ஹாலிவுட் சுவாரசியங்கள்
- RP. ராஜநாயஹம் -
 ரொனால்ட்
ரீகன் ஒன்றும் ஹாலிவுட்டில் சாதித்தவரல்ல. சில சாதாரணப் படங்களில் கதா நாயகன். பல
படங்களில் துணைப் பாத்திரங்கள் என்றாலும் ஒரு நடிகனின் அதிக பட்ச சாதனை
அவருடையதுதான். உலகின் முதல் மனிதன் என்ற அந்தஸ்துடைய அமெரிக்க ஜனாதிபதி பதவியை
அடைய முடிந்த ஒரே நடிகன் ரொனால்ட் ரீகன் மட்டுமே. ஹாலிவுட் படங்களில் நடித்ததை விட
T.V. சீரியல்களில் தான் ரீகன் மிக அதிகமாக நடித்தவர் என்பதும் முக்கியமான விஷயம்.
அவருடைய முதல் மனைவி ஜேன்வைமன், இரண்டாம் மனைவி நான்ஸி இருவருமே அவருக்கு ஜோடியாக
திரைப்படங்களில் நடித்தவர்கள் தான். ஜேன்வைமன் வெறுத்துப் போய் ரீகனை விவாகரத்து
செய்தபோது குறிப்பிட்ட காரணம் ‘ ரீகனின் தீவிர அரசியல் ஈடுபாடு ‘. ஆனால் இந்த
காரணமே அவரை அமெரிக்க ஜனாதிபதியாக உயர்த்தியது. இன்னொரு தனித்துவத்தையும் ரொனால்டு
ரீகனுக்கு ஏற்படுத்தி விட்டது. விவாகரத்து செய்யப்பட்ட ஒரே ஜனாதிபதி அமெரிக்க
சரித்திரத்தில் ரொனால்ட் ரீகன் மட்டுமே.
க்யூபா
அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கும் ‘ டென் கமாண்ட்மெண்ட்ஸ் ‘ படத்திற்கும் ஒரு
சம்பந்தம் உண்டு. அது வதந்தியா இல்லையா என்று தெரியவில்லை. டென் கமாண்ட்மெண்ட்ஸ்
படத்தில் ஒரு சிப்பாயாக காஸ்ட்ரோ நடித்தார். ஒரு எக்ஸ்ட்ராவாக காஸ்ட்ரோ நடித்தது
உண்மை தான் என்றால் ஒரு எக்ஸ்ட்ரா நடிகர் ஒரு நாட்டுக்கே அதிபரானார் என்பது
சரித்திர ஆச்சரியம். ஆனால் ஷெர்லி மக்ளீன் ( ‘ அபார்ட்மெண்ட்’ படத்தில் ஜாக் லெமன்
உடன் நடித்தவர். ‘ வாரன் பீட்டி ‘ யின் உடன் பிறந்த சகோதரி ) எழுதிய ‘ மை லக்கி
ஸ்டார் ‘ என்ற நூலில் காஸ்ட்ரோவிடம் ‘அந்தப் படத்தில் நீங்கள் extra வாக நடித்தது
உண்மைதானா?‘ என்று தான் கேட்டபோது காஸ்ட்ரோ தெளிவில்லாத குழப்பமான பதிலைச்
சொன்னதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நேரடியான கேள்வி. ‘ஆம்’ , ‘இல்லை’ என்று
காஸ்ட்ரோ சொல்லாமல் ‘புரிந்து கொள்ள முடியாத பதிலை’ ஏன் சொல்ல வேண்டும். IT CAN’T
ALL BE SMOKE WITHOUT FIRE.
இரண்டாம்
உலகப்போரைப் பற்றிய ‘ த லாங்கஸ்ட் டே’ படம் தயாரானபோது போரில் ஜெனரல் ஐசனோவராக
பங்கேற்றிருந்தவர் அமெரிக்க அதிபர் ஐசனோவராகியிருந்தார். அமெரிக்க அதிபராக அவருக்கு
எட்டாவது ஆண்டு.. அப்போது ( 1953 ஜனவரி முதல் 1962 ஜனவரி வரை ஐசனோவர் அமெரிக்க
அதிபர் ) ஜெனரல் ஐசனோவராக அதிபர் ஐசனோவரையே நடிக்க வைக்கலாமா என்று ஒரு யோசனை
படக்குழுவுக்குத் தோன்றியது. ‘ நானே நானாக நடிக்கிறேனே ‘ என்று ரொம்ப ஆர்வத்துடன்
அமெரிக்க அதிபர் ஐசனோவரே ஹாலிவுட் படத்தில் நடிக்க ‘சான்ஸ்’ கேட்ட அதிசயம்
நடந்திருக்கிறது. பலத்த ஆலோசனைக்குப் பிறகு ‘ஜனாதிபதி ஐசனோவரை இரண்டாம் உலகப்போர்
காலத்து ஜெனரல் ஐசனோவராக மேக்கப் மூலமாக மாற்றுவது இயலாத காரியம் ‘ என்று முடிவு
எடுக்கப்பட்டு ஐசனோவராக நடிக்கிற ‘சான்ஸ்’ நிராகரிக்கப்பட்டுவிட்டது. சினிமாவில்
நடிக்க ஒரு யோகம் வேண்டுமே ! POOR EISEN HOWER ! 1962 ம் ஆண்டு வெளியான ‘ த
லாங்கஸ்ட் டே’ படத்தில் ஹென்ரி க்ரேஸ் என்ற ஆர்ட் டைரக்டர் ஜெனரல் ஐசனோவராக
நடித்திருந்தார். ஹென்ரி க்ரேஸ் நடிகரல்ல என்றாலும் ஐசனோவரைப் போலவே இருந்தார்
என்பதால் அந்தப் பாத்திரம் அவருக்கு கிடைத்தது.
‘
ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தில் இதற்கு எதிர்மறையான
விசித்திரம் நிகழ்ந்தது. இந்தப் படத்தில் நடிகர் டாம் ஹேங்க்ஸ் உடன் ஜான் கென்னடி,
லிண்டன் பி.ஜான்சன், நிக்சன் ஆகிய ஜனாதிபதிகள் நடித்த காட்சிகள் இடம் பெற்றன.
1994ம் ஆண்டு அந்தப் படம் வெளிவந்த நேரத்தில் நிக்சனும் மறைந்து சில மாதங்கள்
ஆகியிருந்தது. கதை நாயகன் ஃபாரஸ்ட் கம்ப் மந்த நிலையான, புத்திசாலித்தனம் மிகக்
குறைந்த, குழந்தை மன நிலை படைத்தவன். ஆனால் தற்செயலாக அமெரிக்காவின் மிக முக்கிய
பிரபலங்கள் சிலரை, அவர்களின் முக்கியத்துவத்தை அறியாமலே அவன் வாழ்வில்
சந்திக்கிறான். அவனுடன் ஜான் கென்னடி, லிண்டன் ஜான்சன், நிக்சன் முதலியோர் அமெரிக்க
அதிபராகவே பங்கு பெறும் காட்சிகள் மிகுந்த சுவாரசியமானவை.
ஜோர்டான் நாட்டில் ஒரு ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது அந்தப்படம்
ஜோர்டான் நாட்டின் சரித்திரத்தை மாற்றப் போகிறது என்று எவரும்
அறிந்திருக்கமாட்டார்கள். ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ என்ற அந்தப் படத்தில் நடிகர்
பீட்டர் ஒட்டூல் லாரன்ஸாக நடித்திருந்தார். ‘ஹன்ட்ரட் கிரேட்டஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்’
பட்டியலில் முதல் ரேங்க் அமெரிக்க ஃபில்ம் இன்ஸ்ட்டிடூட்டால் பீட்டர் ஒட்டூலுக்கு
கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் இந்தப்
பெருமையை அவ்ருக்கு பெற்றுத் தந்தது.
இந்தப் படப்பிடிப்பில் டோனி கார்டனர் என்ற பெண் ஸ்விட்ச் போர்ட் ஆபரேட்டராக பணி
புரிந்து கொண்டிருந்தார். ஜோர்டான் மன்னர் ஹூசேன் இந்த வெள்ளைக்காரப் பெண் மீது
தீவிர காதல் கொள்ள ஆரம்பித்து திருமணமும் செய்து கொண்டார். இன்றைய ஜோர்டான் மன்னர்
அப்துல்லாவின் தாயார் தான் டோனி கார்டனர். லாரன்ஸ் ஆஃப் அரேபியா 1962இல்
வெளிவந்தது. 1962க்கு பிற்பட்ட ஜோர்டான் சரித்திரத்தை இந்தப் படத்தின் ‘தயாரிப்பு’
மாற்றி மன்னருக்கு பட்டத்து வாரிசை ஏற்படுத்திவிட்டது.
ஆலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளிவந்த 2 படங்கள் ஆலிவர் ஸ்டோன் இயக்கி 1991ல்
வெளிவந்த ஜே.எப்.கே ஜான் கென்னடியின் கொலை மர்மங்களை மறு விசாரணை செய்த படம்.
ஆலிவர் ஸ்டோன் இயக்கி 1995ல் வெளிவந்த ‘ நிக்சன் ‘ படத்தில் ஆந்தனி ஹாப்கின்ஸ்
ரிச்சர்ட் நிக்சனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட்
ரீகன், ஜார்ஜ் புஷ் சீனியர் ஆகிய அமெரிக்க அதிபர்கள் இடம் பெற்ற காட்சிகள் உள்ளன.
ஜே.எப்.கே யில் ஐசனோவர், லிண்டன் பி.ஜான்சன், நிக்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
RP. ராஜ நாயஹம் (திருப்பூர்)
rprajanayahem@gmail.com |