அண்மையில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் நூல்களின் சங்கமம் புத்தகக் கண்காட்சியில் என் மேசைக்கு அருகில் இருந்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் சிவவதனி பிரபாகரன். இருவரும் எம் நூல்கள் சிலவற்றைப் பரிமாறிக்கொண்டோம். அவர் தந்த நூல்களிலொன்று 'வாழ்வெனும் வரம்'.

சிவவதனி பிரபாகரன் தமிழ்த்தேசிய ஊடகவியலாளர்களில் ஒருவராக அறியப்படுபவர். அவரது நூலும் அவரது அரசியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒன்றாகவிருக்கும் என்னும் எண்ணத்துடன் அதைப்பிரித்துப் பார்த்தேன். என் எண்ணம் பொய்த்துப்போனது. அது எண்ணங்களின் ஊற்றுவாயான உள்ளத்தைப்பற்றியது. மனத்தைப் பற்றியது.

தொகுப்பில் 28 கட்டுரைகள் உள்ளன. தெளிந்த நீரோடை போன்ற நடையில், வாசகரை உற்சாகப்படுத்தித் தட்டியெழுப்பும் வகையில் கட்டுரைகள் அமைந்திருப்பது ஆசிரியரின் குறிப்பாக நூலின் நோக்கத்துக்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றது.

மானுட வாழ்வு ஒரு தடவையே வாழக்கிடைத்த வரம். நூலுக்கு 'வாழ்வெனும் வரம்' பொருத்தமான தலைப்பு. வரமாகக் கிடைத்த வாழ்வை வளமாக்குவதற்கு மானுட வாழ்வின் ஆதாரமான மானுட உள்ளக் குதிரையைத் தட்டி , அடக்கி வழி நடத்திச் செல்வது அவசியம். ஏனென்றால் அது அடங்க மறுக்கும், தற்கெட்டு ஓடும் குதிரை. அதனை அடக்குவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு மானுட உள்ளத்தைப் பற்றிய புரிதலும், அடக்கி நெறிப்படுத்தற்குரிய வழி முறைகளையும் அறிந்திருப்பது அவசியம். அந்த வேலையை இந்த நூல் செய்கிறது என்பதை இதன் மீதான வாசிப்பு உறுதி செய்கின்றது.

எழுத்தாளர் காண்டேகரின் நாவல்களில் வாழ்க்கை என்னும் சுழல் நிறைந்த கடல் ,எரிமலை போன்ற வசனங்கள் அடிக்கடி வரும். அத்தகைய சுழல் நிறைந்த வாழ்க்கைக் கடலில் கடப்பதற்குப் படகாக இருப்பவை இவ்விதமான உளவியல் நூல்களே.

இந்நூல் மனத்தை ஒருவழிப்படுத்தும் தியானம் பற்றிப் பேசுகிறது. இது பக்திமார்க்கத் தியான அல்ல. உளவியல்ரீதியிலான தியானம். உண்மையில் பக்தி மார்க்கங்களிலும் தியான உளவியல் ரீதியில்தான் பாவிக்கப்படுகிறது.

நூலாசிரியர் நிறையச் சிந்திக்கின்றார் என்பதை நூலிலுள்ள கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. மனித எண்ணங்களை மூன்று வகையாகப் பிரிக்கின்றார். திடீர் உணர்ச்சி வசப்பட்டு எழும் எண்ணங்கள், பழக்க வழக்கங்களால் உருவாகும் இயந்திரத்தனமான எண்ணங்கள் மற்றும் எதிர்கொள்ளும் ஓவ்வோர் எண்ணத்தையும் தர்க்கரீதியாக, சரி - பிழை ஆராய்ந்து பார்க்கும் 'எம் வச எண்ணப்போக்கு' ஆகியவையே அவை.

இன்னுமோரிடத்தில் வாழ்வின் மதிப்பு பற்றி ஆராய்கின்றார். வாழ்வு மதிக்கப்படுவதற்கு வாழ்வை நாம் மதிக்க வேண்டும் என்கின்றார். தேசப்பற்று, மனித நேயம், அறநெறி வாழ்வு போன்றவை வாழ்வின் மதிப்பை மெருகூட்டுபவை என்கின்றார். வாழ்வின் மதிப்பையும் அவர் மூன்று வகையாகப் பிரிக்கின்றார். தன்மதிப்பு, சமூக மதிப்பு மற்றும் அறநெறி, ஆன்மிக மதிப்புகள்.

அன்பு, மனிதத்துவத்தைக் கட்டுரைகள் பல வலியுறுத்துகின்றன. மதங்களைக் கடந்து மனிதத்துவத்தின் அடிப்படையில் அறிவு பூர்வமாகச் செயற்படுவதன் அவசியத்தைக் கட்டுரைகள் பேசுகின்றன.

வாழ்வின் வெற்றிக்கு நம்பிக்கை,கவனத்துடன் கூடிய அணுகுமுறை, பிரதான துறையுடன் பல்துறை ஆற்றலை வளர்த்துக்கொள்ளல், அகத்தைச் சிதைக்கும் அகந்தையை அகற்றல் போன்றவற்றைக் கட்டுரைகள் பேசுகின்றன.

நோய்கள் , சோர்வு போன்றவை ஏற்படுத்தும் விளைவுகள், அவற்றை எதிர்கொள்ளுதல் எப்படி, மன அழுத்தங்களைத் தவிர்த்து மீள்வது எப்படி என்பவை பற்றிக் கட்டுரைகள் பேசுகின்றன.

'முதுமையிலும் ஓர் இளமை வாழ்வு' வாழ்வது எப்படி என்பதற்குப் பயனுள்ள ஆரோக்கியமான ஆலோசனைகளை மேற்படி தலைப்பிலான கட்டுரை வழங்குகின்றது. நோய்கள், உடலுறுப்புகளின் சிதைவு எனப் பல முதியவர்களை எதிர்நோக்குகின்றன.அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் மேற்படி கட்டுரை கவனத்தில் கொள்கிறது.

குழந்தை வளர்ப்பில் ஆரோக்கியமான அவர்களின் வளர்ச்சிக்கு அவர்களின் உளவியலைப் புரிந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் நூல் பேசுகின்றது.

வெற்றியைப் பற்றியும் கட்டுரைகள் பேசுகின்றன. குறிக்கோள், விடாமுயற்சி, கனவு காணுதல் இவையெல்லாம் வெற்றிக்கு அவசியமானவை. அதே சமயம் உண்மையான வெற்றி என்பது பயணத்தின் உச்ச நிலை அல்ல, தொடர் பயணத்தின் ஆரம்ப்புள்ளி என்கின்றார்.

நீண்ட கட்டுரைகள். தொய்வற்ற தர்க்கச்சிறப்பு மிக்க கட்டுரைகள். வாசிக்கும்ப்போது வாசகரை உற்சாகப்படுத்தி, இருப்பில் நம்பிக்கை கொள்ள வைத்து , வாழ்வை எதிர்கொள்ள வைப்பது நூலின் முக்கிய நோக்கம். அதில் நூல் வெற்றி அடைந்திருக்கின்றது என்றே , என் வாசிப்பின் அடிப்படையில் கூறுவேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்