1. பழைய நாட்குறிப்பு

அறையின் மூலையில்
ஒரு பழைய புத்தகம் கிடக்கிறது.
அது ஒரு நாட்குறிப்பு—
அல்லது நாட்குறிப்பாக இருந்த ஒரு பொருள்.
அதன் பக்கங்கள் மஞ்சளேறியிருக்கின்றன;
எழுத்துகள் சோர்ந்திருக்கின்றன,
ஆனாலும் அழியவில்லை.

நான் அதைத் திறக்கிறேன்.
முதல் பக்கம் ஒரு நாளின் தொடக்கமல்ல,
ஓர் உணர்வின் தொடக்கம்.
அங்கே காலம் எழுதப்பட்டிருக்கிறது,
ஆனால் அது நடந்தபடி இல்லை;
நினைத்தபடி இருக்கிறது.
வாக்கியங்கள் தெளிவற்று இருக்கின்றன—
அல்லது தெளிவடைய
விரும்பாதது போல அமைந்திருக்கின்றன.

ஒரு நாள் அங்கே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது,

ஆனால் அந்த நாள்
என் நினைவிலிருப்பது போல இல்லை;
அல்லது அதை நினைப்பவன்
அந்த நாளின் நான் அல்லன்.

நாட்குறிப்பு நினைவுகளைப் பாதுகாப்பதில்லை,
அவற்றை உருமாற்றிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு எழுதும் ஒரு மறுஉருவாக்கம்;
ஒவ்வொரு வாக்கியமும்
பிழையான காலத்தின் ஒரு துண்டு.

ஒரு வரியைப் படிக்கிறேன்:
"நான் மகிழ்ச்சியாக இருந்தேன்"
என எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த மகிழ்ச்சியை
இப்போது என்னால் உணர முடிவதில்லை.
அது எழுதப்பட்டதால்தான் இருக்கிறதா,
அல்லது நான் அதை நம்ப வேண்டுமா?

பக்கங்களைத் திருப்புகிறேன்;
சில பக்கங்கள் வெற்றிடமாக உள்ளன.
ஆனால் அந்த வெற்றிடமும்
எழுதப்பட்டது போலவே தோற்றமளிக்கிறது.
நாட்குறிப்பு என்னைப் பற்றிப் பேசவில்லை,
என்னை உருவாக்குகிறது.
ஒவ்வொரு வரியும்
ஒரு புதிய கடந்தகாலத்தை வடிவமைக்கிறது.
புரிகிறது:
நினைவு என்பது நடந்தவற்றின் பதிவல்ல,
அது இப்போது புனையப்படும்
ஒரு பழைய கதை.

புத்தகத்தை மூடுகிறேன்,
ஆனாலும் அது முடிவடையவில்லை.
எழுதப்படாத,
மறந்த,
உருமாறிய இடங்களின் வழியே
அது என்னுள்ளே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

II. காத்திருப்பின் நீளம்

யாரோ வருவார்கள் என
நான் காத்திருக்கவில்லை;
காத்திருப்பதையே
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

கதவு திறக்கப்படவில்லை,
ஆனால் அதன் திறக்கப்படாமை மெல்ல நீள்கிறது.
சாளரம் யாரையும் காட்டவில்லை,
ஆனால் அது காட்டாதவற்றின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் பெருகுகிறது.

நேரம் இங்கே நகர்வதில்லை,
அது மெல்ல, அமைதியாக,
என்னுள்ளே ஊடுருவி நீள்கிறது.
"ஒரு நாள்" எனச் சொல்லப்பட்ட நாள்
இன்னும் வரவில்லை,
ஆனால் அது வராததே
ஒரு நிகழ்வாகிவிட்டது.
நான்
அந்த நிகழாமைக்குள்ளேயே வசிக்கிறேன்.

சில கணங்களில் காலடிச் சத்தம்,
ஒரு பெயர்,
ஒரு அழைப்பு போன்ற ஒலி எழுகிறது;
ஆனால் முழுமையடைவதற்குள்
அது அமைதியில் கரைகிறது.

காத்திருப்பு ஒரு இடமுமல்ல, காலமுமல்ல—
அது மனிதன் மெல்ல உருமாறும்
ஒரு நிலை.
நான் முன்பு இருந்தவன் அல்ல,
ஆனால் இன்னொன்றாகவும் மாறவில்லை;
இடைவெளியில் நீள்கிறேன்.

என் மூச்சு
காத்திருப்பின் அளவாகிறது,
என் பார்வை
காத்திருப்பின் எல்லையாகிறது,
என் சிந்தனை
காத்திருப்பினுள்ளே ஒடுங்குகிறது.

யாரும் வரவில்லையெனில்
காத்திருப்பு முடிவடையுமா?
அல்லது காத்திருப்பதே
என் வருகையாக மாறிவிட்டதா?

மாலை உள்ளே நுழைகிறது,
ஆனால் இரவாக மாறவில்லை—
அது காத்திருப்பின் இன்னுமொரு அடுக்கு.
கதவைப் பார்க்கிறேன்,
அது அப்படியே இருக்கிறது;
ஆனால் அதன் மௌனம்
முந்தையதை விடக் கனத்திருக்கிறது.

நடக்காத ஒன்றுக்காகக் காத்திருப்பது
வெறுமையல்ல—
அதுவொரு வாழ்க்கையின் முழு நீளம்.

III. நேரம் மறந்த வீடு

ஒரு வீடு இன்னும் நின்றுகொண்டிருக்கிறது,
ஆனால் அது எந்தக் காலத்தில்
கட்டப்பட்டது என யாருக்கும் தெரியாது.
அது நேரத்தைப் பதிவுசெய்யவில்லை;
நேரமே அதை விட்டு அகன்றுவிட்டது போல.

சுவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன;
ஆனால் அவை சொற்களல்ல—
மறதி.
தளபாடங்கள்
அவற்றின் இடங்களில் இருக்கின்றன,
ஆனால் அவை எப்போதும்
அங்கிருந்தவை போலத் தோன்றவில்லை.

ஒரு நாற்காலி
முன்பு அமர்ந்தவரை நினைவில் வைத்திருக்கிறது;
மேசை
உரையாடலின் பழைய வெப்பத்தைச் சுமக்கிறது;
ஜன்னல்
வெளியிலிருக்கும் காலங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

நான் வீட்டிற்குள் நுழைகிறேன்,
ஆனால் நான் நுழைந்ததை
வீடு நினைவில் கொள்ளப்போவதில்லை.
நேரம் இங்கே இயங்கவில்லை, மறைந்துவிட்டது;
ஆனாலும் அதன் தடங்கள்
ஒவ்வொரு மூலையிலும் கசிகின்றன.

கதவு
திறக்கப்பட்டதா மூடப்பட்டதா எனத் தெரியாது;
அறை
பயன்படுத்தப்பட்டதா இல்லையா என விளங்காது.
அனைத்தும் ஒரே நிலை, ஒரே மௌனம்.

மனிதக் குரலல்லாத
ஒரு ஒலியைக் கேட்கிறேன்—
காலம்
தானே தன்னை நினைத்துக்கொள்ளும்
மெல்லிய அதிர்வு.
வீடு எதையும் மறக்கவில்லை,
அதேநேரம் எதையும்
முழுமையாக நினைவில் வைக்கவுமில்லை.
அது நினைவிற்கும் மறதிக்கும் நடுவே
உறையும் ஒரு சுய-இருப்பு.

மாலையில் ஒளி சுவர்களில் சாயும்போது
வீடு சற்று உயிர்ப்படைகிறது;
ஆனால் அந்த உயிர்ப்பு பழையதல்ல,
இப்போது உருவாகும் ஒரு புதிய நினைவு.

வீடு என்பது நாம் வாழும் இடமல்ல—
நாம் வாழ்ந்ததை மறக்கச் செய்யும் இடம்,
அல்லது நாம் மறந்துவிட்டதை
மீண்டும் எடுத்துக் காட்டும் தளம்.

நேரம்
இந்த வீட்டை விட்டு வெளியேறவில்லை;
அது இங்கேயே தங்கியிருக்கிறது,
ஆனால் தன்னை
மறந்துவிட்டது போல நடித்தபடி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனொ பனானா வழி வநகி


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்