
கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061
முன்னுரை
தகவல் தொடர்பியல் (Communication) என்பது செய்திகள், கருத்துக்கள், உணர்வுகள் மற்றும் தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அல்லது ஒரு குழுவிற்குப் பரிமாறிக்கொள்ளும் முறையாகும். இது வாய்மொழி, எழுத்து, சைகை மற்றும் மின்னணு ஊடகங்கள் (வானொலி, தொலைக்காட்சி, இணையம்) வழியாக நடைபெறுகிறது. சமூக உறவுகள், மேலாண்மை மற்றும் சமூக மாற்றத்திற்குத் தகவல் தொடர்பு அடிப்படையாக அமைகிறது.
முன்பு மனிதர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்பு தகவல்களைப் பரிமாற சைகையால் பேசினர். பின்பு ஒலி எழுப்பி தன் மனதில் இருந்த செய்திகளைத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அதன் பின்பே சொற்களைப் பயன்படுத்தி பேசத் தொடங்கினர். கம்பராமாயணத்தில் தகவல்தொடர்பியல் குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கம்பராமாயணத்தில் தகவல் தொடர்பியல்
சைகையால் தகவல் கூறல், ஒற்றர், தூதர், தானே உணர்தல், முரசறைந்து தெரிவித்தல், திருமண செய்தியை முரசறைந்து தெரிவித்தல், சில சப்தத்தின் ஒலியால் அறிதல், இசை கருவிகளின் ஒலி மன்னர் வருகை, மங்கல ஆரவாரம், வில் நாண் ஒலி, அணிவகுத்து வருவதை உணர்த்தும் சத்தம், உறங்கும் இராவணனைக் கண்ட அனுமன், குரலால் தகவல் அறிதல், தேர்ச்சுவடு கண்டு தகவல் அறிதல், தேர்த்தடம் தொடர்ந்து தேடிச் செல்லுதல், ஒலியும் வாசனையும் தகவல் அறிவித்தன, தூரத்தில் பரதனின் தோற்றத்தைக் கண்ட குகன், தானே செய்தியைக் கூறல், தகவல்களை அறிந்து வைத்திருத்தல், அரசனானதை அறிவித்தல், இராவணன் -அனுமன் அறிமுகம், அங்கதன் -கும்பகர்ணன் அறிமுகம், ஆரவார ஒலியால் தகவலை அறிதல், ஆரவார ஒலியால் ஆனந்தத்தை அறிவித்தல், தோற்றத்தைப் பார்த்தே தகவல் அறிதல், அன்புடையோர் தந்த தகவல், பொருட்களைப் பார்த்து அவர்களுடையது தான் என்ற தகவலை அறிதல், வீடணன் கூற இராமன் தகவல் அறிதல், கண்களால் தூது -புன்னகையே தகவல், ஒரு தோற்றத்தைப் பார்த்து மற்ற தோற்றத்தினை நினைத்தல், அயோமுகியின் அலறல்.
சைகையால் தகவலைக் கூறல்
சனகன் வேள்வி செய்வதைக் காண வருவதுபோல் இராம இலட்சுமணர்களை விசுவாமித்திரர் மிதிலைக்கு அழைத்து வந்தார். வில்லின் பெருமைகளை சதானந்த முனிவர் கூறினார். விசுவாமித்திரர் இராமனைப் பார்த்து தன் தலையை அசைத்தார். இதைப் புரிந்து கொண்ட இராமன் வில்லினை வளைக்க உடனே எழுந்து போனான்.(கார்முகப்படலம் 639)
இராமனுடன் சண்டையிடுவதற்காகக் கரனை அழைத்து வந்த சூர்ப்பணகை அவனிடம் இவன்தான் இராமன் என்பது போல் தன் கைகளால் அடையாளம் காண்பித்தாள்.(கரன்வதைப்படலம்374)
யுத்தம் முடிந்து வெற்றி பெற்ற பிறகு இராமன் சீதையிடம் கோபப்பட சீதை இலட்சுமணனிடம் தீ வளர்த்துத்தருமாறு கேட்டாள். இலட்சுமணனும், இராமனிடம் கண்களால் வினவ, இராமனும் தீமூட்டுமாறு தன் கண்களாலேயே பதிலளித்தான்.(மீட்சிப்படலம் 3970)
சீதை, மானைப் பிடித்துத் தருமாறு இராமனிடம் வேண்டினாள். இது மாயமான் என்றும், தானேப் பிடித்து வந்து தருவதாக இலட்சுமணன் கூறியபோது, சீதை நீயேப் பிடித்து நல்கலை என்று தன் கைகளால் குவித்து கண்களில் நீர் வர அவ்விடத்திலிருந்து நீங்கினாள்.(மாரீசன் வதைப்படலம் 787)
சீதையைக் கண்டுவந்த அனுமன் இராமனிடம் வந்து கைகளைக் குவித்து தென்திசை நோக்கி வணங்குகின்றான். சீதை நலமாகவும், கற்புடன் வணங்குவதற்குரியவளாகவும் இருக்கிறாள் என்பதை சைகையின் மூலம் உணர்த்தினான்.(திருவடி தொழுத படலம் 1269)
சைகையின் மூலமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
ஒற்றன்
ஒற்றன் என்பதற்கு உளவு பார்ப்பவன், உளவாளி என்று பொருள். ஒற்றாடல் ஆட்சியில் இருக்கும் மன்னனின் கடமைகளில் ஒன்று.ஒவ்வொரு மன்னனும் தன் நாட்டிலும், பிற நாட்டிலும் ஒற்றர்களை வைத்திருப்பான், தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், வேறு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியவும் வைத்திருப்பர். ஒற்றர்கள் தகவல்தொடர்பு சாதனங்கள் போலச் செயல்பட்டுள்ளனர். புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் ஒற்றர்கள் பற்றிய செய்திகளை நாம் காணமுடிகிறது.
ஒற்றர்களின் பணி
ஒற்றர்கள் யாரும் அறியாவண்ணம் வேறு நாட்டு ஊர்களிலும், தன் நாட்டிலும் தங்கி இரகசியங்களை அறிந்து தம் மன்னனிடம் கூறுவர்.ஒரு நாட்டின் ரகசியங்களை அறிதல், பகைவர் படையின் வலிமையை உணர்ந்து வந்து கூறுதல், தகவல் தொடர்பாளராகச் செயலாற்றுதல் அவர்தம் பணியாகும். ஒற்றர்கள் பிடிபட்டால் அவர்கள் தண்டிக்கப்படும் வழக்கமும் இருந்தது. கம்பரும் தன் இராமாயணத்தில் ஒற்று கேள்வி படலம் என்று தனி படலத்தையே அமைத்துள்ளார்.
ஒற்றர்கள் மூலம் செய்தி அறிந்து கொள்வது ஒரு வகை என்றால் பிடிபட்ட ஒற்றர்களிடமே தகவலைச் சொல்லி அனுப்புவது என்பது மற்றொரு வகை.
இராவணன் அனுப்பிய ஒற்றர்கள் வீடணனால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, வானரர்களால் கைது செய்யப்பட்டு, இராமன் முன் நிறுத்தப்பட்டார்கள்.இராமன் அவர்களை விசாரித்து அவர்களிடமிருந்து உண்மையை வரவழைத்தான்.அவ்வொற்றர்களிடமே இலங்கை அரசு வீடணனுக்கு உரியதாகி விட்டது. கடலைத் தூர்த்துப் பாலம் அமைத்துவிட்டனர் வானரவீரர்கள் என்றும் கூறுங்கள். பரசுராமன் தன் தந்தைக்குத் தவறிழைத்த சத்திரிய குலத்தமை வேரறுத்ததுபோல், உன் தவற்றால் உன் குலம் முழுவதும் அழியப் போவதைச் சொல்லுங்கள் என்று கூறி அவர்களைத் விடுவித்தான்.
“தீட்டுறு மழு வாள் வீரன் தாதையைச் செற்றான் சுற்றம்
மாட்டிய வண்ணமென்ன வருக்கமும் மற்றும் முற்றும்
வீட்டிஎன் தாதைக்காக மெய்ப் பலி விசும்புளோரை
ஊட்டுவென் உயிர்கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால்”
(ஒற்றுக் கேள்விப் படலம் 722)
இராவணனிடம் வந்த ஒற்றர்கள் இராமன் சொல்லி அனுப்பிய தகவல்களை அவனிடம் கூறினார்கள்.
குரங்குச் சேனை மலைகள் கொண்டு கடலை அடைத்ததும், மலைகளைக் கடலில் எரிந்தபோது எழுந்த நீர்த்திவலைகள் உனக்கு உண்மையை உணர்த்தவில்லையா மன்னா? என்று வினவினர்.
இராமன் சொல்லச் சொன்ன தகவலையும், தாம் நேரேக் கண்ட காட்சியையும், உனக்கும் தெரிந்திருக்குமே என்றும் கூறினர்.
ஒற்றர்கள் தகவல்தொடர்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
தூதர்:
இருவரிடையே பேச்சு நிகழ்வதற்கு செய்திகளை அல்லது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு உறுதுணையாய் இருப்பவரைத் தூதர் என்று வழங்குவர். காதலர்களுக்கிடையே தூது அனுப்பும் வழக்கம் உண்டு. அரசர்களுக்கிடையே தூது அனுப்பும் வழக்கமும் உண்டு. தொல்காப்பியமும் தூது குறித்துக் கூறுகிறது. திருக்குறள் தூதருடைய பண்புகள் குறித்துக் கூறும் போது, தூது செல்பவர்கள் தான் சொல்ல வேண்டிய காரண வகையால் தொகுத்துக் கூற வேண்டும். கொடிய சொற்களை நீக்கி இனிய சொற்களால் கேட்பவர் மனங்கொள்ளும் படி சொல்ல வேண்டும். இவ்வாறு கூறி தூது அனுப்புவோருக்கு நன்மை ஏற்படுத்துபவனே தூதர் என்கிறார். தூது அகத்தூது, புறத் தூது என்று இரு வகைப்படும்.
கம்பராமாயணத்தில் அகத்தூதாக அனுமன் தூதையும், புறத்தூதாக அங்கதன் தூதையும் குறிப்பிடலாம். இராமன், அங்கதனை அழைத்து அவனிடம், நீ இராவணனிடம் சென்று சீதையை சிறையிலிருந்து விட்டு தன் உயிரைப் பெற்று வாழ்வது நல்லது. இல்லையெனில் உனது பத்து தலைகளையும், இராமன் தன் அம்புகளால் துண்டம் துண்டாகும்படி அடித்துத் தள்ளுமாறு போர்க்களத்தை அடைதல் உனக்கு நன்மை அளிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைத் துணிந்து சொல்வாயாக என்று இராவணனிடம் கூறுவாயாக என்றான்.
“என் அவற்குரைப்பது என்ன ஏந்திழை யாளைவிட்டுத்
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும்
சின்ன பின்னங்கள் செய்யச் செருக்களம் சேர்தல் நன்றோ
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக எனச் சொல்லிடு என்றான்“
(அங்கதன் தூது படலம் 925)
சீதையை விட்டுவிட எண்ணம் இல்லை என்றால், ஊருக்குள் பதுங்கி ஒடுங்கி வாழ்வது அறத்தின் வழிபட்ட செயலும் அன்று. சிறந்த வீரர்களுக்குத் தகுதியும் ஆகாது. ஆண்மையும் ஆகாது. ஆதலால் என் மார்பிலே பொருந்துமாறு தம் அம்புகளைத் தொடுத்து எதிரே வந்து நிற்க வல்லமை உடையவன் என்றால், தன் ஊருக்குள் மறைந்திடாது வெளியே வந்து போர் செய்யுமாறு சொல்வாய் என்று கூறினார். அங்கதனும், இராவணனிடம் சென்று அவ்வாறே கூறினான்.
மிதிலையில் இராமன் வில் வளைத்ததையும் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்கான ஓலையை ஜனகன் தூதர் மூலமாக கொடுத்த அனுப்பினான். தசரதன் பெற்றுக் கொண்டான். ஓலையைப் படித்து படிப்பவர்கள் மூலமாக விவரம் அறிந்து கொண்டார்.
இந்திரசித் பிரம்மாத்திரம் மூலமாக அனுமனைக் கட்டியதைத் தூதர்கள் இராவணனிடம் கூறினர். தூதர்களுக்கு இராவணன் பரிசளித்தான்.
தூதர்கள் தகவல் தொடர்பாளர்களாக செயல்பட்டனர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
தானே உணர்தல்
வாலில் இடப்பட்ட தீயினால் இலங்கையையே அனுமன் தீயிட்டான். திரிசடை மூலம் தகவல் அறிந்த சீதை, தீக்கடவுளுக்குக் கட்டளையிட்டாள். ’அனுமனைச் சுடாதே’ என்று. வாலில் வைத்த நெருப்பு தன்னைச் சுடாததன் காரணம் சீதையின் கற்புதான் என்பதை அனுமனும் உணர்ந்து கொண்டார். அனுமன் சீதையிருக்கும் இடம் குறித்து இராமனிடம் கூறியவுடன் காலம் தாழ்த்தாமல் 12 நாட்களில் கரையை அடைந்தார்.
முரசறைந்து தெரிவித்தல்
அரசனது அறிவிப்புகளை மக்களுக்கு முரசறைந்து அல்லது பறையடித்து சொல்வது மரபாகும். இலக்கியங்களில் திருமணம் செய்தியை அறிவிக்க, முடிசூட்டு விழாவை அறிவிக்க, போர் தொடக்கத்தை அறிவிக்க, போர்ப் பூவைப் பெற்றுக்கொள்ள, போர் ஆரம்பித்துவிட்டது என்பதை அறிவிக்க, சமாதானத்தை அறிவிக்க, போர் இருப்பதை அறிவிக்க, வெற்றியை அறிவிக்க, பிறந்தநாள் விழாவை அறிவிக்க, விழா நடைபெற இருப்பதை அறிவிக்க என்று பல அறிவிப்புகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே முரசு முழங்கப்பட்டுள்ளது.
திருமணச் செய்தியை முரசறைந்து அறிவித்தல்
இராமன் வில்லை வளைத்து வெற்றி பெற்ற செய்தியைத் தூதர்கள் வந்து சொல்லக் கேட்ட தசரதன், இராமனுக்குத் திருமணம் நடைபெற இருக்கின்ற செய்தியை ஊர் மக்களுக்கு முரசறைந்து சொல்வாயாக என்று ஆணையிட்டான். அதன்படியே வள்ளுவனும் தசரதனது ஆணையை முரசறைந்து அறிவித்தார்.
“வானவர் குலத்து எமர் வரத்தினால் வரும்
வேனில் வேள் இருந்த அம் மிதிலை நோக்கி நம்
சேனையும் அரசரும் செல்க முந்து எனா
ஆனைமேல் மணமுரசு அறைக என்று ஏவினான்”
“வாம் பரி திரைக்கடலை வள்ளுவன்
தேம் பொழி துழாய் முடிச் செங்கண் மாலவன்
ஆம் பரிசு உலகு எலாம் அளந்து கொண்ட நாள்
சாம்பவன் திரிந்தெனத் திரிந்து சாற்றினான்”
(எழுச்சி படலம் 687, 688)
சில சப்தத்தின் ஒலியால் அறிதல்
சில ஒலிகளைக் கொண்டு அது எதனால் ஏற்பட்ட ஒலி என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
நதி வந்து கலப்பதனால் உண்டாகும் ஒலி
வேள்விப் படலத்தில் விசுவாமித்திரர் இராம லட்சுமணரோடு வரும்போது வழியில் எதிர்ப்பட்ட நதி பற்றி இராமன் வினவ, முனிவர் விடையும் கூறும்போது மானசம் என்னும் பொய்கையில் தோன்றி பாய்ந்து வருவதால் சரயு என பெயரைப் பெற்று மென்மையான வாழ்க்கை முறையை உடைய தேவர்களால் போற்றப்பட்டது. இச்சிறந்த நதியோடு கோமதி என்னும் நதி வந்து கலப்பதனால் உண்டாகும் போது ஏற்படுகின்ற ஒலி இது என்று முனிவர் கூறினான்.
மூவரும் தொடர்ந்து அப்பால் சென்று தன்னில் மூழ்கிய அவர்களின் பிறப்பை ஒழிக்கும் புனிதம் வரைந்த மற்ற நதியை அடைந்தனர். (வேள்வி படலம் 403)
ஒரு நதியோடு மற்றொரு நதி வந்து சேரும்போது உண்டான ஒலியால் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
தயிரைக் கடையும் மத்தினது ஓசை
நாட்டுப்புற இடைப் பெண்கள் கெட்டியாகத் தோய்ந்துள்ள வெண்மையான தயிரைக் கடையும் மத்தினது ஓசை விட்டுவிட்டு மிகுந்து ஒலிக்கவும், வெண்ணிறம் பொருந்திய சங்கு வளைகள் வாய்விட்டு கதறுவது போல ஒலிக்கவும், மிகுந்த மெல்லிய நுட்பமான இடைகள் முன்னே சென்று வளையவும் தன் அழகிய கைகளால் மிக வருந்தி தயிர்க் கடைவார்கள். (நாட்டு படலம் 60)
இசைக்கருவிகளின் ஒலி -மன்னர் வருகை
மன்னர்கள் வரும்போது இசைக்கருவிகளால் இசைப்பர். இதிலிருந்து மன்னர் வருகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். வேதத்தில் விளக்கப்பட்ட வேள்விக்கு உரிய கடமைகள் நிறைவேறியபோது மத்தளமும், பல அரிய வாத்தியங்களும் பேரொலி செய்தன. தசரதன் அனைவர்க்கும் அருள் புரியும் அரண்மனையை அடைந்தான்.
“முருடொடு பல் இயம் முழங்கி ஆர்த்தன
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான்”
(திருஅவதாரப்படலம் 273)
மங்கல ஆரவாரம்
இராமனுக்கும் சீதைக்கும் திருமணச்சடங்கு முடிந்தமையால் மங்கல முரசுகள் முழங்கின. சங்குகள் ஒலித்தன. நான்கு வேதங்களின் நாதங்கள் நிறைந்தன. தேவர்கள் ஆரவாரித்தனர். பல்வேறு கலைகள் ஆரவாரித்தன.பல்லாண்டுப் பாடல்கள் ஒலித்தன. வண்டுக்கூட்டங்கள் ஆரவாரம் செய்தன. கடல்களும் ஆரவாரம் செய்தன.
“ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம்
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர்
ஆர்த்தன பல் கலை ஆர்த்தன பல்லாண்டு
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை”
(கடிமணப்படலம் 1199)
வில் நாண் ஒலி
வில்லின் நாண் ஒலி போருக்குத் தயாராக இருப்பதைத் தெரிவிக்கும். கைகேயி பெற்ற வரத்தினால் இராமன் கானகம் செல்ல வேண்டும் என்ற செய்தியைக் கேட்ட இலட்சுமணன் மிகுந்த கோபத்துடன் தன் வில்லின் நாணை அதிரச் செய்தான். அவ்வொலி கேட்ட இராமன் இவ்விடத்திற்கு வந்து அவன் கோபத்தைக் குறைக்குமாறு பேசினான்.
முதற்போர்புரிபடலம் இராவணன் வில் நாண் ஒலி கேட்டு வானரங்கள் அஞ்சி நடுங்கின. தேவரும் அஞ்சுமாறு இராவணன் தன் கொடிய கண்களில் இருந்து தீப்பொறி பறக்க வில்லின் நாணை செவ்விய முறையில் அணிந்த தோலுறை மூடிய கையால் தெறித்தான். அவ்வளவில் குரங்கினங்கள் பக்கத்தில் எல்லா இடங்களிலும் நிலைக்கெட்டு சிதறி ஓடின. இடியானது இடிக்கும் போது வருந்தி ஒளிந்து கொள்ளும் பாம்பைப் போன்று சில வானரங்கள் நிலைகுலைந்து ஓடின. சில வானரங்கள் மடிந்தன. சில வானரங்கள் அச்சம் கொண்டன. சில வானரங்கள் அழுதன. சில வானரங்கள் போர் செய்யும் களத்தில் உயிருடனே புரண்டு போயின.
“அவ்வழி இராவணன் அமரர் அஞ்சத்தன்
வெவ்வழி நெருப்புக வில்லின் நாணினைச்
செய்வழிக் கோதையின் தெறிக்கச் சிந்தின
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம்”
“உரும் இடித்துழி யுலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து
இரியலுற்றன சில இறந்தவால் சில
வெருவலுற்றன சில விம்மலுற்றன
பொரு களத்து உயிரொடும் புரண்டு போம்சில”
(முதல் போர் புரி படலம் 1080, 1081)
இதிலிருந்து நாண்ஒலி எழுப்புதல் போருக்கான ஆயத்த நிலையாக அறிந்து கொள்ளமுடிகிறது.
சனகன் சீதையின் திருமணத்திற்கு விதித்திருந்த நிபந்தனைபடி இராமன் வில்லை வளைத்து நாணேற்றினான். அந்த ஒலி அயோத்தியில் இருந்த தசரதனுக்கும், மகேந்திர மலையில் இருந்த பரசுராமருக்கும், இலங்கையில் இருந்த மாலியவானுக்கும் கேட்டது.
கரணுடைய சேனை இராமன் இருப்பிடம் அடைதல்
பேரிகைகளின் முழக்கத்தால் ஆகாயத்தில் உள்ள மேகக் கூட்டம் நடுக்கம் கொள்ளவும், நீண்ட விழிகளின் நாண் ஒலியினால் இடிகள் யாவும் அஞ்சி கலக்கம் அடையவும், படைகளின் ஆரவாரத்தால் கடல் அஞ்சி தளரச்செய்தவும். அரக்கர் சேனை போரிடுவதை விரும்பி இருந்த வீரனான இராமலட்சுமணர் தங்கி இருந்த இடத்தை அடைந்தது. (கரண் வதைபடலம் 416)
போருக்காக படை வீரர்கள் அனைவரும் அணிவகுத்து வருவதை அங்கு எழுந்த சப்தமே உணர்த்தியது.
உறங்கும் இராவணனைக் கண்ட அனுமன்
இலங்கையில் இராவணனைக் கண்ட அனுமன் கயிலாய மலையை அசைத்த தோள்களால் முன்பு நடந்த கொடிய போரிலே திசை யானைகளின் தந்தங்கள் பட்டு உடைந்த பழைய வடுக்கள் இருந்தன. அவற்றிற்கு இடையே மன்மதன் செலுத்திய கொடிய அம்புகள் ஊடுருவிச் சென்று பாய்ந்ததனால் பசும்புண்கள் தோன்றினில் குருதி உடைந்தது. இராவணன் உடலில் சந்தனம் பூசி இருந்தால் அதன் மேல் இனிமையான தென்றல் காற்று அவன் கொண்ட காதல் கனலை வளர்க்கும் துருத்தி காற்று போல வீசியது. காந்தள் மலர் போன்ற விரல் கொண்ட சீதையிடம் மனம் முதலான அந்தகரணங்கள் விரைவாக ஓடிவிட பாம்புகள் நீங்கிய புற்றைப் போல நெகிழ்ச்சி பெற்ற உள்ளம் பாழாக அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.
ஆராய்ந்த வளை அணிந்த மகளிர் இந்நிலையில் உள்ள இராவணனுடன் துயல்பவராய் இல்லை. இவனும் இணைந்த காமத்தால் தவிக்கின்ற நிலையில் இருக்கிறான். இந்த நிலை சீதை இவனுக்கு இணங்காமல் நல்ல நிலையில் உள்ளாள் என்னும் நல்ல செய்தியைத் தெரிவிக்கின்றது என்று மீண்டும் கூறிக்கொண்டான்.
“அந் நிலையான் பெயர்த்து உரைப்பான் ஆய்வளைக் கை அணி இழையார்
இந் நிலையானுடன் துயில்வார் உளர் அல்லர் இவன் நிலையும்
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை பூவை
நல் நிலையில் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால்”
(ஊர் தேடு படலம் 318)
இராவணனின் நிலையைப் பார்த்தே சீதை நல்ல நிலையில் இருக்கிறாள் என்பதை அனுமன் அறிந்து கொண்டான் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
குரலால் தகவல் அறிதல்
மானின் பின் சென்ற இராமன் தன் அம்பினை மாரீசன் மேல்விட, அவன் ஓ சீதா, ஓ,இலட்சுமணா என்று தன் வாயினால் எட்டுத்திக்குகளிலும் அதற்கு அப்பாலும் சென்று ஒலிக்கும்படி உரத்த குரலில் ஒலியை வெளியிட்டு இறந்தான். தூரத்தில் பர்ணசாலையில் இருந்த சீதைக்கும், இலட்சுமணனுக்கும் கேட்டது.அது இராமன் குரல் என நம்பிய சீதை, இராமனுக்கு ஏதோ துன்பம் என்று எண்ணி பயந்தாள்.தூரத்தில் நடந்த விசயம் என்றாலும் ஒலியால் அங்கு ஏற்பட்ட தகவலை சீதை அறிந்து கொண்டாள்.
"நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப்
பட்டது அப்பொழுதே பகு வாயினால்"
(மாரீசன் வதைப்படலம் 797)
தேர்ச்சுவடு கண்டு தகவல் அறிதல்
தைலமாட்டுப்படலத்தில் இராமன் சீதை இலட்சுமணனுடன் காடு செல்ல, ஊர் மக்கள் அனைவருமே அவன் பின்னால் வர, அன்று இரவு அவர்கள் அனைவரும் உறங்கும்போது, இராமன் சுமந்திரனிடம், தேரினை ஊரை நோக்கி தடம் பதித்துச் செல்லுமாறு கூறினான். அவ்வாறே சுமத்திரனும் தடம் பதித்து அயோத்தி சென்றான். மறுநாள் காலையில் கண் விழித்துப் பார்த்த மக்கள் இராமனின் தேர்த்தடம் அயோத்தி நோக்கிச் செல்வதைக் கண்டு மகிழ்ந்து, இராமன் அயோத்தி சென்றுவிட்டான் என்று எண்ணி ஊருக்கு வந்தனர்.
“மான அரவின் வாய்த் தீய வளை வான் தொளைவாள் எயிற்றின்வழி
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதும் பெற்று உய்ந்து
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு அரிய
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டும் என்ன ஆண்டையோர்”
(தைலமாட்டு படலம் 605)
தேர்த்தடம் தொடர்ந்து தேடிச் செல்லுதல்
மாரீசனைத் தொடர்ந்து சென்ற இராமனும், சீதையின் கட்டாயத்தால் அவளைத் தனியே விட்டு விட்டுச் சென்ற இலட்சுமணனும் திரும்பி வந்து பார்த்தபொழுது பர்ணசாலையையே காணவில்லை. அங்கிருந்த சீதையையும் காணவில்லை. பூமியில் தேர் சென்ற நீண்ட வழியில் சென்றனர்.தேர் நிலத்தின் மீது சென்றதால் உண்டான சக்கரத்தின் அடையாளம் சுவடுகள் தெரிந்தன. பின் ஓரிடத்தில் அந்தத் தேர் ஆகாயத்தில் எழுந்து சென்றதாகத் தெரிகிறது.
“மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய் உற வெந்த”
(சடாயு உயிர் நீத்தப்படலம் 964)
தேர்த்தடத்தைக் கண்டு தகவலை அறிந்து கொள்ளமுடிகிறது.
ஒலியும், வாசனையும் தகவல் அறிவித்தன
சூர்ப்பணகைப்படலத்தில் முதலில் இராமனைக் கண்ட சூர்ப்பணகை அவன் வடிவழகில் மயங்கி அவனை அடையவேண்டும் என்ற எண்ணத்தில் தன் தோற்றத்தை அழகான உருவம் எடுத்து வந்தாள். அவள் அணிந்துள்ள காற்சிலம்பும், மேகலைபரணமும், மணி மாலைகளும் அவளது கருமணல் போன்ற கூந்தலில் சூடிய மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ஆகிய இவை ஆரவாரிக்கும் பேரொலி ஒரு மங்கை வருகிறாள் என்பதைத் தெரிவித்தது. இராமனும் அந்த ஒளி வந்த திசையை நோக்கி உற்றுப் பார்த்தான்.(சூர்ப்பணகைப்படலம் 251)
ஒரு பெண் வருகிறாள் என்பதை அவள் அணிந்திருந்த ஆபரணங்களும், அவள் பூசியிருந்த வாசனைத் திரவியங்களும் தூரத்தில் அவள் வரும்போதே தகவலை அறிவித்தன.
தூரத்தில் பரதனின் தோற்றத்தைக் கண்ட குகன்
பரதன் வனத்தில் இருக்கும் இராமனை அழைத்துவந்து அயோத்தியின் அரசனாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தான். ஆனால் குகன் முதலில் படைகளுடன் பரதன் வருவதை அறிந்து கோபம் கொண்டு தன் படையினரைப் போருக்குத் தயாராக்கினான். கங்கையின் மறுகரையில் நின்ற பரதனைக் குகன் கண்டான். இராமன் போன்ற தவக்கோலத்தைக் கண்டான்.இராமன் உடுத்தி இருப்பதைப் போன்றே மரவுரி உடுத்தியவனாய் அழுக்கடைந்த உடம்பை உடையவனாய், ஒளியற்ற நிலவினைப் போன்ற பொலிவற்ற முகத்தினைப் பெற்றவனாய், கல்லும் கரைந்துருகும் வண்ணம் கனத்த துன்பத்தைக் கொண்டவனாய் நின்றிருந்த பரதனைக் கண்டான். குகன் கண்டதும் தனது கையிலிருந்த வில்லானது கீழே விழுந்திட மனம் நடுங்கிச் செயலற்று நின்றான்.(கங்கை காண் படலம் 1013)
பின்னர் ஆடவரின் சிறந்த பரதனாகிய இவன், எனது தலைவனாகிய இராமனை ஒத்துள்ளான். அருகில் நிற்கும் சத்ருக்கணனும், இராமனை அருகில் நிற்கும் இலட்சுமணனையே ஒத்துள்ளான். இராமனைப் போலவே இப்பரதனும் தவவேடத்தினையே கொண்டுள்ளான். அவனுக்கேற்ற துன்பம் எல்லையற்றதாயுள்ளது. இராமன் இருக்கும் தென்திசை நோக்கி வணங்குகின்றான். எம்பெருமானாகிய இராமனுக்குத் தம்பியாகப் பிறந்தவர்கள் தவறு செய்வார்களோ? (கங்கைகாண்படலம் 1014)
முதலில் தவறாகப் புரிந்து கொண்ட குகன் பரதனது தோற்றத்தைக் கண்டே உண்மை நிலையை அறிந்து கொண்டான்.
தானே செய்தியைக் கூறல்
சம்பாதி படலத்தில் அனுமன், அங்கதன் மற்றுள்ளோரிடம் எத்தனை தேடியும் ஒரு திங்களில் காணவில்லையேல் ஜடாயு மாண்டது போல மாண்டு போவோம் என்றான். ’சடாயு மாண்டு போனான்’ என்ற சொல் கேட்ட சம்பாதி எனும் பறவை இவர்களை நெருங்கி வந்து நடந்தது என்ன என்று கேட்டு தகவலை அறிந்து கொண்டது. சம்பாதி அவர்களிடம் சூரியனின் வெப்பத்தால் ஜடாயுவைக் காக்க வேண்டி சிறகு எரிந்ததையும், ராம நாமம் கேட்டால் சிறகு வளரும் என்ற தகவலையும் கூறுகிறது.
சுக்ரீவன்சீதையைத்தேடச் செல்லும் வானரவீரர்களுக்கு இலங்கைக்கு வழி மேல் தகவல் கூறினான்.
கயிலாய மலையை எடுத்த தோள்கள் என்று தகவலை இராவணனே கூறுகிறான்.
தசரதன் இறக்கும் தருவாயில் கோசலையிடம் தான் சாபம் பெற்ற கதையைக் கூறுகிறான்.
தகவல்களை அறிந்து வைத்திருத்தல்
இராமன் வில்லை வளைத்து சீதையை மணந்தது. சுக்ரீவன் கூறியதால் மராமரத்தில் துளையிட்டது உட்பட பல செய்திகளையும் இராவணனும் அறிந்து தான் வைத்திருந்தான்.
தசரதன் சம்பராசுரன் போரில் வென்றமையைக், கைகேயி வரம்பெற்றமை. அந்த வரத்தால் இராமன் வனம் வந்தடைய வீடணனும் அறிந்து வைத்திருந்தார்.
வாலி எதிரில் யார் எதிர்த்து போரிட வந்தாலும் அவர்களின் பலத்தில் பாதி வாலியை வந்தடையும் என்பதை அனுமன், இராமனிடம் கூறுகிறான். இராவணன் கயிலாய மலையை எடுத்ததை சீதையும் அறிந்து வைத்திருந்தாள் என்பதை ஊர்தேடு படலம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கூனியின் முதுகில் இராமன் மண் உருண்டையால் அடித்தான் என்ற செய்தி இராமன், கூனி இருவருக்கு மட்டுமே தெரிந்திருந்த செய்தி. இராமன் சுக்ரீவனிடம் ’சிறியவர் என்று இகழாதே’ என்று அறிவுரை கூறும்போது இத்தகவலையும் கூறுகிறான்.
முதல் போர் புரி படலத்தில் இராவணன், மாலியவனிடம் இராமனின் போர் திறம் குறித்துக் கூறும் போது, கூனி முதுகில் விளையாட்டாக எரிந்த உருண்டை போல இருந்தது என்று கூறுகிறான். இராவணன், சீதையிடம் தன்னை ஏற்றுக்கொள் என்று பலவிதமாக வேண்டும்போது இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்றியதால் அகலிகைக்கு என்ன பிரச்சனை ஒன்றும் இல்லையே என்கிறான். அதையும் அறிந்து வைத்திருக்கிறான்.
வாலி, இராமனிடம் வாதிடும்போது வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் என்று தசரதனின் பெருமையைக் கூறுவதிலிருந்து அறிந்து வைத்திருந்தான் என்பதை அறிய முடிகிறது. பரதனின் சிறப்புக்களையும் அறிந்து வைத்திருந்ததையும் அறிந்து கொள்ளமுடிகிறது.
சீதை இராவணனிடம் நீ கார்த்தவீரியனிடம் தோற்றாய் என்றும் கார்த்தவீரியனை வென்றவர் பரசுராமர் என்றும் கூறுகிறாள்.அந்தப் பரசுராமனின் அகந்தையை அழித்தவன் தன் இராமன் என்றும் கூறுகிறாள்.
சீதை தூக்கிட்டு தற்கொலைக்கு முயலும் போது அனுமன் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுகிறார். அந்த ஒலியைக் கேட்ட சீதை தற்கொலை செய்யாமல், நீ யார் என்று வினவ, இராமதூதன் என்று கூறி, இராமனுடன் நீ அயோத்தி நகர மதிலைக் கடக்கும் முன் வனம் இதுதானா என்று கேட்டீர்களாமே, சுமந்திரனிடம் கிளிகளையும், நாகணவாய்ப் பறவைகளையும் கவனமாக பார்த்துக் கொள்ளும்படி தங்கையிடம் கூறுமாறு சொன்னீர்களாமே என்றெல்லாம் கூறி இராமன் பெயர் பொறித்த அவர் கொடுத்தனுப்பிய கணையாழியை சீதையிடம் கொடுத்தான்.
இராவணனுக்கு சாபம் இருப்பதால் கட்டாயப்படுத்தி தீண்ட மாட்டான் என்ற தகவலை திரிசடை, சீதைக்குக் கூற அவள் அனுமனுக்குக் கூற, அனுமன் இராமனிடம் கூறினார். இராமனிடம் சென்ற அனுமன் என் உடல் தீண்டிய காகத்தின் மீது பிரம்மாஸ்திரம் விடுத்ததையும் கிளிக்குக் கைகேயியின் பெயர் வைத்ததையும் கூறி சூடாமணியை அனுமனிடம் கொடுத்து அனுப்பினாள் சீதை.
இராவணன், சீதை பாதத்தில் விழுந்தான் என்பதைக் கும்பகர்ணனும் அறிந்து தான் வைத்திருந்தான்.
இராவணன், சீதை காலில் மூன்று முறை விழுந்தான். முதலில் பர்ணசாலையில் தண்டக வனத்தில் சீதையின் காலில் விழுந்தான். அதை யாரும் பார்க்கவில்லை. இரண்டாவது முறையாக விழுந்தபோது அசோகவனத்தில் அரக்கியர் திரிசடை உட்பட பலர் இருந்தனர். அனுமன் மரத்தின் மீது இருந்து பார்த்தான். மூன்றாவதாக அசோகவனத்தில் பெண் பால் வைத்த ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மை தான் மாசுராதோ காமத்தால் உண்டாகும் அவஸ்தைப் பத்து என்பர். அது ஆயிரம் அவஸ்தை என்பதை உணர்ந்தேன் என்று கூறி இராவணன் சீதையின் காலில் விழுந்ததைக் கும்பகர்ணன் கூட அறிந்து வைத்திருந்தான். உன்னை விரும்பும் மனைவியர் இருக்க, நீயோ அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்பட்டு அவள் காலில் விழுகின்றாய் என்று கூறுகிறான்.
பொழில் இறுத்தப் படலத்தில் அனுமன் ஆரவாரித்த ஓசை இராமன் சிவதனுசை இற்றபோது எழுப்பிய ஓசை போல் இராவணனின் 20 செவிகளிலும் விழுந்தது.
அரசனானதை அறிவித்தல்
இலட்சுமணனிடம் ’இலங்கை செல்வம் இவன் பெற்றான்’ (வீடணன்) என்பதை அனைவரும் கேட்கக் கூறி, படைச்சூழ பாடி வீட்டை வலம் செய்து வருக என்றான். ஒரு பல்லக்கில் அமர வைத்து குரங்கு சேனை முழுவதுமாக இந்திரற்குரிய செல்வம் எய்தினான் இவன் என்று மொழிந்து வலம் வந்தனர். (வீடணன் அடைக்கலப்படலம் 454)
வீடணன் இலங்கை அரசனானதை அங்கிருப்பவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்றும்,ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும், அந்தத் தகவல் இலங்கையையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும்தான்.பாசறை முழுவதுமாக வலம் வந்து தகவலைத் தெரிவித்தனர்.
இராவணன்- அனுமன் அறிமுகம்
இந்திரசித்தால் கைது செய்யப்பட்டு இராவணன் முன் அனுமன் நின்றிருந்தான். அப்போது நீ யார் என்று இராவணன் கேட்டான். இராமனின் தூதன். இராமனுக்கு அடிமைத் தொழில் செய்பவன்.உன்னை வாலில் கட்டி இழுத்துச் சென்ற வாலியை இராமன் அழித்தான் என்று கூறுகிறான்.(பிணி வீட்டு படலம் 1128)
வாலி உன்னை வாலில் கட்டி இழுத்துச் சென்றதை நான் அறிந்தவன். உன்னுடைய குறைபாடு என்ன என்பதை நான் அறிவேன் என்ற தகவலையைக் கூறினான்.
அங்கதன்- கும்பகர்ணன் அறிமுகம்
போர்க்களத்தில் தன் எதிரே வந்த அங்கதனைக் கண்ட கும்பகர்ணன் நீ யார் சுக்ரீவனா? இலங்கையை ஏறியச் செய்த அனுமனா? சொல் என்றான். உடனே அங்கதன் உன் அண்ணனான இராவணனை வாலில் கட்டி, உலகின் நான்கு திசைகளிலும் தன் சூலபாணியின் பாதம் பணிந்த வாலியின் மைந்தன். உன்னை என் வாலில் கட்டி கொண்டு போய் இராமன் பாதங்களை வணங்குவேன் என்று கூறினான்.
“நும்முனை வாலின் சுற்றி நோன்திசை நான்கும் தாவி
மும்முனை நெடுவேல் அண்ணல் முளரிஅம் சரணம் தாழ்ந்த
வெம்முனை வீரன் மைந்தன் நின்னைஎன் வாலின் வீக்கி
தெம்முனை இராமன் பாதம் வணங்கிடச் செல்வென் என்றான்”
(கும்பகர்ணன் வதைப்படலம் 1404)
உன் அண்ணனை என் அப்பா தன் வாலில் கட்டி இழுத்துச் சென்றார் என்ற இரகசியத்தையும் நான் அறிவேன். அதேப்போல் உன்னை நான் வாலில் கட்டு இழுத்துச் செல்வேன் என்ற தகவலைக் கூறினான்.
கும்பகர்ணன் இராமனிடம் கபந்தனும், வாலியும் என எண்ணிக்கொண்டு என்னோடு போர் புரிய வந்துள்ளாய் என்று கூறினான்.இராமனின் கைகளால் கபந்தனும், வாலியும் இறந்தனர் என்ற தகவலை, பாதி நாட்களும் தூக்கத்திலேயே கழித்த அந்த கும்பகர்ணனும் அறிந்து வைத்திருந்தான் என்பதை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.
தனக்குக் கிடைத்த சாபத்தினால் வாழ்நாளில் பாதி நாட்கள் தூங்கினாலும் நாட்டில் நடக்கும் செய்திகளையும் அக்கரையோடும், ஆர்வத்தோடும் தெரிந்துதான் வைத்திருப்பான்.
இராமனும், கும்பகர்ணனும் போரிடும்போது, இராமன் அவனுடைய ஒரு காலை அம்பிட்டு வெட்டினான். ஒரு கையை அம்பிட்டு அறுத்தான்.கும்பகர்ணன் நல்ல கையால் அறுந்த கையை எடுத்து வானரங்களை அடித்தான்.ஒரு காலாலே போரிட்டான். இக்காட்சியைக் கண்ட இராமன், கும்பகர்ணனின் மாவீரத்தைக் கண்டு உணர்ந்து மலர்க்கரம் விதிர்ப்புற்றான்.
ஆரவார ஒலியால் தகவலை அறிதல்
கும்பகர்ணன் போருக்குச் சென்றான். இராவணன் மாயாஜனகனுடன் மகோதரனுடன் சீதை இருக்கும் அசோகவனம் சென்றான். சீதையை பயமுறுத்தியாவது அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டிருந்த இராவணன் காதில், குரங்கு கூட்டத்தின் ஓசை விண்ணைப் பிளந்தது. எம்பிக்கு நேர்ந்தது என்று நினைக்கின்றான். தூதர் வந்து அந்தச் செய்தியை அவன் செவியில் உரைத்தனர். கெண்டை தடம் கண்ணால் உள்ளுக்குள்ளே கிளுகிளுத்தாள்.
வானரங்களில் ஆரவாரொலியால் சீதையும் கும்பகர்ணன் இறந்ததை அறிந்து கொண்டாள்.
ஆரவாரொலியால் ஆனந்தத்தை அறிவித்தல்
நாக பாசத்தால் கட்டுண்ட இலட்சுமணன் கருடன் வருகையால் விடுபட்டான். அனுமன் இராமனிடம் இலட்சுமணன் இறந்துவிட்டான் என்கின்ற செய்தியால் அன்னையும் உள்ளம் நோகும் அதைத் தவிர்க்கவும், இறந்தவர் உயிர்ப் பெற்றனர் என்று அரக்கர் அஞ்சவும் இலட்சுமணன் உயிர்த்ததைப் பெரிய ஆரவாரம் செய்வோம் என்றான்.
“இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும்
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகிமீளப்
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே
அறம்தரு சிந்தை அன்ப ஆர்த்தும் என்று அனுமான் சொன்னான்”
(நாகபாசப்படலம் 2215)
இராமனும் நல்லது செய்மின் என்றான். முழக்கம் விண்ணை எட்டியது இராவணன் செவியில் இடியாய் பாய்ந்தது வெற்றி செய்தி தந்த மைந்தன் அது என்று வெற்றி செய்தியா என இந்திரஜித் தன் மாளிகைக்குச் சென்றான்.
ஆரவார ஒலியைக் கேட்ட சீதை உண்மையை உணர்ந்து மகிழ்ந்தாள். தன் மகன் கூறிய செய்தி உண்மையா? இல்லையா என்பதை அறிந்து வர இராவணன் மகன் அரண்மனைக்குச் சென்றான்.
தோற்றத்தைப் பார்த்தே தகவல் அறிதல்
இந்திரசித் செய்த நிகும்பலை யாகத்தை வீடணன் கூறியதால் இலட்சுமணன் யாகத்தை அழித்தான். கடுமையான போர் நடைபெற்றது. இடையிலேயே இந்திரசித், இராவணனை வந்து பார்த்தான். மகனைக் கண்ட அப்பா இராவணன் காயங்களுடன் தோல்வி சோகத்துடன் வந்த மகனைக் கண்டு நடந்ததை அறிந்து கொண்டான்.
“தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில்நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவுஇல் யாக்கை”
(இந்திரசித் வதைப்படலம் 3058)
தோல்வி அடைந்ததை மகனின் தோற்றத்தை வைத்தே அறிந்து கொண்டான்.
கைகேயி பெற்ற வரத்தினால் இராமன் காடு செல்ல இருப்பதைக் கோசலையிடம் கூற வருகின்றான். இராமனுக்கு இன்று பட்டாபிசேகம் என்று மகிழ்ச்சியுடன் இருந்த கோசலை இராமன், இலட்சுமணனுடன் வருவதைக் கண்டு முடிபுனைய இடையூறு உள்ளதோ என்று இராமனிடம் வினவுகின்றாள். வெண்கொற்றக்குடை, பரிவாரங்களுடன் வருவான் என்று நினைத்தவளுக்கு அவன் வரும் நிலைகண்டே ஏதோ நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்கிறாள்.(நகர்நீங்கு படலம் 294)
அன்புடையோர் தந்த தகவல்
சுக்ரீவன், வாலியைப் போருக்கு அழைக்கின்றான். அப்போது வாலியின் மனைவி தாரை வாலியிடம் உங்களிடம் தோற்று பயந்துபோன உங்கள் தம்பி இப்போது போருக்கு அரைக்கூவல் விடுத்துள்ளான். அவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளான் என்று நம்மீது அன்புடையோர் கூறினர் என்று கூறி தடுக்கின்றாள்.தாரை, இராமன் குறித்து அறிந்து வைத்திருந்தாள் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகிறது.
சீதையைத் தேடி இராமன் வரும்போது சபரியும், கவந்தனும் சுக்ரீவனிடம் போகச் சொல்கிறார்கள்.
பிரம்மாத்திரத்தினால் இராமன் உட்பட அனைவரும் மயங்கிக் கிடக்கும்போது சாம்பன், அனுமனிடம் மருந்துமலைக் குறித்துக் கூறி எங்குள்ளது, எப்படி எடுத்து வரவேண்டும் என்பதை அனுமனுக்குக் கூறி அனைவரையும் உயிர்ப்பெறச் செய்தான். இலட்சுமணனிடம், வீடணன், இந்திரசித்தின் வீரம், அவன் செய்யும் மாயப்போர், அவனுடைய தேர்ச்சிறப்பு, குதிரைகளின் சிறப்பு, பகலில் தவிர இரவில் அவன் சாகமாட்டான். அவனைக் கொல்ல என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்துத் தகவல்களையும் கூறுகிறான்.இலங்கை நகர் குறித்து வரைபடத்தையும் கொடுத்தவன் அவனே.
பொருட்களைப்பார்த்தே அவர்களுடையது என்ற தகவலை அறிதல்
இராமன், சீதையைத் தேடி வனம் வரும்போது சுக்ரீவன் அணிகலன்களைத் தந்தான். இதைக் கண்ட இராமன் இது சீதையினுடையதுதான் என்பதை அறிந்து வருத்தப்படுகிறான்..
இராமன், சீதையைத் தேடிச் செல்லும் அனுமனிடம் தன் பெயர் பொரித்த கணையாழியைத் தருகிறான். சீதையைக் கண்டபோது மோதிரத்தைத் தந்தான். இது இராமனுடையது என்பதை சீதை அறிந்து கொள்கிறாள்.
“இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ
துறந்த உயிர்வந்து இடைதொடர்ந்ததுகொல் என்கோ
திறம் தெரிவது என்னைகொல் இந் நல் நுதலி செய்கை”
(உருக்காட்டுப்படலம் 551)
சீதை அனுமனிடம் தன் சூளாமணியைக் கொடுத்தனுப்புகிறாள். அதைக் கண்ட இராமன் இது சீதையினுடையது என்பதை அறிந்து கொள்கிறான்.(திருவடிதொழுத படலம் 1293)
மீட்சிப்படலத்தில் தான் தாமதமாக வந்தால் பரதன் இறந்துவிடுவானோ என்று எண்ணிய இராமன் தன் பெயர் பொரித்த கணையாழியை அனுமனிடம் கொடுத்தனுப்புகிறான். இராமன் வராததால் பரதன் தீக்குளித்து உயிரைவிட இருந்த நேரத்தில், அங்கு வந்து மோதிரம் தந்து பரதன் உயிரைக் காப்பாற்றினான். அம்மோதிரம் இராமனுடையதுதான் என்பதை பரதனும் அறிந்திருந்தான்.(மீட்சிப்படலம் 4136)
கைகேயி, இராமனிடம் பதினான்கு ஆண்டு வனவாசம் முடித்து வா என்றாள். அவனும் இப்போதே விடை பெற்றுக் கொண்டேன் என்று கூறிவிட்டு வந்தான். இருப்பினும் அவன் சுபத்ரையின் அரண்மனையில் அவளிடம் விடைபெற இருந்தபோது,கைகேயி கொடுத்தனுப்பியதாக மகளிர் மரவுரி ஆடையைக் கொண்டு வந்து கொடுத்தனர்.அதை இருவரும் தரித்தே வந்தனர்.(நகர்நீங்கு படலம் 435)
தாய்மார்களும்,அந்தணர்களும் அரசர்களும் முதலிய பலரும் புழுதி உடம்பொடு அழுதபடி பக்கங்களில் வந்து வருந்த, மரவுரி ஆகிய உடையை உடுத்தியவனாய் இராமன் வருவதைக் கண்டு தீட்டிய சித்திரம் போலத் திகழும் சீதை மனம் திடுக்கிட்டு எழுந்து நின்றாள். (நகர்நீங்கு படலம் 504)
கைகேயி இராமனையேக் காட்டுக்குச் செல்ல கூறினால் என்றாலும் எப்படியும் இலட்சுமணனும் உடன் செல்வான் என்பதாலேயே மரவரியை இருவருக்கும் கொடுத்து அனுப்பினாள். மரவுரி கோலத்துடன் இராமன் இலட்சுமணன் வந்ததைக் கண்டவுடன் சீதையும் மரவுரி தரித்து நானும் வருவேன் இதற்குத் தயாராக இருக்கிறேன் என்பது போல வந்தாள்.
வீடணன் கூற, இராமன் தகவல் அறிதல்
இலங்கை வேள்விப் படலத்தில் இராமனிடம் அடைக்கலம் பெற்ற வீடணன் இலங்கையின் பெருமை குறித்தும், மதில், அகழி, வீரர்கள் குறித்தும் கூறினான். படைபலம் குறித்தும் கூறினான். பின் இராமனிடம் அனுமனின் பெருமையைக் கூறினார். அனுமனால் இறந்த வீரர்கள் கடல் மணலை விட பலர் என்றும், கின்னரர்கள், சம்புமாலி, பஞ்ச சேனாதிபதியர், அக்ககுமரன் இறந்துவிட்டதையும் இலங்கை நகரம் எரியூட்டப்பட்டதையும் இராவணன் உடுத்திய ஆடையுடன் இலங்கையில் தங்க முடியாமல் ஏழு நாள் வானத்திலேயே இருந்தான் என்றான். இறுதியாக நான் உனக்கு அடைக்கலம் புகுந்தது நீ கரன், வாலியை அழித்ததைக் கேள்விப்பட்டதனால் மட்டுமன்று, அனுமன் இலங்கையை எரித்ததைக் கண்டதாலும் அரக்கர்களைப் போரில் அழித்த விதத்தைக் கண்டதாலும் ஆகும் என்றான்.
சூளாமணியைப் பெற்றுக்கொண்டு இராமனைக் கண்ட அனுமன் இலங்கையை எரித்ததைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கூறினான். தன் பெருமையைத் தானே கூற விரும்பவில்லை. அனுமன் பெருமையையும் அவன் இலங்கையை அழித்ததையும் வீடணனே இராமனிடம் கூறினான் (இலங்கை வேள்வி படலம் 5240) திருவடி தொழுத படலத்தில் இலங்கையில் இருந்து திரும்பி வந்த அனுமன் வானர வீரர்களைக் கண்டான். 1256அப்போதும் தன் பெருமையை அவன் கூறவில்லை.
இலங்கையில் தோன்றிய புகையே அவன் இலங்கையை எரித்துவிட்டு வந்ததை அவர்களுக்கு உணர்த்தியது.அவன் மேல் இருந்த காயங்களும் தகவல்களைச் சொல்லின.
கண்களால் தூது-புன்னகையே தகவல்
கணவன் ஆயுதம் ஏந்தி போர்க்களம் போனான் .அவன் மீது அவள் கொண்ட காதல் மிகுந்தது. மகரந்தப் பொடிகள் தூவிய மஞ்சத்தில் உயிரற்ற உடல் போல் சாய்ந்தாள். காதல் அவளை உந்தியது. அவள் விழிகள் அவன் வரவை நோக்கி வாசலைப் பார்த்தன. அவளது கண்கள் வாசலிலேயே நின்றன. நல்ல வேளை அவன் வந்தானா என பார்த்து வரச் சொன்ன தூதி ஒருத்தி புன்முறுவலைக் காட்டியபடி உள்ளே நுழைந்தாள். அவளது புன்னகையை கண்ட இவள் துடியோதுடியென துடித்தாள்.
"ஏதிஅம் கொழுநன் தம்பால் எய்திய காதலாலே
தாது இயங்கு அமளிச் சேக்கை உயிரில்லா உடலின் சாய்வார்
மா துயர்க் காதல் தூண்ட வழியின் மேல் வைத்த கண்ணார்
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை"
(ஊர் தேடு படலம் 208)
அரக்கியராயினும் அவர்களுக்கும் மனமும் உண்டு அதில் காதல்உணர்வும் உண்டு.
ஒரு தோற்றத்தைப் பார்த்து மற்ற தோற்றத்தினை நினைத்தல்
கார்காலம் முடிந்த பிறகும் சீதையைத் தேட சுக்ரீவன் தன் படைகளுடன் வராததால், கோபமடைந்த இராமன், இலட்சுமணனை அனுப்பி சுக்ரீவனின் நிலையை அறிந்து வரக் கூறினான். கோபத்துடன் இலட்சுமணன் வருவதைக் கண்ட அனுமன், தாரையை அவன் எதிரில் அனுப்பினான். வாலி இறந்ததால் கைம்மை நிலையில் இருந்த தாரையைக் கண்ட இலட்சுமணன் தன் தாயாரை நினைத்து கண்ணீர் வடித்தான்.
போரில் வெற்றி பெற்ற இராமன் சீதையைச் ’சீருடன் தருக’ என்று வீடணனிடம் கூறினான். அவனும் சீதையை அலங்கரித்து விமானத்தில் ஏற்றி இராமன் முன் நிறுத்தினான். கணவனைப் பிரிந்து வருந்தி கொண்டிருக்கும் பெண் இவ்வாறு இருக்க மாட்டாள் என்று மற்றவர்கள் நினைப்பார்களோ என்று நினைத்து இராமன் சீதையிடம் கோபப்பட்டான்.
அயோமுகியின் அலறல்
இராமனுக்காக தண்ணீர் எடுத்து வரச் சென்ற இலட்சுமணனை அயோமுகி மோகனை மந்திரத்தால் மயக்கித் தூக்கிச் சென்றாள். நேரமாகியும் இலட்சுமணனைக் காணாததால் இராமன் கவலைப்பட்டான். ஆனால் இலட்சுமணன் அவளுடைய மூக்கை அறுத்ததால் அவள் அலறிய அலறல் காடே எதிரொலித்தது. இராமன் காதிலும் அவ்வொலி விழுந்தது. இது இலட்சுமணனால்தான். எனவே அவன் நலமுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டான்.
அயோமுகியின் அலறல் தம்பியால்தான், அவன் நலமாக இருப்பதை அண்ணன் அறிந்து கொள்கிறான்.
முடிவுரை
சைகையால் தகவல் கூறல், ஒற்றர், தூதர், தானே உணர்தல், முரசறைந்து தெரிவித்தல், திருமண செய்தியை முரசறைந்து தெரிவித்தல், சில சப்தத்தின் ஒலியால் அறிதல், இசை கருவிகளின் ஒலி மன்னர் வருகை, மங்கல ஆரவாரம், வில் நாண் ஒலி, அணிவகுத்து வருவதை உணர்த்தும் சத்தம், உறங்கும் இராவணனைக் கண்ட அனுமன், குரலால் தகவல் அறிதல், தேர்ச்சுவடு கண்டு தகவல் அறிதல், தேர்த்தடம் தொடர்ந்து தேடிச் செல்லுதல், ஒலியும் வாசனையும் தகவல் அறிவித்தன, தூரத்தில் பரதனின் தோற்றத்தைக் கண்ட குகன், தானே செய்தியைக் கூறல், தகவல்களை அறிந்து வைத்திருத்தல், அரசனானதை அறிவித்தல், இராவணன் -அனுமன் அறிமுகம், அங்கதன் -கும்பகர்ணன் அறிமுகம், ஆரவார ஒலியால் தகவலை அறிதல், ஆரவார ஒலியால் ஆனந்தத்தை அறிவித்தல், தோற்றத்தைப் பார்த்தே தகவல் அறிதல், அன்புடையோர் தந்த தகவல், பொருட்களைப் பார்த்து அவர்களுடையது தான் என்ற தகவலை அறிதல், வீடணன் கூற இராமன் தகவல் அறிதல், கண்களால் தூது -புன்னகையே தகவல், ஒரு தோற்றத்தைப் பார்த்து மற்ற தோற்றத்தினை நினைத்தல், அயோமுகியின் அலறல் மூலம் கம்பராமாயணத்தில் தகவல்தொடர்புகளை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1. கருத்திருமன்.பி.சி. கம்பர் கவியும் கருத்தும் வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,2018
2. காசி.ஆ, கம்பரும் திருத்தக்கதேரும், தமிழ்சோலை பத்ப்பகம், சென்னை, 2010.
3. சக்தி நடராசன்,க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு,2017.
4. சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம், சென்னை, 2019.
5. செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.
6. பூவண்ணன் கம்பராமாயணம் மூலமும் உரையும், தொகுதி 1,2,3,4,5,6,7,8, வர்த்தமானன் பதிப்பகம் 2000.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.










