மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்துக்கூடாக, சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கலாசாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை உலகளாவியரீதியில் கொண்டாடும் ஒரு கொண்டாட்டமாக இது இருப்பதுடன், பாலின சமத்துவத்துவத்துக்கான செயல்பாடுகளுக்குரிய ஓர் அறைகூவலாகவும் அமைந்திருக்கிறது.

முதலாவது மகளிர் தினம், மார்ச் 19, 1911 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிற்சிலாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டிருந்தது. அன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்களும் ஆண்களும் தங்கள் ஆதரவைக் காட்டுவதற்காக பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். பின்னர், மார்ச் 8ம் திகதியைச் சர்வதேச மகளிர் தினமாக, 1975 இல் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. தற்போது கியூபா, உக்ரேயன், ரஷ்யா, போன்ற 20 நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கும் உரிமை, கற்கும் உரிமை என்பன உள்ளடங்கலான பெண்களின் உரிமைகளுக்காக பெண்ணியவாதிகள் பலர் போராடிய போராட்டங்களின் விளைவாகவே பெண்கள் இன்று ஆண்களின் தங்கியிராமல் தங்களின் காலில் நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் பெண்கள் செல்லவேண்டிய தூரமும், கடக்கவேண்டிய தடைகளும் இன்னும் அதிகமாகவே உள்ளன. அதற்கான மாற்றங்களை உலகளாவியரீதியில் தூண்டுவதும், சமத்துவக் கருத்துக்களைப் பரவலாகத் தெரியப்படுத்துவதும், பாலின சமத்துவத்திற்கான அவசரத் தேவையை முன்னிலைப்படுத்துவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதின் இன்னுமொரு முக்கிய நோக்கமாகும்.

இவ்வருடச் சர்வதேச மகளிர் தினத்துக்கான கருப்பொருள் 'Accelerate Action/ செயலைத் துரிதப்படுத்தல்' ஆகும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தலைமைத்துவத்தில் பெண்களின் முன்னேற்றத்தைத் தூண்டுவதற்கான உத்திகளில் இது கவனம் செலுத்துகிறது. அமைப்புரீதியான தடைகளை அகற்றல், வகைமாதிரிகளைச் சவாலுக்கு உள்ளாக்கல், பாலின சமத்துவத்தை நோக்கி விரைவாக முன்னேறல் ஆகியவற்றுக்கான அவசரத்தை, ‘செயலைத் துரிதப்படுத்தல்’ வலியுறுத்துகிறது. உலகம்பூராவுமுள்ள பெண்களுக்கு உறுதியான, நீடித்த நல்விளைவுகளை வழங்கக்கூடிய உத்தி முறைகளை விரிவுபடுத்துதல், வளங்களை ஒதுக்குதல் மற்றும் முன்முயற்சிகளை ஆதரித்தல் ஆகியவற்றுக்கான உலகளாவிய அழைப்பாக இது உள்ளது. அதேவேளையில் Strength in every story என்பதே இந்த வருடத்துக்குரிய எங்கள் நாட்டின் கருப்பொருளாகும். இது, ஒவ்வொரு பெண்ணினதும் வாழ்க்கைக் கதையும் மீண்டெழும் தன்மைக்கான, தைரியத்துக்கான, மனவுறுதிக்கான சாட்சியமாக இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது.

தொடர்ந்து கற்பதாக இருந்தாலென்ன, தொழில் ஒன்றைத் தொடங்குவதாக இருந்தாலென்ன, அல்லது வாழ்க்கைப் பாதையை மாற்றுவதாக இருந்தாலென்ன, அது தொடர்பான முடிவுகளை அவர்களே எடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அவ்வகையில் மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கான தெரிவுகளைச் செய்வதற்கான சுதந்திரமுள்ள ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பானது எனலாம். இன்றைய நாளில் இதுவரை பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றங்களைப் பற்றிச் சிந்திப்பதுடன், இன்னும் நிலைத்திருக்கும் தடைகளை மேவுவதற்கான வழிகளை ஆராய்வதும் முக்கியமாகும்.

பொதுவெளியில் மட்டுமன்றி வீட்டுக்குள்ளும் பெண் இன்னும் இரண்டாம் தரப் பிரஜையாகவே பெரும்பாலான இடங்களில் நடத்தப்படுகிறாள். அதிகாரத்தினால் மட்டுமன்றி, அன்பென்ற பெயரினாலும் தன்னம்பிக்கை அற்றவளாகப் பெண் வளர்க்கப்படுவதுண்டு. பெண் பூப் போன்றவள், அவளால் தனித்து இயங்க முடியாது, அவள் பாதுகாக்கப் படவேண்டியவள் என நம்பப்படுதல் பெண்ணின் சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டை போடுகின்றது. மேலும், பாலியல் வன்புணர்வு நிகழும் நேரங்களில் அது பெண்ணின் தவறாகவே பார்க்கப்படுகிறது. அவளின் உடை அல்லது அவளின் தோற்றம்தான் அதற்குக் காரணமென விமர்சிக்கப்படுகிறது. போதாதற்கு வன்புணர்வு நடந்தால் மானம் போய்விட்டதென அந்தப் பெண் தற்கொலை செய்வதுபோல எங்கள் சமூகத்தில் கதைகள் எழுதப்படுகின்றன. அவ்வாறே பெண்கள் கலாசாரத்தின் காவிகளாக இருக்கவேண்டும் என்றும் பெண்களின் செய்கைகளால்தான் குடும்பங்களில் பிரச்சினைகள் வருகின்றன என்றும் நம்பப்படுகிறது.

அதனால் அடிமைத்தனத்தைப் பொறுத்துக்கொள்ளாத, தனக்கென கருத்துத்துடைய, உறவிலிருந்து இன்னொரு உறவுக்கு மாறுகின்ற, தன் விருப்பப்படி ஆடை அணிகின்ற பெண்களை இழிவான பெயர்களிட்டு அழைக்கவும், அவமதிக்கவும் சமூகம் தயாராக இருக்கின்றது. பெண்களும் சிறுமிகளும் தங்களின் எதிர்காலத்தின்மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்குத் தங்களின் உடல்கள்மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது அவசியமாகும். மேலும், பெண் முன்னுக்கு வருவதை சிலரால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதனால் அப்படியாக முன்னுக்கு வரும் பெண்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதும் நிகழ்கிறது.

இத்தனை தடைகளையும் மேவிவாழ்ந்துகொண்டிருக்கும் உங்களின் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் இந்த நாளில் நீங்களும் கொண்டாடுங்கள்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.