ஈரோஸ்
- ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு - அமைப்பின் ஸ்தாபகரான 'இரட்ணா' என
அழைக்கப்பட்ட இளையதம்பி இரத்தினசபாபதி தனது அறுபத்து எட்டாவது வயதில்
இலண்டன் மருத்துவமனையொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (11 நவம்பர்
2006) அன்று காலமானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 1938இல்
யாழ்மாவட்டத்திலுள்ள இணுவிலில் பிறந்த இரத்தினசபாபதி ஒரு
மார்க்சியவாதியாவார். இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப்
போராட்டத்துடன் ஈரோஸ் அமைப்பின் மூலம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
பத்திரிகைத் துறையிலும் மிகுந்த ஆர்வமுள்ளவராக விளங்கினார்.
எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் வெளிவந்த
'தர்க்கீகம்' இதற்குச் சான்று. பின்னர் இதனையொட்டிய வடிவமைப்புடனேயே
'திசை' மற்றும் 'சரிநிகர்' ஆகிய பத்திரிகைகள் பின்னர் வெளிவந்தன.
தீவிர மார்க்சியவாதியான இவர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்
போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசத்தை நோக்கிய
போராட்டமாகவும் இருக்க வேண்டுமென எண்ணியவர். ஈழவிடுதலைப்
போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு விடுதலை அமைப்புகளின்
உறுப்பினர்கள் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முக்கிய
பிரிவொன்றிடமிருந்து ஆயுதப் பயிற்சி பெறக் காரணமாகவிருந்தார்.
1975இல் இலண்டனில் இவரால் ஸ்தாபிக்கப்பட்ட 'ஈழ மாணவர் புரட்சிகர
அமைப்பில் (ஈரோஸ்)' கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பலர்
இணைந்திருந்தனர். அத்துடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லீம
இனத்தவர்களையும் தம் அமைப்பில் சேர்ப்பதற்கு முதன் முதலில் அதிக
அக்கறை எடுத்துக் கொண்ட அமைப்பாகவும் ஈரோஸ் விளங்கியது. 1983ற்குப்
பிற்பட்ட காலகட்டத்தில் தென்னிலங்கையில் சில தாக்குதல்
நடவடிக்கைக்களை ஈரோஸ் நடாத்தியதன் விளைவாக இவ்வமைப்பினைச் சிலர்
'தூரத்து இடி முழக்கம்' என்னும் பட்டப் பெயரில் செல்லமாக
அழைத்ததுமுண்டு. - குரீஇ -தமிழ் தகவல் நடுவ அறிக்கை (அனுப்பியவர்: வசந்தன்:
vvishvan@yahoo.co.uk).உள்ளே





