
கட்டுரையாளர்: மு. இராமர் மாசானம், முனைவர் பட்ட ஆய்வாளர் (ORCID ID - 0009-0003-3769-0623) | நெறியாளர்: முனைவர் க. மாரியப்பன், உதவிப் பேராசிரியர், தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை, திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம், ஆந்திர பிரதேசம் – 517425 [9486863620, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]
ஆய்வு சுருக்கம்:
தேவதேவனின் சொல்லாளுகைத் திறனை அறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை பயணிக்கிறது. இதற்குத் தரவாக தேவதேவனின் ‘நல்லதோர் வீணை’ கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் சில கவிதைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சொல்லாளுகைக் குறித்தும் சொல்லாளுகைத் திறனாய்வு குறித்தும் கட்டுரையின் தொடக்கத்தில் தெளிகிறோம். பின்னர், சொல்லாளுகைக் கருவிகள் குறித்த தெளிவோடு, பரவலாக தேவதேவனின் கவிதைகளில் பயின்று வந்த சொல்லாளுகைக் கருவிகளை அடையாளம் காண்கிறோம். கையோடு, அவை வாசகரிடத்தில் ஏற்படுத்தும் விளைவு குறித்தும் ஆராய்கிறோம். முடிவாக, தேவதேவன் தன் கவிதைகளில் எத்தகைய சொல்லாளுகைக் கருவிகளின் வழி, வாசக எதிர்வினையைக் கட்டமைக்கிறார் என்று தொகுத்து காண்கிறோம். இவ்வாய்வுக் கட்டுரையில் சொல்லாளுகை அனுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
புதுக்கவிதை எனக் கவிதை புதிய பரிணாமமடைந்து தமிழ்ச் சூழலில் நிலைத்து பல்லாண்டு கால வரலாற்றைக் கண்டுவிட்டது. இவை நவீனமாகி தற்போது கவிஞர்களால் பல்வேறு உத்திகளைக் கைக்கொண்டு இயற்றப்பட்டு வருகின்றன. இக்கவிதைகள் உருவாக்கத்தில் கவிஞர்களால் சில பல கலையாக்க உத்திகள் கையாளப்படுகின்றன. இத்தகைய கலையாக்கப் படைப்பில் சொல்லாளுகையின் பங்கு இருப்பது தவிர்க்க இயலாதது. ஆசிரியர் முனைந்து, திட்டமிட்டுச் செய்யாவிட்டாலும் கலைப்படைப்பின் உட்கூறுகளாக இவற்றை நாம் கவிதைகளில் காணலாம். இவை கவிஞரின் தனித்தன்மையைக் காட்டக்கூடியவை. வாசகர்களை கவிதையின் பால் ஈர்க்க, அரிய பல கருத்துக்களை எளிய மொழியில் கொண்டுபோய்ச் சேர்க்க, குறிப்பிடத்தக்க எதிர்வினையை உருவாக்க என கவிதையின் நோக்கைப் பொறுத்து இவை அமையும். தேவதேவன் கவிதைகளை சொல்லாளுகைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, தேவதேவனின் சொல்லாளுகைத் திறனை அறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை திகழ்கிறது. இவ்வாய்வானது, கவிதைகளில் இடம்பெறும் உத்திகளை அடையாளம் காண்பதோடு மட்டும் நிற்காமல் அவற்றின் சொல்லாளுகைச் செயல்பாட்டை ஆராய முற்படுகிறது. இதன் வழி, ஒரு குறிப்பிட்ட கவிஞர் தன் கவிதைகளில் கொள்ளும் மொழியும் பொருளும் எத்தகைய வாசக எதிர்வினையை உருவாக்குகிறது என்பதை அறிய முடியும்.