கறுப்பின வரலாற்று மாதம் - குரு அரவிந்தன் -
சென்ற தை மாதம் முழுவதும் கனடாவில் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாடப்பட்டது. பல்லின மக்களும் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இது உதவியாக இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த பெப்ரவரி மாதம் பல்கலாச்சார நாடான கனடா முழுவதும் உள்ள மக்கள் கறுப்பின வரலாறு, அவர்களின் சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் அவர்களின் நாட்டிற்கான பங்களிப்புகளை மதிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர். ஒரு இனத்தின் வரலாறு ஆவணப்படுத்தப் படவில்லை என்றால், அந்த இனத்தின் மதிப்புமிக்க பாரம்பரியம் இல்லாமல் போய்விடும். அது இன்றைய உலகின் சிந்தனையில் ஒரு புறக்கணிக்கக்கூடிய காரணியாக மாறி, மெல்ல அழிந்து போய்விடக்கூடும்.
முதலில் அமெரிக்காவில் தான் 1926 ஆம் ஆண்டு கறுப்பின மாதமாக அறிவிக்கப்பட்டது. கனடாவில் பிப்ரவரி மாதத்தை ‘பிளாக் ஹிஸ்டரி’ மாதமாக ஒருமனதாக ஒப்புதல் பெற்று, மார்ச் மாதம் 4 ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம் கறுப்பின வரலாற்று மாதமாக ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் நினைவு மாதமாக இருக்கின்றது. அமெரிக்காவிலும், கனடாவிலும் பெப்ரவரி மாதத்திலும், ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் அக்ரோபர் மாதத்திலும் அனுசரிக்கப்படுகின்றது. வேறு சில நாடுகளும் வெவ்வேறு மாதங்களில் இதைக் கொண்டாடுகின்றன.
அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டனில் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தேசிய அருங்காட்சியகம் ஒன்று இருக்கின்றது. மேற்கு ஆபிரிக்க யோறூபன் (Yoruban) கலையின் மூன்றடுக்கு கிரீடங்கள் போல இந்தக் காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் காட்சியகத்தை 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தார். இங்கு சென்ற போது, நான் அறிந்திராத கறுப்பின மக்களைப் பற்றிய பல வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது.