
“எனது தந்தையிடம் ஒரு துப்பாக்கி இருந்தது… அக்கம் பக்கம் ஏழெட்டு ஊர்களிலும், ஒவ்வொரு துப்பாக்கி. ஒரு நாற்பது பேராய், ஒன்று கூடி, கிளம்பி விடுவோம்… மான் வேட்டைக்கு… காலையில் புறப்பட்டால், மாலையாகி விடும்… காடுகளில் கடும் தாகத்துடன் அலைந்து திரிவோம்… ஒவ்வொருவர் முதுகுகளிலும், ஒரு சிறு மூட்டை, களி தொங்கும்… தண்ணீர் கிடைக்காது… பகல் உணவுக்கு தண்ணீரை தேடி அலைவோம்… ஒரு முறை ஒரு மானை வேட்டையாடியாகி விட்டது. கூறு போட்டுக் கொண்டிருந்தோம். எனது நண்பன் கண்ணைக் காட்டினான்…. ஈரலை மெதுவாக கடத்தி விட்டேன்… பின் நன்கு சுட்டு திண்றோம்… நன்றாய் இருந்தது… விசாரித்தார்கள், ஈரலை காணோமே என்று. அடியான அடி –அப்பாத்தான்…”.
“ஆனால், இதே அப்பாத்தான், நான் ஆரம்பத்தில் சென்னையில், நாடகம் போடுகையில், பணம் இல்லாமல் திண்டாடி கொண்டிருந்த போது, நிலத்தை விற்று, எனக்கு பணம் தந்தவர் - சாதீயத்தை தாண்டிய அவர், தன் இறுதி நாள் வரை, தன் சாதீய பெயரின், அடி துண்டை உபயோகித்தார் இல்லை… அவர் அந்நாளைய காங்கிரஸ் தேசியவாதி…”.
இருந்தும், “சென்னைக்கு… சென்னைக்கு” என்று மனம் ஈற்றில் ரீங்காரம் இடத் தொடங்கி விட்டது…. ஏற்றாற் போல் எனக்கு உசுப்பேத்தியும் விட்டு விட்டார்கள்…. எனது வேலையையும் விட்டு விட்டேன்… அப்பாவுக்கு வழமையில் வரும், ஆத்திரத்தின் மேல் ஆத்திரம்… அப்பா, அம்மா முன் பைத்தியம் போல் நடித்தேன்… தனி அறையில், பேசி கொண்டிருப்பேன் - ‘சென்னை…சென்னை’ என்று. நம்பி விட்டார்கள். அம்மா கந்து வட்டியாய் ஒரு முன்னூறு ரூபாய் பெற்று வந்தாள். தேவைப்படும் பொருட்களையும் வாங்கி வந்தாள் - ஒரு ட்ரங் பெட்டி உள்ளடங்களாக… மழை சோவென கொட்டியது… நனைந்தப்படி என்னை வழி அனுப்ப வந்தார்கள் - அம்மா, சின்னம்மா, இன்னும் யாரோ ஒருவர். லாரி பயணம் - நான்கு நாட்கள் எடுத்தது – ஏனென்றால் இடையில் அத்தனை அதிர்ச்சி நிகழ்வுகள்… அழுதேன்…. அழுதேன்… அழுதேன்… இறுதியில், ‘பதினாறு வயதினிலே’ எடுக்கும் முன்னர் பலரிடம் உதவி டைரக்டராக, ஓர் ஏழெட்டு வருடம் பணி புரிந்தேன். உதவி டைரக்டர் என்ற எனது பெயரை ஒரு படத்தில் பார்த்தபோது – எனது கால்கள் மண்ணில் இருக்கவில்லை. பறந்தேன், பறந்தேன், பட்டாம் பூச்சியைப் போன்று”.
“அந்த காலக்கட்டங்களில், நாங்கள் நாடகம் முடிந்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கி விடுவோம். அன்றிருந்த மனிதர்கள் இன்றில்லை. ஜீவானந்தம், தா.பாண்டியன், ராமமூர்த்தி என எப்படிப்பட்ட மனிதர்கள்… இன்றைய தலைவர்களிடம் விரவி இருக்கும் படாடோபம், ஆரவாரம் என்பன அவர்களிடம் கிஞ்சித்தும் கிடையாது. ராமமூர்த்தி என நினைக்கின்றேன். ரயிலில் இருந்து இறங்கி, நொண்டி நொண்டியப்படி, தனியே ஆபிஸ் வந்து சேர்வார்… தன்னந்தனியே பேப்பர் பார்த்துக் கொண்டிருப்பார். ஒருவேளை அப்படி அவரை, அவர்பாட்டில் படிக்க விடுவது, அவர்களின் நாகரீகமாக அன்று இருந்திருக்கலாம்…”. “அந்த நாட்களில் மூன்று நாட்கள் ஒன்றுமே சாப்பிட இல்லாமல் பட்டினி கிடந்துள்ளோம். நான், இளையராஜா, கங்கை அமரன் - யாவரும். ஆனால், எங்களின் சிரிப்புக்கு குறைவிருக்காது…. பட்டினி கிடப்பதாய் நாங்கள் நினைக்க மாட்டோம்…”.
இவற்றுடன், வடிவுக்கரசியின் அனுபவத்தையும் இங்கே நாம் இணைக்கலாம்:
“அதிகாலை, இரண்டு மணிக்கு வரச்சொல்லி விடுவார். நான் ஓர் காரில் காத்திருப்பேன். இது போலவே, சிவாஜி, மற்றும் ஏனையவர்களும், முதல் மரியாதை பட பிடிப்பின் போது, நடுநிசியில், காரில் தங்கி காத்து நிற்போம்…”.
தனது படப்பிடிப்பை பற்றி பாரதிராஜா, பின்வருமாறு கூறுவார்: “கருவிகளை நான் எப்போதும் சுமந்து திரிபவன் அல்ல. மூளையை மாத்திரம் சுமந்து திரிபவன். உதாரணமாக, ட்ரக் என்ட் ட்ரலி இல்லாத காலத்திலேயே… ‘அலைகள் ஓய்வதில்லை’யில் இருவரது தோள்களில் உட்காரும் நபர்களில் கெமராவை ஏற்றி, அவர்களை மெல்ல சுற்றி வர செய்தேன்… இதே போன்றுதான், ‘முதல் மரியாதை’ படமும். ‘நிலாவைத்தான் நான் கையில பிடிச்சேன்’ என்ற பாடலின் போது, நாங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் அன்றைய படப்பிடிப்பை முடித்துவிட்டு, கார்களில் கிளம்பி சென்று கொண்டிருந்தோம்…பொழுது சாய்ந்து, சூரியன் அஸ்தமிக்கும் செந்நிற நேரம்… அதற்கு ஒரு நீல நிறத்தை தந்தால் அச் சூரியன் இப்போது நிலவாகிவிடும்… அனைவரையும் காரில் இருந்து இறக்கி கமராவில் ஒரு நீல பில்டரை போட சொன்னேன்… நிலாவை கையில் பிடிக்க வேண்டும்… இப்போது நிலா குளத்துக்கு வந்தது. அருணா கையை போடுவாள்… நிலா கைக்குள் வரும்… டார்ச் ஒன்றை ஆன் பண்ண செய்தேன்… பத்து நிமிடங்கள்… இந்த காட்சி படமாக்கப்பட்டு முடிந்தது… இந்த எண்ணம் எனக்கு அப்போது தோன்றியதுதான்…இந்த காட்சியை இந்நேரத்தில் இப்படி படமாக்கும் திட்டமும் என்னிடம் இதற்கு முன் இருக்கவில்லை…”
“மக்களிடம் அனைத்துமே உண்டு. ஒவ்வொருவரிடமும், சோகம், ஹாஸ்யம், துள்ளல், ஒடுங்குதல், கோபம் - அனைத்து குணாம்சங்களும் உள்ளே உறங்கி கிடக்கும். டைரக்டர் என்பவன் " அவ் ஓட்டை உடைத்து உள்ளுறையும் அக்குணாம்சங்களை வெளியே கொண்டு வர தெரிந்தவன்" அவ்வளவே...” இது, டைரக்ஷன் பொறுத்த பாரதிராஜாவின் கணிப்பு.
இவ்வளவும் பாரதிராஜாவிடம் காணப்படும் ஒரு துளியே. வாழ்வின் ஈடுபாடுகளை அவன் எவ்வளவு தூரம் சுமந்திருந்தான் என்பதற்கான உதாரணங்கள் இவை. இது போலவே, இந்திய விடுதலை இயக்கத்தை புரட்டிப்பார்த்தாலும், அவற்றின் பாதிப்புக்கள், சமயங்களில், தமிழ் சினிமாவிலும், ஒரு கட்டத்தில் அழுந்தக் காணப்பட்டன. ஆனால், பின்வரும் காலக்கட்டங்களில், இவ் அபிலாசைகள் அனைத்தும் தூக்கி வெளியே எறியப்படுகின்றன. விடயம் என்னவென்றால், இவை வெறுமனே தூக்கி எறியப்படுவதில்லை என்பதேயாகும். இது, கோடிடப்பட வேண்டிய உண்மையாகும். இதற்கு பதிலாக, ஒரு கட்டத்தில், செயற்கை கோஷங்களுடன் உயிர்ப்பற்று, தேசிய கோஷங்களாக உள்நுழையும், இக்கோஷங்கள், பின், நாளடைவில், மக்கள் கருத்துக்களாகி, பின் ஒரு கட்டத்தில் அச் செயற்கை கோஷங்களே, மக்களின் வாழ்வாக இங்கே சித்தரிக்கப்படுவதாய் தம்மை நிலைநாட்டி கொள்கின்றன.
இனி, இரண்டாம் சுற்று தொடங்குகிறது. மக்கள் தமது அந்நியப்பட்ட வாழ்நிலைகள், வெற்று கோஷங்களாக காட்டப்படுவதில் இருந்து, விடுபட்டு, ஓர் யதார்த்த சித்தரிப்பை வேண்டத் தொடங்கி விடுகின்றனர். அவர்களின், இவ் யதார்த்த வாழ்வு, தமிழ் தரைப்பட உலகின், மூடப்பட்ட கதவுகளை, இறுக தட்டுவதாயிருந்தது. இப்படி தட்டியவர்களில், குறிப்பிடத்தக்கவர் பாரதிராஜா எனலாம். காலம் இன்று எம்முன் பல கேள்விகளை முன்வைக்கின்றது. சித்தரிப்புகளில், தமது வாழ்வின், ஒரு துளியையாவது, காண விரும்பும், மக்கள் கூட்டம் தமது, அசராத தேடல்களை தொடர்வதாயுள்ளது – அவை, மெது மெதுவாக, நடக்கும் என்றாலும் அவர்களின் தேடுதல் தொடர்கின்றது. மக்களின் இத்தேடலை, அவர்களின் மேம்பாட்டை, உலகின் மேம்பாட்டை, நாடி போராடும் இவ் உண்மை மனிதர்களின் பிரவாகம் உலகத்தில் நின்றதாய் சரித்திரம் இல்லை. அவர்களின் பிரவாகம் தொடர்வதாயுள்ளது. காரணம், சில மனிதர்களுடன் ஒட்டி பிறந்த, உள்ளார்ந்த குணாம்சம் இதுவாக இருக்கலாம். வரலாறு இப்படித்தான் இருந்துள்ளது. அரிஸ்டோடில் முதல் பிரமித்தியூஸ் வரை நீண்டு விரியும் இத்தகைய ஒரு பிரவாகத்தில்தான், ஓர் துளியாக பாரதிராஜாகவும், ஒரு கட்டத்தில், இருந்திருக்கலாம்.
ஆனால், இனி தோன்றவிருக்கும், நாளைய கலைஞன் முன்னால், வேறு பல சவால்களும் எழ கூடும். அவற்றை, தீர்ப்பதிலேயே, அவனது ஆளுமையும் இங்கே ஸ்தாபிக்கப்படவும் கூடும். வாழ்வின் ஈடுபாட்டை அவன் வேறு ஒரு தளத்தில் அனுபவித்து, வேறு ஒரு தளத்தில், அவன் பிறந்து, வேறு தளத்தில் வளர்ந்து, இயங்கவும் கூடும். ஆனால், இறுதி கணிப்பில், இத்தகைய மனிதர்களே வித்தியாசம் மிக்கவர்களாய், காலத்தில் உருவாகும் மனிதர்களாய் கால நகர்வில் தென்படுகிறார்கள். பாரதி அல்லது கார்ல் மார்க்ஸ் போன்று மனுகுல வளர்ச்சியின் போது, தோற்றம் கொள்ளும் இம்மனிதர்கள், வரலாற்றில், கிட்டா பொக்கிஷங்களாகின்றனர். இத்தகைய பொக்கிஷங்கள், மனிதர்களால் காட்டிக் கொடுக்கப்படுவதும், மேயப்படுவதும் மனுகுலத்தின் சோக கதையாகின்றது. இருந்தும், புதிய முளைப்புக்காக சளைக்காது தன் போராட்டத்தை தொடர்வது, மனிதனின், இயல்பாகின்றது - இவற்றுடனேயே பாரதிராஜா என்ற கலைஞனின் வாழ்வும் தேய்வும்" ஏதோ ஒரு வழியில் சம்பந்தமுறுகிறது.
<இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.










