வடகிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று புகலிடத் தமிழர்களின் ஆடம்பர வாழ்க்கை முறையும், இன்னும் பொருள் மீதான அவர்களின் நாட்டம் மிக்க போக்கும்தான். அடுத்தது இதனால் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட வெளிநாட்டு மோகமும்தான்.

புகலிடத்தமிழர்கள் சொத்துச் சேகரிக்கும் ஆர்வம் இன்று அங்கு வாழும் மக்களின் இருப்புக்குப் பெரும் இடைஞ்சலாக உள்ளது. புகலிடத்தமிழர்களின் ஆதரவில் வாழும் அவர்களைச் சார்ந்த சொந்த உறவுகள் மத்தியில் புழங்கும் பணம் அவர்களை ஆடம்பரப்பிரியர்களாக மாற்றியமைத்துள்ளது.

தொழிற்சாலைகள் அங்கு திறந்தாலும், அவர்களால் தொழிற் கல்வி கற்று அவற்றில் வேலை செய்யும் ஆர்வம் அவர்களுக்கு இல்லை. இங்கிருந்து அங்கு சென்று தொழிற்சாலைகள் பல திறந்தவர்களின் அனுபவங்கள் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.

முதலில் அங்குள்ள இளைஞர்களின் வெளிநாட்டு மோகத்தைக் குறைக்கும் வகையில், அங்கு ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வகையில் தொழிற்கல்வியினைக் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை வழிநடத்தப்பட வேண்டியது அவசியம், அதற்கான செயற்பாட்டில் ஈடுபடுவதும் அவசியம்.

புகலிடத் தமிழர்கள் அங்கு சொத்துகளை வாங்கிக் குவிப்பதை நிறுத்த வேண்டும்.அவர்களுக்குப் புகலிடங்களில் இருக்கும் சொத்துகள் போதுமானவை. அங்குள்ள மக்கள் நியாயமான விலைகளில் அங்கு சொத்துக்கள் வாங்கும் வகையில் அவர்கள் வாழ்க்கையினை முன்னேற்றும் வகையில் சிந்திக்க வேண்டும்,. செயற்பட வேண்டும். ஆடம்பரத் திருமண நிகழ்வுகள் போன்றவற்றை அங்கு நடத்துவதைப் புகலிடத்தமிழர்கள் நிறுத்த வேண்டும். யுத்தத்தால் பாழடைந்த மண்ணை மீண்டும் கட்டியெழுப்புதில் புகலிடத் தமிழர்களுக்கு உண்மையில் ஆர்வம் இருந்தால் இவை அவசியம்.

போரின் பின்னான மண்ணைப் பொருளியல்ரீதியில் முன்னேற்றுவதற்கு ஆற்றவேண்டிய முக்கிய செயற்பாடுகளை விட்டுவிட்டு , தொடர்ந்தும் அரசியல்வாதிகள் புகலிடத்தமிழர்கள் மத்தியில் இருக்கும் அரசியல் சக்திகளின் ஆர்வத்துக்கேற்பச் செயற்படுகின்றார்கள். தூண்டிவிடும் புகலிடத் தமிழ் அரசியல் சக்திகள் ஒருபோதும் சொந்த மண்ணுக்குச் சென்றி நிரந்தரமாக வாழப்போவதில்லை. பெரும்பாலானவர்கள் புகலிட மண்ணில் காலூன்றி விட்டார்கள். புகலிடத் தமிழ் அரசியல் சக்திகளின் அபிலாசைகளுக்கேற்ப ஊடகவியலாளர்களில் பலர் செயற்படுகின்றார்கள். சமூக ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கித்தான் கூறுகின்றேன். ஏனெனில் அவர்கள் நோக்கம் பணம் சம்பாதிப்பது.

விவசாயம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. உள்ளூரில் உற்பத்தி செய்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் அவற்றைச் சந்தைப்படுத்துவதை எப்படித் திறமையானதாக மாற்றலாம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். சரியான சந்தைப்படுத்தல் இல்லையென்றால் உள்ளூர் உற்பத்தி அதிகரிக்காது. உள்ளுர் உற்பத்தி நிறைய வருமானத்தைத் தருமென்றால் அங்குள்ளவர்கள் அவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உதாரணம் ஶ்ரீமா அம்மையாரின் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் உள்ளூர் உற்பத்தி விவசாயம், கலை, இலக்கியம் என்று பல துறைகளில் பெரும் பாய்ச்சலைக் கண்டதை நாம் அறிவோம்.

புகலிடத்தமிழர்கள் அங்கு தொழில்களை, வர்த்தகங்களை ஆரம்பித்து அங்குள்ள நுகர்வாளர்களில் தங்கியிருப்பதற்குப் பதில் , அங்குள்ள சிறு தொழில் உற்பத்தியார்களுடன் இணைந்து தம் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களை ஆரம்பித்து அங்குள்ளவர்களும் பயனை அடையும் வகையில் தம்மை மாற்ற வேண்டும்.

புகலிடத் தமிழர்கள் உருவாக்கிய ஆக்கபூர்வமான விளைவுகள்!

அதே சமயம் புகலிடத் தமிழர்களால் ஆக்பூர்வமான விடயங்களும் நடந்திருக்கின்றன. அதில் முக்கியமானது புதிதாக உருவாகியுள்ள தொழில் அதிபர்கள். புகலிடத் தமிழர்களின் நுகர்வுக்காய்ப்பலர் மிளகாய், ஊறுகாய், வடகம், கேக் போன்றவற்றை உற்பத்தி செய்து அனுப்புகின்றார்கள். இவர்களில் பெண்கள் பலரும் ஈடுபட்டுள்ளார்கள். மிகுந்த இலாபத்தையும் ஈட்டுகின்றார்கள்.

இவ்விதம் புகலிடத் தமிழர்களின் வருகையால் பயனை அடையும் வகையிலான தொழில்கள் பற்றிச் சிந்தித்து அவற்றில் அங்குள்ளவர்கள் ஈடுபடலாம். அவ்விதம் ஈடுபடுவது சுய தொழில்களை உருவாக்கும். சில இலாபம் தரும் தொழில்களாக உருவாக்கப்படக்கூடியவை:

1. புகலிடத் தமிழர்களின் சுற்றுலாவைப் பயனுள்ளதாக்கும் வகையில் சுற்றுலாப் பயணங்களை நியாயமான விலையில் அமைத்துச் செய்ற்படுத்தல்.

2. மாநகரசபைகள் அங்குள்ள் சுற்றுலாத் தலங்களைப் பாவிக்கும் வகையில் அவற்ற்றை சீரமைத்துத் திட்டங்களைச் செயற்படுத்தலாம், அவற்றின் அடிப்படையில் தொழில்களை ஆரம்பிப்பதை ஊக்குவிக்கலாம். அது புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்.

3.சுவடிகள் திணைக்களம் போன்றவற்றில் ஆவணங்கள்ப் பிரதியெடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்யலாம். நியாயமான கட்டணத்தை அறவிடலாம்.

4. பழைய புத்தகங்களைச் சேகரித்து விற்கலாம். இதற்கும் நிறைய தேவை உண்டு.

5.நெசவு நிலையங்கள் புகலிடத் தமிழர்களை மையமாக வைத்து ஆடைகளை உற்பத்தி செய்யலாம். இதுவும் பலருக்கு வேலை வாய்ப்பினைக் கொடுக்கும்,

6. பல்வகைப் பானங்களை, ஜாம் போன்றவற்றை புகலிடத் தமிழர்களை மையமாக வைத்து உருவாக்கும் தொழில்களை ஆரம்பிக்கலாம். இதற்கும் தேவை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

7. இப்பொழுது ஒரு சிலர் செய்வதைப்போல், புகலிடத் தமிழர்களுக்குப் பயன்படும் காணொளிகளை உருவாக்கிச் சமூக, ஊடகங்களில் பணம் சம்பாதிக்கலாம்.

8. சுற்றுலா வழிகாட்டிகளாக புகலிடத் தமிழ் உல்லாசப் பயணிகள் உட்பட உல்லாசப் பயணிகளுக்கு உதவும் தொழில்களைச் செய்யலாம்.

9. உதவியை நாடும் தனித்திருக்கும் முதியவர்களுக்கு பொருட்களை வாங்கி ,விநியோகிக்கும் தொழில் செய்யலாம்.

10. மாணவர்களுக்குத் தனிப்பட்டரீதியில் கற்பிக்கும் டியூசன் ஆசிரியர்களாக இருக்கலாம்.

11. புத்தகங்களைச் சேகரித்து , வாடகைக்குக் கொடுத்துச் சம்பாதியுங்கள்.

இவ்விதம் சிந்தித்துப் பார்த்தால் பல தொழில்களைச் செய்யலாம். இவ்விதமாகச் சுய தொழில்களைச் செய்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.இவ்விதம் ஆரம்பிக்கப்படும் சுய தொழில்கள் காலப்போக்கில் பெருந்தொழில்களாக உருவாகவும் சாத்தியங்கள் உள்ளன.

மேனாடுகளிக் சுயதொழில் என்பது பொருளாதாரத்தின் முக்கியமான அடித்தளங்களில் ஒன்று. அதற்காக அரச உதவிகள் பலவும் உண்டு. இலங்கையிலும் சுய தொழில்களுக்கு உதவும் ,நிதி உதவி அளிக்கும் அரச நிறுவனங்கள் உள்ளன. அவற்றைப் பயண்படுத்த வேண்டும்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்