இந்தியப் பயணத்தொடர் (1) பஹல்காம் (Pahalgam) நினைவுகள்! - நடேசன். -
2025 சித்திரை 22, புதன்கிழமைமதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.
வழியோரமாக, ஒரு காவல்துறை அதிகாரி எதிரே நின்ற வாகனத்தின் கண்ணாடியை லத்தியால் தாக்கினார். சாரதி எதையோ விளக்க முயன்றபோதும், அவர் மீண்டும் வந்து அவரது முகத்தையே தடியால் அடித்தார். அந்தக் கோரக் காட்சியைச் சகிக்க முடியாமல் நான் முகத்தை வாகனத்துள் திருப்பிக்கொண்டேன்.
சில நிமிடங்களில் நாங்கள் ஹோட்டலுக்குச் சென்றடைந்தோம். பூட்டியிருந்த இரும்புக்கதவுகள் எங்கள் வருகைக்காகத் திறக்கப்பட்டன. உள்ளே நுழைந்ததும், வரவேற்பறையில் நின்றிருந்த பெண் ஒருவர் உடனே கவனத்தை ஈர்த்தார்—அவரது உடை ரத்தத்தில் தோய்ந்திருந்தது. இரு சிறிய குழந்தைகளைப் பிடித்தவாறு, திகைப்பும் துயரமும் கலந்து, “எனது கணவரைக் காணவில்லை!” என்று ஆங்கிலத்தில் அழுதுகொண்டிருந்தார்.
அவரது ஆங்கிலத்தில் ஒரு மலையாளச் சாயல் இருந்தது. அவளது முழுமையான கூற்றுகள் எங்களுக்குப் புரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது—அவளுக்கு நாம் எந்தவிதமான உதவியும் செய்ய முடியாது.
அழகாக அலங்கரிக்கப்பட்ட அந்த வரவேற்பறையில், அந்தக் காட்சியின் பயங்கரத்தன்மை எங்கள் மூச்சை முட்டியது. நாங்கள் அமைதியாகப் பார்போது, உடையிலிருந்த ரத்தக் கறைகள் கழுவ, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.