பதிவுகள் முகப்பு

எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைவு!

விவரங்கள்
Administrator
அரசியல்
27 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியையும், இலங்கை அரசியலில் நன்கறியப்பட்ட பொதுவுடமைவாதியான  கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் மனைவியாருமான  திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம்  மறைந்த செய்தியினை முகநூல் தாங்கி வந்தது.  இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயற்பட்ட மீரான் வாத்தியின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  முதுமைக்காலத்திலும் சத்தியமனை நூலகச் செயற்பாடுகளில் இயங்கிக்கொண்டிருந்தவர். நாட்டின் பிரதமர் உட்படப் பலர் தம் யாழ் மாவட்டப் பயணங்களின்போது செல்லுமிடங்களில் ஒன்றாகச் சத்தியமனை நூலகம்  அமைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இவரது அந்நூலகச் செயற்பாடுகளே.   

இவர் பாடசாலைக் காலத்திலேயே எழுத்திலார்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர். பாலபண்டிதரும் கூட.  தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்.  இலங்கையிலிருந்து வெளியாகும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து பணியாற்றியவர்.  

மேலும் படிக்க ...

கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) நூல் , நல்லூர் ராஜதானி பற்றிய கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டடக்கலைஞர்  இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு  (1621 - 1948) ' மிக முக்கியமானதொரு வரலாற்று ஆவணம்.  493 பக்கங்களைக் கொண்ட இநந நூலை  குமரன், எழுநா,ஆதிரை  பதிப்பகங்கள்  இணைந்து வெளியிட்டுள்ளன. மிகுந்த உழைப்பின் அறுவடை இவ்வாய்வு நூல்.  அதற்காக நூலாசிரியர் மயூரநாதனுக்கும், வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் அதன் பின்னணியில் இருந்தவர்களுக்கும் நாம் அனைவரும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்.  நூலைபெறுவதற்கு உதவிய ஓராயம் அமைப்பினருக்கும் நன்றி. 

தமிழரசர் காலத்து நல்லூர் தொடக்கம், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்  காலகட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரம் பற்றிய,  சரித்திரக் குறிப்புகள், நில வரைபடங்கள் , வெளிக்கள ஆய்வுத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மயூரநாதன் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலை உருவாக்க மயூரநாதன் பாவித்துள்ள ஆதாரங்கள் மேலும் பலரின் ஆய்வுகளுக்கு அத்திவாரங்களாக உதவக்கூடியவை. 

இந்நூலின் நல்லூர் பற்றிய பகுதியில் மயூரநாதன் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'  நூலையும் கவனத்திலெடுத்து தன் கருத்துகளை  முன் வைத்திருக்கின்றார். அதற்காக என் நன்றி அவருக்குண்டு.

மேலும் படிக்க ...

திராவிட இலக்கிய கர்த்தாக்களில் பாரதிதாசன் - சந்திரகெளரி சிவபாலன்

விவரங்கள்
- சந்திரகெளரி சிவபாலன்
இலக்கியம்
23 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை
தமிழ்த் தொண்டன் பாரதிதாசன் செத்த துண்டோ

திராவிட இலக்கிய கர்த்தாக்களினால் படைக்கப்பட்ட இலக்கியங்களே திராவிட இலக்கியங்கள். இங்கு திராவிடம் என்றால் என்ன? திராவிடர் என்பவர்கள் யார்? என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வின்படி "திருவிடர்கள்" அதாவது திரு இடத்தில் வசிப்பவர்கள் என்கின்ற ஒரு கருத்தைச் சொல்லுகின்றார். உதாரணமாக திருத்தணி, திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருஅனந்தபுரம், திருப்பதி இவ்வாறு தமிழர்களின் மிகச் சிறந்த ஊர்கள், இடங்களின் பெயர்களுக்கு முன்பு திரு என்பதை சேர்ப்பது வழக்கம். ஏன் மதிப்புறு பேரறிஞர்களுக்கும் திரு என்னும் அடைமொழி வைப்பது வழக்கமே. உதாரணமாகத் திருவள்ளுவரை நாம் கூறக்கூடியதாக இருக்கிறது. அதேபோல் திரு, திருமதி போடுகின்ற வழக்கம் எல்லாம் இருக்கிறது. ஆனால், இது முழுக்க முழுக்க தமிழ்ச் சொல். ஆகவே தமிழ் அறிஞர்கள் வசித்த இடம் திருவிடம். அதனால், அவர்கள் திருவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருவிடர்கள் திராவிடர்கள் என்று வந்தது என்று ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வினை ஊடகவியலாளர் கே. எம். விஸ்வநாத், அவர்கள் எடுத்துக் கூறுகின்றார.

மேலும் படிக்க ...

சமர்ப்பணம்: கவிஞர் ஜெயதேவனுக்கு) பேசப்படாதவர்களைப் பேசுவோம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -

விவரங்கள்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
23 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜெயதேவன் என்னும் பெயரில்  கவிதை உலகில் இயங்கி வந்த இவரின் இயற்பெயர் மகாதேவன் . முதுகலை தமிழ் பட்டமும் ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றவர். தமிழ் ஆசிரியராக பணியாற்றி விட்டுப் பணி நிறைவு பெற்றவர். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பண்ணைக்காடு கவிஞரின் சொந்த ஊர் ஆகும். இவரது இலக்கிய செயல்பாடு  என்பது சமூக ஊடகத்தில் தொடர்ந்து எழுதி வந்தது ஆகும். அத்தோடு பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர்.,

இவர் சொந்தமாக "ஓடம் "என்ற மாத இதழை ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளார்.  இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் பலர்  அதில் பங்களிப்பு செய்துள்ளனர். அத்தோடு "ஆனந்த விகடன்* வார இதழின் ஆசிரியர் துறையில் சில காலம் பணியாற்றியுள்ளார். அதேபோல சாவி இதழிலும் சில காலம் நிருபராக பணியாற்றி உள்ளார்

இவர்  10 கவிதை நூல்கள் எழுதி உள்ளார் .அவற்றில் குறிப்பிடத்தக்கன விடியலை நோக்கி, இன்றைய செய்திகள், சுய தரிசனம், ஐந்தாவது யுகம் , கண்ணாடி நகரம், முச்சூலம்,  அம்மாவின் கோலம் ,ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல மற்றும் யூகலிப்டஸ் கவிதைகள் என பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது* சுய தரிசனம் *கவிதை தொகுப்பு 1997 கான தமிழ்நாடுகலை இலக்கிய பெரு மன்றம் தமிழக அளவில் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவருடைய **அம்மாவின் கோலம்* கவிதை தொகுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் அவர்கள் நடத்தி வருகிற எழுத்து அறக்கட்டளை விருதினை பெற்றது .‌அத்தோடு எழுத்து அறக்கட்டளை நிறுவனமே அந்த நூலை வெளியிட்டது.

துவக்கத்தில் மரபுக் கவிதை எழுதிக் கொண்டு இருந்தவர் படிப்படியாக வளர்ந்து புதுக்கவிதை நூல்களை வெளியிட்டார். 2006க்கு மேல் படிப்படியாக நவீன கவிதைக்கு மாறி நவீன கவிதையில் குறிப்பிடத்தக்க கவிஞராக விளங்கி வந்தவர்.

வாழ்வை தத்துவ நோக்கில் கவனிக்கும் கவிதைகள் இவருடைய பெரும்பாலான கவிதைகள். அத்தோடு சமூகம் சார்ந்த விஷயங்களையும் தன்னுடைய பாடுபொருளாக கவிதைகளில் வைத்துள்ளவர்... குறிப்பாக பெரும்பாலான இவருடைய கவிதைகள் சமகால அரசியலை பேசுவன..உலக மயமாக்களின் நல்விளைவு மற்றும் தீ விளைவுகளை பேசக்கூடியவை. இதற்கு உதாரணமாக இவரது கண்ணாடி நகரம் கவிதை தொகுப்பை குறிப்பிடலாம். மரபின் மூச்சை உள்வாங்கி நவீனத்துவத்தோடு வெளியிடுவது இவரது கவிதை பார்வை ஆகும்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் நடேசனின் புலம்பெயர் இலக்கியம் பற்றிய கருத்துகள் பற்றி.... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் நடேசன் தனது முகநூல் பக்கத்தில் புலம்பெயர் இலக்கியம் பற்றியொரு பதிவினை இட்டிருக்கின்றார். அதில் அவர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்: 

1. புலம்பெயர் இலக்கியம் - இலக்கியம் புலம் பெயர்வது இல்லை. இந்த சொற்றொடர் தவறாகும்.

2. புலம் பெயர்ந்தோர் இலக்கியம் படைத்தால் அதை புலம்பெயர் பெயர்தோர் இலக்கியம் எனலாம். ஆனால்  பெரிய முக்கியமான விடயம் இல்லை. 

3. தமிழ் நாட்டில் அக்காலத்தில் பிராமணர் இலக்கியம் படைத்தார்கள்  இப்பொழுது மற்றைய சாதியினரும் படைக்கிறார்கள். அவை எல்லாம் எனக்கு தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழ் இலக்கியமே.  

4. யாராவது மாகாபாரதம், இராமாயணம்த்தை போரிலக்கியம் என்றால் எப்படி இருக்கும்?

5. இலங்கையில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் எழுதுவது மட்டுமே தமிழ் இலக்கியம் ஆகாது . நீங்கள் எழுதுவது டயஸ்போரிக் இலக்கியம்,  என்றால் என்ன நியாயம்?

6. இந்த டயஸ்போரிக் வார்த்தை யூதர்களினால் உருவாக்கப்பட்டது . 

7. வெளிநாடுகளில் இருந்து சிங்கள மொழியில் எழுதும் சிங்களவர்கள் இந்த சொல்லடையை பாவிப்பதில்லை.

8. எனது அசோகனின் வைத்தியசாலை,  பண்ணையில் ஒரு மிருகம்,   வாழும்சுவடுகள் டயஸ்போரிக் இலக்கியவகையை அல்ல .தமிழ் இலக்கியத்தில் எவரும் தொடாத  ஒரு பகுதி என சொல்கிறேன்.

மேலும் படிக்க ...

விதவைத்திருமணத்தை வலியுறுத்தும் வவுனியூர் இரா. உதயணனின் 'வலியின் சுமைகள்' ! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வவுனியூர் இரா. உதயணன் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினை  'விதி வரைந்த பாதையிலே'  என்னும் நாவலுக்காகவும், 'பனிநிலவு' நாவலுக்காக எழுத்தாளர் கு,சின்னப்பபாரதி  விருதினையும் பெற்றவர். இவரது நாவல்கள், சிறுகதைகள் நூலுருப்பெற்றுள்ளன. தினகரம், வீரகேசரி பத்திரிகைகளில் தொடர்களாக இவரது நாவல்கள் வெளிவந்துள்ளன. இவ்விதம் வீரகேசரியில் 54 அத்தியாயங்கள் தொடராக வெளியான நாவலான 'வலியின் சுமைகள்' நாவல்  ஓவியங்களுடன் கூடிய அத்தியாயங்களுடன் 'இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம்'  வெளியீடாக , 2015இல் வெளிவந்துள்ளது.  நூலுக்கான் ஓவியங்களை வரைந்திருப்பவர் ஓவியர் கெளசிக். இந்நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. 

வன்னியூர் இரா. உதயணனின் எழுத்து சரளமானது. வாசிப்புக்கு எவ்வித தடங்கலும் தராத தெளிந்த நீரோடை போன்றது. ஆங்காங்கே மண் வாசனை தெறிக்கும் இயற்கை வர்ணனைகளை உள்ளடக்கியது.  வாசிப்பைத்தூண்டும் கதைப்பின்னல்களைக்கொண்டது. மானுட சமுதாயத்துக்கு பயன் தரும் சமுதாயப் பிரக்ஞை  மிக்க முற்போக்குக் கருத்துகளை உள்ளடக்கியது.  'வலியின் சுமைகள்' நாவலிலும் இப்பண்புகள் அனைத்தையும் காணலாம்.

மேலும் படிக்க ...

தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
20 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'சாம்பரில் திரண்ட சொற்கள்'  எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல்.  'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான  தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான  வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை .  அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான்  நினைவில் வைத்திருக்கின்றோம்.  'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம்.  'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்களை உள்ளடக்கியே வெளிவந்தன. நாவல்களின் ஓவியங்களும் முக்கியமானவை. மேற்படி நாவலும் இவ்விதமே ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது வடிவமைப்புக்கு வனப்பைத்தருவதுடன், வாசிப்புக்கும் வளத்தைத்தருகின்றது..

இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் - நடனசுந்தரமும் அவர் மனைவி சிவயோகமலரும்தாம். நடனசுந்தரம் சிறந்த ஓவியர். சிவயோகமலர் இசையில் ஆர்வம் மிக்கவள்.தஞ்சாவூர் சென்று வீணையில் தேர்ச்சி பெற்றுத்திரும்புகின்றாள்.  இளமையில் சில கணங்கள் நடனசுந்தரத்தைச் சிவயோகமலர் சிலிர்ப்படைய வைத்திருந்தாலும், அவ்வுணர்வுகள் தொடரவில்லை. அவளுக்கும் அவனில் இருந்தது வெறுப்பா, விருப்பா  என்பதில் குழப்பம்.  அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் குழம்பிய நிலையில், இருவரும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் திருமணப் பந்தத்தில் பிணைக்கப்படுகின்றார்கள். வாழ்கின்றார்கள். குழந்தைகள் பெற்று, அவர்கள் வாழ்க்கை நகர்கின்றது. இருவருமே அவர்களது சுய விருப்பங்களை, ஆர்வங்களைத் தொடர முடியாத வகையில் வாழ்க்கை நகர்கிறது. இறுதி வரையில் அவர்களால் தம் விருப்புக்குரிய துறைகளில் கவனம் செலுத்த முடியவில்லை.  இவ்விதம் முதுமையில் அவர்களது வாழ்க்கை கனடாவில் தொடர்கிறது.  தமிழர் ஒருவரின் வீட்டின் 'பேஸ்மண்டி'ல் வாடகைக்குக் குடிபெயர்கின்றார்கள்.  முதுமையில் உடல் உபாதைகளுக்கும், மனச்சிதைவுக்கும் உள்ளாகிய மனைவியைப் பராமரிக்கும் பொறுப்பில் நடனசுந்தரத்தின் இருப்பு இருக்கிறது. கதையின் ஆரம்பம் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. கடந்த காலச் சம்பவங்களை  விபரித்துச் செல்வதே நாவலாகப் பரிணமிக்கின்றது.

மேலும் படிக்க ...

யப்பானில் சில நாட்கள்:3 சென்சோஜிபுத்தஆலயம் (Sensoji temple in Asakusa) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
20 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாங்கள் சென்ற  அசகுசா என்ற இடத்தில் உள்ள புத்த கோயில்  யப்பான் வருபவர்கள்  எவரும் தவறவிடாது செல்லும் இடமாகும்  இது டோக்கியோவில் உள்ளது . 30 மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் வந்து போவார்கள். முக்கியமான மட்டுமல்ல  எல்லா நாட்களுமே உல்லாசப்பிரயாணிகளால் நிறைந்திருக்கும். அசகுசா என்பது புல்தரை என்ற கருத்தாகும் அக்காலத்தில் அப்படி இருந்திருக்கலாம்.  அருகில் ஆறு ஓடுகிறது தற்போது முழு இடமும் கடைவீதிகள், உணவகங்கள் நிரம்பி உள்ள இடமாகிறது.

நமது நாடுகளில் உள்ளது போல் புத்தரை மட்டும்  முக்கியத்துவப்படுத்தும் தேரவாத புத்த கோயில் அல்ல . மகாயான புத்தகத்தில் சொல்லப்படும் போதிசத்துவரான அவலோகிஸ்வரர் தெய்வம்  இங்கு பெண் (Kannon, the Goddess of Mercy in Japanese Buddhism) உருவம் கொண்ட தெய்வமாக வழிபடப்படுகிறார் – அதாவது கருணையின் தெய்வமாக ஜப்பானியர்கள் பார்க்கிறார்கள் . அவர்களுக்குத் துன்பங்கள்,  தேவைகள் மற்றும் இயற்கையின் அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் தெய்வமாக  கருதி வழிபட  இங்கே வருகிறார்கள். இதில் விக்கிரக வழிபாடுகள் உள்ளது. ஒரு விதத்தில் எங்கள் பெண் தெய்வங்கள் துர்க்கா,  காளி என்பது போல் தான் .

 எத்தனை பேர் வந்தாலும் யப்பான் சுத்தமான இடம். யப்பானில் பல இடங்களில் குப்பை போடும் கலயங்கள் இருப்பதில்லை . குப்பைகளை நீங்கள் கொண்டு செல்லவேண்டும் என்பதால் எல்லோரும் பொறுப்பாக நடக்கிறார்கள் . நான்கூட  சில குப்பைகளை வைத்து இரவு வரையும் அலைந்தேன்.

மேலும் படிக்க ...

குதம்பைச் சித்தர் பாடல்களில் வாழ்வியல் நெறிகள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
20 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இலக்கியங்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு, வரலாறு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இலக்கியங்கள் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்திச் சென்ற அறநெறிகள் ஏராளம். அதில் சித்தர்களின் பாடல்களில் மக்கள் அறிந்துக் கொள்ளக்கூடிய நிலையாமை கருத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அந்த வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களில் காணப்படும் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

குதம்பைச் சித்தர் பெயர்க்காரணம்

குதம்பைச் சித்தர் இடையர் குலத்தை சார்ந்தவர். இவர் மயிலாடுதுறையில் சமாதியானார் என்றும் கூறுவர். இவர் பாடலில் குதம்பாய் என்னும் மகடுஉ முன்னிலைப்படுத்திப் பாடியுள்ளார். குதம்பை என்பது பனை ஓலை சுருளுக்குப் பெயர். இதைப் பெண்கள் காதுகளில் அணிவது மரபாகும். இதனால் இவளுக்குக் குதம்பை சித்தர் எனப் பெயர் வந்தது. இவர் இல்லறத் துறவியாக இருந்து பின் அழகர் மலை என்னும் திருப்பதியில் சமாதியானார் என்றும் கூறுவர்.

கடவுளின் இயல்பு

மக்கள் இறைவனை உருவமாகவும் சோதி வடிவமாகவும் வழிபடுகின்றனர். ஆதியும் அந்தமும் ஆகிய கடவுள் ஒருவனே சோதி வடிவில் நிற்கின்றான். இதனை,

"ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி" (குத.சித். பா.33)

என்ற பாடல் எடுத்தியம்புகிறது.

"அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி" (திருமுறை.6, பா.32)

என்னும் பாடலில் வள்ளலார் அருட்பெருஞ்சோதி வழிபாட்டு முறையை மேற்கொண்டு அச்சோதியில் இரண்டறக் கலந்தார் என்பதை அறியமுடிகின்றது.

மேலும் படிக்க ...

எட்னா எரிமலையின் சீற்றம்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
19 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை ஜூன் மாதம் 2 ஆம் திகதி மதியம் போல மீண்டும் வெடித்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் எட்னா ஆய்வகம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்தபோது பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கரும்புகையோடு கலந்த தூசிகளும் கற்களும் பறந்ததால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து போயிருந்தனர். எந்த நேரமும் விமானப் போக்குவரத்து தடைப்படலாம் என்ற பயத்தில் சில சுற்றுலாப் பயணிகள் சிசிலித் தீவைவிட்டு உடனே கிளம்பினார்கள்.

சென்ற வருடம் சுமார் 11,000 அடி உயரமான இந்த எட்னா எரிமலையைப் பார்ப்பதற்காக நான் அங்கு போயிருந்தேன். என்னைப் போலவே சுமார் 1.5 கோடி சுற்றுலாப் பயணிகள் வருடம் தோறும் அங்கு வருகிறார்கள். 2023 ஆம் ஆண்டு மே மாதம் கடைசியாக எட்னா எரிமலை வெடித்தாக நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வரவேற்பாளர் குறிப்பிட்டிருந்தார். அப்போது அருகே உள்ள நகரமான கட்டானியா விமான நிலையத்தில் அதிக சாம்பல் தூசுகள் காணப்பட்டதன் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

நான் அங்கு நின்றபோது எட்னா எரிமலை எதுவுமே நடக்காதது போல, வெள்ளை நிறப்புகையை மட்டும் கக்கிக் கொண்டிருந்தது. உயிர்ப்புடன் இருக்கும் எரிமலை என்பதால் எந்த நேரமும் வெடிக்கலாம் எனச் சொன்னார்கள். 'பயமாக இல்லையா?' என்று மலையடிவார உணவகத்தில்  மதிய உணவு பரிமாறிய பெண்ணிடம் கேட்டபோது, 'இதெல்லாம்  எங்களுக்குப் பழகிப்போச்சு' என்று சிரித்துக் கொண்டே சொன்னது ஞாபகம் வந்தது.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 51 “நூல்களைப் பேசுவோம்” - அகில் -

விவரங்கள்
- அகில் -
நிகழ்வுகள்
19 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345 



மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம்: 'தமிழக-இலங்கை வணிகத் தொடர்புகள்- தமிழ்க் கல்வெட்டுகளை முன்னிறுத்தி...' - ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
19 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268 

மேலும் படிக்க ...

வரலாற்றைப் புனைவினூடாகக் கையளிக்கும் நீ பி அருளானந்தத்தின் 'புண்ணியபுரம்' - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
கலாநிதி சு.குணேஸ்வரன் பக்கம்
18 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈர்ப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.

வரலாற்று நாவல்கள் என்பவை கடந்த காலத்தை மீட்டுப் பார்ப்பதற்கும் வரலாற்றைப் புனைவினூடாகக் கையளிப்பதற்கும் ஓர் உத்தியாகவே எழுத்தாளர்கள் எடுத்தாண்டுள்ளார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் வரலாற்று நாவல்களின் எழுச்சி என்பது போதுமான அளவுக்கு நிகழவில்லை என்றே கூறலாம். மாறாக, சமூக பண்பாட்டு அரசியல் வரலாறுகளுக்கே ஈழச்சூழல் பெரிதும் இடங்கொடுத்து வந்துள்ளது. இதற்குப் பல்வேறு அகப்புறக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை நாம் அறிவோம்.

ஈழத்தின் முதல் வரலாற்று நாவலாகிய தி.த சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி (1895) மதுரை நாயக்கர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை அடியொற்றியதாக அமைந்திருந்தது. 'மோகனாங்கி தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் என்ற பெருமைக்கு அப்பால் வரலாற்றைச் சமூக சீர்திருத்தத்தோடு முன்வைத்திருப்பதே அதன் தனிச்சிறப்பு' என்று அருண்மொழிவர்மன் குறிப்பிடுவதும் இதனாற்தான். இந்நிலையில் சமூக அரசியல் பண்பாட்டுக் கூறுகளின் ஊடாகக் கட்டமைக்கப்பட்டனவாக ஈழத்து நாவல்கள் அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

மேலும் படிக்க ...

பாரிஸ் மாநகரில் மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் அமுதவிழா..! - ஆனந்தி -

விவரங்கள்
- ஆனந்தி -
நிகழ்வுகள்
18 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்திலும் ஐரோப்பாவிலும் நீண்ட காலம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த, மூத்த பத்திரிகையாளர் 'ஈழநாடு" எஸ். கே. காசிலிங்கம் அவர்களின் அமுதவிழா பாரிஸ் மாநகரில் கடந்த மாதம் 25 -ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (25 - 05 - 2025) மாலை சிறப்பாக நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கலை இலக்கியப் பத்திரிகைத் துறையினர், சமூக நிறுவனங்களின் பிரிதிநிதிகளெனப் பெருந்தொகையானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

பிரித்தானியா, சுவிஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் விழா நாயகனின் உறவினர்கள், நண்பர்கள் வருகைதந்து சிறப்பித்தனர்.

மேலும் படிக்க ...

உலகம் அமைதி பெற! - சந்திரகெளரி சிவபாலன் -

விவரங்கள்
- சந்திரகெளரி சிவபாலன் -
அரசியல்
18 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI
இன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.

உலக அமைதி முதலில் குடும்பத்தால் சீரழிகின்றது. குடும்பத்துக்குள் கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளால் நடைபெறுவது குடும்பச் சண்டை. இதனால், மன அமைதி குன்றுகின்றது. சகோதரர்களிடையே பணவிடயங்கள் உரிமைப் போராட்டங்கள் ஏற்படுகின்றன. இதனால், பாரத யுத்தமே கண்டது எம்முடைய பாரதநாடு. இதனைவிட குடும்ப அமைதியின்மை மனிதர்களிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதன் மூலமாக பலவிதமான பிரச்சினைகளை குடும்பம் எதிர்நோக்க வேண்டி வருவதுடன் தொடர் கொலைகள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகின்றன என்று மனநலவியலாளர்கள் ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கின்றார்கள்.

பேராசையும் எமக்கு உரிமையில்லாதவற்றில் நாம் ஆசைப்படுதலும் குடும்பம் அமைதி இழந்து உலக அமைதியைக் கெடுக்கின்றன. இதனால், இராவண வதை, வாலி வதை போன்ற யுத்தங்கள் கண்டது தமிழ்நாடு. இவ்வாறான காரணங்களினால், குடும்ப அமைதி குன்றி அது அடுத்த கட்டமாக நாட்டின் அமைதியின்மையாகவும் உலக அமைதியின்மையாகவும் மாற்றம் பெறுகின்றது.

மேலும் படிக்க ...

இலங்கையில் சென்னை திருச்சி குரு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஷ்கலாவின் நடன நிகழ்வு! - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நிகழ்வுகள்
16 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்னை திருச்சி ஸ்ரீ பாரதகலா குரு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஷ்கலா அவர்களின் பரத நாட்டிய நடனம் கொழும்பு கதிர்காமத்தில்  எதிர்வரும்  ஜுலை மாதம் 4 ஆம் தேதி கொழும்பிலும் 6 ஆம்  தேதி கதிர்காமத்திலும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இந்தியாவிலுள்ள  நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். டாக்டர் கே.ராமநாதன்இ எம்.எல்.இ பி.எச்.டிஇ  பிரணதி -  அபிநயா - நடனக் கலைஞர தேவ தர்ஷினி - நடனக் கலைஞர்  ருத்ரா - நடனக் கலைஞர்  ஷஹானா - நடனக் கலைஞர்   ஷாமிலி பிரியா - நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  இதில் குரு நடனமாமணி ஸ்ரீ மதி பூர்ணா புஷ்கலா ஒரு திறமையான பரதநாட்டிய நிபுணர் மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர். அவர் சென்னை மற்றும் திருச்சியில் கிளைகளைக் கொண்ட ஸ்ரீ பரதகலா அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார்.

இது ஆர்வமுள்ள கலைஞர்களிடையே பாரம்பரிய நடனத்தை வளர்ப்பதிலும் ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பரதநாட்டியத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவருக்கு நடனமாமணி என்ற மதிப்புமிக்க பட்டத்தை வழங்கியது. கலைகளுக்கான அவரது அர்ப்பணிப்புஇ தமிழக அரசால் கலை மற்றும் கலாச்சாரத் துறையின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கும் வழிவகுத்தது. கூடுதலாகஇ அவர் திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிலம்பட்டம் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்இ பாரம்பரிய நடனத்துடன் பாரம்பரிய தற்காப்புக் கலைகளையும் வென்றுள்ளார்.

இந்திய பாரம்பரிய கலைகளை உலகளாவிய தளங்களுக்கு எடுத்துச் செல்வதில் அவர் கொண்டிருந்த ஆர்வம்இ மலேசியா மற்றும் தாய்லாந்தில் சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வழிவகுத்தது. மலேசியாவில்இ அவருக்கு வாழ்நாள் தமிழ் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுஇ மேலும் தாய்லாந்தில்இ சர்வதேச நடன விழா 2017 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமையுடன் பங்கேற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க உத்திரகோசமங்கை கோயிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி நடன விழாவின் பின்னணியில் உள்ள தொலைநோக்கு பார்வையாளரும் இவர்தான்இ இது தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க ...

வரலாற்றுச் சிறப்பு மிக்க 'பாரதியார் சரித்திரம்' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'பாரதியார் சரித்திரம்' என்னும் இந்நூல் முக்கியமானதொரு நூல். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லதோர் ஆவணம். இந்நூலைப் பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதி கூறுவது போல் எழுதியிருப்பவர் அவரது மகள் தங்கம்மா பாரதி.

சக்தி  காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 1941. இணையக் காப்பகத்தில் இந்நூல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான  இணைப்பைத் முகநூற் பக்கத்தில்  பகிர்ந்திருந்தார் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார். அதற்காக அவருக்கு என் நன்றி. 

நூலை வாசிப்பதற்கான  இணைய இணைப்பு

டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 04 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
16 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


“ஆழ்கடலின் மிகப் பெரிய சுறா. கரையோரத்துச் சிறுமீன்களில் ஒன்றல்ல இவர்.”

தனிமையும் மௌனமும், ஒன்றுசேர,ஒரு மோன நிலையில் தரிசிக்க தெரிந்த மனிதர். இவ்விரண்டையும் பல்வேறு மனிதர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தம் வாழ்நாட்களில் சந்தித்து இருக்கலாம். கண்ணதாசனில் இருந்து கலாம் வரையிலும் அல்லது பாரதியில் இருந்து கைலாசபதி வரையிலும் இவை இரண்டினதும், (தவத்தின் வலிமையானது) அவரவர் தெரிவு செய்யும் மட்டங்களிலேயே இருப்பதாய் இருக்கும். அதாவது, அவர்கள் எந்த மட்டங்களில் எவ்வாறு இவற்றை தரிசித்தனர் என்பதற்கான விடை அவர்களின் செயற்பாட்டின் சாரமாக வெளிப்படவே செய்யும்

(எழுத்திலும்).

‘தனிமை கண்டதுண்டு
சாரம் நிறைந்ததம்மா’

என்ற வரிகளின் ஆழத்தைக் கண்டுப்பிடித்து கோடிட்டவர் கைலாசபதி.

இதனைப் போலவே, தனிமையின் அழகை, தன்னளவில் கண்ணதாசனும் காணத்தவறினார் இல்லை:

‘தவத்துக்கு ஒருவரடி
தமிழுக்கு இருவரடி…’

எனக் கண்ணதாசனும் ஓர் உரையின்போது கூறியதும் கவனிக்கத்தக்கதே.

மேலும் படிக்க ...

பித்தர்களின் வசமாகி பெருநெருப்பு விழுங்கியதே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
14 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

   

     ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடுத்து
     நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியதால்
     ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே
     வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்

     எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
     எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே.
     நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை
     எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்.

     நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது.
     நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்.
     பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
     நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்.

மேலும் படிக்க ...

இலங்கையில் - தமிழ்ப் பண்பாடு – அனைத்துலக மாநாடு - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நிகழ்வுகள்
14 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* படத்தைத் தெளிவாகப் பார்க்க இரு தடவைகள் அழுத்தவும்!

தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாடு  இலங்கையில்  யாழ்ப்பாணத்தில்  30-06-2025  தேதியும், நுவரெலியாவில் 02-07-2025 தேதியும், கொழும்பில் 06-07-2025 தேதியும் வரையும்    இடம்பெறவுள்ளதாக என்று தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்  இம்மாநாட்டில்  தென்னாபிரிக்கா, பிரான்சு, பிரிட்டன், சுவிட்சலாந்து நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து  பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்கவுள்ளனர்.

முதலாவது நிகழ்வு இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாதன் தலைமையில் 30 ஆம் தேதி  யாழ்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் இணைத்தலைவராக யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக தமிழ் நாடு பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர். க. பாஸ்கரன் அவர்களும்,  கருத்தரங்கு அமர்வுப் பொறுப்பாளர்களாக  இந்து நாகரிகத்துறை பேராசிரியர் ச. முகுந்தன், இந்து நாகரிகத்துறை திரு. சு.  ரமணராஜா, இலண்டன் தமிழ் கல்வியகம் இயக்குநர் திரு.  ச. முருகையா. பாரீஸ் உலக செம்மொழி தமிழ்ச் சங்க நிறுவினர் கணேஸ்வரன் நவரத்தனம், தென்கிழக்குப் பல்கலைக்கழக  பேராசிரியர் முனைவர் கணேஸ்ராஜா, கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி விக்னராஜன் ஆகியோர்களுடன் அலுவலக ஒருங்கிணைப்பாளர்களும்  செயற்படவுள்ளனர். 

மேலும் படிக்க ...

யப்பானில் சில நாட்கள்:2 ஷின்டோ ஆலயம் - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
14 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* Photo by David Edelstein on Unsplash

மாலையில் டோக்கியோவில் உள்ள புத்த பகோடாவிற்கும் சின்ரோ ஆலயத்திற்கும் அழைத்து சென்றார்கள். ஆரம்ப காலத்திலே சின்ரோ மதம் யப்பானில் உருவாகிறது. ஒரு விதத்தில் சின்ரோ மதம் விக்கிரகங்கள் அற்ற இந்து மதம் போன்றது. மனிதர்கள் பயந்த, அல்லது தங்களுக்கு உபயோகமான இயற்கையின் சக்திகளின்பாலான வழிபாட்டு முறையாகும். பின்பு மக்களிடையே விவசாயம், நெசவு என்பது உருவாகும் காலத்தில்தான், கொரியாவிலிருந்து பௌத்த மதம் யப்பான் வருகிறது. பௌத்தத்தின் தாக்கத்தில் உயிர்க்கொலைகள் இங்கு தடுக்கப்படுகிறது. இது பல எதிர்ப்புகள் உருவாக்கியபோதும் முக்கிய செல்வாக்கு உள்ள பிரபுக்களால் பௌத்தம் ஏற்கப்படுகிறது. பிற்காலத்தில் புத்த குருக்களின் ஆதிக்கம் அங்கு மேலோங்குவதனால் ஆரம்பத் தலைநகர் நாராவிலிருந்து பின் கொயோட்டா நகருக்கும் , இறுதியில் எடோ என்ற இடத்திற்கு மாறுகிறது . ஆரம்பத்தில் மீன்பிடிக்கும் கிராமமாக இருந்த அந்த எடோ, டோக்கியோவாகிறது.

எப்படி பௌத்தம் கொரியாவிலிருந்து வந்ததுபோல் சீனாவிலிருந்து எழுத்து, மொழி, கலண்டர், மற்றைய பல கலாச்சாரத்தின் கூறுகள் வந்து சேரும் போது இங்கு சில குழுவினர் செல்வாக்கடைந்தபின் சமூகம் வளர்ந்து அரசுருவாக்கம் ஏற்படுகிறது.

யப்பானில் 80 வீதமானவர்கள் ஷின்ரோ. அதேபோல் 75 வீதமானவர்கள் புத்த சமயத்தவர்கள் இதனால் பெரும்பாலானவர்கள் இரண்டு மத நம்பிக்கையும் உள்ளவர்கள். ஷின்ரோ மதம் யப்பானுக்கு ஏகபோகமானது அதேவேளையில் இதற்கு ஒரு வேதப்புத்தகமோ முழு முதற்கடவுளோ இல்லை. எவரும் புத்தர் யேசுபோல் இதை ஸ்தாபிக்கவும் இல்லை .பல கடவுளை வழிபடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால் , விக்கிரகம் இல்லை. ஒரு விதத்தில் மக்களின் வாழ்க்கைக்கு வழியாக அதாவது எழுதப்படாத வாழ்வு முறை போன்றது.

மேலும் படிக்க ...

கவிஞர் ஜெயதேவன் மறைந்தார்! கண்ணாடி நகரம் - கவிதைகள் - ஜெயதேவன் - ஒரு பார்வை! - பொன்.குமார் -

விவரங்கள்
- பொன்.குமார் -
நூல் அறிமுகம்
13 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் ஜெயதேவனின் மறைவை முகநூல் தாங்கி வந்தது.  ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவாக எழுத்தாளர் பொன்.சுகுமார் எழுதிய கவிஞர் ஜெயதேவனின் 'கண்ணாடி நகரம்' கவிதைத்தொகுப்பு பற்றிய விமர்சனக் குறிப்பிது. இக்குறிப்பு கவிஞர் ஜெயதேவனின் ஆளுமையை நன்கு விபரிக்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம், சுற்றுச் சூழற் பாதுகாப்பு, விம்ப வழிபாட்டில் மூழ்கிக்கிடக்கும் நவகாலத்து மானுடர், விவசாயத்தின் தேவை, புலம்பெயர்தலின் வலி எனக் கவிஞரின் பன்முகப்பட்ட பார்வையினை வெளிப்படுத்தும் குறிப்பு. கவிஞர் நவீன தொழில் நுட்பத்தை நன்கறிந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதையும் மேற்படி குறிப்பு புலப்படுத்துகின்றது.

கவிஞர் ஜெயதேவனின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். அதே சமயம் கவிஞரின் எழுத்தை, ஆளுமையை இத்தருணத்தில் அறிந்து கொள்ளலின் அவசியம் கருதிப் பொ.குமாரின் முகநூற் குறிப்பையும் நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றேன். - வ.ந.கி, பதிவுகள்.காம்

மேலும் படிக்க ...

டால்ஸ்டாய் பற்றிய அறிமுகங்கள் (3) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
11 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டால்ஸ்டாய்  இறைவன் போலவே, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். உடல் உருக்குலைந்து, கசங்கி, சிறுத்துப்போய் இருந்தாலும் களைப்பினால் அல்லது சலிப்பினால் எழுந்ததாய் இருக்க வேண்டும்-உதடுகளைக் குழந்தைகள் போல் பிதுக்கி, குவித்துச் சீழ்கை அடிக்க முயன்று கொண்டிருந்தார்-எங்கோ ஒளிந்திருந்த ஒரு சிறு பறவையைத் தன் கூர்மையான கண்களால் தேடியப்படி. பற்றைகளும் அடர்ந்த தழைகளுமாய் இருந்த ஓரிடத்தில் இருந்து அந்த குருவி மறைந்தவாறே பாடியபடி இருந்தது. “உயிரை வாட்டி எடுக்கிறது. முழு உயிரையும் கொடுத்துப் பாடுகிறது… ஆனால் ஒரே ஒரு ராகம்… என்ன குருவி…”.

சிவந்த மார்பை உடைய இவ்வகை குருவிகளை நான் அறிவேன். சின்னஞ்சிறியவை. சொல்லத் தொடங்கினேன் - முக்கியமாக இக்குருவிகளில் இருக்கும் பொறாமை குணத்தைப் பற்றிச் சொல்ல முற்பட்டேன்.

“அப்படியா. பொறாமையா?-வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு ராகம். இதற்குள் பொறாமை வேறு! மனிதனுக்கோ, அவனது இதயத்தில் ஆயிரம் ராகங்கள் உண்டு. அவனது ஆத்மாவில் இருந்து. இருந்தும் அவன் பொறாமை கொள்வதற்காகச் சபிக்கப்படுகின்றான்… எப்படி?”

“ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களில், அவ் ஆண்மகன் தான் சொல்ல நினைக்காத உண்மைகளைக்கூட அவளிடம் மனம் திறந்து ஒப்புவிக்கின்றான். அதன் பின்னர், அவன் அது குறித்தெல்லாம் முற்றிலுமாய் மறந்து போயிருப்பான். ஆனால், அவள்? அவள் அதையெல்லாம் நினைவில் வைத்திருப்பாள். ஏன்? தன்னைத் தாழ்த்திக் கொள்ளவேண்டி வருமோ என்ற அச்சம்தான் காரணம். பொறாமை இங்குதான் உருவாகின்றது. எங்கே தன்னைக் கீழ்மைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்து பிறக்கின்றது. எனவேதான் உன் ஆன்மாவை இறுகப் பற்றுபவளே அபாயகரமானவள் - உனது ----- அல்ல”.

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியத் தோட்டம் 25 ஆண்டு விருதுகளின் கொண்டாட்டம்! - தகவல்: அ.முத்துலிங்கம் -

விவரங்கள்
- தகவல்: அ.முத்துலிங்கம் -
நிகழ்வுகள்
10 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* அறிவித்தலைத் தெளீவாகப் பார்க்க, படத்தை ஒரு தடவை அழுத்தவும்.

தமிழ் இலக்கியத் தோட்டம்  25 ஆண்டு விருதுகளின் கொண்டாட்டம்!   - தகவல்: அ.முத்துலிங்கம் -

2025ல் வழங்கப்படும் 2024ம் ஆண்டுக்கான விருதுகள்

இயல் விருது - சச்சிதானந்தன் சுகிர்தராஜா (பேராசிரியர், விளக்கவியலாளர், எழுத்தாளர்)
இயல் விருது - யுவன் சந்திரசேகர் (எழுத்தாளர், கவிஞர்)

புனைவு – இரவி அருணாசலம்
நூல் – பம்பாய் சைக்கிள்- (காலச்சுவடு பதிப்பகம்)

அல்புனைவு – த.பிச்சாண்டி
நூல் – எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர் நினைவுகள் ( பி.வி.பதிப்பகம்)

கவிதை -ரவி சுப்பிரமணியன் – நூல்: அருகிருக்கும் தனியன்- (போதிவனம் பதிப்பகம்)
கவிதை - றியாஸா எம் ஸவாஹிர்- நூல்: நிலங்களின் வாசம்- (வேரல்புக்ஸ் பதிப்பகம்)

மொழிபெயர்ப்பு :  நீட்ரா ரொட்ரிகோ   நூல்: கனவுச் சிறை (பாலா தேவகாந்தன்)
Prison of Dreams (5 Parts) - Published by Mawenzi House (author Bala Devakanthan) 

மேலும் படிக்க ...

பெண்களின் பாரிய பிரச்சினைகள்! - சந்திரகெளரி சிவபாலன் -

விவரங்கள்
- சந்திரகெளரி சிவபாலன் -
சமூகம்
08 ஜூன் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பெண்களின் பிரச்சினைகள் பல இருந்தாலும் பெண், ஆண், திருமணம் ஆகிய மூன்றும் பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. முதலாவதாகப் பெண்கள் தம்முடைய பலத்தைத் தாம் அறிந்து கொள்ளாமையும், தாய்மார் ஆண்பிள்ளைகளில் வைக்கும் அளவுகடந்த பாசமும் பெண்களுக்குப் பாரிய பிரச்சினையை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன.

பெண்கள் பலம்:

ஆண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முடிவதில்லை. பெண்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். ஆண்களுக்கு மொழி மையத்தின் அளவும்; சிறிதாக இருப்பதாலே ஆண்கள் பேசுவது குறைவாகவே இருக்கின்றது. நிஜமாக ஆண்களுக்கு சமய சந்தர்ப்பம் அடைந்து சாமர்த்தியமாக பேசவும் தெரியாது. முகக்குறிப்புகளையும் இலகுவில் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், பெண்கள் இவ்விடயங்களில் சாமார்த்தியசாலிகள். அதேபோல் இதைவிட ஒரு விடயத்தை அவதானித்தல், மனநிலை, கவலை போன்றவற்றை வெளிப்படுத்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் ஆண்களின் மூளையை விடப் பெண்களின் மூளையே தெளிவாகச் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள். இதை அறியாத பெண்கள் யாரையாவது எதிர்பார்க்கின்ற தன்மையும் பாதுகாப்புக்காக ஏங்குகின்ற தன்மையும் உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

„நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையும்“

என்று பாரதியார் பெண்களைப் பற்றிப் பாடியிருக்கின்றார். ஞானம் என்பது பற்றி ஆறுமுகநாவலர் சொல்லும் போது பகுத்தறிவுச் சுடர் என்கிறார். ஆகவே பெண்களிடம் பகுத்தறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது என்னும் போது எதையும் பாகுபடுத்தி நல்லவை தீயவை பற்றி அறிகின்ற அறிவு அவளுடைய வாழ்க்கையின் பாதுகாப்புக்குப் போதுமானது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. எழுநாவின் புத்தக மன்றம்! நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்! ஆதரவு நல்குவீர்! - தகவல்; சஜீவன் -
  2. பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பும் எழுத்தாளர்களின் கவனத்துக்கு...
  3. யப்பானில் சில நாட்கள் (1) - நடேசன் -
  4. லண்டன் பாரதியவித்ய பவனில் ‘சாஸ்வதம்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  5. சுடர் விட்டெரியும்’ தீப்பந்தம்’ திரைப்படம் - மாதவி சிவலீலன் -
  6. சமண சமயமும் திணைமாலை நூற்றைம்பதும்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை.
  7. டால்ஸ்டாய் பற்றிய அறிமுகங்கள் (2) - ஜோதிகுமார் -
  8. 'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' - கலாநிதி சு.குணேஸ்வரன்
  9. மீள்பிரசுரம்: யாழ் பொதுசன நூலக நினைவுகள்.... வ.ந.கிரிதரன் -
  10. எழுத்தாளர் சிவராசா கருணாகரனின் தேசிய மக்கள் சக்தி பற்றிய கேள்விகள் சில பற்றி..... - வ.ந.கிரிதரன் -
  11. குரு அரவிந்தனின் சிறுகதைகள் பன்முகப்பார்வை - முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா, பெரியகுளம், தேனி. தமிழ்நாடு. -
  12. குரு அரவிந்தன்: வேடன் & பூமியில் விழப்போகும் சோவியத் விண்கலம்
  13. எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்தார்! - வ.ந.கி -
  14. குறுந்தொகையில் பரணர் பாடல்களில் நடை உத்திகள்! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -
பக்கம் 9 / 115
  • முதல்
  • முந்தைய
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • அடுத்த
  • கடைசி