கட்டடக்கலையும் , வடிவமைப்பும்! - வ.ந.கிரிதரன் -
* ஓவியம் - AI -கட்டடக்கலையின் முக்கிய அம்சமே வடிவமைப்புத்தான். கட்டடச் சூழலை வடிவமைப்பதே கட்டடக்கலை என்று சுருக்கமாகக் கூறலாம். ஒரு நகரானது கட்டடங்களால் நிறைந்துள்ளது. கட்டடங்கள் நிறைந்த அச்சூழலை உருவாக்குவதே கட்டடக்கலை. கட்டடக்கலை எவ்விதம் கட்டடங்களை உருவாக்குகின்றது? இங்குதான் வடிவமைப்பு முக்கியமாகின்றது. கட்டடக்கலையானது வெறும் கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்ல. அக்கட்டடங்களைக் கட்டுவதற்கு முன், வடிவமைப்பதற்கு முன் பல விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.
கட்டட வடிவமைப்பின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் அவற்றின் அவசியமும்!
ஒரு கட்டடம் கட்டவேண்டுமென்று வாடிக்கையாளர் ஒருவர் விரும்பினால் கட்டடக்கலைஞர் ஒருவர் பின்வரும் விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும். அக்கட்டடம் எதற்காகக் கட்டப்பட வேண்டும்? நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கட்டடத்தை வடிவமைக்க முடியாது. உதாரணத்துக்கு வாடிக்கையாளர் தான் வசிப்பதற்கு ஓர் இல்லத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது ஒரு கல்விக்கூடத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது நூலகம் ஒன்றினை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். இவ்விதம் அவ்வாடிக்கையாளரின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்வதே வடிவமைப்புச் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் முதலாவதாக இருக்கும்.
வாடிக்கையாளரின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதுடன் , அவர் அத்திட்டத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றியும் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். இதை வாடிக்கையாளருடன் கட்டடக்கலைஞர் நடத்தும் உரையாடல்கள் மூலம் பெற முடியும்.
வாடிக்கையாளரின் நோக்கம், அவர் அந்நோக்கத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றிய தெளிவான புரிதல் சிறந்த வடிவமைப்பை உருவாக்குவதற்கு மிகவும் அவசியமாகும்.