குரு அரவிந்தனின் சிறுகதைகளில் சமூகப் பார்வை! - சி. ரஞ்சிதா (களனிப் பல்கலைக்கழகம், இலங்கை) -
ஈழத்து யாழ். மண் ஈன்றெடுத்த எண்ணிலடங்காத புலமையாளர்கள் பலர். அவர்களுள் எழுத்துத் துறையில் பிரவேசமாகி தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய பெருமை மிகு சான்றோர்கள் வரிசையில் புலம் பெயர் எழுத்தாளர்களுக்கும் கணிசமான பங்களிப்பு இருக்கின்றது. எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர். ஈழத்தில் யாழ். மண்ணில் அவதாரம் எடுத்த அவர் இன்று புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் மணமும் தமிழ் உணர்வும் இலக்கிய படைப்பின் மீது கொண்ட தீராத அவாவினாலும் தன்னை ஓர் எழுத்தாளராக அடையாளப்படுத்திக்கொண்டு சிறுகதை, நாவல், மேடை நாடகங்கள், திரைக்கதை, சிறுவர் நாடகங்கள் எனப் பல்வேறு தளங்களில் நின்று பயணிக்கின்றார். இவருடைய எழுத்துக்கள் தமிழ்ச் சமூகத்தையும், அதன் பண்பாடு, பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்தும் அதேவேளை புலம்பெயர் நாடுகளில் அந்தப் பண்பாடு சார் பழக்கவழக்கங்கள் எவ்வாறான தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக சித்திரித்துள்ளன.
குரு அரவிந்தனின் படைப்புகளான இதுதான் பாசம் என்பதா?, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று ஆகிய சிறுகதைகளிலும் உறங்குமோ காதல் நெஞ்சம்?, உன்னருகே நான் இருந்தால், எங்கே அந்த வெண்ணிலா?, நீர்மூழ்கி நீரில் மூழ்கி… ஆகிய நாவல்களிலும் இவரது சமூக நோக்கு நன்கு வெளிப்படுவதைக் காணலாம். இக்கட்டுரையில் குரு அரவிந்தன் அவர்களால் படைப்பாக்கம் செய்யப்பட்ட “இழப்பு” ,“மூன்றாவது பெண்”, “பனிச்சருக்கல்” , “என் காதலி ஒரு கண்ணகி” ஆகிய சிறுகதைகளில் வெளிப்படும் சமூகப்பார்வை பற்றியே ஆராயப்படுகின்றது.