
தென்னிந்தியாவில் புலிகள் இருந்ததால் சோழர்கள் தங்கள் கொடியில் புலியை வைத்தனர். ஆனால் இலங்கையில் புலிகள் இல்லை; இங்கு இருந்தது சிறுத்தை. இந்நிலையில் நமது தமிழ் ஈழத்தவர்கள் புலியை அடையாளமாகத் தத்தெடுத்தது ஏன்? அக்காலத்திலேயே நான் எழுப்பிய கேள்வி அது. அதுபோல, சிங்கம் இல்லாத நாட்டில் சிங்கக் கொடி பறப்பதும் முரண்பாட்டான நகையே.
ஆப்பிரிக்காவில் சிறுத்தையும் சிங்கமும் உள்ளன. இந்தியாவில் மட்டுமே சிங்கம், புலி, சிறுத்தை மூன்றும் வாழ்கின்றன. இந்த மூன்று முக்கிய மிருகங்களைக் காண்பதில் ஆர்வமுடைய ஒரு கூட்டத்தில் நானும் ஒருவன். ஏற்கெனவே அசோகனின் வைத்தியசாலையில் மிருகங்களை “காட்சி சாலையில்” வைப்பது எங்களை சிறையில் அடைப்பது போலவே . குற்றம் செய்தால் மனிதர்கள் சிறைக்கு செல்கின்றனர்—அதுவும் எல்லாரும் அல்ல.
ஒருமுறை பெரியார் புலிகள் சரணாலயத்தில் ஒரு நாள் முழுவதும் அலைந்தும் புலியைக் காண முடியவில்லை. அங்குள்ள வழிகாட்டி எங்களுக்கு புலியின் மலத்தை மட்டும் காட்டினார். நேபாளத்திற்குச் சென்றபோதும் புலிகளை காண முடியவில்லை; அங்கே வழிகாட்டி, புலி தனது நகங்களால் கிள்ளிய மரத்தைக் காட்டி, “இங்கே புலி வந்திருக்கவேண்டும்” என்றார். உண்மையில் புலிகள் மரத்தில் நகங்களைப் பிறண்டி ஒழுங்குபடுத்தும் பழக்கம் உண்டு.
என்னுடைய நண்பரொருவர் இந்தியாவில் எட்டு புலிகள் சரணாலயங்களைச் சுற்றியும் புலிகளைப் பார்க்க முடியாமல் தவித்தார். இறுதியில் அவர் என்னை வலியுறுத்தி, “ஒரு நாள் போதுமே; அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளைப் பார்க்கலாம்” என்ற எனது வார்த்தைகளுக்குப் புறம்பாக, இரண்டு நாட்கள் தங்கும்படி அழைத்துச் சென்றார்.
நாங்கள் மத்தியப் பிரதேசத்தில், கிட்டத்தட்ட ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கான்ஹா புலிகள் சரணாலயத்தில் இரண்டு நாட்கள் தங்கினோம். ஏற்கனவே சென்ற காஷ்மீர் பயணத்திலிருந்து நேரடியாக அங்கு வந்து சேர்ந்தேன். வனவிலங்குகள் வாழும் இப்பகுதி, காஷ்மீரில் இருந்த அரசியல் அபாயங்களை விடப் பாதுகாப்பான இடமாகத் தோன்றியது. வசதியான தங்குமிடமும் உணவும் அங்கே கிடைத்தன.
மறுநாள் காலை ஆறு மணிக்கே ஜீப்புகளில் அனுமதிப்பத்திரம் பெற்று பயணம் தொடங்கினோம். அப்பொழுது வரட்சிக் காலம் என்பதால் நீர்நிலைகள் முக்கியமாக எங்கள் கவனத்திலிருந்தது. வரட்சிகாலம் நீர் அருந்த வரும் புலிகளை காணும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.
பல மணி நேரம் தேடியபோது மயில், மான், எருமை போன்றவை எளிதில் கண்ணுக்குத் தோன்றின. ஆனால் மனதில் தேடியது புலி மட்டுமே.
நாங்கள் எதிர்பார்த்தது வங்காளப் புலிகள் Bengal Tigers). இந்திய காட்டின் உச்சமான ஊனுண்ணி (apex predator) புலிதான். காட்டின் சமநிலையை காக்கும் முக்கிய மிருகம்.
இப்போது வங்காளப் புலிகள் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், தென் சீனாவில் உள்ளன. மற்ற நாடுகளில் அவை விரைவில் அருகிவரும் நிலையில் உள்ளன. இந்தியாவில் தற்போது சுமார் 3,000–3,500 புலிகள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. பல சரணாலயங்களில் பாதுகாக்கப்பட்டாலும், அவை இன்னும் “அருகி வரும் இனமாக” (endangered)வே கருதப்படுகின்றன. தொல்பொருள் ஆதாரங்களின் படி, இவை இந்தியாவுக்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் சைபீரியாவிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. அப்பொழுது பனிக்காலம் (Ice Age) முடிந்து, இந்தியாவையும் இலங்கையையும் கடல் பிரித்திருந்ததால், புலிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலேயே தங்கி, இலங்கைக்கு வரவில்லை.
புலிகள் அருகிவருவதற்கான முக்கியக் காரணங்கள்:
மனித அழுத்தம் – மக்கள் தொகை அதிகரிப்பால் காடுகள் அழிக்கப்பட்டன.
வேட்டை – இந்திய மன்னர்கள், பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், புலிகளை வேட்டையாடி, தோலை “trophy” ஆக வைத்தனர். இன்னும் சில மாளிகைகளில் புலித்தோல் அலங்காரமாகக் காணப்படுகிறது. நான் ராஜஸ்தானின் பிக்கனேர் நகரில் ஒரு விடுதியில் தங்கியபோது சுவரில் புலித்தோலைக் கண்டேன்.
எதிர்மறை சித்தரிப்பு – மேற்கத்திய ஊடகங்கள் சுறாவை மனித விரோதி என சித்தரித்தது போல, புலியையும் “மனிதர்களைக் கொல்லும் கொடூர விலங்கு” எனக் கதைகளிலும் திரைப்படங்களிலும் காட்டினர். உண்மையில் முதிய, காயமடைந்த புலிகள் மட்டுமே இலகுவான இரைக்காக கிராமங்களுக்கு வருகின்றன. இளைய புலிகள், முதிய புலிகளை தங்களது போட்டியாக நினைத்து துரத்தி விடுகின்றன.
இனப்பெருக்கக் குறைவு – புலிகள் 10–15 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றன. ஆனால் 4–5 ஆண்டுகள் ஆகிய பின்தான் இனப்பெருக்க வயதுக்கு அடையும். 3.5 மாத கர்ப்பகாலம், அதன்பின் 2–3 வருடங்கள் தாய் புலி குட்டிகளை காக்க வேண்டும். ஒரு முறை 1–3 குட்டிகள் மட்டுமே கர்பப்பையில் தங்கும் ; வாழ்க்கையில் அதிக பட்சம் இரண்டு முறை கருவுறும் வாய்ப்பு உள்ளது . சில இளம் ஆண் புலிகள், தாயுடன் சேர்வதற்காக குட்டிகளை கொன்று விடும். இத்தகைய இயற்கைத் தடைகளும் புலிகளின் இன அழிவுக்குக் காரணம்.
அன்று காலை பயணத்தில் புலி தெரியவில்லை; ஆனால் புதிதாக “பரசிங்க மான்” (Barasingha) காணப்பட்டது. இது வட இந்தியாவில் மட்டுமே உள்ளது. வால்மீகி ராமாயணத்தில் மாரீசன் இதன் வடிவில் சீதையை ஏமாற்றினான் எனக் கூறப்படுகிறது. கம்பரும் இதையே “பொன்மான்” எனப் பாடுகிறார். காலை சூரிய ஒளியில் ஒளிர்ந்த பரசிங்க மான் கண்ணைக் கவர்ந்தது. ஆனால் இதுவும் அருகிவரும் இனமாகவே கருதப்படுகிறது.
ஆணிப் பொனின் ஆகியது; ஆய் கதிரால்
சேணில் சுடர்கின்றது; திண் செவி, கால்,
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால்;
காணத் தகும்’ என்றனள், கை தொழுவாள். – கம்பராமாயணம்
மாலை பயணத்தை முடித்து புலியைக் காணவில்லை என்ற கவலையுடன் திரும்பும் போதே, மரத்தின் அடியில் இருந்து சில மீட்டர் தூரத்தில் எங்கள் வாகனத்தை நோக்கி அமைதியாக ஒரு புலி நடந்து வந்தது. வயிறு புடைத்திருந்ததால் அது பெண் புலி என எண்ணினோம். எவ்வித பயமுமின்றி, முகத்தை நேராக நோக்கி உறுதியான அடிகள் எடுத்து வந்த அந்தக் காட்சி எங்களுக்கு உண்மையான ஒரு “தரிசனம்” போல இருந்தது.
உண்மையான புலியைப் பார்த்த பொச்சம் அன்று தீர்ந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.