
கோடை காலத்தில்,மத்தியானம் ஆனதும் ஊர்போல வெயில் கொளுத்தி எரிக்கும். உடல் முழுக்க வேர்த்து, வேர்வை ஒட்டிக்கொள்ளும்.தேகம் பிசுபிசுக்கும்.‘நா'வரண்டுபோகும். காற்று வராதா? வந்து எம்மை வருடாதா? என்று ஒவ்வொரு மனசும் எதிர்பார்க்கும்.சிலவேளைகளில் அதுவும் சாத்தியமாகும்.
இரவினில் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கும் அழகுடன்,வாழைக்குலையுடன்,வாழைப்பொத்தியையும் சேர்த்து அந்த வாழைகள் சுமக்கின்றனவே! கறிவேப்பிலை மரங்கள்கூட சடைத்து வளர்ந்து,காற்றில் மெல்ல ஆடிக்கொண்டிருக்கும்பொழுதில்
அதிலும் வாசம் எழுகின்றனவே! கீச்சிடும் குருவிகளும்,ரீங்காரமிடும் வண்டுகளும் எழுப்பும் ஒலிகூட மனசுக்கு இதமானதுதான்! இந்த ஊரை இரவெனும் ஒளி சூழ,காற்று மிதந்துவர, மல்லிகை வாசம் பரப்பும்.கங்காருகூட வீட்டுக்கு முன்னால் ஓரிரு இரவுகள்
வந்து நின்றுவிட்டுப்போனதே எம்மைக் குசாலம் விசாரிப்பதுபோலிருந்தது.இந்த நகரத்துக்குப்பெயர்தான் 'மெல்பேர்ன்'.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தலைநகர் மெல்பேர்ன் என்றால் அது தனியழகு.ஓடிக்களைக்கும் வாழ்வுக்குள் அமைதியும்,நிம்மதியும் தரும் வாழ்வியலை நானும் உணர்ந்து,என்னாலும் அவற்றை அனுபவிக்க முடிந்தது என்பதாலும் அதனை இங்கே பதிவு செய்கின்றேன்.
மெல்பேர்னில் விக்ரோறியா மாநில நூலகத்தினுள் நுழைந்ததும் மெய்சிலிர்த்தது. "வாழ்வின் அற்புதங்களை அனுபவிக்க வேண்டுமெனில், தொடர்ந்து பயணிக்க வேண்டும்"என்பதை அக்கணம் உணர்த்தியது.அத்தனை அழகும்,நிம்மதியும் அங்கே நிறைந்திருந்தது.
Beelbourne இல் உறவுகளுடன் கூடியிருந்து, அவர்களுடன் ஒன்றாக 2 கார்களில்சென்று பார்த்த இடங்கள் இவைதான் : -
Eureka Sky deck இன் 88 ஆவது மாடிக்குச் சென்றதும்,அந்த உச்சியில் இருந்து, கண்ணாடிகளால் அடைக்கப்பட்ட ஒரு பகுதி அறைமட்டும் தனியாக வெளியே வரும்!வரும்போது ஆர்ப்பட்டமான இசையும் ஒலிக்கும் !எம்மைத்தாங்கிநிற்கும் தரைகூட கண்ணாடிகள் நிறைந்தவை.அப்படியே நின்றபடி தரைத்தளத்தைப் பார்க்கலாம்.மனது படபடக்கும்.கண்களை மெல்லத் திறந்தபடி கீழே பார்க்க ஆரம்பிக்கும் அனைவரினதும் உரத்த ஒலி;கூச்சலாக வெளிவரும்.அக்கணம் மட்டுமே அந்தப்பயம்.அடுத்து,அங்கிருந்து செக்கச்சிவந்த அந்தச் சூரிய ஒளியைப் பார்த்து மகிழ்வதே உள்ளக்கிடக்கையின் புதுவித அனுபவம்!
koala Conversion reserve இற்குச் சென்று,மரங்களின் கிளைகள் பிரியும் முடிச்சுக்களுக்குள் சுகமாக தமது உடல்களைச்சரித்து உறங்கிக் கொண்டிருக்கும் koala Bear களின் வாழ்க்கையையும் காணமுடிந்தது.சுற்றிவரக்காடு.காட்டைச் சுற்றி தொடர்ந்து நடக்கவேண்டும்.
ஆரம்பத்தில் இடையிடையே இருந்த அறிவிப்புப் பலகைகளில்,"இங்கே பாம்புகளின் நடமாட்டமும் இருப்பதால் அவதானமாக இருப்பது நல்லது" என்பதாக எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்துக் கொண்டிருக்கும்போதே, ஒன்று மெதுவாக அவ்வழியாக கடப்பது தெரிந்தது. எம்மவரிடையே சிலரிடம் பயமும், சிலர் இப்படியாக," ஊரில என்ன ஒன்றுமில்லாமலா வாழ்ந்தனாங்கள், இதுக்குப் போய் பயந்துகொண்டு?வாங்கோ ,வாங்கோ " என்று நடக்க ஆயத்தம். அப்போது அடுத்த அறிவிப்புப் பலகையில் இப்படியாக எழுதியிருந்தது:
“இங்குள்ள மரங்களின் உச்சிகளிலிருந்தும் பாம்புகள் கீழே விழலாம்“.
அவ்வளவும்தான்,ஐயா ஆளை விடு என்று நான் றிவேர்ஸில எடுத்தன் ஓட்டம் ! என்னைப்பார்த்ததும்,வேறென்ன மற்றவர்களைப்பற்றி சொல்லவா வேண்டும்.
"இந்த விஷப்பரீட்சை வேண்டாம்" என்றபடி கார் தரிப்பிடத்திற்கு வந்து, மத்தியானச் சாப்பாட்டை முடித்து இளைப்பாறிவிட்டு, தொடர்ந்து Phillip Island இற்குப் புறப்பட்டுவிட்டோம். பென்குயின் (Penguin) அல்லது தென்துருவப் பறவை எனச்சொல்லக்கூடிய; இது பறக்க முடியாத, ஆனால் நன்றாக நீந்தக்கூடிய ஒரு வகை கடற்பறவை இனத்தைப் பார்க்க Phillip Island இலும் கால்பதித்தோம்.
"பென்குயின்களின் அணிவகுப்பை ரசிப்பது “என்பது ஆறறிவுள்ள எமக்குத்தானே வடிவும், வேடிக்கையுமே தவிர;அந்தப் பிராணிகளின் வாழ்வியலைத் தொந்தரவு செய்கின்றோம் என்பதே மெய்.இயற்கையின் நியதியையும் குறிவைத்து மனிதகுலம் எப்படியெல்லாம் சம்பாதிக்கின்றது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்தான் !
விடிந்ததும் கடல் சென்று இரைதேடி இரவானதும் கரைசேரும் இந்த உயிரினத்தைப் பார்க்கவும்,சூரியன் மறைவதைப் பார்க்கவும் முதலில் காத்திருப்பு.சூரியன் மறைய, இருள்சூழ Penquin ஒவ்வொன்றாக வந்ததும்,அணிவகுத்துக் கூட்டம் கூட்டமாய் வருவதும் அழகு என்று சொல்வதும் தப்பில்லை.
அடுத்து இன்னொருநாள் எமது நண்பர்களை Ballarat - St Patrick's Point இல் சந்தித்தோம்.இந்த நாளையும் மறக்கமுடியாது.
பகிரும் அன்பிலும்,பரிமாறும் உணவிலும் ஒட்டிக்கொள்ளும் ருசியிருக்கும்போதே மனம் உள்வாங்கி ஆழமாகப்பதிவு செய்துவிடும்.அதுவே நினைவாக நிலைத்து நிற்கும்.அதில் இந்நாளும் பொன்நாள்தான்.நிழல் தந்த மரங்களின் கீழே கூடியிருந்து," வைற்வைன்" போத்தலையும் திறந்து பருகி,வாய்க்கு ருசிக்கு கச்சானும் கடிபட ஊரில் நாம் வாழ்ந்த பொற்காலமும் வந்து போய்ச்சுது.என் தாய் சமைத்ததுபோல,என் பெறாமகளும் சமைத்திருந்த கோழிப்பிரியாணி; ஆகா அது அமிர்தம்.இவை அனைத்தையும் அனுபவிக்க எமைத்தேடி வந்த நண்பர்களிற்கும், எமக்காக இடந்தந்த அந்த ஏரிக்கும்,மரங்களிற்கும்,அரவணைத்த காற்றிற்கும்கூட மனமார்ந்த நன்றி.
Rosebud Beach:- " Melbourne இற்குப்போய் இவ்வளவு இடங்கள் பார்த்தனீங்கள்,இந்தக் கடற்கரை பார்க்கவில்லையே என்ற குறை இருக்கக்கூடாது.இது கொந்தளிக்கும் கடல் அல்ல.நீரிற்குள் பாதங்கள் படப்பட சுகம் தரும் மணல் நிறைந்த கடலிது.கடலிற்குள் இறங்கினால்,இக்கடலை விட்டு வரவே மனம் வராது.உண்மைதான்,இந்தக்கடலிற்குள் குளிக்கவில்லையென்ற குறையை நல்லவேளை நாம் விட்டுவைக்கவில்லை.
வெயில் கொளுத்தி எரித்தாலும்,உடல் முழுக்க வேர்த்து,தேகம் பிசுபிசுத்தாலும்,இடையிடையே வீசும் காற்றின் சுகத்திலும்,பயணங்களால் மனம் இன்புறும் உள்ளத்தின் உவகையினாலும் எதுவுமே எமக்கு சிரமமாகத் தெரியவில்லை.உறவே இக்கட்டான சூழ்நிலைகளைக்கூட உன்னால் கடந்துபோக முடியுமெனில், பயணித்துக்கொண்டிரு! உன்னையே நீ உணர்வாய்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.