அத்தியாயம் இருபது: இந்திராவின்
சந்தேகம்!
அடுத்த
மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன்
கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை
கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில்
போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி
எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக்
கொண்டிருந்தார்கள்.
ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் 'நடுத்தெரு
நாராயணன்'. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன்.
அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு
நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும்
கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க்
காவற்துறைக்க்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை
பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன.
அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.
சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை
மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு
அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட
வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச்
செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு
வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்:
வீதி 'அ'கிழக்கு மேற்காகச் செல்லுவதாக வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வீதியினை ஊடறுத்துத் தெற்கு வடக்காக இன்னுமொரு வீதி 'ஆ' செல்வதாக
வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வீதி 'அ' மூடப்பட்டு அன்றைய தினம்
நடைபாதை வியாபாரம் நடைபெற நகரசபை அனுமதித்திருப்பதாகவும் வைத்துக்
கொள்ளுங்கள். அந்த வீதியில் வைத்துப் பொருட்களை விறபதற்குத்தான்
நகரசபைக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். வீதி 'ஆ'வில் வைத்து
விற்பதற்கல்ல. அத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் நடுத்தெரு
நாராயணனுக்கு ஒரே குதூகலம்தான். இத்தக்கைய தருணங்களில் நடுத்தெரு
நாராயணன் என்ன செயவானென்றால்.. வீதி 'ஆ'வும் வீதி 'அ'வும்
சந்திக்குமிடத்திற்கண்மையில், வீதி 'ஆ'வில் தனது கடையைப் பரப்பி
விடுவான். வீதி 'அ'விற்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலராவது வீதி
'ஆ'வில் கடை விரித்திருக்கும் தன் பக்கம் கடைக்கண் பார்வையினைத்
திருப்ப மாட்டார்களா என்றொரு நப்பாசைதான். பெரும்பாலும் அவனது
நப்பாசை வீண் போவதில்லை. கிடைத்தவரை இலாபமென்று திருப்திய்டைந்து
கொள்வான். சில சமயங்களில் அவனது காலம் சரியில்லாமலிருந்ததென்று
வைத்துக் கொள்ளுங்களேன், அத்தைய தருணங்களில் அவன் சில சமயங்களில்
சட்டவிரோதமாக நடைபாதையில் விறபனை செய்ததற்காகக்
காவற்துறையினரிடமிருந்து 'டிக்க்ற்'களும் பெற்றுக் கொள்வதுமுண்டு.
அந்த மூன்று வாரங்களில் ஒரு ஞாயிற்றுக் கிழமை இவ்விதமாகக் கடை
விரித்த நடுத்தெரு நாராயணன் இளங்கோவின் துணையை நாடினான்.
அருள்ராசாவுக்கு அன்றைய தினம் வேலை செய்ய விருப்பமில்லாமலிருந்ததால்
இளங்கோ மட்டுமே நடுத்தெரு நாராயணனுடன் வேலை செய்யச் சம்மதித்தான்.
அன்றைய தினம் நடுத்தெரு நாராயணனுக்கும் வேறு சில சோலிகளிருக்கவே
இளங்கோவும் நடுத்தெரு நாராயணனின் மனைவி இந்திராவுமே அன்றைய நடைபாதை
வியாபாரத்திற்குப் பொறுப்பாக விடப்பட்டனர்.
இளங்கோவுக்கோ சட்டவிரோதமாக நடைபாதையில் அவ்விதம் பொருட்கள்
விற்பதற்குச் சிறிது தயக்கமாகவிருந்தது. அவனுக்கு இந்திராவைப்
பார்த்தால்தான் சிறிது பாவமாகவிருந்தது. நடுத்தெருவில் அவளை அவ்விதம்
விட்டுவிட்டுப் போய் விட்ட நடுத்தெரு நாராயணின்மேல் சிறிது
கோபமாகவுமிருந்தது. இத்தகைய பாவ, கோப உணர்வுகளுடன் அவன் அவளிடம்
"இவ்விதம் நடுத்தெருவில் நின்று விற்பதற்குத் தயக்கமாகவோ அல்லது
பயமாகவோ இல்லையா?" என்று கேட்டான். அதற்கு அவள் சிரித்தவாறு
பதிலளித்தாள்:
"ஆரம்பத்தில் இவ்விதம்தான் பயமாகவிருந்தது. ஆனால் போகப் போகப்
பயமெல்லாம் போயே போய் விட்டது. பழகப் பழக எல்லாமே பழகிவிடும்
இல்லையா? அது போல்தான்."
"உண்மையாகத்தான் சொல்லுகிறீர்களா? இப்போழுது இங்கே ஒரு காவற்துறை
அதிகாரி வந்து நடைபாதையில் விற்பதற்குரிய பத்திரங்களெங்கேயென்று
கேட்டால் என்ன செய்வீர்கள்?"
"அதற்கும் அவர் சுலபமானதொரு வழியைச் சொல்லித் தந்திருக்கிறாரே"
"என்ன வழி?"
"அப்படி யாராவது வந்து கேட்டால் எனக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை
என்று கூறி விடுவேன்..."
"அதெப்படி.. நீங்கள் இங்கு நின்று கொண்டு அபபடியெப்படி இவ்விதம்
கூறலாம்?"
"அதுவும் மிகவும் சுலபம். 'நான் இங்கு பொருட்களை வாங்குவதற்காக
வந்தவள். கடைக்காரரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இனி இது உங்கள்
பொறுப்பு' என்று நழுவி விடுவேன்"
இளங்கோவுக்கு அவளது பதில் ஆச்சரியத்தைத் தந்தது.
"நீங்கள் உண்மையிலேயே மிகுந்த தைரியசாலிதான். என்னால் இவ்வளவு
துணிந்து பொய் கூற முடியாது. அதுசரி அப்படி நீங்கள் கூறி நழுவி
விட்டால் இங்குள்ள விற்பனைப் பொருட்களின் கதி?"
இதற்கு இந்திராவின் பதில் அவனுக்கு மேலும் வியப்பினைத் தந்தது. அவள்
கூறினாள்: "அவர்கள எல்லாவற்றையும் அப்படியே அள்ளிப் போட்டுக் கொண்டு
போய் விடுவார்கள். அவ்வளவுதான்."
சில சமயங்களில் மாலை நேரங்களில் 'சைனா டவுனி'லுள்ள 'கனால்'
வீதியிலும் நடைபாதைகளில் நடுத்தெரு நாராயணன் இவ்விதம் தந்திரமாகப்
பொருட்களை விற்பதுண்டு. அத்தகைய சமயங்களில் அவனது மூளை வேறு விதமாக
வேலை செய்யும். உதாரணமாக அவ்வீதியிலுள்ள பிரபலமான வர்த்தக
நிலையமொன்று மாலை ஆறு மணிக்கு மூடி விடுவதாக வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த வர்த்தக நிலையம் இழுத்து இரும்பும் கம்பிகளுடன் கூடிய கதவுகளால்
மூடப்பட்டபின்னர்தான் நடுத்தெரு நாராயணன் தன் கடையினை விரிப்பான்.
எப்படியென்றால்... அந்த வர்த்தக நிலையத்தின் படிக்கட்டுகளில்
பொருட்களைப் பரப்பி வைத்து விறபான். யாராவது கேட்டால் அந்த வர்த்தக
நிலையத்துக்கும் தனக்கும் இவ்விதம் விற்பதற்குத் தனிப்பட்டரீதியிலான
ஒப்பந்தமிருப்பதாகக் கூறிச் சமாளிப்பான். சில சமயங்களில் அவனது
இந்தத் தந்திரம் வேலை செய்வதுமுண்டு. அவ்விதம் வேலை செய்யாமல் போய்
விடும் சந்தர்ப்பங்களில் முதலை இழக்க வேண்டியதுதான்.
இளங்கோவுக்கு இவ்விதம் வியாபாரம் செய்து கொண்டு எவ்விதம் இலாபம்
சம்பாதிக்கிறானிந்த நடுத்தெரு நாராயணன் என்றிருக்கும். அந்தச்
சந்தேகம் குரலில் தொனிக்க அவளிடம் பின்வரும் கேள்வியினைக்
கேட்டுவைத்தான் இளங்கோ:
"எப்படி இவரால் இவ்விதம் விற்பனையைச் செய்து கொண்டு, முதலையும்
அவ்வப்போது இழந்து கொண்டு, தொடர்ந்தும் வியாபாரத்தைச் செய்ய
முடிகிறது?"
"அதனால்தான் என்னை இந்தியாவிலிருந்து அழைத்து வந்தபோது கடையில்
வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த மனுசன் இன்று நடைபாதையிலை வந்து
செய்கிற அளவுக்கு மாறியிருக்கிறார்" இவ்விதம் கூறியபொழுது
இந்திராவின் குரலில் ஒருவித சோகம் கலந்த தொனி பரவிக்கிடந்ததாகப்
பட்டது.
"உங்களுக்கு இவரை முன்பே தெரியுமா?"
அன்று
இந்திராவுடன் இளங்கோ அதிக அளவு நேரம் செலவழித்ததன் காரணமாக
இருவருக்குமிடையில் சகஜமான உரையாடல் நடைபெறுமளவுக்குரிய சூழல்
ஏற்பட்டிருந்தது. இவ்விதமாக அவனுடன் மனந்திறந்து உரையாடிக்
கொண்டிருந்தபொழுது அவள் கூறினாள்: "உன்னை என் சகோதரனாகக் கருதி
கூறுகிறேன். உண்மையில் உன்னுடன் இவ்விதம் கதைப்பது
சரியில்லையென்றுதான் தோன்றுகிறது. ஆனால் கதைக்காமலும் இருக்க
முடியவில்லை. இங்கு நான் தனித்துப் போனேன். எனக்கென்று கதைப்பதற்கு
யாருமே இல்லை. உறவினரோ, நண்பர்களோ யாருமேயில்லை. அமெரிக்காவில்
தானொரு பிசினஸ்காரனென்று ஊர்ப் பத்திரிகையில் இவரது மணமகளுக்கான
விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வந்து அகப்பட்டு விட்டேன். என்
ஆசைக்குக் கிடைத்த பரிசு. எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும்
வேண்டும். வந்தபிறகுதானே எல்லாமே விளங்குது. எனக்கு உண்மையிலேயே ஒரு
சந்தேகமும் இவர் விடயத்திலிருக்கு."
இளங்கோவுக்கு அவளது நிலை அனுதாபத்தைத் தந்தது. வியாபாரத்தில்
நொடிந்துபோன நிலையிலிருந்த ஹரிபாபு உண்மையிலேயே மிகவும் வயதில்
இளமையான இவளைச் சீதனத்திற்காகத் திட்டமிட்டே ஏமாற்றி விட்டானா அல்லது
உண்மையிலேயே இவளை அழைத்துவந்ததன்பின்னர் அவனது வியாபாரம் எதிர்பாராத
காரணிகளால் நொடிந்து போய் விட்டதா?
"என்ன சந்தேகமா.... பார்த்தால் அவர் சந்தேகபடக்கூடியவராகத்
தெரியவில்லையே!"
இதற்குச் சிறிது நேரம் அமைதியாகச் சிந்தனையில் ஆழ்ந்தவள் பின்
கூறினாள்: "சகோதரனே! நீ மட்டும் இதை யாரிடமும் கூற மாட்டேனென்று
சத்தியம் செய்து தந்தாயானால் ஒரு சில வியங்களை நான் உன்னிடம்
கூறலாம். ஏனோ தெரியவில்லை. உன்னை நம்ப முடியுமென்று படுகிறது.
உன்னுடன் சிறிது மனந்திறந்து கதைப்பதன் மூலம் என் மனப்பாரமாவது
சிறிதளவு குறையலாம்போல் படுகிறது."
இதற்கு அவன் கூறினான்: "நீங்கள் நிச்சயம் என்னை நம்பலாம். என்னை
நீங்கள் உங்களது உண்மையான சகோதரர்களிலொருவனாக எண்ணிக் கொள்ளலாம்.
அந்த நம்பிகையினை நான் நிச்சயம் காப்பாறுவேன்."
இதற்கும் சிறிது நேரம் அமைதியாக இருந்த இந்திரா "இவரது நடத்தையினைப்
பார்க்கையில் எனக்கு உண்மையிலேயே இவரது மனம்
சாதாரணமாகத்தானிருக்கிறதா என்ற சந்தேகம்தான் அதிகமாகிறது.
இல்லாவிட்டால் எந்தவிதப் பொறுப்புமில்லாமல் எவ்விதம் இவரால் இவ்வளவு
எளிதாகக் கள்ளத்தனமாக வேலைகளையெல்லாம் அநாயாசமாகச் செய்யமுடிகிறது?
இவரது மனம் உண்மையிலேயே சரியாகத்தானிருக்கிறதா?" என்று அவனை
அதிர்ச்சியடையக் கூடியதொரு குண்டினைத் தூக்கிப் போட்டபொழுது
நடுத்தெரு நாராயணான ஹரிபாபு அன்றைய தன் சோலிகளை முடித்துக்கொண்டு
திரும்பிக் கொண்டிருந்தான். இந்திராவோ இளங்கோவை நோக்கி 'என்னைக்
காட்டிக் கொடுத்து விடாதே' எனறொரு பார்வையை வீசிவிட்டு இயல்பாக
நிற்பதற்கு முயன்றுகொண்டிருந்தாள்.
[தொடரும்]
ngiri2704@rogers.com
[தொடரும்]