இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2007 இதழ் 91 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
புதிய நாவல்!
அமெரிக்கா! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!

தொடர்நாவல்: அமெரிக்கா! - வ.ந.கிரிதரன் - அந்தக் கடலுணவுக்குப் பெயர்பெற்ற உணவகம் நியூஜேர்சி மாநிலத்தின் 'நிவார்க்' என்னும் நகரில் பிரதான கடைத்தெருக்கண்மையில் அமைந்திருந்தது. இளங்கோ அவ்விடத்தை அடைந்தபொழுது அப்பொழுது காலை நேரம் பத்தைத் தாண்டி விட்டிருந்தது. நண்பர்களிருவரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாற்பத்திரண்டாவது வீத்யில் அமைந்திருந்த நூலகத்தை மையமாக வைத்து 'பிராட்வே' சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நூலகத்திற்குச் சென்று பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அருள்ராசா இளங்கோவைப் போல் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கியெம்ன்று எதிலும் பெரிதாக ஆர்வமற்றவன். ஆனால் கல்வி சம்பந்தமான, தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான, வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் ஆர்வமுள்ளவன். அவை பற்றிய விடயங்களை படிப்பதில் அதிகக் கவனம் செலுத்துபவன். அவனுக்கும் சிறிது நேரத்துக்கு நூலகம் சென்று ஏதாவது பிடித்த விடயங்களைப் பற்றிய பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்தததும் போலாகுமெனப் பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் நூலகம் செல்வதில் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை. எனவே நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினார்கள். அப்பொழுதும் அவர்களது சிந்தனை முழுவதும் குடிவரவு அதிகாரிகளுடனான சந்திப்பு பற்றியேயிருந்தது. இளங்கோ டிம் லாங்கைன்ச் சந்தித்திருந்தான். அருள்ராசாவுக்கு வந்து வாய்த்தவனோ டிம் லாங்கினைப் போல் அவ்வளவு வேடிக்கையானவனாக இருக்கவில்லை. வழக்கம்போல் அதிகாரிகளுக்குரிய கடின முகபாவமும், வார்த்தைகளை அளந்து, அதிகாரத்துடன் கொட்டும் தன்மையும் கொண்டவனாக விளங்கினான். எனவே அவனுக்கும் அருள்ராசாவுக்குமிடையிலான உரையாலும் மிகவும் குறுகியதாகவே அமைந்து விட்டதில் ஆச்சரியமேதுமிருக்கவில்லை. அவனொரு இத்தாலிய அமெரிக்கன். கிளாட் மன்சினி என்பது அவனது பெயர். அவனுக்கும், அருள்ராசாவுகுமிடையில் நடைபெற்ற உரையாடலும் பினவருமாறு சுருக்கமாக மட்டுமே அமைந்திருந்தது:

அருள்ராசாவின் ஆவணப் பிரதிகளைப் பார்த்தபடியே குடிவரவுத் திணைக்கள அதிகாரி கிளாட் மன்சினி " உனக்கு என்னவிதத்தில் உதவ முடியும்?" என்று ஆரம்ப வினாவினைத் தொடுத்தான்.

அதற்கு அருள்ராசா " சமூகக் காப்புறுதி இலக்க அட்டை எடுப்பது பற்றியே விசாரிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.." என்றான்.

அதற்கு கிளாட் மன்சினி " உனது விடயம் சம்பந்தமாக எங்களிடமிருந்து உனக்குரிய பதில் வரும் வரையில் எதுவும் செய்வதற்கில்லை. அதுவரை நீ பொறுத்திருக்கத்தான் வேண்டும்." என்று பதிலிறுத்தான். அதற்கு மேல் அவனுடன் கதைப்பதில் எந்தவிதப் பயனுமில்லை என்பதை உணர்ந்து கொண்ட அருள்ராசா பதிலுக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியேறினான்.

"அவனொரு குரங்கன். கொஞ்சங்கூட மனிதாபிமானமற்றவன். அவனுக்கு என் பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்கவே பொறுமையில்லை. இந்த விசயத்திலை நீ குடுத்து வைச்சவன் இளங்கோ"

"என்ன உனக்கு அவன் சொன்னதைத்தான் டிம் லாங்கினும் சொன்னான். என்ன அவன் கடுமையாச் சொன்னதை இவன் கொஞ்சம் வேடிக்கையாகச் சொன்னான். அவ்வளவுதான். மற்றப்படி முடிவு ஒன்றுதான்."

இவ்விதமாக உரையாடலைத் தொடர்ந்துகொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் இளங்கோ வானத்தைக் கவனித்தான். விரைவாகவே நகரத்துவானம் இருண்டு வந்துகொண்டிருந்தது. காற்றும் பலமாக வீச்த் தொடங்கி விட்டிருந்தது. வாயு பகவானைத் தொடர்ந்து வருணபகவானின் ஆட்டம் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே தொடங்கிவிடும்போல் காலநிலை தென்பட்டது.

"போகிற போக்கைப் பார்த்தால் மழை கெதியிலை அடிச்சுக் கொட்டும் போலை" என்றான் அருள்.

அமெரிக்கா! - வ.ந.கிரிதரன் -"பாத்தால் அபப்டித்தான் தெரியுது. இந்த நேரத்துக்கு ஊரிலை இருக்க வேணும். மழை பெய்யுறதிலை கூட எவ்வளவு அழகு. இங்கை சலனப்படத்தைப் பார்த்த மாதிரித்தான். பார்கலாம் ஆனால் இரசிக்க முடியாது...."

நண்பர்களின் உரையாடல் அப்படி இப்படித் திரும்பி அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையில் வந்து நின்றது.

"எபடியென்றாவது கெதியிலை ஒரு வேலை எடுக்க வேண்டும். 'பேர்மனென்ற்' வேலையாக இருந்தால்தான் கொஞ்சமாவது காசைச் சேர்க்கலாம். இல்லாவிட்டால் உழைப்பதும் செலவழிப்பதுமாகவே பொழுது போய் விடும். காசைச் சேர்க்க முடியாது."

"நீ சொல்வது சரிதான் இளங்கோ. ஆனால் ஒழுங்கான வேலைதான் கிடைக்க மாட்டவே மாட்டேன்கிது. என்ன செய்யலாம். எல்லாமிந்த சோசல் இன்சுரன்ஸ் கார்ட் இல்லாததால் வந்த கரைச்சல்தான்.."

"அருள். எனக்கொரு யோசனை தோன்றுது..."

"என்ன..."

"ஏன் நாங்கள் இன்னொருவனிடத்திலை வேலை தேட வேண்டும். நாங்களே ஏதாவது சொந்தமாகச்செய்ய முடியுமாவென்று பார்க்கலாமே... நியூயாய்க்கிலை எத்தனைபேர் சொந்தமாகத் தொழில் செய்து முன்னுக்கு வந்திருக்கிறான்கள்.. நீ என்ன சொல்லுறாய்?'

"அது சரி.. நீ சொல்லுறதும் ஒரு விதத்திலை சரியாய்த்தானிருக்கு. ஆனா கையிலையோ எந்தவிதச் சேமிப்புமில்லை. இந்த நிலைமையிலை எப்படிச் சொந்தத் தொழில் செய்யுறது. அப்படிச் செய்தாலும் எந்தத் தொழிலைச் செய்யுறது?"

வானத்தின் கருமை கூடிக் கொண்டே வந்தது. அருகிலிருந்த கட்டங்களிலிருந்து ஒரு சில மாடப்புறாக்கள் சிறகடித்துப் பறந்தன. இளங்கோவின் சிந்தனையிலொரு பொறி தட்டியது.

"எனக்கொரு யோசனை வருது அருள்."

"என்ன..?"

"ஒரு சின்ன 'பிசினஸ்' செய்து பார்க்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.."

"எந்தச் சந்தர்ப்பத்தைச் சொல்லுறாய்? எனக்கென்றால் ஒன்றுமாய் விளங்கேலையே.. வடிவாய் விளக்கமாய்த்தான் சொல்லேன்.."

"இன்னும் கொஞ்ச நேரத்திலை மழை கொட்டோ கொட்டென்று கொட்டப் போகுது.."

"அதுக்கும் பிசினசுக்கும் என்ன சம்பந்தம்..?"

"சம்பந்தமிருக்கே.. இந்த பிசினசைச் செய்து பார்க்கிறதாலை பெரிசாய்ப் பணம் கிடைக்காட்டியும் நாங்கள் சொந்த பிசினஸ் செய்யக் கூடியவர்களாவென்று 'டெஸ்ட்' பண்ணிப் பார்க்க இதுவொரு நல்லதொரு சந்தர்ப்பம்..."

"பெரிசாகப் புதிர் போடாமல் கெதியாச் சொல்லித் தொலை. தலை வெடித்து விடும் போலைக் கிடக்கு"

"மழைக்கும் இப்ப நாங்க செய்யப் போகிற பிசினசுக்கும் தொடர்பிருக்கென்று சொல்லியும் இன்னும் உனக்கு விளங்கவில்லையே. இப்பவாது விளங்குதா என்ன பிசினசென்று?"

"இஞ்சைபார் இளங்கோ. நானொன்றும் உன்னை மாதிரி பெரிய மூளைசாலியில்லை. பேசாமல் சொல்லித் தொலை. புதிர் போடுறானாம் புதிர். இருக்கிற நிலைமையிலை இதுக்கொன்றும் குறைச்சலில்லை" என்று அருள் சிறிது சலித்துக் கொண்டான்.

"உன்னிடம் எவ்வளவு டொலர்களிருக்கு அருள்?"

"என்னத்துக்குக் கேட்கிறாய்? ஏன், கையிலை இப்ப ஐம்பது டொலர்களைவரை இருக்கு?"

"அது காணும். என்னட்டையும் கையிலை ஒரு நாற்பது இருக்கு. ஆனால் அவ்வளவு செலவு வராது. ஆளாளுக்கு இருபது டொலர்களை வரைதான் செலவு வரும். நான் நினைச்ச பிசினசுக்கு இரண்டு பேருக்கும் சேர்த்து நாற்பது டொலர்கள் காணும்."

இளங்கோவே தொடர்ந்தான்: "இன்னும் கொஞ்ச நேரத்திலை மழை வந்துவிடும். அதற்குள்ளை கெதியாக பிசினசைத் தொடங்க வேண்டும்.
நான் சொல்ல வந்த பிசினஸ் குடை வியாபாரம்தான்.."

அருளுக்குச் சிறிது திகைப்பாகவிருந்தது. அவன் சிறிதும் இதனை எதிர்பார்க்கவில்லை.

"என்ன குடை வியாபாரமோ.. உனக்கென்ன விசரே பிடிச்சிருக்கு? உண்மையாத்தான் சொல்லுறியோ?"

"ஓம் அருள். உண்மையாத்தான் சொல்லுறன். குடை வியாபாரம்தான். அதிலையென்ன வெக்கம். கஷ்ட்டம். செய்து பார்க்க வேண்டியதுதான்.."

"எனக்கென்றால் ரோட்டிலை நின்று விக்கிறதுக்கு அவ்வளவு விருப்பமாயில்லை. வேறை ஏதாவது பிசினசிருந்தால் சொல்லு.."

"இஞ்சைபார் அருள். இப்பிடி எல்லாத்துக்கும் வெக்கப்பட்டால் எங்களாலை ஒன்றுமே செய்ய முடியாது. யாரைப் பார்த்து வெக்கப்படுகிறாய்? இந்த ஊர்ச் சனங்களைப் பார்த்தா? நாளைக்கு நீ பசியிலை கிடந்து வாடினா அவங்களா வந்து உனக்குச் சோறு போடப் போகிறான்கள்? தேவையில்லாமல் வெக்கப்படுறதை விட்டிடு. சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டுமென்றால் இப்பிடியெல்லாம் வெக்கப்படக் கூடாது. எங்களாலை முடியுமாவென்று பார்க்க வேண்டும். என்ன சொல்லுறாய்?"

"நீ சொல்லுறதிலையுமொரு நியாயமிருக்கு. வெக்கப்பட்டால் வியாபாரமொன்றும் செய்ய முடியாதுதான். இறங்கிப் பார்க்க வேண்டியதுதான். இப்ப என்ன செய்ய வேண்டுமென்று நீ நினைக்கிறாய்?"

"உனக்கொரு டசின், எனக்கொரு டசின் குடைகள் வாங்குவம். எம்பயர் ஸ்டேட் பில்டிங்கினொருபக்கம் நீ நின்று வில். மற்றப்பக்கம் நான் விக்கிறேன். ஆளுக்கு பத்துக் குடைகளை ஐந்து டொலர்களுக்கு வித்தாலும் ஒவ்வொருவருக்கும் முப்பது டொலர்களாவது மிஞ்சும். இரண்டு குடைகளும் மிச்சம். முழுவதையும் விக்க முடிஞ்சால் அது உண்மையிலேயே பெரிய சாதனை."

"இளங்கோ! நோ செல்லுறதைக் கேட்க நல்லாய்த்தானிருக்கு. நீ நினைக்கிறாயா விக்க முடியுமென்று. அப்பிடி வித்தால் உண்மையிலேயே நல்லதுதான். இருபது டொலர்களிலையிருந்து முப்பது டொலர்கள் லாபம். முயற்சி செய்யுறதாலை நாங்களொன்றும் இழக்கப் போகிறதில்லை. 'நதிங் டு லூஸ்'"

அதுவரை பொறுமையாக இருந்த வானம் இலேசாகத் துமிக்கத் தொடங்கியது. அதனை அவதானித்த இளங்கோ கூறினான்: "இனியும் மினக்கெடக் கூடாது. எங்கேயாவது 'ஹோல் சேல்' கடைகளேதாவது தெரிகிறதா பார்"

அவர்களுடைய நல்ல காலமோ என்னவோ அருகிலேயே சிறிய மொத்தவிலைக் கடையொன்று பிராட்வே வீதியில் தென்பட்டது. அங்கு சென்று இரு 'டசின்' குடைகளை டசின் இருபது டொலர்களுக்கு வாங்கினார்கள். குடைகளுடன் வெளியில் வந்தபோது நண்பர்களிருவருக்கும் ஓர் இனம் புரியாத மகிழ்சியேற்பட்டது. உலகப் புகழ்பெற்ற மாநகரில் குடை விற்பதை எண்ணுகையில் ஒருவித வியப்பும், ஆர்வமுமேற்பட்டன. நண்பர்களிருருவரும் குடைகளுடன் உலகப் புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை' வந்தடைந்தபொழுது அதுவரை பொறுமையாகத் துமித்துக் கொண்டிருந்த நகரத்து மழை நகரத்து வானிலிருந்து கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கி விட்டது. இடியும், மின்னலும் , காற்றும் கூடிய மழை. திடீர் மழையினை எதிர்பார்க்காத நகரத்துவாசிகள் சிலர் டாக்சிகளிலேறிப் பறந்தார்கள். பணத்தில் சிக்கனம் பிடிக்கும் சிலர் கட்டடங்களின் முகப்புகளின் கீழ் காத்து நின்றார்கள். மேலும் சிலரின் கவனம் குடை வியாபாரிகளின் பக்கம் திரும்பியது. இளங்கோவும் அருள்ராசாவும்"குடை ஒன்று ஐந்து டொலர்கள் மட்டுமே. குடை! குடை!" என்று கூவிக்கொண்டே தங்களது குடை வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். நியூயார்க் மாநகரில் நடைபாதையில் நின்று குடை விற்பதிலுமொரு 'திரில்' இருக்கத்தான் இருக்கிறதென்று எண்ணிய இளங்கோ "குடை. வலிமையான குடை. நல்ல குடை. ஓடி வாருங்கள். ஒருமுறை பரீட்சித்துப் பாருங்கள். குடை ஒன்று ஐந்து டொலர்கள் மட்டுமே!" என்று பலமாகக் கத்தி பாவனையாளர்களைத் தன்பக்கம் இழுப்பதற்கு முயன்றுகொண்டிருந்தான். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்திருந்தான். இவ்விதமாக நண்பர்களிருவரதும் குடை வியாபாரம் ஆரம்பத்தில் மந்தமாக ஆரம்பித்து விரைவிலேயே மழையின் அதிகரிப்புடன் அதிகரிக்கத் தொடங்கியது.

[தொடரும்]

அமெரிக்கா (கடந்தவை)....உள்ளே

ngiri2704@rogers.com


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner