இம்முறை நாவலுக்கான இலங்கை அரசின் சாகித்திய விருது எழுத்தாளர் ரா.நித்தியானந்தனின் 'கடவாசல்' நாவலுக்குக் கிடைத்திருக்கின்றது. இதற்காக அவருக்கு வாழ்த்துகள்.
இந்த நாவலை இன்னும் நான் வாசிக்கவில்லை, ஆனால் எழுத்தாளர் உமா வரதராஜனின் இந்நாவல் பற்றிய குறிப்பின்படி இந்நாவலானது இலங்கையில் நடந்த முதலாவது இளைஞர் புரட்சியான ஜேவிபியினரின் 1971 புரட்சியினை மையமாகக் கொண்டது என்பதை அறிய முடிகின்றது. அவ்வகையில் தமிழில் வெளியான முதலாவது நாவல் என்றும் அறிய முடிகின்றது. இவ்வகையில் முக்கியத்துவம் மிக்க இந்நாவலை வாசிக்கும் ஆவலை உமா வரதராஜனின் குறிப்பு ஏற்படுத்தியுள்ளது. 
எழுத்தாளர் உமா வரதராஜனின் குறிப்பின் சில பகுதிகள் வருமாறு:
"1971ல் இலங்கையில் நிகழ்ந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே,வி.பி)யினரின் கிளர்ச்சியைப் பின்னணியாகக் கொண்ட நாவல் இது. இலங்கையின் அரசியல் வரலாறு- அனுபவம்-நினைவுகள்-புனைவு என்பவற்றின் சரிவிகிதக் கலப்பு இந்த நாவலை ஆழப்படுத்தியிருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் போராட்ட வரலாறை மாத்திரம் இந் நாவல் பேசாமல் இதில் வரும் பாத்திரங்கள் மூலம் சில கேள்விகளையும், விமர்சனங்களையும் முன் வைக்கிறது.அதுவே இந் நாவலைத் தனித்துவம் மிக்கதாகுகிறது.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டத்தில் ஆரம்பமாகும் போராட்ட சிந்தனை வளர்ச்சியடைந்து, 1971 ஏப்ரல் 5 தொடங்கி 1971 ஜுன் வரை உக்கிரமடைகின்றது. ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகின்றது. பொலிஸ் நிலையங்கள் தாக்கப் படுகின்றன. கிளர்ச்சியாளர்கள் பல வாரங்கள் தென், சப்ரகமுவ மாகாணங்களின் நகரங்களையும் கிராமப்புறங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.நாடெங்கும் ஊரடங்கு நிலை பிரகடனப் படுத்தப் படுகின்றது. உள்நாட்டு அரச படையினரின் கடுமையான ஒடுக்கு முறைகளாலும், நட்பு நாடுகள் சிலவற்றின் உதவியாலும், இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களின் மனமாற்றங்களாலும் இப் போராட்டம் அதிகளவான உயிரிழப்புகளுடனும், கைதுகளுடனும்,சரணாகதிகளுடனும் இறுதியில் தோல்வியில் முடிகிறது.
ஜே.வி.பி. இயக்கத்தின் பல்கலைக்கழக மட்டத்து அரசியல் பணிகள், 1971 ஏப்ரல் கிளர்ச்சி, படையினரின் சித்திரவதைகள், படுகொலைகள், காணாமல் ஆக்கின்றமை, சிறை வாழ்க்கை, உயிர் தப்ப பல திசைகளிலும் ஒளித்தோடல், குடும்பங்களில் நிகழும் எதிர்வினைகள்,இழப்புகள், அரச தரப்புக்கு மாறிக் காட்டிக் கொடுத்தல், போராளிகளுக்கு இடையேயான தோழமை, உறவுச் சிக்கல்கள், படையினரின் அதிகார வெறியாட்டம், சிறுபான்மையினர் பற்றி 'இயக்கத்'தின் கண்ணோட்டம் , இந்தியா மற்றும் மலையகமக்கள் சம்பந்தமான கண்ணோட்டம் என்பவை இந்தக் ‘கடவாசலி'ல் பதிவாகியுள்ளன.
போராட்டம் தோல்வியில் முடிவுறும் போது மிஞ்சுகின்ற வெறுமை மனநிலை, விடுதலை இயக்கத்தின் தலைமை தங்களைக் கைவிட்டு விட்டதாகக் கருதும் விரக்தி நிலை, தெரிந்த நண்பர்கள் பலரும் கொல்லப் பட்டு விட்டார்கள் என்பதை நினைக்கும் போது மனதில் எழும் வெப்புசாரம், பல்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் இந்த விடுதலை இயக்கத்திலிருந்தாலும் அங்கு நிலவும் வெளிப்படையற்ற தன்மை, ஒளிப்பு மறைப்புகள் ,குறிப்பிட்ட இயக்கத்துக்கும் சாமானிய மக்களுக்கும் நடுவேயிருந்த இடைவெளி... என்பன உயிர்த்துடிப்புடன் இந்த நாவலில் வெளிப்படுகின்றன.
வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்கள், அரசியல் ரீதியான விமர்சனங்கள் நிறைந்த உக்கிரமான உரையாடல்கள் போன்றவற்றினூடாக நாவல் நகர்ந்து செல்கின்றது. மூவினங்களிலிருந்தும், பல்வேறு வர்க்கங்களிளிருந்தும் வந்த மாணவர்களின் ‘இள ரத்தப் புரட்சி’ எங்கே போய் முடிந்தது என்பதை சொல்வதன் மூலம் நாவல் தன் நோக்கத்தை எய்துகிறது. பாட்டாளி வர்க்கம் முற்று முழுதாக இணையாத,மக்கள் மயப்படாத,மக்களைப் பயங் கொள்ள வைக்கின்ற ‘குட்டி பூர்ஷ்வாக்களின் எழுச்சி’ தோல்வியிலேயே முடியும் என்பதை இந்த நாவல் சொல்லியிருக்கிறது.
வடக்கு-கிழக்கில் நடைபெற்ற போராட்டங்கள் பற்றி இன்றளவும் ஏராளமான அல்புனைவு/ புனைவு நூல்கள் வெளியாகிக் கொண்டிரக்கின்றன. ஒப்பீட்டளவில் வடக்கை விடக் கிழக்கில் வெளியானவை சொற்பம். மக்கள் விடுதலை முன்னணியினரின் போராட்டத்தை மையப்படுத்தி சிங்களத்தில் நூல்களும்,திரைப்படங்களும் வெளியாகியிருக்கலாம். ஆனால் என் வாசிப்பில் தமிழில் ‘கடவாசல்’தான் இந்தப் போராட்டம் பற்றிய முதல் நூல்."










