‘வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை
கப்பலோட்டிய தமிழர்கள்’ -
எஸ்.அகஸ்தியர் -
[எஸ்.
அகஸ்தியரின் நினைவு தினக்கட்டுரை (29.08.1926- 08.12.1995).
இங்கிலாந்தில் வசிக்கும் அவரது மகளும், எழுத்தாளருமான திருமதி நவஜோ
யோகரட்னம் பதிவுகளுக்கு அனுப்பிய கட்டுரை. இ.கே.ராஜகோபாலின் நூலுக்கு
ஈழத்தின் பிரபல எழுத்தாளர் முற்போக்குச் சிந்தனையாளர் எஸ்.அகஸ்தியர்
வழங்கிய அணிந்துரையிது. - பதிவுகள்] பல்லாண்டு போத்துக்கீஸ்இ
ஒல்லாந்து மேலாதிக்கத்தைத் தொடர்ந்து பிரிட்டிஷ் முதலாளித்துவச்
சக்ராதிபத்தியத்தின் கலோனிய ஆதிக்கத்தில் அடிமைப்பட்டிருந்த
இலங்கையில், இன்றுவரை அதன் ஆட்சிப் பீட அதிகாரம், கொடிய சுரண்டும்
முதலாளித்துவ அமைப்புக்குள் சிக்குண்டு இருக்கிறதேயன்றி, புதிய ஜனநாயக
சோஷலிச சமுதாய அமைப்புக்கான வாய்ப்பினைப் பெறாமலே இருந்து வருகின்றது.
முதலாளித்துவ அமைப்பைக் கொண்ட இலங்கையின் வரலாறு, 1956இல் தேசிய
மறுமலர்ச்சியினூடாக இடதுசாரி முற்போக்குச் சக்திகளின் துணையோடு திசை
திருப்பப்பட்டு, வளர்ந்து வரும் சோஷலிஷ முகாமுக்கு இட்டுச் செல்ல
அத்திவாரமிடப்பட்ட போதும், அவ்வத்திவாரம் பிற்போக்கு இனவாத –
முதலாளித்துவச் சதிகார நாச சக்திகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டு,
மீண்டும் 1977இல் ஏகபோக முதலாளித்துவ அமைப்புக்குள் சிக்குண்டு
தவிக்கிறது. ஏகாதிபத்தியத்தின் கொடிய கரங்கள் பதிந்த இலங்கை
1977லிருந்து ‘ரத்தக்களரி’யாக மாறிவிட்ட வரலாறு இன்றைய கட்டமாகும்.
இவ்விதம் நான்கு கட்ட வரலாற்றினைக் கொண்ட இலங்கையில் நிகழ்ந்ததாகச்
சொல்லப்படும் நமது கடலோடித் தமிழர் சாதனைகள் குறித்த சம்பவங்கள்
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கால கட்டமாதலால்இ அதன் நுகத்தடியில்
சிக்குண்டிருந்த இலங்கையின் நிர்வாகத்தினூடாகவே அவற்றை அணுக வேண்டும்.
முதலாளித்துவ அமைப்பில் வழக்கம்போலவே தனிமனித வழிபாடும், வீர
சாகசங்களும், தன்னாதிக்க முறைமைகளும், விதந்து கொள்ளப்படுவது
இயல்பாகவிருப்பினும் , உண்மையில் அவை வரலாற்றினை நிர்ணயிக்கும்
‘வர்க்கசக்தி’களாக இருப்பதில்லை. ‘வர்க்கப் போராட்டத்தின் நிகழ்வுகளே
வரலாகின்றன’ என்னும் மெஞ்ஞானத்தினூடாக அதன் தாற்பரியம் புரியக்கூடியதே.
எந்தவோர் செயற்பாடுகளும் ஏதாவதோர் ‘வர்க்க அணி’ சார்ந்திருப்பதைக்
காணலாம். சமுதாயங்களோ சமுதாய மாற்றங்களோ யாவும் ‘வர்க்கப்
போராட்ட’ங்களினால் தோற்றம் பெற்றுப் பரிணாமம் அடைந்தனவேயன்றி,
தனிமனிதர்களாலல்ல.
புராதன ஆதிக்கப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து அடிமைச் சமுதாயம்,
பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், சோஷலிஸ சமுதாயம் என
ஒன்றுக்கொன்று முரண்பட்ட சமுதாய அமைப்புக்கள், அந்தந்த சமுதாய
மாற்றத்துக்கான ‘வர்க்கப் போராட்டங்களாகவே நிர்ணயிக்கப்பட்டன. இதுவே
வரலாறாகின்றது. ஒவ்வோர் நாடுகளில் நிகழும் அரசியற் போராட்டங்களும்
இத்தகையதே. சாதாரண கிராமங்களில் நிகழும் சிறு சிறு சச்சரவுகளும்
சண்டைகளும் ‘இருகன்னை’யான முரண்பாட்டினாலேயே உண்டாகின்றன.
இவற்றில் எந்த வர்க்கம் நீதியானது, எந்த வர்க்கம் அநீதியானது என்பதைக்
கூறுவது இக்குறிப்பின் நோக்கமல்ல. இன்று மனித குலம் ‘முதலாளித்துவ
சமுதாயம், சோஷலிஸ சமுதாயம்’என இரண்டு முகாம்களின் போராட்ட மையத்தில்
வாழ்ந்துகொண்டிருக்கிறது. பிசகற்ற இந்தக் கண்ணோட்டத்தோடு ‘அமெரிக்கா
வரை கப்பலோட்டிய தமிழர்’ நூலைப் பார்க்கும்போது இதில் கூறப்படுகின்ற
சாதனைகள் எந்த வர்க்க நலன்களுக்காகப் புரியப்பட்டன என்பதற்கான
சான்றுகளைத் தரிசிக்க முடியாதிருப்பினும், எந்தக் கருமத்திலும்
ஈடுபடுவோர் முறையான அனுபவசாலிகளாகவும், துணிச்சல் காரர்களாகவும், தியாக
உள்ளம் கொண்டவர்களாகவும் திகழ வேண்டும் என்பதைக் காணக்கூடியதான
சம்பவங்கள் மனங்கொள்ளத் தக்கவை.
நவீன இயந்திர சாதனங்களற்ற அந்தக் காலத்தில் வல்வெட்டித்துறையிலிருந்து
அமெரிக்காவரை நம் தமிழர் கப்பலோட்டியமையைச் சாதனையாகக் கொண்டு
மெய்யாகவே பெருமிதம் கொள்ளும் நாம், நமது இலங்கைத் தீவில் 1958
தொடக்கம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்வரை ‘கப்பலேறிய
தமிழர்’களாகிவிட்ட சோக வரலாற்றை எப்படி அழைப்பது? இன்றோ தமிழினம்
திக்குத் திசை தெரியாமல் கடலில் தத்தளிக்கும் மரக்கலங்கள்போல்
நாடெல்லாம் அலைகிறது. இதற்கு யார் காரணம் என்று வியாக்கியானம் செய்வது
இங்கே என் நோக்கமல்ல. ஆனால், இதனை நம்பிக்கையூட்டும் சோக முடிவாகவோ,
சோகமுடிவாகிவிட்ட நம்பிக்கையூட்டும் சாதனையாகவோ கொள்ளலாமா? சாதனை என்று
எது கருதப்படகின்றதோ, அது குறித்த சமுதாய முன்னேற்றத்துக்கு அல்லது
மாற்றத்துக்கு எவ்வாறு பங்களித்துள்ளது என்பதைப் பொறுத்தே அதற்குச்
சரியான அர்த்தம் உண்டாகிறது. அத்தகைய அர்த்தம் இதிற்
புலப்படவில்லையெனின், அதற்கு இதன் ஆசிரியரல்ல, அக்கால அமைப்பின் அன்றைய
நிலை தழுவிய சம்பவங்களே காரணம் என்றாகின்றது.
அமெரிக்காவரை கப்பலோட்டிய நம் தமிழர் ஆற்றலும் தியாகமும்கொண்ட
சாதனையாளர்கள் என்பது உண்மையே. இச்சாதனைகள் எந்தக் கருதுகோள் சுட்டும்
வர்க்க நலனுக்குப் பயன் பட்டன என்பது புலப்படாதவிடத்து அவை ஒற்றைக்
கன்னையாகத் தொக்கி நிற்கின்றன.
வரலாற்றுகளை எப்போதும் கற்பனைக்கு இடமில்லாமலும் மெருகூட்டப்படாமலும்
சித்தரிக்க வேண்டும். அதுவே உண்மை வரலாறு. ஆனால், இலங்கையின் பல
வரலாற்றாசிரியர்கள் மட்டுமல்ல, இந்திய வரலாற்று இலக்கிய ஆசிரியர்கள்
பலரும் இதனைக் கவனத்திலெடுக்காமல், தங்கள் கற்பனைத் திறன்களையும்
ஆசைகளையும் கொட்டி விட்டிருக்கிறார்கள். ‘மகாவம்சம்’என்ற பௌத்த
நூலையும், அதனைத் தழுவி எழுதிய இலங்கை நூல்களையும், ‘கல்கி’,
சாண்டில்யன் போன்ற பிரபல எழுத்தாளர் ( ஜெகசிற்பியன் சற்று
வேறுபட்டவராயிருந்தார் என்பதற்கு ‘ஆலவாயழகன்’என்ற அவர் நாவல் சான்று)
‘வரலாற்றுக் குறிப்புகள்’ கற்பனைப் புனைவுகளால் ஆக்கப்படும் நாவலோ,
ஆசிரியர் தமன் கருத்தினைப் புகுத்தும் சிருஷ்டியோ, சிருஷ்டித்த
பாத்திரங்களின் குணவியல்பான சித்தரிப்போ அல்லவென்பதை மனசிருத்தி
இந்நூலை ஆக்கியமை, நூலுக்கு எடுப்பாக உள்ளது.
இந்நூலில் ஆசிரியர் கையாண்ட ஒப்புவமையும், சம்பவங்களை நகர்த்திச்
செல்லும் உத்தியும், அவற்றைச் சொல்கின்ற விதமும், கட்டுரை
வடிவத்திற்குப் புதிய பாணியாகவிருப்பதால், அவை நூலுக்கு மேலும்
வலுவூட்டியுள்ளன. இச்சம்பவங்களை மையமாக வைத்து ஒரு பெரிய வரலாற்று
நாவல் எழுதின் அதற்குத் தமிழ் இலக்கிய உலகில் அழியா இடம் கிடைக்கும்
என்று கருதுகின்றேன். அந்தளவிற்கு இச்சம்பவங்களின் ஊடகங்கள்
நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.
ஆரம்பத்தில் சரியான கணிப்போடு தொடங்கிய நூலினுள்ளே பல கட்டங்களில்
இக்கணிப்பீடு பிறழ்ந்தும் நெகிழ்ந்தும் செல்வதால், ஆசிரியர் எந்தக்
கருத்துருவத்தைத் தன்பால் ஏற்றுக் கொண்டு சொல்ல விழைந்தார் என்பதும்,
எந்தக் கருதுகோளை இதனூடாகச் சொல்ல வந்தார் என்பதும்
சுட்டப்படவில்லையாதலால், ஆசிரியர் ‘வர்க்கம்’ சாராத பிரசாரத்தைக் கொள்ள
முனைந்து, அதற்கு ஆளாக நேரிட்டதோ என்று சொல்லத் தோன்றுகின்றது.
சந்தர்ப்ப சூழலுக்கேற்ப இடம் பொருள் ஏவலாகவன்றி, நேரிடையாகவே
ஆவேசத்தோடு சொல்ல வந்த இதன் ஆசிரியர், அதனைக் கருத்திற் கொள்ளாமலே
குறிப்புக்களை மட்டும் சுவடு பதிக்க எண்ணினார் என்றே இதனை நுணுகி
வாசிக்கும்பாது தோன்றுகின்றது.
‘இருள் சூழ்ந்த வியாபகத்திலிருந்து ஞான வெளிச்சங்காட்டும் கலங்கரை
விளக்கமாக நமது இலக்கியங்கள் திகழ்வதுபோல் வரலாற்றுக் குறிப்புக்கள்
இராது’என்னுங் கூற்று எவ்வாறாயினும், இதில் ஆசிரியர் சம்பவங்களைக்
கோவைப்படுத்திச் சித்தரித்த விதமும், அவற்றைச் சித்தரித்தபோது கையாண்ட
நடை கனகச்சிதமாக விளங்குகின்றது.
இந்நூல் பூராகவும் பல விநோதங்கள் பரவி, வாசிக்கும் ஆவலைத் தூண்டி
நிற்கின்றன. இவற்றைப் படிக்கின்றபோது நமக்கும் இப்படி ஒரு கப்பலில்
பகல் பயணம் வைத்து உலக வலம் வர ஒரு வாய்ப்புண்டாகமாட்டாதா என்ற ஆவல்
உண்மையாகவே மனரை நெருடச் செய்கின்றது. அப்படி ஒரு சந்தர்ப்பம்
இப்போதாவது கிட்டாதா என்ற ஆசையும் கூடவே எழச் செய்கிறது.
இவ்வகைத்தான சிறப்புக்களோடு இந்த வரலாற்று மிக்க சாதனையாளர்களான நம்
தமிழர் பற்றிய இந்நூலை நிச்சயம் இக்காலத்தின் சந்ததியின் படித்துப்
பயன்பெற வேண்டும். பயனுள்ள இந்நூலை ஆக்கியருளிய அன்பர் ராஜகோபால்
பாராட்டுக்குரியவர்.
navajothybaylon@hotmail.co.uk |