"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று" – குறள் 236
சில சமயங்கள் நாட்கள் நகரக்கூடாது என்றே சிந்திக்கத்தோன்றும். மகிழ்வான பொழுதுகளில் இருந்து நழுவிப்போக மனது இடம் தராது.எனினும் காற்று சேதி சொல்லியது.மனதில் அதிர்வைத் தந்தது. நாட்களும் அதிகம் கடந்துவிடவில்லையே. தொலைபேசி அழைப்பு வரும் போது நான் இல்லாத பொழுதெனிலும் அவரின் குரல் பதிவை மீள கேட்கையில் ஆர்வம் மீள எழும்.பேசிக்கொண்டிருந்த நாட்களும் அதிகம்.அந்த குரல் 'பிறகு..பிறகு..' என்று பேச்சை நகர்த்தும் விதம் அலாதியானது. காற்றுவெளி மின்னிதழில் அவரின் கட்டுரைகள் அதிகமாகவே வந்திருக்கின்றன.ஆய்வுக்கட்டுரைகள் என இதழை புரட்டிப்பார்த்தால் அவர் கண்முன் வந்து நிற்பார்.அந்த வெறுமை எனி காற்றுவெளியில் தெரியும்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி/நுணாவில் மேற்கில் 02/03/2031இல் கார்த்திகேசு தங்கமுத்து தம்பதியர்க்கு மகனாக பிறந்தவர்.கார்த்திகேசு விசயரத்தினம் ஆரம்பக் கல்வியை மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாசாலையிலும்,தொடர்ந்து சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் கற்றார்.தொஅர்ந்து மேற்படிப்பை கொழும்பில் தொடர்ந்து ஒரு கணக்கியற் பட்டதாரியானார்.கொழும்பிலேயே தன் தொழில் வாய்ப்பைப் பெற்றார். கொழும்பு கணக்காய்வு அதிபதி தினைக்களத்தில் அரச கணக்காய்வாளராக கடமையேற்றார்.மேலும், போட்டிப்பரீட்சைகளில் தோற்றி கணக்காய்வு அத்தியட்சராகவும் தரமுயர்ந்தார்.பல அரச,கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளை ஆய்வு செய்து அரச நாடாளுமன்றிற்கு சமர்ப்பிப்பதனால் நாடாளுமன்ற விவாதங்களிலும் பங்குபற்றுபவருமானார். கலை இலக்கிய ஆர்வலர்.நல்ல நூல்களை வாசிக்கும் ஆவல் மிகுந்தவர்.அதனால் தானோ இலக்கியம் படைக்கும் திறமையையும்,ஆற்றலையும் உருவாக்கிக்கொள்ள அவரால் முடிந்தது. தொல்காப்பியம்,நன்நூல், சிலப்பதிகாரம், நன்நூல்,திருக்குறள், அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, மகாபாரதம், கலிங்கத்துப்பரணி, பகவத்கீதை ,திருமந்திரம், கம்பராமாயணம் ,திருவாசகம், நாலடியார் சங்க இலகியங்கள் தொடங்கி சமகால இலக்கியங்கள் வரை ஆழமாக,நேசிப்புடன் கற்றறிந்து அதனை நம்மவர்களுக்கு கட்டுரைகளாக தந்துமுள்ளார். காதல், காமம், பிள்ளைப்பெறு, மடலேறுதல், களவியல், இன்னும் வாழ்வின் ஒழுக்கநெறிகள்,கல்வி,இசை இன்னும் இன்னும் தொட்டு மனதில் பதியும் வண்ணம் எழுதியுள்ளார். சில சமயங்களில் அவரது எழுத்துக்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன். ஒவ்வொரு காலங்களில் உள்வாழ்க்கை முறைமை,உணவுப்பழக்க முறைகள்,திருமண சடங்குகள்,களவியல் ஒழுக்கம்,காதல்,தலைவன் தலைவிக்கிடையேயான ஊடல்,ப்ரிவு,துன்பம் இதர சடங்குகள், அக் காலத்து அக,புறச் சூழல் ,அந்தந்தக் காலத்து மன்னர்கள் பற்றியெல்லாம் தொட்டு ஆய்ந்துள்ளமையை வாழ்த்த வார்த்தையில்லை
இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை தினக்குரல், வீரகேசரி, தினகரன், காலைக்கதிர், தமிழர் தகவல், வடலி, பூங்காவனம், பதிவுகள் (இணையம்) ,காற்றுவெளி (மின்னிதழ்), லண்டன் இசை மகாநாட்டு மலர் ஆகிய ஊடகங்கள் வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தன.