அறிவோர் கூடல் - பொ. கருணாகரமூர்த்தியுடனான
இலக்கியச் சந்திப்பு - சு.
குணேஸ்வரன் -
இலக்கியச்சோலை
து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் அறிவோர் கூடல் 14.01.2011
வெள்ளிக்கிழமை பி. 4.00 மணிக்கு பருத்தித்துறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவராகிய பொ.
கருணாகரமூர்த்தியுடனான (ஜேர்மனி) இலக்கியச் சந்திப்பு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் தொடக்கவுரையை து. குலசிங்கம் அவர்கள்
நிகழ்த்தினார். அவர் தனதுரையில் இன்று வழக்கிழந்து வருகின்ற எமது
கிராமியச் சொற்கள் பற்றி விரிவாகப் பேசினார். கருணாகரமூர்த்தி தனது
படைப்புக்களில் இவ்வாறான கிராமியச் சொற்களை அநாயாசமாகவும்> புதிய
சொற்களை கதாமாந்தர்களின் வாழ்வியலுக்கு ஏற்பவும் மிக இயல்பாகக்
கையாள்வதை எடுத்துக் கூறினார். தமிழ்ப்படைப்புலகத்தில் கவனத்திற்குரிய
படைப்பாளியாக தன்னை நிலைநிறுத்திவரும் கருணாகரமூர்த்தியின் கதைகளில்
இருந்து சிலவற்றையும் எடுத்துக் காட்டிப்பேசினார்.
தொடர்ந்து கருணாகரமூர்த்தி பற்றிய அறிமுகவுரையை சு. குணேஸ்வரன்
நிகழ்த்தினார். ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற மூன்று குறுநாவல்களைக்
கொண்ட தொகுதியுடன் தமிழத்திலும் ஈழத்திலும் கவனத்திற்குரிய
படைப்பாளியாக மிளிர்ந்த கருணாகரமூர்த்தி கதைசொல்லும் பாணி
நயக்கத்தக்கதாகவும்> புலம்பெயர் சமூகம் எதிர்கொள்கின்ற வாழ்க்கை
முரண்களையும் பண்பாட்டு நெருக்குவாரங்களையும் எடுத்துக் காட்டுவதில்
முதன்மை பெறுகின்றார் என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘பதுங்குகுழி’ என்ற
சிறுகதைத் தொகுப்பு மிக எளிமையாக வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில்
எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் நூலை வெளியிட்டு வைத்தார்.
தொடர்ந்து கருணாகரமூர்த்தி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தனது
எழுத்துலக ஆரம்பம்> புலம்பெயர்ந்த இளைய தலைமுறைப் பிள்ளைகளின்
தமிழ்மொழிப் பயில்கை> ஐரோப்பிய சமூகத்திற்கும் தமிழர் சமூகத்திற்கும்
இடையில் இருக்கும் பண்பாட்டு நிலை> புலம்பெயர்ந்தவர்களின் எழுத்து
முயற்சிகள் ஆகியன குறித்துப் பேசினார்.
உரையின் இறுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றது. நன்றியுரையை எழுத்தாளர்
ச. இராகவன் நிகழ்த்தினார்.
s kuneswaran <kuneswaran@gmail.com>
பேராசிரியர்
மா. கருணாநிதி அவர்களுக்கு கெளரவிப்பு விழா
- சு. குணேஸ்வரன் -
பேராசிரியர்
மா. கருணாநிதி அவர்கள் ‘பேராசிரியர்’ தகுதிநிலையை அடைந்தமையிட்டு அவரது
கிராமத்தில் கெளரவிப்பு நிகழ்வு ஒன்று மிகச் சிறப்பாக
முன்னெடுக்கப்பட்டது. அல்வாய் ஆலடிப்பிள்ளையார் கோயில் முன்றலில்
22.01.2011 மாலை 2.30 மணிக்கு இடம்பெற்ற மேற்படி நிகழ்வு வற்றாப்பளை
மகாவித்தியாலய அதிபர் திரு சி. ராஜா தலைமையில் இடம்பெற்றது.
முன்னதாக விழா நாயகனை மாலையிட்டு அழைத்து வந்தனர். தொடர்ந்து
விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இறைவணக்கப்பாடலை செல்விகள் சமுத்திரா ஜீவானந்தன், யதுர்ஷா நவரத்தினராசா
ஆகியோரும் வரவேற்புரையினை ஆசிரியர் க.தர்மதேவன் அவர்களும் ஆசியுரையை
ஆலடிப்பிள்ளையார் ஆலய குரு அவர்களும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து பாராட்டுரைகள் இடம்பெற்றன. ஓய்வுபெற்ற அதிபர் திரு தா.
வீரசிங்கம், GTZ நிபுணத்துவ ஆலோசகர் சுந்தரம் டிவகலாலா, யாழ்
பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் ச.
சத்தியசீலன், யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை பேராசிரியர் மா
சின்னத்தம்பி, கரவெட்டிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் த. தவேந்திரராஜா,
அகவிழி ஆசிரியர் தெ. மதுசூதனன், வவுனியா பட்டப்பின்படிப்பு கல்விநெறி
இணைப்பாளர் பேராசிரியர் க. சின்னத்தம்பி, யாழ் பல்கலைக்கழக
கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி ஆகியோர்
பாராட்டுரைகளை நிகழ்த்தினர்.
நிகழ்வில் ‘கல்விச் சமூகவியல்’ என்னும்
பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களின் நூல் அறிமுகமும் இடம்பெற்றது.
அதனை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன்
நிகழ்த்தினார்.
தொடர்ந்து விழா நாயகன் கெளரவிப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து
பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் ஏற்புரையினை நிகழ்த்தினார்.
ஏற்புரையின் முன்னதாக தான் இந்த நிலைக்கு உயர்வடைவதற்கு கொடிக்கால்களாக
இருந்த தன் ஆசிரியர் மற்றும் உறவுகளை மாலையிட்டு பொன்னாடை போர்த்திக்
கெளரவித்தார். தொடர்ந்து உரை நிகழ்த்தினார். அவ்வுரையில் தன்
இளமைக்காலக் கல்வி, தன் தொழில், பட்டப்படிப்பு நிலைகள், இளைய
சந்ததியினர் கருத்திற் கொள்ளவேண்டிய அம்சங்கள், கிராம மக்களது அன்பும்
ஒற்றுமையும் உயர்வும்; ஆகியன குறித்துப் பேசினார்.
நன்றியுரையினை திரு மா. ரவிரதன் நிகழ்த்தினார். உறவுகளும் கல்விச்
சமூகமும் பெருமளவாகத் திரண்டிருந்த மேற்படி நிகழ்வு உற்சாகத்தையும்
பெருமிதத்தையும் தந்தது.
நிகழ்வின் காட்சிகள் சில ....
s kuneswaran <kuneswaran@gmail.com>
|