உலக இருதய தினம்
செப்டம்பர் 26, 2010
மாரடைப்பு தடுப்பது உங்கள் கைகளில்
- 'டாக்டர்' எம்.கே.முருகானந்தன் -
இன்று 26.09.2010 திகதி உலக இருதய தினமாகும். பத்தாவது
தடவையாக இத் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஓவ்வொரு வருடமும்
செப்டம்பர் மாத இறுதி ஞாயிறு தினத்தில் இது அனுஷ்டிக்கப்படுகிறது.
உலக இருதய சங்கத்தின்
தூண்டுதலினால் முதன் முதலாக 2000 வருடத்தின் செப்டம்பர் மாதத்தில்
இத் தினம் கொண்டாடப்பட்டது. இருதய நோய்களாலும் பக்கவாதத்தாலும்
ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு இவ்வருடமும் முயலுமாறு
அரசாங்கங்களையும் உடல்நலத்துறை சார்ந்த அறிஞர்களையும், சகல தொழில்
வழங்குனர்களையும், தனிப்பட்ட மனிதர்களையும் உலக இருதய சங்கம் அழைத்திருக்கிறது.
இருதயத்திற்காக வீட்டில்
மட்டுமின்றி தொழில் புரியும் இடங்களிலும் முயற்சியுங்கள்
இருதயத்திற்கு நல்ல செய்தி
இருதயத்திற்கு நல்ல செய்தியை
வழங்கும் இடமாக இவ் வருடம் தொழில் புரியும் இடங்களை
முன்னிலைப்படுத்துகிறது உலக இருதய சங்கம். தொழில் வழங்குவோர்,
தொழில் புரிவோர் மற்றும் சமூகத்தினருக்கு நன்மை செய்யும் விதத்தில்
நீண்ட கால அடிப்படையில் வாழ்க்கை முறை மாற்றங்களை தொழிலகங்களிலும்
ஏற்படுத்துவதே இவ்வருடத்தின் குறிக்கோளாக இருக்கிறது. இந்த உலக இருதய நாளிலே
ஒவ்வொருவரும் தனது இருதயத்தின் நலனுக்கான பொறுப்பைத் தானே ஏற்றுக்
கொண்டு, ‘நான் எனது இருதயத்துடன் வேலை செய்வேன்’ என உறுதி மொழி
எடுத்துக் கொள்ள வேண்டும்.
வருமுன் காப்போம்
வழமையான வைத்திய முறைகள் இன்று
கேள்விக்குரியதாகிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். வைத்தியர் சிகிச்சை
முறைகளைச் சொல்லுவதும் நோயாளிகள் அவற்றைக் கேட்டு நடப்பதுமான
வழமையான முறை வெற்றியளிக்கவில்லை. இது நோயாளர் இறப்பு விகிதத்தை
போதியளவு குறைக்கவில்லை.
- நோய் வராமல் தடுப்பதும்,
- நோயை நேர காலத்துடன் இனங்காண்பதும்,
- ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை ஆரம்பிப்பதும்
அவசியமாகும்.
இதனை நோயாளரின் முழுமையான ஒத்துழைப்புடனும் பங்களிப்பினோடுமே
செயற்படுத்த முடியும். நோயாளிகள் தமது முக்கிய பங்களிப்பை
உணர்ந்து, ஏற்று மருத்துவ உதவியுடன் செயற்பட்டால் தமது
ஆரோக்கியத்தை நன்கு பேண முடியும் என்பது இப்பொழுது நன்கு
உணரப்படுகிறது.
எனவே உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பும் முக்கியமானது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதன்
மூலம், இதய நோயையும் பக்க வாதத்தையும் தடுப்பதில் இத்தகைய
அணுகுமுறையே நல்ல பலனை அளிக்க முடியும்.
மனிதனைப் பாதிக்கின்ற பல்வேறு
நோய்களில் இதயநோய் மிகவும் முக்கியமான இடத்தைப் ஏன் பிடிக்கிறது
என்பதை முதலில் புரிந்து கொள்வோம். காரணங்கள் பல உள்ளன.
இருதய நோய்கள் ஏன் முக்கியமானது
- மனிதர்களின் மரணத்திற்கான
முதற்காரணியாக இருக்கிறது
- எதிர்பாராது திடிரென தாக்கும் நோயாகவும் இருக்கிறது.
- அதிகம் பயமுறுத்தும் நோயாக இருக்கிறது.
- மனிதர்கள் தமது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை
மாற்றுவதற்குத் தூண்டக் கூடிய காரணியாகவும் இருக்கிறது.
இலங்கையில் நிகழும்
மரணங்களுக்கான காரணிகளில் முதலாவதாக இருப்பது இருதய நோயாகும்.
இலங்கையில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் இன்று இதுவே முதற்
காரணியாக இருக்கிறது.
வீட்டில்
நீங்கள் ஆரோக்கியமாக
வாழ்வதற்குச் செய்ய வேண்டியவை யாவை?
உணவு-
உடல்
நலத்திற்கு ஏதுவான உணவுகளை உட்கொள்ளுங்கள். தினமும் 5 பரிமாறலுக்கு
குறையாதளவு பழவகைகளையும் காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக்
கொள்ளுங்கள். நிரம்பிய கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்ப்பது
அவசியம். அதிக உப்புள்ள உணவுகளையும் தவிருங்கள். முக்கிய
கடையுணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அத்தகையவையே.
உடல் உழைப்பு:-
உற்சாகமாகவும்
சுறுசுறுப்பாகவும் செயற்படுங்கள். அதில் உங்கள் இருதயத்தையும்
இணைத்துக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உங்கள்
உடலுக்கு வேலை கொடுக்கும் பணிகளில் அல்லது உடற்பயிற்சியில் தவறாது
ஈடுபடுங்கள்.
எடை:-
உங்கள் எடையைக் கவனத்தில் எடுங்கள். அதீத எடை உயர் இரத்த
அழுத்தத்தைக் கொண்டுவரும். அதே நேரம் ஒருவர் தனது அதீத எடையைக்
குறைத்தால் இரத்த அழுத்தம் குறையும்.
புகைத்தல்:-
புகைத்தலைக்
கைவிடுங்கள். நீங்கள் அதனைச் செய்தால் ஒருவருட காலத்திற்குள்ளேயே
மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் உங்களுக்கு அரைமடங்கு
குறைந்துவிடும்.
மது:-
மது
அருந்துவராயின் அதைக் கைவிடுங்கள் அல்லது அதன் அளவை நன்கு
குறையுங்கள். அதிகமாக உட்கொள்ளும் மது உங்கள் எடையை
அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். உயர் இரத்த
அழுத்தம் பக்கவாதத்தை கொண்டு வருவதற்கான முதற் காரணி என்பதுடன்
மாரடைப்பைக் கொண்டுவருவதற்கு ஏதுவான காரணி என்பதை அறிவீர்கள்.
மருத்துவரை சந்தியுங்கள்:-
“எனக்கு எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லை” என எண்ணி வாழாதிருக்க
வேண்டாம். மனிதர்களுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் உயர் இரத்த
அழுத்தம், நீரிழிவு, குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு போன்றவை
நோய் முற்றும் வரை வெளிப்படையான அறிகுறிகள் எவற்றையும்
காட்டுவதில்லை.
எனவே ஒழுங்கு ரீதியில் உங்கள்
மருத்துவரை அணுகி
- பிரஷர், கொலஸ்டரோல் மற்றும் சீனி அளவை அறிந்து
கொள்ளுங்கள்.
- அத்துடன் உங்கள் எடையையும், வயிற்றின் சுற்றளவையும் அவர்
அளந்து பார்த்து உங்களுக்கு இருதயநோய் வருவதற்கான சாத்தியம்
இருக்கிறதா என்பதைக் கண்டறிவார்.
- இவை அதிகமாக இருந்தால் அவற்றைச் சரியான அளவில்
குறைப்பதற்கு முயல வேண்டும்.
தொழில் தளத்தில்
இருதய நலத்தைப் பேணும்
நடவடிக்கைகளை வீட்டில் எடுத்தால் மட்டும்போதாது, உங்கள்
வேலைத்தளத்திற்கும் விஸ்தரியுங்கள்.
புகைக்காத வேலைத்தளம்:- உங்கள்
வேலைத்தளம் புகைத்தலுக்கு தடைவிதித்திருக்கிறதா எனப் பாருங்கள்.
இல்லையேல் அது புகைத்தில் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்குவதற்கு முழு
முயற்சி எடுங்கள்.
உடலுக்கு வேலை:-
உங்கள் தொழில்
உடல் உழைப்பு அற்றதாயின் அங்கு உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கக்
கூடிய வழிமுறைகளை கண்டுபிடியுங்கள்.
- லிப்டைத் தவிர்த்து படிகளைப் பயன்படுத்துங்கள்.
- மதிய உணவை மேசையில் உட்கார்ந்தபடி உண்ணாமல், வெளியே
நடந்து சென்று பெற முடியுமானால் அதைச் செய்யுங்கள்.
- வேலைக்குப் போவதற்கு பஸ், கார் போன்றவற்றுக்குப் பதிலாக
சைக்கிளைப் பயன்படுத்த முடியுமானால் சிறந்தது.
உணவு:-
உங்கள் உணவு உள்ளக 'கன்ரீனி'ல் பெறப்படுகிறது என்றால் அங்கு
ஆராக்கியமான உணவு கிடைக்க வழிசெய்ய வேண்டுங்கள். முடியாவிட்டால்
நல்லாரோக்கிய உணவை கொடுக்கும் நல்ல உணவகத்தைத் தேடுங்கள். அதன்
மூலம் உடலாரோக்கியத்திற்கான நடையும், நல்ல காற்றும் கிடைக்கும்
அல்லவா?
ஓய்வு:-
தொடர்ந்து ஒரே விதமான வேலையெனில் இடையில் இரண்டு தடவைகளாவது 5
நிமிடங்கள் ஓய்வு பெற்று உங்கள் அங்கங்களை நீட்டி நிமிர்த்தி
அவற்றைச் சுறுசுறுப்பாக்குங்கள்.
உங்கள் இருதயம் உங்கள்
பொறுப்பில் உள்ளது. அதனைச் சுறுசுறுப்பாக நீண்ட காலத்திற்கு
செயற்பட வைப்பதோ, அன்றி அதன் செயற்பாட்டிற்கு ஊறு விழைவித்து
நோயில் ஆழ்த்துவதோ உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது என்பதை
மறந்துவிடாதீர்கள்.
உளநெருக்கீடு
உங்கள் வேலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்யுங்கள்.
மனப்பதற்றத்திற்கும், நெருக்கீட்டிற்கும் (Stress) மாரடைப்புடன்
தொடர்பு இருப்பதாக சிலஆய்வுகள் கூறுகின்றன. வேலைத்தளத்தில்
நெருக்கீடுகள் இருக்குமாயின் நீக்க முயலுங்கள்.
Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://stethinkural.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html
kathirmuruga@gmail.com