கட்டுரையாளர்: மு. பழனிக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், தியாகராசர் கல்லூரி, மதுரை–09.
நெறியாளர்: முனைவர் ரே. கோவிந்தராஜ்,  உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், தியாகராசர் கல்லூரி, மதுரை–09.


ஆய்வுச் சுருக்கம்

தமிழகத்தின் சமூக வரலாற்றை மீட்டுருவாக்குவதில் இலக்கியங்கள், தொல்லியல் எச்சங்கள், கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் ஆகியவை முக்கிய முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன. அவற்றுள் பாடல் வடிவில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் தனித்துவமான இடத்தைப் பெறுகின்றன. பொதுவாக அரசாணைகள், கொடைகள், நிர்வாகச் செயல்பாடுகள், நிலதானங்கள் போன்றவை உரைநடையில் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்ட நிலையில் அவை, குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளையும் சமூகச் செயல்பாடுகளையும் சமய செய்திகளையும் கவிதை அல்லது செய்யுள் வடிவில் நிலைநிறுத்தும் மரபு தமிழகத்தில் பன்னெடுங்காலமாக காணப்படுகிறது. பாடல் கல்வெட்டுகள் மூலம், சமூக செயல்பாடுகளான நீர்ப்பாசனம், கோயில் பொருளாதாரம், அறச்செயல்கள், தானங்கள், உள்ளூர் நிர்வாகம், தொழில், சமயம், நடுகல்மரபு, பெண்களின் பங்களிப்பு, கொடையாளர்களின் சமூக நிலை மற்றும் தமிழ் இலக்கியப் பரிணாமம் போன்ற பல்வேறு கூறுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

பல்லவர் காலத்தில் காணப்படும் தளவானூர் பாடல் கல்வெட்டு அரசர், கோயில், சமயம் மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றின் தொடர்பை வெளிப்படுத்துகிறது. சோழர் கால மெய்க்கீர்த்திகள் அரசியல் வரலாற்றின் முக்கிய ஆதாரங்களாக இருப்பதோடு, கோயிலின் மைய பொருளாதாரம், கொடைகள், நிர்வாகம் மற்றும் சமூக அமைப்பு தொடர்பான பல தரவுகளையும் வழங்குகின்றன. பாண்டியர் காலப் பாடல் கல்வெட்டுகள் நீர்ப்பாசனம், அறப்பணிகள், கோயில் பணிகள் மற்றும் உள்ளூர் சமூகப் பங்களிப்புகளை அறிந்து கொள்ள உதவுகின்றன. இவ்வகையில் பாடல் கல்வெட்டுகளை வெறும் இலக்கியச் சான்றுகளாக அணுகாமல், சமூக வரலாற்றின் களஆவணங்களாக அணுக வேண்டிய தேவை இவ்வாய்வின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

திறவுச்சொற்கள்: பாடல் கல்வெட்டு, சமூக வரலாறு, பல்லவர்,  சோழர், பாண்டியர், நடுகல்,  நீர்மேலாண்மை,  நிர்வாகம், அரசியல்,  பொருளாதாரம்.

முன்னுரை

தமிழக வரலாற்றை அறிந்து கொள்வதற்கு கல்வெட்டுகள் மிகவும் நம்பகமான முதன்மை ஆதாரங்களுள் ஒன்றாகும். இலக்கியங்கள் பெரும்பாலும் ஒரு காலத்தின் கருத்தியல், பண்பாடு மற்றும் சமூக நினைவுகளை வெளிப்படுத்தும் நிலையில், கல்வெட்டுகள் குறிப்பிட்ட இடம், நபர், அரசர், ஆண்டு, செயல், கொடை, நிர்வாக முடிவு போன்றவற்றை நேரடியாகப் பதிவு செய்கின்றன.இந்தக் கல்வெட்டுகளுள் செய்யுள் வடிவில் அமைந்துள்ள பதிவுகள், வரலாற்றுச் செய்தியை நினைவில் நிலைநிறுத்துவதற்கான இலக்கிய உத்தியாகவும் செயல்பட்டுள்ளன. மயிலை சீனி. வேங்கடசாமி தொகுத்த சாசனச் செய்யுள் மஞ்சரி இத்தகைய கல்வெட்டுப் பாடல்களை ஒருங்கிணைத்துள்ளன. அதேபோல் புலவர் செ.இராசு தொகுத்த தமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள் நூலில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட பாடல் கல்வெட்டுகளோடு, முந்தைய தொகுப்புகளில் இடம்பெறாத சில பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, பாடல் கல்வெட்டுகளை இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக மட்டும் எடுத்துரைக்காமல், அவற்றில் காணப்படும் சமூக நிறுவனங்கள், அரசியல் பொருளாதார நடவடிக்கைகள், நீர்ப்பாசன அமைப்புகள், சமய நிறுவனங்கள் மற்றும் சமூக உறவுகள் ஆகியவற்றை ஆராய்வது அவசியமாகிறது.

பாடல் கல்வெட்டுகள் – வரலாற்று செய்தி

பாடல் கல்வெட்டுகள் என்பது வரலாறும், செய்யுள் நடையும் ஒன்றிணைந்து ஓர் இலக்கிய ஆவணமாக திகழ்கின்றன. ஒரு மன்னனின் போர் வெற்றியைப் பதிவு செய்யும் செய்யுள், அந்தப் போர் நடந்த இடத்தையும், அரசியல் உறவுகளையும், அரசரின் அதிகாரப் போக்கினை ஆராய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.அதேபோன்று, ஒரு குளம் அல்லது ஏரி அமைத்த கொடையாளரைப் புகழ்ந்து பாடும் கல்வெட்டு, நீர்ப்பாசன வரலாற்றோடு, அந்தக் கொடையாளரின் சமூக நிலை, உள்ளூர் அதிகாரம், வேளாண் பொருளாதாரம் மற்றும் சமூக நலனில் தனிநபர் வகித்த பங்கு ஆகியவற்றையும் வெளிப்படுத்துகிறது. ஆகையால், பாடல் கல்வெட்டிலுள்ள கல்வெட்டு அமைவிடம், எழுத்தமைதி, காலம், நிறுவியவர், பொருள், சமூகச்சூழல் ஆகிய அனைத்தையும் இணைத்துப் படிப்பதே இலக்கியக் கல்வெட்டியல் கள ஆய்வுக்கான சரியான அணுகுமுறையாகும்.

பல்லவர் காலப் பாடல் கல்வெட்டுகளும் சமூக வரலாறும்

தமிழகத்தில், பல்லவர் காலத்தில் குகைக்கோயில்கள் மற்றும் கற்றளிகள் வளர்ச்சியடைந்ததோடு, அவற்றுடன் தொடர்புடைய கல்வெட்டு மரபும் வலுப்பெற்றது. குறிப்பாக, முதலாம் மகேந்திரவர்மனின் காலம் தமிழகக் கட்டடக்கலை மற்றும் கல்வெட்டு வரலாற்றில் திருப்புமுனையாகும். தளவானூரில் உள்ள குகைக்கோயிலில் காணப்படும் செய்யுள் கல்வெட்டு “தொண்டையந் தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன்...” என்று தொடங்குகிறது. நரேந்திரப் போத்தரையன் என்பது முதலாம் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு S.I.I. XII மற்றும் Epigraphia Indica .VII போன்ற பதிப்புகளில் காணப்படுகிறது.1

இக்கல்வெட்டு மன்னன் கோயில் அமைத்த செய்தியினைக் குறிப்பிடுகிறது. இவற்றின் மூலம் அரசின் அதிகாரம், சமயம், கோயில் கட்டடக்கலை, சமூகநிலை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்ப்போடு உள்ளதை அறிய முடிகிறது.மேலும், கோயிலை அமைப்பது அரசனின் சமயப் பணியாக அன்றைய சமூகம் கருதியுள்ளது. இச்செயல் அரசன் தனது அதிகாரத்தை நிலப்பரப்பில் நிலையுறுத்தும் அரசியல் நடவடிக்கையாகவும் இருக்கலாம். எனவே பல்லவர் பாடல் கல்வெட்டுகள் அரசரின் தனிப்பட்ட பக்திநெறியை கடந்து, அரசதிகாரத்தின் சமூகப் பண்பாட்டின் வெளிப்பாடு என்ற கோணத்திலும் ஆராயப்பட வேண்டும்.

பல்லவர் காலச் சமூகத்தில் கோயிலும் கொடையும்

பாடல் கல்வெட்டுகளில், கோயிலுக்கான பொருளாதார ஆதாரங்கள் முக்கியமாகக் காணப்படுகிறது. தேன், பால், நெய், விளக்கு, பூஜைப் பொருட்கள் போன்றவற்றை வழங்கியவர்கள் பற்றிய செய்திகள் சமய நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன.இதன் மூலம் கோயில்கள் என்பன, பொருளாதார செயல்பாட்டு மையங்களாகவும், அறப்பணிகளின் இருப்பிடமாகவும், கலை மற்றும் பண்பாட்டின் வளர்ப்பிடங்களாகவும், உள்ளூர் சமூக செயல்பாடுகள் போன்ற சமூக நிறுவனங்களின் மையமாக கோயில்கள் திகழ்கின்றன.

சோழர் காலப் பாடல் கல்வெட்டுகளும் சமூக அமைப்பும்

சோழர் காலத்தில் கோயில் நிறுவனங்கள் மிகப் பெரிய பொருளாதார அமைப்புகளாக வளர்ந்ததைப் பல கல்வெட்டுகள் காட்டுகின்றன. சோழர் காலம் தமிழக வரலாற்றில் கல்வெட்டுக்கள் மற்றும் மெய்க்கீர்த்தி மரபின் முக்கியமான வளர்ச்சிக் காலமாகும். [2] முதலாம் இராசராச சோழன் தொடங்கி இராஜேந்திரன், குலோத்துங்கன் உள்ளிட்ட அரசர்களின் கல்வெட்டுகளில் மெய்க்கீர்த்திகள் இடம்பெறுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகளில் மன்னரின் போர் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டாலும், அவற்றோடு இணைந்த உரைநடைப் பகுதிகளில் கோயில் நிர்வாகம், நிலக்கொடை, பணியாளர்கள், பொருளாதார நிலைகள் போன்ற செய்திகளையும் வழங்குகின்றன. தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகள் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இராசராசன் கால கல்வெட்டுகள் கோயில் நிர்வாகத்திற்கான செயல்பாடுகள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து கோயிலுடன் இணைக்கப்பட்ட மனிதவளத்தைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. இதன் அடிப்படையில் பாடல் கல்வெட்டுகளை அதே கல்வெட்டுத் தொகுப்பில் உள்ள உரைநடைப் பகுதிகளோடும் இணைத்து வாசிப்பது சமூக வரலாற்றைத் தெளிவுபடுத்தும்.

சோழர் காலத்தில் வீரமரபும் பாடல் கல்வெட்டுகளும்

சோழர் காலச் சமூகத்தில் போர்வீரர்களின் பங்களிப்பு முக்கியமானது. வீரர்களின் தியாகங்களைப் பதிவு செய்யும் நடுகற்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் சமூகத்தின் வீரக் மரபினை வெளிப்படுத்துகின்றன. [3] பாடல் வடிவிலான வீரக்கல் கல்வெட்டுகள் வீரனின் மரணத்தை ஒரு சாதாரண இறப்பாகப் பதிவு செய்யாமல், வீரமரணம், புகழ், விண்ணுலகம், நினைவு என்ற கருத்தியல் அமைப்பில் பதிவு செய்கின்றன. இதன் மூலம் சமூகத்தில் வீரருக்கு வழங்கப்பட்ட மரியாதை, சமூகத்தில் இறந்தோரின் நினைவு கூறுதல் மற்றும் உயிர் தியாகத்தை உயர்த்திப் பேசும் மதிப்பீடுகள் ஆகியவற்றை அறிய முடிகிறது.

சோழர் கால நீர்ப்பாசனச் சமூக வரலாறு

தமிழகத்தின் வேளாண் பொருளாதாரம் நீர்ப்பாசனத்தை மையமாகக் கொண்டிருந்தது. ஏரி, குளம், கால்வாய், மடை, தூம்பு போன்ற அமைப்புகள் வேளாண் உற்பத்தியின் அடிப்படை மூலங்களாக இருந்தன. [4] ஒரு நீர்நிலையை அமைத்தவர் அல்லது அதன் கரையைப் புதுப்பித்தவர் பற்றிய பாடல் கல்வெட்டு, அக்காலத்தில் நீர்ப்பாசனம் ஒரு பொதுச் சமூகப் பொறுப்பு என்ற கருத்து நிலவியதை வெளிப்படுத்துகிறது. இத்தகைய பதிவுகளில் இடம்பெறும் “ஏரி”, “மடை”, “கரை”, “தூம்பு” போன்ற தொழில்நுட்பச் சொற்கள் நீர் மேலாண்மை அறிவின் தொல்லியல் சான்றுகளாகக் கருதப்பட வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள களப்பாக்கம் அகத்தீசுவரர் கோயிலின் திருச்சுற்றில் கிடக்கும் தனிக்கல்வெட்டில், பெருவெள்ளத்தால் உடைந்த பெரிய குளத்தின் கரையை உடையாதவாறு, பெருங்கரையாக வீரசோழ விழுப்பரையன் கட்டியுள்ளதைக் கூறுகிறது. ”உடையார் குளன்முன்பு கண்ட பெருங்குளம் ஓங்கொலிநீர்த்” என்ற கல்வெட்டுப்பாடல், குளத்தில் கரை அமைத்ததை எடுத்துரைக்கிறது.[5]

பாண்டியர் காலப் பாடல் கல்வெட்டுகளும் சமூக வரலாறும்

பாண்டியர் காலக் கல்வெட்டுகள் தமிழகத்தின் தென்பகுதி சமூக வரலாற்றை அறிய முக்கியமானவை. குறிப்பாக நீர்ப்பாசனம், கோயில் தானங்கள், அறப்பணிகள், அதிகாரமையங்கள் மற்றும் நில நிர்வாகம் தொடர்பான செய்திகள் காணப்படுகின்றன. தென்னிந்திய கல்வெட்டு தொகுதி ஆறில் பாண்டிய மரபுக் கல்வெட்டுகளை உள்ளடக்கியதாக அதன் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [6]

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கங்குடி குளத்தின் அருகே உள்ள பாடல் கல்வெட்டானது, சடையமாறன் ஆட்சியின் பதினாறாம் ஆண்டைச் சார்ந்ததாகக் குறிப்பிடப்படும் குளம் சீரமைத்தல் தொடர்பான பாடல் கல்வெட்டாகும். இருப்பைக்குடிக் கிழவன் என்பவர் அக்குளத்தின் பழைய கரையை அகற்றி கல்லால் கரை அமைத்தல் மற்றும் மடை அமைத்தல் போன்ற பணிகளைப் பதிவு செய்கிறது. ”கொங்கார் மலர்க்கடம்பு சூட்டாதிக் கோல்வளையை” என்ற பாடல் கல்வெட்டு, பாண்டியர் காலத்தில் நீர்நிலைகள் பராமரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை உணர்த்துகிறது.[7] இங்கு முக்கியமான சமூக வரலாற்றுக் கூறுகளாக இடம்பெறுபவை, உள்ளூர் கொடையாளர்கள் மற்றும் சமூக குழுக்கள் நீர்நிலைப் பராமரிப்பில் பங்கு பெற்றனர் என்பதாகும்.

கல்வெட்டு அட்டவணை

எண்

தொகுப்பு / நூல்

தொகுதி

ஆய்வுப் பயன்பாடு

1

S.I.I.

Vol. I

பல்லவர் கல்வெட்டு மரபு

2

S.I.I.

Vol. II

தஞ்சைப் பெரியகோயில்; சோழர் வரலாறு

3

S.I.I.

Vol. III, Pt. I

சோழர் சமூக–நிர்வாகம்

4

S.I.I.

Vol. III, Pt. II

பிற்காலச் சோழர் வரலாறு

5

S.I.I.

Vol. III, Pt. III

அரச மரபு; மெய்க்கீர்த்தி

6

S.I.I.

Vol. IV

தென்னிந்திய அரச மரபுகள்

7

S.I.I.

Vol. V

சோழர் நிர்வாகம்; கோயில்

8

S.I.I.

Vol. VI

பாண்டியர் வரலாறு

9

S.I.I.

Vol. VII

பாடல் கல்வெட்டு ஒப்பாய்வு

10

S.I.I.

Vol. VIII

கோயில்; அரசியல் வரலாறு

11

S.I.I.

Vol. IX

சோழர் கல்வெட்டுகள்

12

S.I.I.

Vol. X

பிராந்திய வரலாறு

13

S.I.I.

Vol. XI

சமயம்; கோயில் பொருளாதாரம்

14

S.I.I.

Vol. XII

பல்லவர் பாடல் கல்வெட்டுகள்

15

E.I.

Vol. I

கல்வெட்டு பதிப்பியல்

16

E.I.

Vol. II

தென்னிந்திய கல்வெட்டுகள்

17

E.I.

Vol. III

பல்லவர் கல்வெட்டுகள்

18

E.I.

Vol. IV

அரச மரபு; மொழிநடை

19

E.I.

Vol. VII

தளவானூர் கல்வெட்டு

20

E.I.

Vol. VIII

அரசியல்; பண்பாட்டு வரலாறு

21

E.I.

Vol. IX

சோழர் வரலாறு; மெய்க்கீர்த்தி

22

E.I.

Vol. X

கல்வெட்டு மொழி ஆய்வு

முடிவுரை

தமிழகப் பாடல் கல்வெட்டுகள் வரலாறும் இலக்கியமும் இணைந்த இடமாக விளங்குகின்றன. அவை அரசர்களின் புகழை மட்டும் நிலைநிறுத்தியவை அல்ல; அந்தப் புகழின் பின்னால் செயல்பட்ட சமூக அமைப்புகளையும் வெளிப்படுத்துகின்றன. பல்லவர் காலப் பாடல் கல்வெட்டுகள் அரச அதிகாரம், சமயம், கோயில் மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றின் தொடர்பை வெளிப்படுத்துகின்றன. சோழர் காலப் பாடல் கல்வெட்டுகள் மற்றும் மெய்க்கீர்த்திகள் அரசியல் விரிவாக்கம், போர்வெற்றி, கோயில் பொருளாதாரம், நிர்வாகம், நிலம் மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றை ஆராய உதவுகின்றன. பாண்டியர் காலப் பதிவுகள் குறிப்பாக நீர்ப்பாசனம், அறச்செயல், கோயில் மற்றும் உள்ளூர் சமூகப் பங்களிப்பு போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகின்றன.

இதனுடன் வீரக்கல் பாடல் கல்வெட்டுகள் வீரமரணம், வீர நினைவு மற்றும் சமூக மதிப்பீடு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. ஏரி, குளம், மடை, தூம்பு போன்ற நீர்ப்பாசன அமைப்புகளுடன் தொடர்புடைய பாடல் கல்வெட்டுகள் நீர்மேலாண்மை, வேளாண்மை மற்றும் பொதுநலப் பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. எனவே, தமிழகப் பாடல் கல்வெட்டுகளை வெறும் “செய்யுள் கல்வெட்டுகள்” என்ற இலக்கிய வகைப்பாட்டுக்குள் மட்டும் அடைத்துவிடாமல், அவற்றை சமூக,பொருளாதார ,அரசியல்,சமயதொழில்நுட்ப வரலாற்றின் ஒருங்கிணைந்த முதன்மை ஆதாரங்களாக அணுக வேண்டும்.

குறிப்பாக, களஆய்வின் மூலம் புதிதாகக் கிடைக்கும் பாடல் கல்வெட்டுகள் ஏற்கெனவே அறியப்பட்ட வரலாற்றை உறுதிப்படுத்துவதோடு, சில நேரங்களில் புதிய உள்ளூர் வரலாற்றையும் வெளிக்கொணருகின்றன. எனவே ஒவ்வொரு புதிய கல்வெட்டும் புகைப்படம், எஸ்டாம்பேஜ், துல்லியமான படியெடுப்பு, எழுத்துருவியல் ஆய்வு, மொழிபெயர்ப்பு, காலநிர்ணயம், தொல்லியல் சூழல் மற்றும் S.I.I./E.I./A.R.E. ஒப்பீடு ஆகியவற்றுடன் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

அடிக்குறிப்புகள்

  1. K. A. Nilakanta Sastri,The Cholas, University of Madras, Madras, 1955.
  2. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century C.E., Central Institute of Classical Tamil, Chennai, 2020.
  3. K. Rajan, Early Writing System: A History of Tamil Script, Pandya Nadu Centre for Historical Research, Madurai.
  4. Noboru Karashima, A Concise History of South India: Issues and Interpretations, Oxford University Press.
  5. காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுக்கள்,தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை.
  6. SII.Vol.VI
  7. ARE,1930.

துணைநூற்பட்டியல்

  1. South Indian Inscriptions (S.I.I.) – Vol. II – தஞ்சைப் பெரியகோயில் சோழர் கல்வெட்டுகள்.
  2. S.I.I. – Vol. III – பல்வேறு சோழர் கல்வெட்டுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள்.
  3. S.I.I. – Vol. VI – பாண்டியர் கல்வெட்டுகள்.
  4. S.I.I. – Vol. XII – பல்லவர் கல்வெட்டுகள்.
  5. Epigraphia Indica (E.I) – Vol. VII – தளவானூர் மகேந்திரவர்மன் தொடர்பான செய்யுள் கல்வெட்டு.
  6. Annual Report on Indian Epigraphy (A.R.E.) – ஆண்டுவாரியாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டு பதிவுகள்.
  7. செ. இராசு, தமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள் – பல்வேறு பாடல் கல்வெட்டுகளின் தொகுப்பு.
  8. மயிலை சீனி. வேங்கடசாமி, சாசனச் செய்யுள் மஞ்சரி – சாசனச் செய்யுட்களின் முக்கியத் தொகுப்பு.

பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்