- வ.ந.கிரிதரன் -அண்மையில் திரு. அருணகிரி சங்கரன்கோவில் என்பவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. அதில் அவர் தனித்தமிழில் எழுதுவதன் அவசியம் பற்றி எழுதியிருந்தார். அவரது கடிதத்தையும் அதற்கான எனது பதிலையும் இங்கு நான் பதிவு செய்கின்றேன்,


On Mon, Aug 17, 2020 at 5:44 AM Arunagiri Sankarankovil <writerarunagiri@gmail.com> wrote:

மதிப்பிற்கு உரிய நவரத்தினம் கிரிதரன் அவர்களுக்கு,

வணக்கம். இன்று காலை இந்திய நேரம் 5.30 மணி அளவில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்ற ஈழத்தமிழ் எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன் அவர்களுடன் நான் நிகழ்த்திய உரையாடலை, இத்துடன் தங்கள் பார்வைக்கு இணைத்து உள்ளேன்.
என்னுடைய முகநூல் பதிவு.....     இன்று காலையில் வாட்ஸ் அப்பில் ஒரு காணொளி பகிர்ந்தேன்.     உடனே, எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன், பதிவுகள்.காம் செய்திகளையும் பாருங்கள் என குறிப்பு அனுப்பினார்.
அவரை அழைத்தேன்.     இன்னமும் விழித்து இருக்கின்றீர்களா? இப்போது ஃபிரான்ஸ் நாட்டில் மணி என்ன ஆகின்றது? என்று கேட்டேன்.

இளங்கோவன்: இப்போது இங்கே மணி இரவு 1.50 என்றார்.
அருணகிரி: 11 மணிக்குள் உறங்குங்கள். அதுதான் நல்லது.
இளங்கோவன்: இல்லை. எனக்கு இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிப்பது வழக்கமாக இருக்கின்றது.
அருணகிரி: நீங்கள் சொன்ன பதிவுகள்.காம் செய்திகளைப் பார்த்தேன். வடமொழிச் சொற்களின் கலப்பு நிறைய இருக்கின்றது என்றேன்.
இளங்கோவன்: இதுகுறித்து நீங்கள் நண்பர் கிரிதரன் அவர்களோடு பேசுங்கள். அவர்தான் கனடாவில் இருந்து பதிவுகள்.காம் எழுதுகின்றார். அவரும் ஒரு எழுத்தாளர். அரசியல், இலக்கியக் கருத்துகளை எழுதுகின்றார். அந்தத் தளத்தை, உலகம் முழுமையும் தமிழர்கள் பார்க்கின்றார்கள். தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் எழுதுகின்றார்கள்.
அருணகிரி:அவருடைய மின் அஞ்சல் முகவரி அனுப்புங்கள்.
இளங்கோவன்: அனுப்புகின்றேன். அவரது மின் அஞ்சல் முகவரி உங்களுக்கு அனுப்புகின்றேன்.
அருணகிரி: என்னுடைய பதிவுகளைப் பார்க்கின்றீர்களா? உங்கள் கருத்து என்ன?
இளங்கோவன்: ஆமாம். முழுமையும் வாசிக்கின்றேன். சிறப்பாக இருக்கின்றன.
அருணகிரி: ஈழத்தமிழ் எழுத்தாளர்களுடைய எழுத்துகளில் வடமொழிச் சொற்களின் கலப்பு பெருமளவில் உள்ளதே?
இளங்கோவன்: அதற்குக் காரணம், தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள், சினிமாக்கள்தான்.
அருணகிரி:பதிவுகள்.காம் செய்திகளைப் பார்த்தேன். வடமொழிச் சொற்களின் கலப்பு நிறைய இருக்கின்றது. ஈழத்தமிழ் எழுத்தாளர்களுடைய எழுத்துகளில் வடமொழிச் சொற்களின் கலப்பு பெருமளவில் உள்ளதே? அதற்கு முன்பே, 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் மொழிபெயர்ப்பு செய்த பைபிளில், வடமொழிச் சொற்கள் பாதிக்குப் பாதி இருக்கின்றனவே?  தமிழ்நாட்டில் மறைமலை அடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் போல, ஈழத்தில் யாரும் இயங்கவில்லையா?
இளங்கோவன்: ஆம். அந்தக் காலகட்டத்தில் மணிப்பிரவாள நடைதான் வழக்கத்தில் இருந்து. தமிழ்நாட்டில் இருந்து வந்த புத்தகங்கள் அந்த நடையில்தான் எழுதப்பட்டு இருந்தன.
அருணகிரி: தமிழ்நாட்டில் மறைமலை அடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் போல, ஈழத்தில் யாரும் இயங்கவில்லையா?
இளங்கோவன்: மறைமலை அடிகள் தொடங்கியதை, திராவிட இயக்கத்தார் பரவலாக்கினார்கள். குறிப்பாக, அண்ணா அவர்களுடைய எழுத்துகளும், பேச்சுகளும் தனித்தமிழை வளர்த்தன. ஆனால், அதே காலகட்டத்தில் தமிழில் வெளியான திரைப்படங்களில்,  கணவர், காதலரை, சுவாமி என்றுதான் பெண்கள் அழைத்தார்கள். அத்தகைய படங்கள்தான் ஈழத்திற்கு வந்தன. பொதுவாகவே, இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் நல்ல தமிழில்தான் உரையாடுகின்றார்கள், எழுதுகின்றார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் இருந்து வந்த புத்தகங்கள், திரைப்படங்கள், இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  இப்போது தமிழ்த் திரைப்படங்களில், கணவர், காதலரை சுவாமி என அழைப்பது மாறி, டேய், வாடா, போடா என்று பேசுகின்றார்கள். இது ஈழ சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றதோ? எனக் கவலையாக இருக்கின்றது என்றார்.

நன்றி,
தங்கள் அன்புள்ள,
அருணகிரி


இக்கடிதத்திற்கு நான் அனுப்பிய கடிதங்களில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:

வணக்கம் திரு. அருணகிரி அவர்களுக்கு,

(பதிவுகள்.காம்) தனித்தமிழ், தமிழில் பிறமொழிச் சொற்கள் பற்றிய கடிதமும், அதற்கான என் பதிலும்!   அண்மையில் திரு. அருணகிரி சங்கரன்கோவில் என்பவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. அதில் அவர் தனித்தமிழில் எழுதுவதன் அவசியம் பற்றி எழுதியிருந்தார். அவரது அக்கடிதத்துக்கான எனது பதிலையும் இங்கு நான் பதிவு செய்கின்றேன்,   நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன். இயலுமானவரையில் தமிழ்ச் சொற்களைப்பாவிப்பது நல்லது. ஆனால் நீண்ட காலமாக தமிழ் இலக்கியப்பரப்பில் நிலைத்து நிற்கும் பிறமொழிச் சொற்களை உள் வாங்குவதில் தவறேதுமில்லை என்பதென் கருத்து. ஆங்கிலம் ஏராளமான பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளர்ந்திருக்கின்றது. அதுபோல்தான் தமிழும் ஏனைய மொழிச்சொற்களை உள்வாங்குவதால் அழிந்து விடாது. தமிழ் இலக்கணத்தில் பிறநாட்டு, மொழிச் சொற்களை உள்வாங்கும் மரபுமுண்டு.  தனித்தமிழ் என்பதில் பிடிவாதமாகவிருந்தால் என் அபிமானக் கவி மகாகவி பாரதியாரின் கவிதைகளையெல்லாம் தனித்தமிழில் திருத்தி எழுத வேண்டி வந்துவிடும்.  கவியரசர் கம்பர், கவிஞர் கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி)  இவர்கள்தம் எழுத்துகளையெல்லாம் தமிழ்ப்படுத்த வேண்டி வந்துவிடும்.  'வீர சுதந்திரம் வேண்டி நின்றார்' என்பதையெல்லாம் தமிழ்ப்படுத்த வேண்டி வரும். அதனை நான் ஆதரிக்கவில்லை.  நிச்சயம் நீங்கள் வேட்டி, சால்வையுடன் வாழுமொருவர் அல்லர் என்று நினைக்கின்றேன். மேனாட்டு ஆடைகளை, தொழில் நுட்பத்தையெல்லாம் உள்வாங்கி வாழுமொருவர் என்றும் கருதுகின்றேன். மொழியும் இதனைப்போன்றதுதான். பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளர்கிறதென்பேன்.  மேலும் 'நாவல்களிலொன்றான.....நாவல்களுள் ஒன்றான' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்விதம் எழுதுவது எழுத்தாளர்தம் உரிமை. வரும் படைப்புகளில் தட்டச்சுப்பிழைகள், இலக்கணப்பிழைகள் வருவதுண்டு. இயலுமானவரையில் அவற்றைத்திருத்தக் கவனமெடுக்கின்றேன். 'பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்புபவர்கள் கவனத்துக்கு' என்னுமொரு கட்டுரை பதிவுகளிலுண்டு.அதில் இவை பற்றிக் குறிப்பிட்டுள்ளோம்.  பதிவுகள் இதழுக்குப் பல படைப்புகள் வருவதால் அவற்றை வெளியிடுவது மிகவும் நேரமெடுக்கும் செயல். இதனைத் தனியொருவனாகவே செய்து வருவது உண்மையில் மிகவும் சிரமமான செயல். முடிந்தவரையில் சிறப்பாகக்  கொண்டு வருவதே நோக்கம்.  நன்றி உங்கள் கருத்துகளுக்கு. உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்.  இன்னுமொரு விடயம். என் பெயர் கிரிதரன் கூடத் தமிழ்ச் சொல் அல்ல. ஆனால் நீண்ட காலமாக நாம் அப்பெயரைப் பாவிக்கின்றோம். அதனை மறைமலையடிகளைப்போல் மாற்ற வேண்டி வரும். ஆனால் அதில் எனக்குச் சம்மதமில்லை. என் அப்பா ,  அம்மா இருவரும் விரும்பி வைத்த பெயர்கள். எங்கள் குடும்பத்தில் ஐவர். ஐவரின் பெயர்களையும் அப்பா இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுத்தார். அது அவரது விருப்பம்.  கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி & தேவகி இவைதாம் அப்பெயர்கள். ஆனால் நான் அறிவியலை நம்புபவன். சமயத்தில் ஈடுபாடு கொண்டவனல்லன்.  அன்புடன், வ.ந.கிரிதரன்  இவற்றுடன் மேலும் சில வார்த்தைகளைச் சேர்க்க விரும்புகின்றேன். இன்று தமிழில் ஆயிரக்கணக்கில் வடசொற்கள், ஏனைய மொழிச்சொற்கள் கலந்து தமிழாகிவிட்டன. அச்சொற்களையெல்லாம் நாம் தமிழ்ச்சொற்களைப்பாவித்துத்தாம் எழுதுகின்றோம்.  அதனால் தமிழ் அழிந்து விடும் என்று பயம் கொள்ளத்தேவையில்லை. பிறமொழிச் சொற்களைப் பாவித்து எழுதுவதைத் தவிர்க்கலாம். நானும் சிலவேளைகளில் தமிழல்லாத வடமொழிச் சொற்களையும் பழக்கதோசத்தில் பாவிப்பதுண்டு. ஆனால் அவையும் நீண்ட காலமாகத் தமிழில் வழங்கி வருவதால் அவற்றை வழக்கிலுள்ளதை ஏற்றுக்கொள்ளல் என்னும் நோக்கில் ஏற்றுக்கொள்ளலாம் என்பதென் கருத்து. வந்தவற்றை, வழக்கில் நீண்ட காலமாகத் தமிழ் மொழியில் கலந்து தமிழாகிவிட்டவற்றை நீக்கவேண்டிய தேவையில்லை. ஆனால் அதே சமயம் பிறமொழிச் சொற்களைத் தமிழ் உள்வாங்குவதையும் தவிர்க்க முடியாதென்றே கருதுகின்றேன். பல ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் இவ்விதமே பிறமொழிச்சொற்களை உள்வாங்கி நிலைத்து நிற்கின்றது. இனியும் நிலைத்து நிற்கும்,. தற்போதுள்ள தமிழ், நாம் அனைவரும் அறிந்த தமிழ் இத்தகைய பிறமொழிச் சொற்களை உள்வாங்கிய தமிழ்தான்.  இன்னுமொரு விடயம். மதிப்புக்குரிய அருணகிரி அவர்களது பெயர் கூடத் தமிழ்ப்பெயர் அல்ல. அருணன் அருணோதயம் என்னும் வடசொல்லிலிருந்து உருவான சொல். அருணோதயம் வைகறை என்பதற்கான வடசொல். அதுபோல் கிரி என்பதும் வடசொல்லே. மலை என்று அர்த்தப்படும் வடசொல். மறைமலையடிகள் போல் பெயர்களையெல்லாம் தனித்தமிழ்ப்பெயர்களாக மாற்ற வேண்டிய தேவையில்லை. மொழி என்பது மானுடர்களுக்கு ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குரிய கருவி, சாதனம். அவ்வளவே.  "யாதும் ஊரே! யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார். நான் கணியன் பூங்குன்றனார் வழி வந்தவன். எனக்கு எல்லாமொழிகளும் உறவு மொழிகளே. அவற்றை உள்வாங்குவதால் என் மொழி சிறுப்பதில்லை; சிறப்புறவே செய்கின்றது என்பதில் நம்பிக்கையுள்ளவன்.   ************** முழுமையாக அருணகிரி சங்கரன்கோவில் அவர்களின் கடித்ததுடன் முழுமையாக வாசிக்க: https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6134:2020-08-17-23-50-05&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன். இயலுமானவரையில் தமிழ்ச் சொற்களைப்பாவிப்பது நல்லது. ஆனால் நீண்ட காலமாக தமிழ் இலக்கியப்பரப்பில் நிலைத்து நிற்கும் பிறமொழிச் சொற்களை உள் வாங்குவதில் தவறேதுமில்லை என்பதென் கருத்து. ஆங்கிலம் ஏராளமான பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளர்ந்திருக்கின்றது. அதுபோல்தான் தமிழும் ஏனைய மொழிச்சொற்களை உள்வாங்குவதால் அழிந்து விடாது. தமிழ் இலக்கணத்தில் பிறநாட்டு, மொழிச் சொற்களை உள்வாங்கும் மரபுமுண்டு.

தனித்தமிழ் என்பதில் பிடிவாதமாகவிருந்தால் என் அபிமானக் கவி மகாகவி பாரதியாரின் கவிதைகளையெல்லாம் தனித்தமிழில் திருத்தி எழுத வேண்டி வந்துவிடும்.  கவியரசர் கம்பர், கவிஞர் கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி)  இவர்கள்தம் எழுத்துகளையெல்லாம் தமிழ்ப்படுத்த வேண்டி வந்துவிடும்.  'வீர சுதந்திரம் வேண்டி நின்றார்' என்பதையெல்லாம் தமிழ்ப்படுத்த வேண்டி வரும். அதனை நான் ஆதரிக்கவில்லை.

நிச்சயம் நீங்கள் வேட்டி, சால்வையுடன் வாழுமொருவர் அல்லர் என்று நினைக்கின்றேன். மேனாட்டு ஆடைகளை, தொழில் நுட்பத்தையெல்லாம் உள்வாங்கி வாழுமொருவர் என்றும் கருதுகின்றேன். மொழியும் இதனைப்போன்றதுதான். பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளர்கிறதென்பேன்.

மேலும் 'நாவல்களிலொன்றான.....நாவல்களுள் ஒன்றான' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்விதம் எழுதுவது எழுத்தாளர்தம் உரிமை. வரும் படைப்புகளில் தட்டச்சுப்பிழைகள், இலக்கணப்பிழைகள் வருவதுண்டு. இயலுமானவரையில் அவற்றைத்திருத்தக் கவனமெடுக்கின்றேன். 'பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்புபவர்கள் கவனத்துக்கு' என்னுமொரு கட்டுரை பதிவுகளிலுண்டு.அதில் இவை பற்றிக் குறிப்பிட்டுள்ளோம்.

பதிவுகள் இதழுக்குப் பல படைப்புகள் வருவதால் அவற்றை வெளியிடுவது மிகவும் நேரமெடுக்கும் செயல். இதனைத் தனியொருவனாகவே செய்து வருவது உண்மையில் மிகவும் சிரமமான செயல். முடிந்தவரையில் சிறப்பாகக்  கொண்டு வருவதே நோக்கம்.

நன்றி உங்கள் கருத்துகளுக்கு. உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்.

இன்னுமொரு விடயம். என் பெயர் கிரிதரன் கூடத் தமிழ்ச் சொல் அல்ல. ஆனால் நீண்ட காலமாக நாம் அப்பெயரைப் பாவிக்கின்றோம். அதனை மறைமலையடிகளைப்போல் மாற்ற வேண்டி வரும். ஆனால் அதில் எனக்குச் சம்மதமில்லை. என் அப்பா ,  அம்மா இருவரும் விரும்பி வைத்த பெயர்கள். எங்கள் குடும்பத்தில் ஐவர். ஐவரின் பெயர்களையும் அப்பா இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுத்தார். அது அவரது விருப்பம்.  கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி & தேவகி இவைதாம் அப்பெயர்கள். ஆனால் நான் அறிவியலை நம்புபவன். சமயத்தில் ஈடுபாடு கொண்டவனல்லன்.

அன்புடன்,
வ.ந.கிரிதரன்


இவற்றுடன் மேலும் சில வார்த்தைகளைச் சேர்க்க விரும்புகின்றேன். இன்று தமிழில் ஆயிரக்கணக்கில் வடசொற்கள், ஏனைய மொழிச்சொற்கள் கலந்து தமிழாகிவிட்டன. அச்சொற்களையெல்லாம் நாம் தமிழ்ச்சொற்களைப்பாவித்துத்தாம் எழுதுகின்றோம்.  அதனால் தமிழ் அழிந்து விடும் என்று பயம் கொள்ளத்தேவையில்லை. பிறமொழிச் சொற்களைப் பாவித்து எழுதுவதைத் தவிர்க்கலாம். நானும் சிலவேளைகளில் தமிழல்லாத வடமொழிச் சொற்களையும் பழக்கதோசத்தில் பாவிப்பதுண்டு. ஆனால் அவையும் நீண்ட காலமாகத் தமிழில் வழங்கி வருவதால் அவற்றை வழக்கிலுள்ளதை ஏற்றுக்கொள்ளல் என்னும் நோக்கில் ஏற்றுக்கொள்ளலாம் என்பதென் கருத்து. வந்தவற்றை, வழக்கில் நீண்ட காலமாகத் தமிழ் மொழியில் கலந்து தமிழாகிவிட்டவற்றை நீக்கவேண்டிய தேவையில்லை. ஆனால் அதே சமயம் பிறமொழிச் சொற்களைத் தமிழ் உள்வாங்குவதையும் தவிர்க்க முடியாதென்றே கருதுகின்றேன். பல ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் இவ்விதமே பிறமொழிச்சொற்களை உள்வாங்கி நிலைத்து நிற்கின்றது. இனியும் நிலைத்து நிற்கும்,. தற்போதுள்ள தமிழ், நாம் அனைவரும் அறிந்த தமிழ் இத்தகைய பிறமொழிச் சொற்களை உள்வாங்கிய தமிழ்தான்.

இன்னுமொரு விடயம். மதிப்புக்குரிய அருணகிரி அவர்களது பெயர் கூடத் தமிழ்ப்பெயர் அல்ல. அருணன் அருணோதயம் என்னும் வடசொல்லிலிருந்து உருவான சொல். அருணோதயம் வைகறை என்பதற்கான வடசொல். அதுபோல் கிரி என்பதும் வடசொல்லே. மலை என்று அர்த்தப்படும் வடசொல். மறைமலையடிகள் போல் பெயர்களையெல்லாம் தனித்தமிழ்ப்பெயர்களாக மாற்ற வேண்டிய தேவையில்லை. மொழி என்பது மானுடர்களுக்கு ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குரிய கருவி, சாதனம். அவ்வளவே.

"யாதும் ஊரே! யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார். நான் கணியன் பூங்குன்றனார் வழி வந்தவன். எனக்கு எல்லாமொழிகளும் உறவு மொழிகளே. அவற்றை உள்வாங்குவதால் என் மொழி சிறுப்பதில்லை; சிறப்புறவே செய்கின்றது என்பதில் நம்பிக்கையுள்ளவன்.

girinav@gmail.com