பதிவுகள் கவிதைகள்!
கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமியின் )
கவிதைகள் சில!
-
ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறுகதை, கட்டுரை, கவிதை,
நாவல், மொழிபெயர்ப்பு, நாவல், சிறுவர் இலக்கியம், உளவியல் என இலக்கியத்தின் பல்வேறு
பிரிவுகளிலும் அளப்பரிய பங்காற்றியவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. இதுவரையில் அவரது
படைப்புகளில் 'மதமாற்றம்' (நாடகம்), 'வெற்றியின் இரகசியங்கள்' (உளவியல்) ஆகிய
நூல்களே வெளிவந்திருந்தாலும், அவரது படைப்புகள் பல பலவேறு சஞ்சிகைகள், இணைய இதழ்கள்
, தொகுப்புகள் பலவற்றில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும்
தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம். அ.ந.கந்தசாமியின்
படைப்புகளை வைத்திருப்பவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு அனுப்பி வைத்தால்
அவர்களுக்கு நன்றியுடையவர்களாகவிருப்போம். அத்துடன் அவை அவர்களது விபரங்களுடன்
'பதிவுகள்' இணைய இதழிலும் பிரசுரம் செய்யப்படும். -
ரவீந்திரர்!
- அ.ந.கந்தசாமி -
இந்து தேசந் தனில் கவிஎனும்
முந்து வரகவி காளி தாசனின்
இந்த நாளின் அவதார மோவென
வந்தனன் ரவீந்திர நாத தாகுரே.
வெள்ளி வெண்சிகை வெண்ணிறத் தாடியும்
கள்ளமிற் கருணை காலும் கண்களும்
விள்ளுதற் கரிய கவிதை வேகம்
துள்ளிடும் உள்ளமும் கொண்டனன் தாகுரே.
வங்க நாடு வழங்கிய வண்கவி
எங்கணும் புகழெய்திட ஏதமில்
துங்கமார் கீதாஞ்சலியாம் துய்ய நூல
மங்கிடா தொளிர்தர யாத்தளித் தனனே.
கவிதை யாகுக காதை யாகுக
விவித நாடக நூலு மாகுக
புவியி லெவரும் புகழுமா றிவன்
கவிஞர் மன்னவன் செய்தளித் தனனே.
பாரத தத்தின் இன்னிசை பயின்றிடும்
வீர தேசிய கீதமும் தந்தனன்
யாரு மெச்சிடும் சாந்தி நிகேதனப்
பேரு டைக்கலைக் கோவிலும் கண்டனன்.
முந்தைநாள் முனி போலொரு தோற்றமும்
நந்தமிழ் கவி நாட்டமும் தனது
சொந்த நாட்டினில் சோர்விலா அன்பும்கை
வந்தவன் இவன்போல் வேறு யார்ஆரோ.
திறமுடைக் கவி எனில் அத்திறம்
பிறந்த நாடு பேசிடில் போதுமோ
பிறபுலத்தும் பேரெய்தி வாழ்ந்தவோர்
குறைவிலாக் கவி மன்னவனாரோ
பலபு லத்துக் கவித்திற னாய்ந்தோர்
உலக நோபல் பரிசைத் தருவோர்
கலைகள் வல்ல கவிஎனக் கொண்டு
தலையதாமப் பரிசையும் தந்தார்.
காளி தாசக் கவியர சோச்சினால்
ஊழி தோறும் தன்புகல் நாட்டிட
வாழி ரவீந்திரன் நாமமும் வையகம்
வாழும் நாள்வரை வாழிய வாழியவே!
- ஸ்ரீலங்கா ; பெப்ருவரி 1961.-
கனல்!
அ.ந.கந்தசாமி
சண்ட மாருதம் எழுந்ததடா - இந்தச்
சகமெலாம் சூறையில் சுழன்றதடா
அண்டங்கள் யாவுமே நடுங்குதடா - மேலே
ஆகாய மேகமும் அலைந்ததடா.
எங்கும் கனல்தோன்றி மூடியதே - காணும்
எட்டுத்திசையும் எரியுதடா,
பொங்கும் நெருப்பெங்கும் பாய்ந்ததடா - யாவும்
பொசுங்கிப் பொசுங்கியே மாயுதடா!
எங்கிருந்தோ இதெழுந்ததடா - என்று
ஏங்கிநானும் எங்கணும் பார்த்துச் சென்றேன்
அங்கொரு பாட்டாளி மூச்சுவிட்டான் - பெரு
மூச்சினில் தோன்றிய சூறையடா!
தீயிது எங்கிருந் தோங்குதடா - என்று
திக்குகள் எங்குமே பார்த்துச் சென்றேன்
பேயிது என்றான் பாட்டாளி ஓர்மகன்
பெருநகை செய்திடக் கண்டேனடா.
- ஈழகேசரி - 7.11.1943. -
நாட்டுப் பற்று!
அ.ந.கந்தசாமி -
யான்பிறந்த பொன்னாடு என்று வாழ்வினி லெண்ணாத
மானமற்ற நடைப்பிணம் மானிலத்தில் உண்டுகொல்?
எனதுநாடு எனது தேசம் எனதுமொழியென் றெண்ணிலா
'மனசு' அற்ற மானமற்ற மனிதன் என்ன மனிதனோ.
வாயகன்று ஊரெல்லாநம் வருத்தமோ டலைந்துதன்
தாயகத்து மண்ணிலே காலெடுத்து வைக்கையில்
நேயமூறி நெஞ்சினில் நிறைய இன்பவெறிகொளா
பாவி மகனாம் உள்ளனோ பாருமையா நும்மிடை.
நாடிநாளப் பாய்ச்சலில் நாட்டுவளர்ச்சி அற்றவன்
கோடிச்செல்வன் ஆகிலென்? குறைவில் பட்டம் சூட்டிலென்?
ஓடிப்பதவி உயரிலென்? உவந்துஇதய ஊற்றினால்
பாடியவனை இசைப்பவர் பாரில் யாரூம் இல்லையே.
சுரணையற்ற சுயநலப் பேடிதன் மதிப்பிழந்து
இரணை மரண மெய்துவான் இருகிலத்தும் மக்கள்தம்
அரியநிணவு தன்னிலும் அவனுக்காக அழுபவர்
அருமைபாடி ஏத்துவார் ஆருமில்லை இல்லையே.
- ஸ்ரீலங்கா அக்டோபர் 1955 - |