கட்டுரையாளர்: முனைவர் ச.மீனாட்சி, உதவிப்பேராசிரியர், முதுகலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -


முன்னுரை

ஆதாம் - ஏவாள் வாழ்வில் ஆப்பிள் கனி பெறுகின்ற முதன்மையைக் கொண்டே மனிதன் தாவரங்களோடு பின்னிப்பிணைந்துள்ள தன்மையினை அறிய முடிகின்றது. இந்நிலைப்பாடே மனித இனத்தின் தொன்மையான அறிவியலாக ‘தாவரவியல்’ போற்றப்படுகின்றது. தாவரமானது புல், பூண்டு, செடி, கொடி, மரம் என்று பல்வேறான வளரியல்புகளைக் கொண்டது. பழந்தமிழர்கள் இயற்கையை அரணாகக் கொண்டவர்கள். இயற்கையோடு இயைந்த பசுமை வாழ்வியலை மேற்கொண்டவர்கள். இவர்களது வாழ்வில் தாவரங்கள் இன்றியமையா இடத்தினைப் பெறுகின்றன. இத்தாவரங்களை இலக்கியப் புலவர்கள் தங்களது படைப்புகளில் நயத்திற்காக ஆங்காங்கே பதிவு செய்துள்ளனர். இத்தகைய பதிவுகளே தாவரங்கள் சார்ந்த புலவர்களின் நுண்மாண் நுழைபுலத்திறனிற்கு சான்றாகின்றது. அறம் பொதிந்துள்ள பதினெண்கீழ்க்கணக்கில் ஆங்காங்கே புலவர்களின் தாவரச்சிந்தனைகளும் மிளிர்கின்றன என்பதனை இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாலை நில மரங்களைக் கொண்டு ஆய்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

மரங்கள்

ஓங்கி உயர்ந்து உறுதியுடன் வளரும் தன்மை கொண்ட தாவரங்களே ‘மரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இஃது நிலத்தில் வளரக் கூடியது. மரத்தின் புற அமைப்பு தோற்றத்தையும் உள்ளமைப்பு உறுதித்தன்மையையும் புலப்படுத்தும். மரத்தின் பெயர்களை தமிழ்ச்சொற்றொடர் அகராதி, “தரு, அகலியம், விருக்கம், தாவரம், விடபி, தாரு, துருமம், குசம், பூருசம், சாகு, பாதபம், விருட்சம், வெட்டுமரம், உள்வயிரமுள்ள தாவரம், அறுக்கப்படட மரம்”1 என்ற முறைகளில் பட்டியலிடுகின்றது. தாவரவியல் நோக்கில் விதையுண்டாக்குவனவே உண்மையான மரங்களாக கருதப்படுகின்றன. மர இனங்களை கலைக்களஞ்சியம், “வளரியல்பு அடிப்படையில் அமைந்த வகைப்பாட்டில் முதன்மை பெறுவது மர இனமாகும். பொதுவாக மர இனம் அதன்கண் அமைந்திருக்கும் வலிமையை உள்ளீடாகக் கொண்டே வரையறுக்கப்படுகிறது. திண்மையான உள்ளீட்டை பல்லாண்டுகள் வாழ்வதும் அடிமரம் உள்ளதும், 15 – 20 அடி உயரமெனும் வளர்வதுமாகிய தாவரம் மரம் ஆகும்.”2 என்ற முறையில் சுட்டுகின்றது.

சுற்றுப்புறச் சூழ்நிலையில் தூய்மையைக் காக்கவும் மழையைப் பொழிவிக்கவும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இருப்பிடம் தரவும் நிழல் தந்து வெப்பத்தைத் தணிக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் மரங்கள் பயன்படுகின்றன. நீர்வளத்தை ஈர்த்து மனித வாழ்விற்கு வளம் தரும் பல்வேறு மூலப்பொருள்களைத் தருவதற்கும் மரங்கள் துணையாகின்றன.

பாலை நில மரங்கள்

மலை சார்ந்த குறிஞ்சியும் காடு சார்ந்த முல்லையும் தன் நிலையிலிருந்து திரிந்து உண்டாகும் நிலப்பகுதியே பாலை நிலம் ஆகும். இந்நிலத்தினை சுரம் என்றும் சுட்டுவர். பாலை நிலமானது மணலும் மணல் சார்ந்த பகுதியும் ஆகும். இரா.ருக்மணி பாலை நிலத்து மரங்களாக தன் நூலில், “வெள்ளோத்திரம், ஆல், அரசு, மரா, இலவம், நுணா, கோங்கு, குரா, பாதிரி, புன்கு, மா, இருப்பை, வேம்பு”3 ஆகிய மரங்களை குறிப்பிடுகின்றார். இளம்பூரணார் பாலை நிலத்து மரங்களாக, “பாலை, இருப்பை, கள்ளி, சூழை”4 ஆகிய மரங்களைச் சுட்டுகின்றார், வறண்ட பகுதியைச் சார்ந்த மரங்களாயினும் அதிக உயரமாக வளரும் தன்மையுடையது. மேலும் இந்நிலத்தில் வாழ்வதற்கேற்ப கூரான நுனிகளை உடைய வேர்களை உடையது. பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள மரங்களுள்,

மாமரம், ஓமை, ஆல், கள்ளி, முருக்கம், மரா, நாவல் ஆகியன பாலைநிலத்தைச் சார்ந்த மரங்களாகும்.

மாமரம்

மாமரம் எப்போதும் பசுமையாகவும் உயரமாகவும் வளரும் மரமாகும். இதனது அறிவியல் பெயர் Mangifera spp என்பதாகும். இவற்றின் கொழுந்து கருஞ்சிவப்பாகவும் வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. மாமரம் பூத்து மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன. மரக்கிளைகளில் காம்புகளுடன் கொத்து கொத்தாய் தொங்கும். இவற்றின் காய்கள் பச்சையாகவும் கனிகள் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும். மாங்கனி இனிய சுவையினை உடையது. தற்காலத்தில் இக்கனி ‘கள்’ வைத்து பழுக்க வைக்கப்படுகின்றது. எனவே மாங்கனியினை உண்ணுதல் துன்பம் பயக்கும் என்பதனை இன்னா நாற்பது,

“…வஞ்சித்த லின்னா
துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா….”5

என்ற பாடலடியில் சுட்டுகின்றது. புராணக் கதைகளிலும் மாமரம் இன்றியமையா இடத்தினைப் பெறுகின்றன. மாமரமாய் நின்ற சூரபத்மனைக் கொன்ற முருகப்பெருமானின் வேல் சிறப்பினை,

“கருங்கடன் மாந்திய வெண்டலைக் கொண்மூ
விருங்கடன்மா கொன்றான்வேன் மின்னிப்….”6

என்ற பாடலடிகள் விளக்குகின்றன. மாமரம் கொத்து கொத்தாக காய்க்கும் திறனுடையது என்பதனை,

“……இன்னொலி நீர
கல்மேல் இலக்கு மலைநாட! மாக்காய்த்துத்
தன்மேல் குணில்கொள்ளு மாறு”7

என்ற பாடலடிச் சுட்டுகின்றது. மேலும் புளிப்புச் சுவையினையுடைய காயினை உண்பதற்காக குறுந்தடி கொண்டு எறியப்படுகின்றது. காய்த்த மரமே கல்லடிப்படும் என்பதனை விளக்குகின்றது. மாமரத்தின் காய் மற்றும் கனியினை விட இவற்றின் பருப்பு மா மருந்தாகும். மாமரத்தின் பருப்பு வயிறு சம்பந்தமான பிரச்சனைகளைத்; தீர்க்கக்கூடியது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வெளிப்படும் உதிரப்போக்கினையும் மட்டுப்படுத்தக் கூடியது. மாமரத்தின் குச்சிகள் பல் துலக்குவதற்கும் மாமரக் கட்டைகள் உறுதியான பலகைகள் செய்வதற்கும் கட்டுமானத்திற்கும் ஏற்றது. தற்காலத்தில் செயற்கை உரம் போடுவதும், பூச்சி மருந்து தெளிப்பதும் கனியின் சுவையினை பாழ்படுத்துவதோடு விஷமானது பழத்தில் எஞ்சுவதற்கும் வாய்ப்பாகின்றது.

ஓமை

ஓமை பாலை நிலத்தைச் சார்ந்த மரமாகும். இதனை இலக்கியங்களில் பாங்கர், ஓமை என்று அழைப்பர். இதனது தாவரவியல் பெயர் டில்லினியா இன்டிகா (Dillenia indica, Linn) என்பதாகும். உவர் நிலப்பாங்கான பாலை நிலப் பாதையில் ஓமை மரங்கள் காடாக வளரும் தன்மையுடையன. இதனது அடிமரம் ‘புன்தாள், பொரிதாள், முடத்தாள்’ என்று சுட்டப்படுகின்றது. இஃது புல்லிய இலைகளை உடையது. இஃது ஓங்கி வளரும் தன்மையுடையது. பாலை நிலத்தில் வளர்ந்தாலும் விலங்குகள் இளைப்பாறும் வண்ணம் நிழலினை அளிக்கக் கூடியது என்பதனை,

“பொரிபுற வோமைப் புகர்படு நீழல்
வரிநுதல் யிhனை பிடியோ டுறங்கு…..”8

“அரக்கார்ந்த வோமை யரிபடு நீழற்
செருக்கில் கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும்….”9

என்ற பாடலடிகள் விளக்குகின்றன. யானைகள் மரநிழலில் இளைப்பாறுவதோடு இதனது பட்டையை உரித்து உணவாகவும் உண்ணும். ஓமை கோயில் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றது. கோடைக் காலத்தில் இலைகளை உதிர்த்து குளிர்காலத்தில் தளிர்க்கக் கூடிய மரமாகும். தற்காலத்தில் ஓமை மரத்தின் பயன்பாட்டினை பி.எல்.சாமி தன் நூலில், “ஓமை மரத்தின் அடிமரத்தை இரும்பால் ஆன குத்துக் கோலால் குத்தி எண்ணெயை எடுத்து அதை ‘வார்னிஷ்’ முதலியவற்றிற்குத் தற்போது பயன்படுத்துகிறார்கள்.”10 என்று குறிப்பிடுகின்றார். இம்மரத்தின் பழங்கள் புளிப்புச் சுவை உடையன.

ஆல்

ஆலமரத்தினை அழிவற்ற மரம் என்றே கூறலாம். கிளைகளிலிருந்து விழுதுகள் பூமியை நோக்கிச் செல்வதால் இஃது ‘ஆகாச வடம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மரம் ‘மொராசியே’ என்னும் குடும்பத்தைச் சார்ந்த மரமாகும். இவற்றின் தாவரவியல் பெயர் ‘ஃபைகஸ் பென்கலன்சிஸ் (Ficus bengalensislinn) என்பதாகும். மரங்களிலே மிகவும் அகலமான மரமாகும். இவற்றின் அடிப்பரப்பு 15 மீட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கக்கூடும். எனவே பருத்த அடிமரத்தினைக் கொண்டது. எனவே மிகுதியான நிழல்களை அளிக்கக் கூடியதாகவும் இம்மரம் திகழ்கின்றது. பிறருக்கு நாம் செய்யும் உதவி சிறிதாயினும் பயன் பெரியது அதே போல் ஆலமரத்தின் விதை சிறியதாயினும் அம்மரம் நமக்கு அளிக்கும் நிழல் மிகுதியானது என்பதனை,

“உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும்….”11

என்ற பாடலடி விளக்குகின்றது. இம்மரம் பாரதமெங்கிலும் வளரக் கூடியது. குன்றுகளிலும், காடுகளிலும் வளரக் கூடியது. சாலையோரங்களில் நிழலுக்காகவும் இம்மரம் வளர்க்கப்படுகின்றது. இமயமலைச் சாரலின் சரிவுகளில் இஃது காட்டு மரமாக வளர்க்கப்படுகின்றது. கோவில்கள், மன்றங்கள் மற்றும் பொது இடங்களிலும் இஃது வளர்க்கப்படுகின்றது. ஐந்திணை எழுபது பொது மன்றத்தில் வளர்ந்த முதுமையான ஆலமரத்தில் ஆந்தைகள் அலருவதை,

“மன்ற முதுமரத் தாந்தை குரலியம்பக்

குன்றக் நண்ணிக் குறும்பிறந்து…..”12

என்ற பாடலடிகள் சுட்டுகின்றது. ஆந்தைகளின் வாழிடமாக ஆலமரங்கள் உள்ளன. ஆலமரத்தின் கிளைகளிலிருந்து எண்ணற்ற விழுதுகள் வரும். இவ்விழுதுகள் தரையில் ஊன்றுவதே ஆலமரத்தின் சிறப்பம்சம். பின் இவ்விழுதுகள் ஆலமரத்தினை தாங்கும். மரத்தை தாங்குகின்ற ஆலமரத்தின் விழுதுகளை இலக்கியங்கள்,

“கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்….”13

“சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
முதலையாய் மற்றதன் வீமூன்றி யாங்குக்….”14

என்ற பாடலடிகளில் சுட்டுகின்றன. ஆலமரத்தை விழுதுகள் தாங்குவது போல ஒரு நாட்டின் அமைச்சர் தன் குடிகளை போற்றி பாதுகாத்தல் வேண்டும் என்று இலக்கியங்கள் போதிக்கின்றன.

ஆலமரத்தின் பூக்கள் நுண்மையானவை. இஃது பெரும்பாலும் வெளியே தெரியாது. இம்மரத்தின் பழங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. கொடிய பஞ்ச நேரத்தில் மனிதர்களுக்கும் இஃது உணவாகின்றன. ஆலமரத்தின் கட்டைகள் தண்ணீரில் நிலைத்து நிற்கும். எனவே கிணறுகளில் குறட்;டுக் கல்லாக பயன்படுகின்றது. ஆலம் விழுதுகள் பற்களுக்கு வலுவூட்டுகின்றன. இவற்றின் பட்டையில் செய்யப்படும் மருந்து குடற்புண் ஆற்றவும், வயிற்றுப் போக்கினை நிறுத்தவும் உதவுகின்றது. இம்மரத்தின் பிசின் வலி, வீக்கம் மற்றும் வாதத்திற்கும் மருந்தாகின்றது.

முருக்கம்

முருக்க மரம் நடுத்தரமான மரமாகும். இம்மரம் கவிர், புழகு, முள்முருக்கு, மலை எருக்கு, கலியாண முருங்கை என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. தாவரவியலாளர் இதனை ‘எரித்ரைனா இன்டிகா (Erythrina indica.lam) என்று சுட்டுவர். இவற்றின் இலைகள் அகன்றவை. வேனிற் காலத்தில் இலைகளை முற்றிலும் உதிர்த்து விட்டு மலர்களை பூக்கின்றது. இவற்றின் மலர்கள் செந்நிறமாக இருக்கும். இம்மரம் பூத்திருக்கும் போது காடே பற்றி எரிவது போல் காட்சியளிப்பதை செடிநூலார் குறிப்பிடுவதாக பி.எல்.சாமி தன் நூலில்;> “Flame of the forest” 15 என்று சுட்டுகிறார். நெருப்பினைச் சிதற விட்டது போன்று முருக்க மரங்கள் மலர்ந்திருக்கும் காட்சியினை திணைமாலை நூற்றைம்பது,

“…..நாணாய நல்வளைவாய்! நூணின்மை – காணா
யெரிசிதறி விட்டன்ன வீர்முருக் கீடில்……”16

என்ற பாடலடிகளில் காட்சிப்படுத்துகின்றது. பொன்தாலியின் மீது பவளக் கொழுந்தினை பதித்து வைத்தது போன்று ஒளியுடன் முருக்க மரங்கள் மலர்ந்துள்ளன என்பதனை (தி.நூ.66) என்ற பாடல் விளக்குகின்றது. எனவே இம்மலர் இளவேனிற் காலத்தில் மலர்கின்றது என்பதனை அறிய முடிகின்றது. இன்றும் முருக்க மரங்கள் மார்ச் - ஏப்ரலில் தான் மலர்கின்றது.

முருக்க மரம் களர் நிலத்திலும் நன்கு மலரும். பாலை நிலத்தில் பெரும்பாலும் இம்மரம் காணப்படுகின்றது. மேலும் தத்தா (Dutta) என்ற செடிநூலறிஞர் முருக்க மரம் பறவைகளால் மகரந்தச் சேர்க்கை அடைவதனை தன் நூலில், “It is now know that erythirina Indica முருக்கம் is Pollinated by birds”17 என்ற முறையில் சுட்டுகின்றார். A.C.Dutta, Text book of Botany,P.144 இம்மரத்தின் இலை, விதை, பூ, பட்டை ஆகியன மருத்துவ குணம் நிரம்பியன. இவற்றின் இலை சிறுநீரைப் பெருக்குவதோடு மலத்தை இளக்கும். தாய்ப்பாலை பெருக்கும். மாதவிலக்கைத் தூண்டும் இவற்றின் மலர்கள் கருப்பையைச் சுத்தமாக்கும். குடல் புழுக்களைக் கொல்லும் பெண்களின் உடல்நலனுக்கு நன்மை பயப்பனவாக இம்மரம் உள்ளது.

மரா

ராமனின் வில் திறத்தைச் சோதிக்க இலக்காக்கப்பட்ட வலிமையான மரமே மராமரம். இம்மரத்தை பழந்தமிழர்கள் மராஅம் என்று சுட்டினர். இலக்கியங்களில் கடம்பு என்றும் அழைக்கப்பட்டது. இம்மரத்தின் தாவரப்பெயர், ‘பாரிங்டோனியா அக்யுடாங்குலா (Barringtonia acutangula Gaertn)’ என்பதாகும். கடலும், நிலமும் சேரும் சதுப்பு நிலங்களில் வளர்கின்ற மரமாகும். தமிழ்நாட்டில் பிச்சாவரத்தில் இம்மரம் உள்ளது. மரா மரத்தின் தன்மையினை கு.சீனிவாசன் தன் நூலில், “இதன் இலைகள் நன்கு தழைத்து வளரும். மரத்தைச் சுற்றிலும் பரவித் தாழ்ந்து கவிழ்ந்து வளர்வதால் அடிமரப்பகுதி இருண்டிருக்கும்.”18 என்று குறிப்பிடுகின்றார். இவரது கருத்தின்படி மரா மரத்தின் அடிப்பகுதியை கரிய நிறமாகச் சுட்டும் முறையினை,

“கருங்கான் மராஅ நுணாவோ டலர
இருஞ்சிறை வண்டினம் பாலை முரல….”19

என்ற பாடலடி விளக்குகின்றது. இதே போல் மராமரம் நிரம்பிய சோலையில் நீண்ட துதிக்கையினை உடைய ஆண்யானை இளைப்பாறும் முறையினை,

“பெருங்கை யிருங்களி றைவன் மாந்திக்
கருங்கான் மராம்பொழிற் பாசடைத் துஞ்சுஞ்”20

என்ற பாடலடிகள் விளக்குகின்றன. மரா மரத்தில் மலரும் மலர்களின் நிறத்தினைக் கொண்டு வெண்கடம்பு, செங்கடம்பு என்றும் அழைக்கப்படுகின்றன. வலிமையான மரா மரங்களை ஆயுதங்களாகக் கொண்டு வானரங்கள் போர் புரிந்தன. நிலத்தை காப்பதில் இம்மரம் இன்றியமையாதது. கடலரிப்பால் பாதிக்கப்படுகின்ற இடங்களில் இம்மரத்தினை பயிரிடுவது மிகவும் அவசியமாகும்.

நாவல்

நாவல் மரம் ஆறாயிரம் அடி உயரமான மலைப்பாங்கு வரையில் வளரும். தழைத்து கிளைத்து வளர்கின்ற வலிய பெரு மரமாகும். எப்பொழுதும் பசிய இலைகளையுடையது. கருமையான பழங்களை உதிர்க்கும் திறனுடையது. இதனது தாவரவியல் பெயர் ‘சைசீஜியம் ஜாம்பொலானம் (Syzygium jambolanum.Dc) என்பதாகும். தமிழ்நாட்டில் எங்கும் காணப்படுகின்ற மரமாகும். நாவல் மரத்தின் மலர் வெண்ணிறமானது. நாவல் மரத்தின் கனியினை, கு.சீநிவாசன் தன் நூலில், “உருண்டையான சதைக்கனி, கருநீல நிறமானது. இனிப்பானது. கனிச்சாறு ஊதா நிறமானது. வித்திலைகள சதைபற்றானவை. இவற்றுள் கருமுளை மறைந்திருக்கும்.”21 என்ற முறையில் பதிவிட்டுள்ளார்.

நாவல் மரம் வன்மையான மரமாயினும் இவற்றின் கனிக்காக தோப்புகளில் வளர்க்கப்படுகின்றது. முதிர்ந்து விழுந்த நாவல் கனியினை பெறுகின்ற முறையினை பழமொழி நானூறு,

“…..அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவல்கீழ்ப் பெறின் கனி”22

என்ற பாடலடிகளில் சுட்டுகின்றது. கல்வி ஞானம் இல்லாதவர்கள் பெறுகின்ற அறிவானது நாவல் மரத்தில் கீழ் விழுந்த கனியினை பெறுவதாகும். அதாவது உண்மைப்பொருளினை அறிய மாட்டார்கள். தானாக விழுந்த நாவல் கனி முயற்சியின்றி பெற்றதைப் போல அவனறிந்த உண்மைப் பொருளிளையும் சான்றோர்கள் பாராட்ட மாட்டார்கள் என்று புலவர் உவமிக்கின்றார். நாவல் மரம் கட்டிட வேலைக்கும், வேளாண் கருவிகளை உருவாக்கவும் பயன்படுகின்றது. இவற்றின் கனி சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துகின்றது. மேலும் இம்மரம் கிருமிநாசினியாகவும் கருதப்படுகின்றது. திருவானைக்காவல், திருநாவலூர் ஆகிய ஊர்களில் இஃது தலமரமாகவும் போற்றப்படுகின்றது.

தொகுப்புரை

பழந்தமிழரின் திணைப்பாகுபாடே அவர்களது தாவரவியல் புலமையினை அறிவதற்கு சிறந்த சான்றாகிய முறையினை அறிந்து கொள்ள முடிகின்றது.

தாவரங்களின் நுட்பமான வளரியல்புகளை அறிந்திருந்த பண்டைத்தமிழனின் தாவரவியல் சிந்தனை இலக்கியங்களில் செடி, கொடி, மரங்கள், மலர்கள் என்று பல்வேறு கோணங்களில் வெளிக்கொணரப்படுகின்றது.

தாவரவியலாளரின் கருத்தோடு ஒன்றிணைந்த இலக்கியப் புலவர்கள் தங்களது படைப்புகளில் தாவரங்களின் பசுமையினை தன் எழுத்தில் படைத்ததோடு தாவரங்களின் வகைபாட்டினையும் மருத்துவ பயன்பாட்டினையும் நுட்பமாக பதிவு செய்த புலவனின் நுண்மாண்நுழைபுலத்திறன் அளவிடற்கரியது.

சான்றெண் விளக்கம்

1.தெசாரசு, தமிழ்ச்சொற்றொடர் அகராதி,ப.187
2.கலைக்களஞ்சியம், தொகுதி8,ப.108
3.இரா.ருக்மணி,சங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள்,ப.53
4.மு.அருணாசலம்(பதி.ஆ),தொல்,பொருள்,ப.210
5.ந.மு.வே,கார்,பா.அடிகள்.15:1-2
6.அ.நடராசப்பிள்ளை,திணை.மா.நூற்,பா.அடிகள்.93:1-2
7.ம.இராசமாணிக்கப்பிள்ளை,பழமொழி,பா.அடிகள்.215:2-4
8.அ.நடராசப்பிள்ளை,ஐந்.எழு,பா.அடிகள்.35:1-2
9.அ.நடராசப்பிள்ளை,கைந்,பா.அடிகள்.19:1-2
10.பி.எல்.சாமி,சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்,ப.155
11.இளவழகனார்,நாலடி,பா.அடிகள்38:1-2
12.அ.நடராசப்பிள்ளை,ஐந்.எழு,பா.அடிகள்.38:1-2
13.பு.சி.புன்னைவனத்து முதலியார்,திரி,பா.அடிகள்.33:1-2
14.இளவழகனார்,நாலடி,பா.அடிகள்.197:1-2
15.பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்,ப.93
16.அ.நடராசப்பிள்ளை,திணை.மா.நூற்,பா.அடிகள்.64:2-3
17. A.C.Dutta, Text book of Botany,P.144
18.கு.சீநிவாசன், சங்க இலக்கியத் தாவரங்கள்,ப.324
19.அ.நடராசப்பிள்ளை,திணை.மொ.ஐம்,பா.அடிகள்.16:1-2
20.அ.நடராசப்பிள்ளை,ஐந்.எழு,பா.அடிகள்.12:1-2
21.கு.சீநிவாசன், சங்க இலக்கியத் தாவரங்கள்,ப.319
22.ம.இராசமாணிக்கப்பிள்ளை,பழமொழி,பா.அடிகள்.65:3-4

பயன் கொண்ட நூல்கள்

1. வேங்கடசாமி நாட்டார்.ந.மு (உ.ஆ) - நானாற்பது மூலமும் உரையும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், சென்னை 18, 1925.
2. சீநிவாசன்.கு சங்க இலக்கியத் தாவரங்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1987.
3. சண்முகசுந்தரம்.ச தமிழ்நாட்டுத் தாவரங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
4. பட்டத்திமைந்தன் மரங்கள் தரும் வரங்கள், ராமையா பதிப்பகம், கௌரா புத்தக நிலையம், சென்னை – 600 014.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்