்னதமாக்கின. பதத்திற்கு ஓர் அவிழாக 1966இல் தினகரனில் அவர் எழுதிய 'மனக்கண்'என்ற பெரிய நாவல் சான்று. கேலி, கிண்டல்,சாட்டை, நகைச்சுவை அவர் எழுத்துக்கு அங்கதம் சேர்த்தது. 'சமூகவியலை அகிலன் சரியாக எடைபோடாத படைப்பாளிஆயினும் அகிலனின் எளிய, தெளிவான, அழகான தமிழ் நடை அவர் நாவல்களுச் சிறப்புச் சேர்த்தது என்றகருத்தில் அநகவும் நானும் ஒருமித்திருந்தோம். 'மனக்கண்' நாவலை நூலாக்க செ.க.ஏற்பாடு செய்கிறார்என்று பி.ராமநாதன் ஒருமுரை எனக்குச் சொன்னார். பதிலாக அநகவின் 'வெற்றியின் இரகசியங்கள்'கட்டுரைத் தொகுதிதான் வந்தது. அதில் அவர் உளவியலை வெளிப்படுத்தும் விதம் அக்காலம் இந்திய எழுத்தாளர்அப்துல் ரகுமான் எழுதிக் குவித்த இயக்கவியல் மறுப்பு வாத நூல்களுக்குச் சரியான சாட்டையடி என்றும் சொல்வேன். 'மனக்கண்' நூலாகாத குறையை நிவர்த்திக்குமுகமாக அதைவானொலி நாடகமாக்கி வாரந்தோறும் ஒலிபரப்பிய சில்லையூர் செல்வராசன் அநகவைத் தக்க முறையில்கெளரவித்தமை செல்வராசனுக்கும் பெருமை சேர்த்தது. எனினும் அது நூலாக வரும் வரை தாகம் தணியாது. அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்- 1...உள்ளே அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்- 3...உள்ளே நன்றி: தினகரன்ஆகஸ்ட் 18, 1991 [ அ.ந.க.வின் நினைவு தினம் பெப்ருவரி14. அதனையொட்டிய நினைவுக் கட்டுரை ] | |