நான் தொடர்ச்சியாகச் CMR 101.3 FM தமிழ் வானொலி நிகழ்ச்சியைக் கேட்பவன் அல்லன். ஆனால் ,அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது கேட்பதுண்டு. குறிப்பாகச் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' நிகழ்ச்சி என்னைக் கவர்ந்த ஒன்று. வெள்ளி இரவு 11 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடக்கும் நிகழ்ச்சி. ஒரு சொல்லைப்பற்றிய பொதுவான விபரத்தைத் தந்து விட்டு , நேயர்களைக் இரண்டு கேள்வி கேட்க விடுவார்கள். நேயர்களின் கேள்விகள் மூலம் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் இறுதியாக வரும் நேயர்கள் பெரும்பாலும் விடையினை ஊகித்து  விடுவார்கள். 

இந்நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் பல தடவைகள் வேறு முக்கிய வேலை ஏதாவது குறுக்கிடும்.அதை முடித்து விட்டு வருவதற்குள் நிகழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கும். விடை எதுவாகவிருக்கும் என்று சிறிது நேரம் விடையை அறிய வேண்டிய ஆவலில் மனத்தைத் தவிக்க வைக்கும் நிகழ்ச்சி.

இச்சொல்லாடல் நிகழ்ச்சியில் பல தடவைகள்  அதிக பாவனையில் இல்லாத பழந்தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் வகையில் பல அரிய  பாவனையில் இல்லாத சொற்களைத் தேர்ந்தெடுத்திருப்பார் வானொலிக் கலைஞர் செந்தில்நாதன்.

இவ்விதம் அவர் நினைவூட்டிய ஒரு சொல் என்  கவனத்தை ஈர்த்தது.  இம்முறை நிகழ்ச்சியின் முடிவு வரை என்னால் நிகழ்ச்சியைக் கேட்க முடிந்தது. இறுதியில் அச்சொல்லுக்கான விடையினை அறிந்தபோது மனம் திருப்தியில் மூழ்கியது. அத்துடன் இச்சொல்லைக் கண்டு பிடித்த நேயர்கள் மீது மதிப்பு அதிகரித்தது.

இச்சொல்லை நாம் எப்பொழுதும் தவறாகத்தான் பாவித்து வருகின்றோம். கணியன்  பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே . யாவரும் கேளிர்', என்பதைப் பலரும் 'யாதும் ஊரே. யாவரும் கேளீர்' என்றே தவறாக அறிந்து வைத்திருப்பார்கள். அதுபோல்தான் இச்சொல்லையும் எம்மில் பலரும் தவறான் சொல் வடிவத்திலேயே அறிந்து வைத்திருக்கின்றோம்.

இது ஒரு மிருகத்தைக் குறிப்பது. ஒரு வகை எருமை. இமயமலைச்சாரலில் வாழ்வது.  ஆங்கிலத்தில் Yak என்றழைப்பார்கள். அது வாழும் குளிர்ச் சூழல் காரணமாக அதன் உடலை  அடர்த்தியான் மயிர் மூடியிருக்கும்.  குளிர்ச் சுவாத்தியம் காரணமாக அது தன் உடலை மூடிக்கிடக்கும் உரோமத்தை இழந்தால் உயிர் வாழவதற்குச் சாத்தியமில்லை. குளிரால் விறைத்தே இறந்து விடும் சாத்தியமேயுண்டு.  

இவ்விதம் இமயமலைச் சாரலில் வாழும் இவ்வகை எருமை இனம் மாட்டினத்தைச் சேர்ந்தது. மானினத்தைச் சேர்ந்தது அல்ல. இதனை கவரிமா என்று வள்ளுவர் தன் குறளொன்றில் அழைத்துள்ளார். அக்குறள் வருமாறு:

"மயிர் நீப்பின் வாழாக் கவரிமா; அன்னார்,
 உயிர் நீப்பர் மானம் வரின்''   (குறள் - 969)

இங்கு வள்ளுவர் மிகவும் தெளிவாகக் கவரிமா என்று குறிப்பிட்டுள்ளார். மயிர் நீப்பின் வாழாக் கவரிமா என்று மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இக்கவரிமா என்னும் மிருகம் மான உணர்ச்சி மிக்கது என்று இக்குறளில் குறிப்பிடவில்லை. அவர் மயிர் நீப்பின் வாழாக்கவரிமா என்று குறிப்பிட்டதில் தவறில்லை. குளிர்ப்பிரதேசத்தில் வாழும் கவரிமா அதன் உடல் முடியை இழந்தால் நிச்சயம் உயிர் வாழாது. குளிரால் விறைத்தே மடிந்து  விடும். இவ்விதம் கவரிமா மயிர் நீங்கின் உயிர் வாழா என்னும் உண்மை வள்ளுவரின் சிந்தனையில் ஒரு பொறியினை ஏற்படுத்துகிறது. அவ்விதம் மயிர் நீங்கின் வாழா அக்கவரிமா போல் மானத்தைப் பெரிதாகக் கருதும் மானுடர் மானம் போனால் உயிர் வாழார் என்று, மயிர் நீங்கி வாழாக் கவரிமாவை ,மானமிழந்தால் வாழார் என்று அவ்வகை மானுடருக்கு  உவமையாக்கிவிட்டார். 

இவ்விதம் கவரிமா என்று அவர் குறிப்பிட்ட மிருகத்தை,  இக்குறளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களில் ஒருவர் கவரிமான் ஆக்கி விடவே , வழக்கில் கவரிமா கவரிமானாகி விட்டது. உண்மையில் கவரிமான் என்றொரு மானினமில்லை.

ஆனால் சங்கப்பாடல்களில் இம்மிருகத்தைக் கவரி என்றழைக்கும் போக்கு இருந்துள்ளதையும் அறிய முடிகின்றது. புறநானூறு கவரிமா பற்றிப் பின்வருமாறு கூறும்:

"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
 தண்நிழல் பிணை யொடு வதியும்
 வடதிசை யதுவே வான்தோய் இமயம்.''  (பா - 132)

பதிற்றுப்பத்து 

"கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி........ ......
 நரந்தை கனவும்....... .....
 பேரிசை இமயம்.'' (பா - 11)

என்று விபரிக்கும்.

இங்கும் கவரியின் மான உணர்ச்சி பற்றி எதுவுமில்லை.

பதிற்றுப்பத்து கவரி பற்றி இப்படியும் குறிப்பிடும்:

"கவரிமுச்சிய கார்விரி கூந்தல்''

அதாவது கவரியின் அடர்ந்த முடியிலிருந்து உருவாக்கப்பட்ட செயற்கைக்கூந்தலை (wig) கவரிமுச்சிய கார்விரி கூந்தல்  என்று குறிப்பிடுகிறது. இன்று செயற்கைக் கூந்தலைச் சவுரி என்றழைப்போம். கவரிதான் காலப்போக்கில் சவரியாகி, பின் சவுரியாகி விட்டதாகவும் சிலர் கருதுவர்.

கவரி சாமரமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் கவரிமாவின் அடர்த்தியான முடிகொண்டு உருவாக்கப்பட்ட விசிறியைக்  கவரி என்றும் அழைத்தார்கள். மன்னனுக்குக் கவரி வீசும் மானுடத்தொழிலாளர் பற்றி அறிந்திருக்கின்றோமல்லவா?

திருக்குறளுக்குப் பின் எழுதப்பட்ட சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெருங்கதை ஆகியவற்றில் மயிர் நீங்கின் உயிர் வாழா இம்மிருகத்தை மானத்துடன் சம்பந்தப்படுத்தி விபரித்துள்ளார்கள்.  "மானக்கவரி" என்று சீவகசிந்தாமணியும்,  "மானமா" என்று கம்பராமாயணமும் கூறும். 

இவ்விதம் கவரிமா என்னும் விலங்கு பற்றி வள்ளுவர்  குறிப்பிட்ட விலங்கைக் கவரிமான் ஆக்கி விட்டார்கள்  குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களில் சிலர். இவ்விதம் மானமிழந்த மனிதருக்கு உவமையாக வள்ளுவரால் குறிப்பிடப்பட்ட மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமாவைச் திருத்தக்கதேவர், கம்பர் மானம் மிக்க கவரிமா ஆக்கி விட்டனர். 

மா என்பது விலங்குகளைப் பொதுவாகக் குறிக்குமொரு சொல். அரிமா என்பது சிங்கத்தைக் குறிப்பது போல் கவரிமா என்பதும் ஒரு வகை , முடி அடர்ந்த எருமையினத்தைக் குறிக்கும்.

கரிமாவைத் தனது சொல்லாடல் நிகழ்ச்சியின் மூலம் நினைவூட்டிய  வானொலி ஊடகவியலாளர் செந்தில்நாதனுக்கு நன்றி.  வாழ்த்துகள்.

 ['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

நன்றி: https://vngiritharan230.blogspot.com/2025/10/blog-post_21.html#more