
“ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” – பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வேத வசனமானது, இயேசு கிறிஸ்து தனது சொந்த ஊரான நாசரேத்தில் அவரது ஊர்க்காரர்களால் நிராகரிக்கப்பட்டு, கடுமையாக நிந்திக்கப்பட்டபோது, வெறுப்போடும் விரக்தியோடும் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு உலகத்தாரால் போற்றப்பட்டு புனிதமாக்கப்பட்ட ஒருவர், அவரது சொந்த ஊர்க்காரர்களாலேயே நிராகரிக்கப்பட்டு நிந்தனைக்கு ஆளாவது ஆரம்பத்தில் ஆச்சரியமூட்டுவதாக இருந்தாலும், பின்னர் இது உலகத்தில் நடைமுறையில் உள்ள ஒரு பொதுவான இயல்பான விடயமே என்ற உண்மை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. அதிலும், ஈழ–புகலிட இலக்கியத் தளத்தில் ஒரு தீவிர வாசகனாக நான் உள் நுழைந்த போது இந்த உண்மை மீண்டும் மீண்டும் எனக்கு மெய்ப்பிக்கப்பட்டது.
ஈழ-புகலிட இலக்கியப்பரப்பில் எழுத்தாளராக, கவிஞராக, செயற்பாட்டாளர்களாக இயங்கி வரும் ஆளுமைகளில் பெரும்பாலோர் தூற்றப்படுவதும் தூசிக்கப்படுவதும் அவர்கள் மீது அவதூறுகள் அள்ளி வீசுப்படுவதும் பல்வேறு தசாப்தங்களாகத் தொடர்கின்ற நாம் அறிந்த ஒரு அவல நிலை. அவர்கள் உலகளாவிய ரீதியில் மற்றைய சமூகத்தினரால் ஆற்றல் மிக்க ஆளுமைகளாகக் கௌரவிக்கப் பட்டும் கொண்டாடப்பட்டும் கொண்டிருக்கும் வேளையிலும் அவர்களை நக்கல் செய்வதும் நையாண்டி செய்வதும் எமது சமூகத்தவரின் தலையாய கடைமைகளாகக் கருதப்படுகின்றன.
இலக்கிய ஆளுமையாளர் ஒருவர் எத்தகைய ஆற்றல் மிகுந்தவராக அர்ப்பணிப்புடன் இயங்குபவராக இருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு எத்தகைய விருது கிடைத்தாலும் உலகளாவிய ரீதியில் அவர்கள் கௌரவிக்கப்பட்டாலும் இதுவும் அவர்களுக்கு அது ஒரு பெரிய விடயம் அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் அவர் பிறந்த ஊர், பிரதேசம், சமூகப் பின்னணி, தொழில், குடும்பப் பின்னணி போன்ற அந்தரங்க விடயங்கள் முக்கியமானவைகள் ஆகும். அவரை அவரது துறை சார்ந்து மதிப்பீடு செய்யாமல் அவரது அடையாளம் சார்ந்து அவரது பின்னணி சார்ந்து உரசிப் பார்ப்பது இவர்களது வழமையாகி விடுகின்றது. இத்தகைய அணுகுமுறையில் இவர்கள் பல்வேறுபட்ட ஆளுமைகளையும் தொடர்ச்சியாக நிராகரிப்பதுடன் அவர்களை நிந்தனை செய்வதையும் நாம் கடந்த 30 , 40 வருடங்களாக கண்கூடாகப் பார்த்து வருகின்றோம். அந்தக் காட்சிகள் சிலவற்றை நாம் மீளவும் காட்சிப்படுத்திப் பார்க்கலாம்.
காட்சி 1
பிரான்சிலிருந்து 2001 ம் ஆண்டு 'சனதருமபோதினி' என்னும் தொகுப்பு நூல் ஒன்று வெளிவருகின்றது. அந்நூலில் ஒரு நேர்காணல் ஒன்று வெளியாகியிருந்தது. அந்த நேர்காணலின் தலைப்பு 'வானத்தால் போன பிசாசை ஏணி வைத்து இறக்கியது போல' என்பதாகும். அங்கு நேர்காணல் செய்யப்பட்டவர், நேர்காணலை மேற்கொண்ட இருவரால் பிசாசாக அடையாளப்படுத்தப் பட்டு மிகவும் கேவலமாக நக்கலும் நையாண்டியும் செய்யப்படுகின்றார். இப்படியாக அன்று எள்ளலுக்கு உள்ளாகி ஏளனம் செய்யப்பட்டவர் எஸ்.பொ. என்றழைக்கப்படுகின்ற எஸ்.பொன்னுத்துரை ஆவார்.
எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையை நீங்கள் அறிவீர்கள். நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் 5,6, தசாப்தங்களுக்கு மேலாக தனது இலக்கியப் பணி யை ஒரு சுவிஷேசப் பணியாக கருதி அர்ப்பணிப்புடன் இயங்கிய வந்தவர். பல உன்னதமான நாவல், சிறுகதைகளைப் படைத்தவர். அதற்குமப்பால் நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஈழத் தமிழ் இலக்கிய உலகில் மார்க்சியச் சிந்தனைகளை முன்வைத்து 'முற்போக்கு எழுத்தாளர்கள்' தீவிரமாக இயங்கிய காலத்தில், அதற்கு மாற்றாக 'நற்போக்கு' என்ற புதிய சிந்தனை அமைப்பை உருவாக்கி ஒரு புதிய சிந்தனை மரபை உருவாக்கியவர். இத்தகைய பெருமைகளுக்குரிய மதிக்கப்பட வேண்டிய ஓர் ஆளுமையாளர் இங்கு பிசாசாக அடையாளப்படுத்தப் பட்டு அவமானப் படுத்தப்படுகின்றார்.. இங்கு இன்னுமொரு ஆச்சரியமூட்டக் கூடிய விடயமும் உண்டு. மேற்குறித்தபடி வானத்தால் போன எஸ்.பொ. அவர்களை ஏணி வைத்து இறக்கி தூற்றிய இந்தப் புண்ணியமூர்த்திகள் இருவரும் அவரது மறைவிற்குப் பின்பு அவரே எமது துரோணாச்சாரியார், அவரே எமக்கு எழுத்தாணி பிடிக்கக் கற்றுக் கொடுத்தவர், எமது மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் இவரே என்று மாய்ந்து மாய்ந்து போற்றுதல் செய்கின்றனர். இவையெல்லாம் ஈழ-புகலிட இலக்கியப் பரப்பில் மட்டுமே நிகழக் கூடிய அசாத்தியமான ஆச்சரியங்களாகும்.
காட்சி 2
பத்மநாப ஐயர். ஈழ-புகலிட இலக்கியத் தளத்தில் ஓரளவு பரிச்சயம் உள்ளவர்களாக இருந்தாலும் நீங்கள் இந்தப் பெயரை அறியாமலிருந்திருக்க முடியாது. சுமார் 60 வருட காலமாக ஈழ-புகலிட இலக்கிய உலகில் அர்ப்பணிப்புடன் இயங்கி வருபவர். ஆயினும் இவர் எழுத்துப் பணி புரிந்த மனிதரல்ல. மாறாக பதிப்புத் துறையில் தனது தடங்களை ஆழமாகப் பதித்தவர். நூலகப் பணிகளுக்கும் பல்வேறு வகையிலும் தனது உழைப்பினை நல்கி வருபவர். இலைமறை காயாக இருந்த பலரது எழுத்துக்களையும் வெளிக்கொணர்ந்தவர் . கூடவே சொந்த வாழ்வில் நலிந்த பல எழுத்தாளர்களுக்கும் பொருளுதவி செய்து வந்தவர். இன்றும் வயது முதிர்ந்து ஒரு தளர்வான நிலையினை எட்டியபோதும் புத்தகப் பணியையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கி வருபவர். இத்தகைய நூல்களை ஆராதிக்கும் இலக்கியப் பணியே எனது வாழ்கையின் பணி என்று கருதி வாழ்ந்து வரும் இந்த ஆளுமை குறித்து மேற்குறித்த ‘சனதருமபோதினி’ இதழின் ஆசிரியர் உரையில் பின்வருமாறு எழுதுகின்றனர்.
"புகலிடத்தில் எல்லோருமே தலித்துக்கலாம். ஆனால் புகலிட இலக்கிய ஆதர்சத்தின் பெயர் பத்மநாப ஐயராம். ... பார்பானை ஐயரெனும் காலமே போ!"
இவர்களெல்லாம் மீண்டும் பத்மநாப ஐயரை போற்றுவதற்கும் புனிதப்படுத்துவதற்கும் எஸ்.பொன்னுத்துரை போலவே பத்மநாப ஐயரும் மரணமடையவேண்டும் என்று நினைக்கிறேன். அத்தகையதொரு நிகழ்வை நாம் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
காட்சி 3
அவர் ஓர் இளம் எழுத்தாளர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஈழத்திலும் தமிழகத்திலும் இளைய தலைமுறை எழுத்தாளர்களிடையே ஒரு முன்னோடியாகக் கொண்டாடப்படுபவர். ஒரு சில வருடங்களுக்கு முன்புதான் ஈழத்திலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்திருந்தார். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் தனது சமூக அடையாளத்தை ஒரு போதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. வெளிக்காட்ட விரும்பியதுமில்லை. ஏனெனில் அந்த வலியினை அந்த சமூகத்தில் பிறந்த ஒருவரால்தான் புரிந்து கொள்ள முடியும். ஒரு சந்தர்ப்பத்தில் இங்கு ஒரு சிலருடன் அவருக்கு ஒரு சில கருத்து மோதல்கள் ஏற்பட்டன. அதனால் அவருடன் கருத்து முரண்பாடு கொண்டவர்கள் அவரை எமது இலக்கியத் தளத்திலிருந்து ஓரங்கட்ட முடிவெடுத்தனர். அதனால் தொடர்ச்சியாக அவர் மீது அவதூறு பொழிந்தனர். பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். அதில் ஒன்றாக அவர்கள் தம்மை தலித்தியச் செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு இந்த இளைஞரை ஒரு சமூக (சாதி) வெறியராக, சைவ ஆதிக்கசாதிக் கருத்துக்களை முன்னெடுப்பவராக அடையாளப்படுத்தத் தொடங்கினர். இந்தத் தாக்குதல்கள் மிக மோசமாகத் தொடரவே ஒரு கட்டத்தில் அந்த இளம் எழுத்தாளர் அவரது விருப்பமின்றியே தான் ஓர் ஒடுக்கப்பட்டக்க சமூகத்தைச் சேர்ந்தவர் என்று பகிரங்கமாக பிரகடனம் செய்கிறார்.
எப்படி இருக்கின்றது இந்த அயோக்கியத்தனம் ? இந்த வினோதமான முரண்பாட்டினை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா ? தம்மை ஓர் உயர்வான, ஒரு பாதுகாப்பான இன்னும் சொல்லப்போனால் ஒரு சொகுசான உயரிய இடத்தில் நிலைநிறுத்திக் கொண்டுள்ள இந்த சைவ ஆதிக்க சமூக/புரட்டஸ்டான்ட் மேட்டுக்குடிகளிற்கு ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் எதிர்நோக்குகின்ற வலிகளும் வேதனைகளும் புரியப்போவதில்லை. அதனால் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, அதன் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து, அதிலிருந்து விடுபட அதனை மறந்து, அல்லது மறைத்து வாழும் மனிதர்களையும் இந்தக் கயவர்கள் விட்டு வைப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் அனுபவிக்கும் வலி எதனையும் பொருட்படுத்தாமல் அவர்களைப் பொது வெளிக்குக் கொண்டு வந்து அவர்களது சமூகத்தை இன்னதென்று அடையாளப்படுத்தி அவர்களை அவமானப்படுத்துவதுதான் இந்தக் கயவர்கள் செய்யும் முக்கிய கைங்கரியம். இதனால் இவர்களுக்கு எந்தவித சிக்கல்க்களுமில்லை. தலித்தியம் பேசுவதாக பாசாங்கு செய்து கொள்ளும் இந்த அயோக்கியர்கள்தாம் உண்மையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எதிரிகள். ஈழ-புகலிட இலக்கியத் தளத்தில் மரணம் மட்டும்தான் ஒருவனை தூற்றுதலில் இருந்து விடுவித்து அவனை போற்றுதலுக்குரிய மனிதனாக மாற்றும் மீட்சிக்குரிய ஒரேயொரு வழியாகும். இப்படி இந்த நயவஞ்சகர்களால் அவதூறுகளுக்கு உள்ளாகி அவமானப்படுத்தப்படும் இந்த இளம் எழுத்தாளர் இவர்களால் போற்றுதலுக்கு உள்ளாக்கப்பட வேண்டுமாயின் அவன் என்ன இளவயதில் அகால மரணமடைய வேண்டுமா என்ன ?
மேலே குறிப்பட்ட காட்சிப் படுத்தல்கள்களின் ஊடாக நாம் ஈழ-புகலிட இலக்கியத் தளத்தின் ஒரு குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தினை புரிந்து கொள்ளாலாம். இத்தகைய நக்கலும் நையாண்டியும் செயப்பட்டு, அவமனாபப்டுத்தப்படும் மிக அதிகமான அங்கீகரிக்கப்படாத ஆளுமைகளைக் கொண்டது எமது சமூகம். இத்தகைய அயோக்கியத் தனங்களுக்கு அப்பாலும் இத்தகை கயவர்களாலும் நயவஞ்சகர்களாலும் கட்ட்மைக்கப்பட்டிருந்தாலும் ஈழ-புகலிட இலக்கியமானது இன்னமும் உயிர் வாழ்கின்றது என்பது ஒரு ஆச்சரியகரமான விடயம்தான்.
இத்தகைய காட்சிப் படுத்தல்களுக்கிடையில்தான் அண்மையில் 'அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகு' என்ற தொகுப்பு நூல் என் பார்வைக்குக் கிட்டியது. தோழர்கள் எம்.பௌசரும் பாலசபேசனும் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். இத்தகைய ஒரு நூலை வெளியிட்ட தோழர்கள் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்நூலானது வெளிவராதவாறு இவர்கள் மீதும் பல்வேறு அழுத்தங்களும் எதிர்ப்புக்களும் இந்த அயோக்கியர்களால் பிரயோகிக்கப்பட்டிருக்கும் என்பது எனது ஊகம். ஏனெனில் நாம் மேலே அவதானித்த காட்சிப்படுத்தல்களுடன் நிராகரிக்கப்பட்டு நிந்திக்கப்பட்ட ஆளுமைகள் போலவே, எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் ஈழ-புகலிட இலக்கியத் தளத்தில் பல்வேறு நிராகரிப்புக்களுக்கும் நிந்தனைகளுக்கும் தொடர்ச்சியாக உள்ளாக்கப்படுபவர் என்பதினை எம்மால் அறியமுடிகின்றது.
அ.முத்துலிங்கம் என்று அழைக்கப்படுகின்ற அப்பாத்துரை முத்துலிங்கம் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் ஒரு மூத்த எழுத்தாளர். ஈழ-புகலிட இலக்கிய உலகம் மட்டுமன்றி நவீனத்தமிழ் இலக்கிய உலகம் முழுவதுமே இவரை ஒரு முதன்மையான முன்னோடி எழுத்தாளராகக் கொண்டாடி வருகின்றது. முக்கியமாக தமிழகத்தின் முதன்மையான எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கவிஞர்கள் என்று பலரும் இவரது படைப்புக்களை நவீனத் தமிழ் இலக்கியத்தின் உச்சம் என்று கொண்டாடித் தீர்க்கிறார்கள். நாவல், சிறுகதை, கட்டுரைகள், விமர்சனங்கள், மதிப்புரைகள் என்று இதுவரை இவரது 30 இற்கும் மேற்பட்ட நூல்கள் வெளி வந்துள்ளன. இவரது பல படைப்புக்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் உலகளாவிய ரீதியில் தமிழ் இலக்கியப் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் செயலாற்றி வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராகவும் பணியாற்றி வருகின்றார்.
ஒருவரை மதிப்பிடுவதற்கு மேலே எம்மால் குறிப்பிடப்பட்ட பணிகள் யாவும் போதுமா ? இல்லவே இல்லை. ஒரு ஆளுமையை வேறு வகையில்தானே உரசிப் பார்க்க வேண்டும். அப்படி உரசிப் பார்த்தால்தானே ஒருவரை நக்கல் செய்ய முடியும் நையாண்டி பண்ண முடியும். அதுதானே எமது ஈழத்தமிழ் பாரம்பரியம். அந்த வகையில் அ.முத்துலிங்கமும் அணுகப்படுகின்றார். அவரது பிறந்த இடம், சமூகம், அவர் பார்க்கும் வேலை , அவரது குடும்பப் பின்னணி போன்றவை எல்லாம் அலசி ஆராயப்படுகின்றன. பல்வேறு வகைகளிலும் அவர் எள்ளல் செய்யப்படுகின்றார். ஏளனப் படுத்தப் படுகின்றார். ஒவ்வொரு தடவையும் கனடா இலக்கியத் தோட்டம் விருதுகளை அறிவிக்கும் போதெல்லாம் அவ்விருதுகள் பெறுபவர்கள் மட்டுமன்றி அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராகிய அ.முத்துலிங்கமும் பல்வேறு கண்டனங்களுக்கும் வசைபாடல்களுக்கும் உள்ளாகின்றார். இவற்றிக்கெல்லாம் முத்தாய்ப்பாக 2024ம் ஆண்டு தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் இயல் விருது 'அ.முத்துலிங்கம் இயல் விருது' என்றழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் பிரம்படி பட்ட மக்களாக எமது ஈழ-புகலிட இலக்கியக் காவலர்கள் அனைவரும் அலறித் துடித்து குய்யோ முறையோ என்று அவதூறுகளை அள்ளி இறைக்கின்றனர். அம்பாறையிலிருந்து அல்லைப்பிட்டி ஊடாக ஆரம்பிக்கும் இந்த அவதூறுகள் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஐக்கிய அமீரகம் என்று அனைத்துக் கண்டங்களிலும் உள்ள நாடுகளுக்கும் பரவி விரிவடைகின்றது.(பழங்குடி மக்கள் மட்டும் வாழும் பப்புவா நியூகினியில் இருந்து மட்டும் எதுவுமே எமக்குக் கிடைக்கப்படுவதிலை. ஆயினும் அங்கும் ஈழத்தமிழர்கள் பலர் வாழ்ந்து வருவதினை நாம் அறிகின்றோம்). இந்தத் அவதூறுகளின் உச்சக்கட்டமாக ஒரு கட்டத்தில் ஒரு எழுத்தாளப் பெருந்தகை ஒருவரால் 'திரு.மூடுலிங்க' என்ற தலைப்பில் சிறுகதை ஒன்று எழுதப்படுகின்றது. இந்தக் கதையில் அந்தப் புண்ணியவான் அ.முத்துலிங்கத்தின் அந்தரங்கக வாழ்க்கைக்குள் உள் நுழைந்து அவரை எள்ளல் செய்கின்றார்.
காலமும் சூழலும் உவப்பில்லாத இத்தகைய காலகட்டத்தில்தான் 'அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகு' என்ற என்ற இந்த நூல் வெளிவந்திருக்கின்றது. இந்நூலினை வாசிக்கும்போது, இந்நூலானது இத்தகைய வன்மங்களுடன் கூடிய அவதூறுகளுக்கெல்லாம் எதிரான ஒரு மறுப்பறிக்கை போலவே எம்மால் உணரமுடிகின்றது.
இனி நூலின் உள்ளே நாம் போகலாம்:
'அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகு - பார்வைகள், மதிப்பீடுகள்,ஆய்வுகள்' என்ற இந்த நூலில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் என்று 20 இற்கும் மேற்பட்ட ஆளுமைகளினால் எழுதபட்ட கட்டுரைகள் அடங்கியிருக்கின்றன. 320 இற்கும் மேலான பக்கங்களை உள்ளடக்கிய கனத்த அட்டையுடன் கூடிய ஒரு கனமான நூல். நூலின் கனத்தை போன்றே உள்ளே உள்ள கட்டுரைகளும் கனதியானவையாகவும் காத்திரமானவையாகவும் அமைந்துள்ளன.அட்டையை அலங்கரிக்கும் அ.முத்துலிங்கத்தின் நிழற்படம்தான் கொஞ்சம் அழகற்றதாக இருக்கின்றது. அவரின் அழகான நிழற்படங்கள் சமூகவலைத்தளங்கள் எங்கும் விரவியே இருக்கின்றன. வெளியீட்டாளர்கள் அதிலொன்றை தேர்வு செய்திருக்கலாம்.
கவிஞர் சேரன் முன்னுரை வழங்கியிருக்கின்றார். 'இந்தப் பெருநூல் ஆனது அவருக்கான ஒரு சிறு கௌரவம் மட்டும்தான்' என்று கூறுகின்றார். உண்மைதான். ஒரு மாபெரும் ஆளுமைக்கு அங்கீகாரம் தரத் தவறிய சமூகமாக நாம் இருக்கின்றோம். இப்படியான நூல்கள் வெளிவரும் தருணங்களிலாவது நாம் எமது குற்றவுணர்ச்சியினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
பேராசிரியரும் சினிமா ஆய்வாளருமான சொர்ணவேல் ஈஸ்வரனின் கட்டுரை முதலாவதாக இந்நூலில் இடம்பிடித்துள்ளது. 'போ எனும் மந்திரச்சொல்' எனும் தலைப்பில் அவர் முத்துலிங்கத்தின் தாயார் இறக்கும் தருவாயில் இறுதியாகச் சொன்ன 'போ !' என்ற ஒற்றைச் சொல் எப்படி உலகம் முழுவதும் இவரை அலைக்கழித்திருக்கின்றது என்ற உண்மையினைச் சொல்லிச் செல்கின்றார்.
'இருபது இருபத்தியோராம் நூற்றாண்டின் ஈழத்தமிழரின் தமிழ் படிப்பு ஊழியம்' என்ற தனது கட்டுரையில் எஸ்.பொ. அ.முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி நூல் குறித்து எழுதுகையில் 'அடுத்த நூற்றாண்டில் மாறப்போகின்ற கதைக்களங்களிற்கும், பொருள்களுக்கும், உபாயங்களுக்கும், உத்திகளுக்கும் இந்நூல் ஒரு வெள்ளோட்டம்' என்று கூறுகின்றார். உண்மையில் எத்தகையதொரு தீர்க்கதரிசனம். இதனை ஏற்கும் நிலையில் நாம் இருக்கின்றோமா என்பதுதான் என்னிடையே எழும் முக்கிய கேள்வி.
கவிஞர் கருணாகரன் தனது கட்டுரையில் ஈழச் சூழலில் இவரது கதைகள் ஏன் கொண்டாடப்படவில்லை, ஏன் ஈழத்து வாசகர்களுக்கு இவரது கதைகள் ஒவ்வாமையாக இருக்கின்றது என்ற காரணத்தை ஆராய்ந்து செல்கிறார். ஈழத்தில் கதைகளில் அரசியல் கொதிப்பு இருக்க வேண்டும். மேலும் தான் எந்தத் தரப்பின் ஆள் என்பதை வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிடில் அவர்களுக்கு அங்கு அங்கீகாரம் கிடைக்காது என்ற பல எழுதப்படாத உண்மைகளை எடுத்துச் சொல்கிறார்.
கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதி முத்துலிங்கத்திற்கும் தனக்கும் இருந்த தனிப்பட்ட உறவுகளை விபரிக்கையில் சென்னை கொழுத்தும் வெயிலில் கூட கோட்டினை கழட்ட மறுத்த அ.முத்துலிங்கத்துடன் தேநீர் குடித்த சம்பவத்தை நகைச்சுவையாக விபரித்து தான் முதலில் பார்த்த கறுப்பு கோட்டணிந்த மனிதரை இப்போது ஒட்டு மொத்த தமிழ் உலகமும் பொன்னாடை போர்த்தி மகிழ்வதை மகிழ்வுடன் விபரிக்கின்றார்.
சுமார் 45 பக்கங்களிற்கும் மேலான கட்டுரையினை ஜெயமோகன் எழுதியிருக்கின்றார். இதில் தனது 15 வது பக்கத்திலேயே அவர் முத்துலிங்கம் குறித்து எழுத ஆரம்பிக்கின்றார். ('ஈழ இலக்கியம் -ஒரு விமர்சனப்பார்வை' என்ற நூலில் ஜெயமோகன், அ.முத்துலிங்கம் குறித்து 'புன்னகைக்கும் கதை சொல்லி' என்ற ஒரு மிகச் சிறப்பான கட்டுரையினை எழுதியிருக்கின்றார். தொகுப்பாளர்கள் அதனைச் சேர்த்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட தாழ்மையான அபிப்பிராயம்). ஜெயமோகனிற்கும் அவருக்குமுள்ள நெருக்கமான உறவு நாம் அறிந்ததே. அவரிற்கு ஜெயமோகனுடன் இருக்கும் உறவே பலரும் அவரை வெறுக்கும் காரணிகளில் ஒன்றாக இருப்பதும் நாம் அறிந்த கசப்பான உண்மை.
மேலும் எஸ்.ராமகிருஷ்ணன், அனோஜன் பாலகிருஷ்ணன், தெளிவத்தை ஜோசப், ஜி.குப்புசாமி, நாகரத்தினம் கிருஷ்ணா போன்றவர்களும் வேறு பல ஆய்வாளர்கள், விமர்சகர்களும் எழுதிய கட்டுரைகள் இந்நூலிற்கு செழுமை சேர்க்கின்றன.
ஏற்கனவே அ.முத்துலிங்கத்தின் நூல்களிற்கு வழங்கப்பட்ட முன்னீடுகளில் இருந்து க.கைலாசபதி. அசோகமித்திரன், நாஞ்சில்நாடன். வெங்கட்சாமிநாதன், க.மோகனரங்கன் போன்றவர்களிது மதிப்பீடுகள் பிரசுரமாகியுள்ளன. இதில் பேராசிரியர் கைலாசபதி கொக்குவில் பகுதியில் வாழும் சுருட்டுத் தொழிலாளிகளின் மன உணர்வுகளை திறம்பட சித்தரிக்கும் அ.முத்துலிங்கம் அந்தத் தொழிலாளிகள் வாழும் புறவுலகில் காணப்படும் அவலங்களை சொல்ல மறந்ததாக ஒரு கடுமையான விமர்சனத்தை தனது பொருள்முதல்வாதப் பின்புலத்தில் வைத்துச் சென்றுள்ளார். ஆனால் இதற்குப் பதில் அளிக்கும் முகமாக வெங்கட்சாமிநாதனின் மதிப்பீடு அமைந்துள்ளது . அவர் 'முத்துலிங்கத்திற்கு முழக்ககங்கள் தேவையில்லை. கோஷங்கள் தேவையில்லலை. அவர் சோகத்தையும் பெரும் இழப்புக்களையும் கேலியுடனும் நகையுணர்ச்சியுடனும் கடந்து விடுகின்றார்' என்று கூறுகிறார். உண்மைதான் அ.முத்துலிங்கம் 'நான் ஒரு பிரசாரகன் அல்ல' என்று பல தடைவைகள் எழுதியும் கூறியும் வந்துள்ளார்.
உண்மையில் வியக்க வைக்கும் தொகுப்பு நூல் இது. இதனை வாசித்து முடித்ததும் பல உண்மைகள் புரிய வந்தன. அதில் முக்கியமானதும் முதன்மையானதுமான உண்மை, நாம் அறிந்ததை விட முத்துலிங்கம் அதிகம் எழுதியிருக்கின்றார் என்பதே. 200 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், இரு நாவல்கள், கட்டுரைகள் என கிட்டத்தட்ட 40 நூல்கள் வெளிவந்துள்ளன. இந்த வெளியீடுகள் குறித்த தகவல்கள் கூட எம்மிடையே சரியாகப் பகிரப்படவில்லை என்பது மிகப்பெரிய கவலைக்குரிய விடயமாகும். ஒவ்வொரு நூல் வெளிவரும் போதும், வெளிவந்த பின்பும் கலைப்புலி தாணு பாணியில் விளம்பரம் செய்து அதன் விற்பனை விபரங்களை 'ஷோ' காட்டும் எமது புகலிட இலக்கியச் சூழலில் இவரது நூல்கள் வருவதும் போவதும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை என்றால் நாம் ஒரு மூடுண்ட இலக்கியவெளியில் பயணித்திருப்பது எமக்குத் தெளிவாகவே தெரிகின்றது. கூடவே இவை ஒரு திட்டமிட்ட செயல்களாக நடத்தபட்டது போலவும் எனக்குள் ஒரு தோற்றப்பாடு ஏற்படுகின்றது.
இரண்டாவதாக அவர் மீது இதுவரை காலமும் வைக்கப்பட்டிருந்த அவதூறுகளுக்கு மட்டுமல்லாமல் அவர் மீது வைக்கப்படிருக்கும் பல விமர்சனங்களுக்கும் தவறான பார்வைகளுக்கும் இந்த நூல் பதில் அளிப்பது மட்டுமல்லாமல் அவரை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளவும் உதவி புரிகின்றது. பல வருடங்களுக்கு முன் 'அசோகமித்திரனை வாசித்தல்' என்ற நூல் கவிஞர் பெருந்தேவியாலும் அரவிந்தனாலும் ஒரு நாள் முழு நிகழ்விற்கு பின்பாக வெளியிடப்பட்டது. அந்நூலின் நோக்கம் குறித்து பேசிய அரவிந்தன் "அசோகமித்திரன் என்பவர் எளிய நகர்ப்புற மனிதர்களின் வாழ்க்கையினை அழகாகச் சித்தரித்தவர் என்ற சிமிழுக்குள் மட்டும் அவரது படைப்புக்களை அடைக்கும் தவறான பார்வைக்கு எதிராக இந்நூல் வெளியிடப்படுகின்றது" என்று குறிப்பிட்டார். அதேபோலவே இந்நூலும் அ.முத்துலிங்கம் என்பவரது கதைகள் 'பல்வேறு நாடுகளிலும் பயணித்து புதிய புதிய நிலங்களையும் களங்களையும் எமக்கு அறிமுகப்படுத்துகின்றது' என்று மட்டுமே முன் வைக்கப்படுகின்ற பார்வையை மறுதலித்து இந்நூலானது இதற்குமப்பாலும் உள்ள அவரது கதையுலகத்தினை எமக்கு அறிமுகம் செய்கின்றது. தேவையற்ற வித்தத்தில் அளவுக்கதிகமான தகவல்களை அள்ளித் தெளிக்கிறார், அவசியமற்ற பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்கிறார் என்பதெல்லாம் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள். அதற்கான பதில்களும் இந்நூலில் விரவியே காணப்படுகின்றன.
கவிஞர் சேரன் கூறியது போல் இந்நூல் ஆனது அவருக்கான ஒரு சிறுகௌரவம் மட்டுமே. தொடர்ந்தும் நாம் இவர் குறித்து பேசவும் எழுதவும் மதிப்பீடு செய்யவும் வேண்டும். நாம் ஏன் இவருக்கான தகுந்த அங்கீகாரத்தினை எமது புகலிட இலக்கிய சூழலில் வழங்கியிருக்கவில்லை என்பது குறித்து சிந்திக்க வேண்டும். கவிஞர் கருணாகரன் கூறியது போல ஈழத்தில் ஏன் இவர் மீதான ஒவ்வாமை தொடர்கின்றது என்பது குறித்து ஆராய வேண்டும்.
மீண்டும் இந்நூலினை வெளியிட்ட தோழர்கள் எம்.பௌசருக்கும் பாலசபேசனுக்கும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும். அர்ப்பணிப்புடன் கூடியது ஆற்றல் மிக்க து உங்கள் பணி. அ.முத்துலிங்கம் அவர்களிடமும் இதுவரை காலமும், தொடுக்கப்பட்ட கண்டனங்கள், அவதூறுகள் எதனையும் சட்டை செய்யாமல் அமைதியாகவும் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றியும் பயணித்தது போலவே தொடர்ந்தும் நீங்கள் பயணிக்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளினையும் முன் வைக்கின்றோம்.
இறுதியாக என் அன்பான சக பயணிகளுக்கும் தோழர்களுக்கும் ! நான் மேலே குறிப்பிட்டது போல "ஈழ-புகலிட இலக்கியத் தளத்தில் மரணம் மட்டும்தான் ஒருவனை தூற்றுதலில் இருந்து விடுவித்து அவனை போற்றுதலுக்குரிய மனிதனாக மாற்றும் மீட்சிக்குரிய ஒரேயொரு வழியாகும்." என்ற எனது வார்த்தைகளை பொய்யாக்கும் வகையில் நாம் எமது பாதையை மாற்றி பயணிப்போமாக ! காதுள்ளவர்கள் கேட்கக் கடவீர் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.










