தமிழ் எழுத்தாளர்களும், டிஜிட்டல் தொழில் நுட்பமும், ஒரு வேண்டுகோளும்! - வ.ந.கிரிதரன் -
* ஓவியம் - AI
தமிழ் எழுத்தாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் வந்து மேய்கிறார்கள். முட்டி மோதுகின்றார்கள். ஆனால் இணையத்தொழில் நுட்பம் அவர்கள்தம் கலையான எழுத்துக்கலைக்கு உதவக்கூடிய விடயங்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தம் படைப்புகளைக்கூட வெளியிடுவதற்கு முயற்சி செய்வதில்லை. படைப்புகளை வெளியிடுவதென்றால் இன்னும் அச்சு வடிவில் தம் படைப்புகள் வெளிவர வேண்டுமென்றுதான் நினைக்கின்றார்கள். அவ்விதம் வெளியிடப் பணமில்லையே என்று அழுது வடிகின்றார்கள். இவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் வாழும் இன்றுள்ள உலகம் டிஜிட்டல் உலகம். எல்லாமே டிஜிட்டல் வசமாகிக்கொண்டு செல்லும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இவ்விதம் எண்ணுவது அவர்கள் காலத்தின் இயல்பையும், அது வழங்கும் பயன்களையும் அறிந்துகொள்ளவில்லையென்பதையே காட்டுகின்றது.
முதலில் ஒன்றைக் கவனியுங்கள். எதற்காக உங்கள் படைப்புகள் அச்சுருவில் வரவேண்டுமென்று விரும்புகின்றீர்கள்? நூல்களை விற்றுப் பணம் சம்பாதிப்பதற்காகவா? என்னைப்பொறுத்தவரையில் உண்மையான எழுத்தாளர்கள் தம் படைப்புகள் பலரைச் சென்றடைய வேண்டுமென்றுதான் விரும்புவார்கள். ஒரு காலத்தில் குறைந்தது ஆயிரம் பிரதிகளை அச்சடித்தார்கள். இப்பொழுது அவ்வாறு யாரும் அச்சடிப்பதில்லை. தேவைக்கேற்ப 300 அல்லது அதற்கும் குறைவாகவே அச்சடிக்கின்றார்கள். தேவைக்கேற்ப அச்சடிக்கும் நிலை டிஜிட்டல் தொழில் நுட்பம் காரணமாக ஏற்பட்டு விட்டது. 300 பிரதிகள் அச்சடித்து எத்தனை பேர் வாங்கி படிக்கப்போகின்றார்கள்? வெளியீட்டு விழாவுக்கு வரும் பெரும்பாலனவர்கள் உங்கள் உறவுக்காரர், நண்பர்கள் , உங்களைத்தனிப்பட்டரீதியில் தெரிந்தவர்கள். இவர்களில் பலர் உங்கள் முகத்துக்காக வருபவர்கள். இவர்களில் எத்தனைபேர் உங்கள் நூல்களை உண்மையில் வாசிப்பார்கள் என்பது தெரியாது.