1

கேலிச் சித்திரம் வரைந்து ஒருவன் தலைகீழ்ப் பொருள்
கொடுத்தான்.
கேலி கோபத்திற்குரியதாய் ஆனது.

அதன் சரிதமே அப்படித்தான்.
எல்லா கேலிகளும் யாரோ ஒருவருடைய
கோபத்திற்கு ஆளாகிறது.

கோபப் பசி தீர
வினோதமான பழக்கத்தை கையாள்பவனாய்
பழிச்சொற்களை வெளியிடுகிறான்,
உள்வாங்கும் பழக்கமே இல்லாததுபோல்.

உனக்கான நேரம் இன்னமுமா வரவில்லை
என்று கேலிசெய்யும்
ராகு காலங்கள்
அவன் முகத்தில் இரண்டு
பளார் பளார் விட்டன.

குளிர்க்காற்று வந்து உரசிபோனதுபோல்
உல்லாசமானான்
உண்மையில்
சூடு சுரணை இல்லாத சமயங்களில்
அப்படித்தான்.

சூரியனின் உச்சி வெயிலை வேண்டி ஒன்றைக் காலில்
தவம் நின்றான்.
காலம் அவனுக்கு மெதுவாக பதிலுரைக்க எண்ணி
பலத்த காற்றை அடிக்கச் செய்தது.
அவன் வேண்டிய உச்சி வெயிலை அன்று நிலா வழங்கியது.

திடீரென்று ஆயிரம் நிலா
எங்கு பாரத்தாலும்
தண்ணியில் மிதக்கையில் அதே வாடிக்கை.

எப்போதும் கேலிச் சித்திரம் உண்மையை உரைப்பதில்லையோ
என்ற சந்தேகத்தை அன்றே உடைத்தான்
சாராயப் பாட்டிலோடு சேர்த்து.

சந்தேகம் தீர்ந்தவனாய்
கேலிச் சித்திரத்தைக் கிழித்தெறிந்தான்
உடனிருந்த துணை இல்லாது
தனிமையில் வெறிச்சோடிப் பார்த்தான் கிழிந்த துண்டங்களை.

2

எண்ணற்ற கனவுகளைக் கண்டு சுற்றித் திரிந்த ஒரு நாளில்
அக்கனவுகளில் ஒன்று
என் கைக்கருகே வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றது.

உள்வருத்தம் வெளியே தெரியும் அளவிற்கு விகாரமடைந்திருந்தது
என் முகம்.

ஏன் இந்தக் கவலை என்று கேட்டுவிடத்தான் தோன்றும்
தெரியாதா என்ன
தேடல் நிறைந்த பயணத்தில் இதெல்லாம் சகஜமான ஒன்றுதானே.

சகஜமானதென்று கடந்துபோகும் நாட்களே
இரணக் கொடூரமாகவும் மாறும் அபாயத்தை
உள்ளே வைத்துதான்
நகர்ந்து கொண்டிருந்தது அந்தப் பயணம்.

அந்தப் பயணத்தில்
பின்னோக்கிய நகர்வில்லாததை நொந்துகொண்டு
கைமீறிப்போன
வளத்தின் சூழலை சுரண்டலை
எண்ணி சீறினேன்.

சீறிவதாலும் பயனில்லை.
கண்ணீர் சொட்டுவதாலும் பயனில்லை.
அந்தக் கனவு சொன்ன வார்த்தைகளை
மனக்கண்ணில் உருட்டி ஆசுவாசப்பட்டுக்கோ.

3

என் இரசனையைத் தீர்மானிப்பதில் என்ன ஆர்வமோ
தீனியிட்டு வளர்ப்பதாக
தீயிலிட்டு பொசுக்கியதாக
கேட்டுணர்ந்த இரசனைகள் யாவும்
ஆடாத ஆட்டத்தை எல்லாம்
கண்டுவிட்ட தோரணையில்
குத்தாட்டம் போடுகின்றன.
சூதாட்டம் ஆட வெறியேறி இருக்கின்றன.

உரிமைத் தோட்டத்தில் பயிரிட சம்மதியாதவர்களின்
வாய்ப் பேச்சில் சிக்கிவிடுகிறது அவ்வப்போது.

வேலியோரம் மேயும் ஆட்டைக் கல்லிட்டெறியும்
தோட்டக்காரர்களின் வாய்ப் பேச்சுக்குத்
தப்பிப் பிழைத்திருக்கிறது என் இரசனை.

கடைசியில்
என் இரசனை என் உரிமை என்று
முழக்கமிட்டேன்.
அதை திருத்தி இல்லாதாக்கிடவே முயன்றன
பலநூறு கைகளும்
நிலைபெறாத ஓட்டம்பிடித்த கால்களும்.

என் பார்வையே சரி என்று பேசுபவன் கண்ணில் பார்வைக் குறைபாடு.
என் காதுகளே உண்மையைக் கேட்கும் என்பவன் செவிடு.
வாய் பேசாதவன் வாய்மைக்கு சாட்சியாக இருந்தான்.
அமைதிப் பிரதேசமாய் அறிவிக்கப்பட்டது உள்ளூர்ச் சாக்கடைப் பகுதி.


4

நிழல்போல் மாறும் பதிலுக்காய் காத்துக்கொண்டிருப்பான்.
பதிலை உதிர்ப்பவர் யாரென்று தெரியாது
உதிரும் பதிலிற்கு பதிலியாய்ப் பல முளைத்துவிடக் காத்திருக்கும்.

காலிக்கோப்பைகளின் கைவண்ணத்தை கேலி செய்பவனாய்
முழுமையடைவதற்கே இவை உருவாக்கமடைகின்றன என்றான்.
காலிக்கோப்பைகள் நிரம்புவதையே அதன் வரம்பெல்லையாகக் கொண்டு முதிர்ந்தன...

முதிர்ச்சியை நோக்கிய பயணத்தின் சுவாரசியத்தை முன்பே தீர்மானிக்காதே.
முன்பே அறிந்த முடிவென்பது கற்பனையே.
கற்பனை கால்களை மேல் நோக்கியே எழுப்பிவிடும்.
தரையில் பதித்து நிலையான உண்மையைக் கண்டறியும் கற்பனையை வேண்டு என்றான்.

முதிர்ச்சியின் எல்லையில் பிறக்கும் ஞானம் என்றுரைத்தான்.
செயலற்றப் பருவத்தில் ஞானத்தால்தான் என்ன பயன்?
ஞானத்தின் முழுவடிவையும் இப்போதே கண்டுவிடுகிறேன்.
கண்டிவிட்டால் தேடலின் சுவாரசியம் அற்றவனாய்
இரசனைத் தேக்கத்தின் இருப்பாய் இறப்பதை வேண்டுவாய் என்றான்.

வாழ்வின் முடிவே ஒரு அத்தியாயமாகட்டும்,
பொறுத்திறு என்றுவிட்டு கடந்தான்...

 5

மதிப்பிடத் தெரியாத ஒருவன் மதிப்பிட்டான்
அம்மதிப்பீட்டை.
பொன்போல் போற்றுவோம்.
எதிர்த்து வாயாட தெம்பில்லாது போவோம்.
உம்போல் யாரென்று
கனைத்து கனைத்துக் களைப்போம்.

கை அசைத்து மட்டும் பழகியவன் கையில் இப்போது பேனா.
மொழி தெரியாத ஒருவன்
அம்மொழியின் சிறந்த கவிஞனை உலகிற்கு மதிப்பிட்டுக் காட்டுகிறானாம்.

அவனைப் பார்த்து
உன் அளவுகோள்கள்தான் எதுவென்ற கேள்வியை மட்டும்
துருவி துருவிக் கேட்டுவிடுங்கள் பார்ப்போம்.
விழிக்கத் திக்கற்றுப் போவான்.

தெரிந்துவிடும் அப்போது
மதிப்பிட்டவன்
உண்மையில் எப்படிப்பட்ட மதிப்பீட்டை வழங்கினான் என்று.
மதிப்பிடத் தெரியாத ஒருவன் என்று.

அவனுக்கு தெரிந்தவை எல்லாம்
வேண்டியவன் வேண்டாதவன் பாரபட்சக் கணக்கு.
கண்துடைப்புக் கருவியாய் கிடக்கும் நோக்கு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்