பூஞ்சோலைகள் மனதுக்கு ரம்மியமும் மகிழ்வும் தருவதை அனைவரும் அனுபவத்தில் உணர்ந்திருப்போம். புறத்தில் இருக்கும் சோலைகளை விட அகம் என்ற மனதினையே நறுமணம் கமழும் சோலையாக்கி விட்டால் வாழ்வு எத்தகைய இன்ப நுகர்வைத் தரும் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?  

நாம் எண்ணங்களால் கட்டமைக்கப்படுகிறோம். எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம். நம் எண்ணம் தூய்மையடையும் போதுதான் மகிழ்ச்சியும் நிழலைப் போல விலகாமல் நம்மைத் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதும் ஞானிகள்,  அறிஞர்கள் கூற்றாக நாம் அறிந்ததுதான்.

"மெய்யறிவு நற்பண்பினால் தூய்மையடைகிறது. நற்பண்பு மெய்யறிவினால் தூய்மைபெறுகிறது. எப்போதும் ஒன்றிருக்கும் இடத்தில் மற்றதும் இருக்கும். பண்புடையவன் மெய்யறிவு உள்ளவனாக இருக்கின்றான். மெய்யறிவுடையவன் பண்புடையவனாக இருக்கின்றான். இரண்டும் சேர்ந்திருப்பது உலகிலேயே மிக மேன்மையானது". - கெளதம புத்தர் பொன்மொழி

மெய்யறிவும் நற்பண்புகளும் அனைத்து மானுடர்களுக்கும் தானாக அமைந்து , அகம் என்பது அழகான சோலையாக  உருவாகி விடாது. அதற்கான சில வழிமுறைகள் பயிற்சிகள் வீட்டில் தொடங்கி நாடாளாவிய, தேசமளாவிய கல்வி முறைமைகளில் இருந்தும் பயிற்சிகளில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும். இதனையே இலக்காகக் கொண்ட அறக்கடப்பாட்டுடன், மனச்சோலை என்னும் தலைப்பில் ஆழமான விரிவான நூல் ஒன்றினைப் படைத்திருக்கிறார் திருமதி.பவானி சற்குணசெல்வம்.

உளச்சீர்மையுடன் தலைமைத்துவ பண்புகளையும் ஏனைய அருங்குணங்களையும் உருவாக்கிக் கொள்வதற்கான ஒரு வழிகாட்டியாக மனச்சோலை நூலினைக் கருதலாம்.

கடந்தகாலங்களில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றங்கள் அதிரவும் அதேசமயம் சிந்திக்கவும் வைப்பதாகக் கூறும் இவர் சமூகத்தினர் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு கையேடாக, பல தேடல்கள் தகவல்களை உள்ளடக்கியதாக  இந்நூலை உருவாக்கி உள்ளார்.

இலங்கை கல்வி அமைச்சின் அங்கீகாரம் பெற்ற இந்நூல் பல பாடசாலைகளிலும் நலன்புரி நிலையங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அறிதலுக்குரிய நூலாகையால், அழகியல் ரசனைகள், ஜனரஞ்சக எழுத்துகள் இங்கு இல்லை. ஆழ்ந்த வாசிப்பினை மட்டுமே வேண்டும் நூல். பூபாலசிங்கம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் பற்றிய எனது  வாசிப்பு அனுபவத்தில் , நூலின் முக்கியமான விடயங்கள் நூலாசிரியரின் வசனங்களைக் கொண்டே கட்டமைக்கப்பட்டு உள்ளன.

எமது சமுதாயத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை மையமாக கொண்டு , இருபத்தாறு கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தகம் இது. இங்கு பேசப்படும் விடயங்களாக குழந்தைப் பருவம் முதல் இன்றைய இளையோர் அடங்கலாக பல்வேறுபட்ட வயதினரின் மனநலம் பேணுதல், பெண்ணியம், பாலியல் கல்வியின் அவசியம், சமூகப் பிரச்சனைகள் என பரந்து விரிந்து செல்வதை ஆசிரியர் உரையில் பவானி குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் உளவளத்துடன் மகிழ்வாக வாழ்வதற்கு அவசியமான பல தகவல்கள் நிச்சயமாக சமூகநலன் வேண்டியவையாகவும் அமைந்திருக்கின்றன.

இந்நூலின் ஆசிரியர்  இலங்கையில் பட்டம் பெற்ற விவசாயபீட கலைமாணி. விரிவுரையாளர். புலம்பெயர்ந்து நெதர்லாந்து தேசம் சென்ற பின் டச்சு மொழியிலும் புலமை பெற்றிருக்கிறார். அங்கு உளவியல் மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றதுடன் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

புலம்பெயர்ந்த நாட்டில் தமிழ் ஆசிரியராக பணிசெய்ததுடன் புலம்பெயர்ந்த சிறுவரின் தமிழ்மொழி அறிவு விருத்தியுடன், நாடகம், நாட்டியம், இசை வளர்ச்சியிலும் அயராத ஊக்கம் கொண்டவர். சிறுவர் நூல்களையும், 'சில கணங்கள் ' எனும் இளையோருக்கான கவிதை நூலினையும் எழுதியுள்ளார். பைந்தமிழ்ச்சாரல் என்னும் இணையத்தளத்தில் பல சிறப்பான இலக்கிய நிகழ்வுகளையும் நடாத்தி வருகிறார்.

        - நூலாசிரியர் பவானி சற்குணசெல்வம் -

மனச்சோலை என்னும் இந்நூலின் முக்கியமான தலைப்பே நூலுக்கான பெறுமதியை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன.

*குழந்தை வளர்ப்பில் ஆரம்பித்து கல்வி மற்றும் தாய்மொழிக் கல்வியின் அவசியங்களையும் விளக்கி, சிறுவர் முதல் பதின்மம் வரையிலான குமரப்பருவங்களில் தோன்றும் மன எழுச்சிகளை அதன் குணங்குறிகளை அடையாளம் கண்டு வழிநடத்தல் ;

* மன அழுத்தமில்லாத மனநலம் மிகுந்த வாழ்க்கைக்கான வழிவகைகள் , உளவியல் சார்ந்த அவதானக் குறை மிகையியக்கம் (ADHD) , நெருக்கீட்டுக்கு பிற்பட்ட மனவடு நோய் (PTSS) பற்றிய விபரங்கள் ;

* இன்றைய சந்ததியினரின் முக்கிய பிரச்சனை ஆகவுள்ள போதைப்பொருள் பாவனை ;

* ஆளுமைக் கோளாறு பற்றிய விரிவான விளக்ங்கள் ;

*இவற்றின் காரணமாக அதிகரித்திருக்கும் தற்கொலைக்கான காரணங்கள் சிகிச்சை வழிகாட்டல்கள் பற்றி ஆழமான தகவல்கள் ;

*அனைவருக்கும் பொதுவான மறதி நோய் பற்றிய தகவல்கள்;

* பெண்களுக்கான பொதுவான பிரச்சனைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் இதன் காரணமான மன அழுத்தங்கள் பற்றிய விளக்கங்கள் ;

*அதிக உணர்தலையும் புரிதலையும் இன்று வேண்டி நிற்கும் மாற்றுப் பாலினத்தவர் பற்றிய சமூக விழிப்புணர்வு பற்றியும் ;

மிக ஆழமான தகவல்கள் சார்ந்த கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது.

எனது வாசிப்பு அனுபவத்தின் பகுதி 2 இல் மாற்றுப் பாலினத்தவர் பற்றியும், பெண்ணியம் பற்றி ஆண்களும் பேச வேண்டும் என்பது பற்றியும் நூலில் எழுதப்பட்டுள்ள  கருத்துகள் தொடரும்.

சமூக வலைத்தளங்களின் வீரியவேர்கள் உலகெங்கும் பரந்து இளையோரையும் இளைஞர்களையும் தன்வசம் ஈர்த்துக் கொள்வதால் பலரும் தடம்மாறிச் செல்லும் இந்நாட்களில் மனச்சோலை போன்ற விழிப்புணர்வு தரும் நூல்கள் அனைத்து வயதினரினதும் , குறிப்பாக தாயகத்தில் வாழ்வோருக்குமான வாசிப்புக்கு உரியது.

***** ***** ***** ***** *****

இவரது தகவல்களின் படி,

 உலகம் முழுவதும் 15 முதல் 19 வயது கொண்ட 1.6 கோடி பெண்கள் வளரிளம் பருவத்திலேயே கருத்தரிப்பதாக சர்வதேச புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இலங்கையில் நான்கு பெண்களுக்கு ஒருவர் தமது 18 வயதுக்கு முதலே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். இதற்கு முதன்மைக் காரணமாக அமைவது பாலியல் பற்றிய தெளிவான புரிதலின்மையும் கல்வியின்மையுமே ஆகும் என்பதை தெளிவாக வலியுறுத்தி உள்ளார் .

இவற்றைத் தடுக்குமுகமாக பாடசாலையில் பாலியல் கல்விக்கான அவசியம் பற்றி விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

இதன் மூலம் பாலியல் உறுப்புகள், பாலியல் ஆரோக்கியம், நடத்தைகள் தொற்றுகள் பற்றி தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்ள முடிகிறது.

தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவினைப் பெற்றுக் கொள்வதற்காகவும் , சக மாணவர்களை அறிந்து கொள்வதற்கும் , குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகங்கள் தடுக்கப்படவும் பதின்ம வயதில் அறியாமையின் நிமித்தம் தாய்மை அடைதலைத் தவிர்ப்பதற்கும், முறைசாரா பாலியல் அனுபவம் பெறுவதைத் தடுக்கும் முகமாகவும், குழந்தைகள் பொறுப்புள்ள வளர்ந்தவர்களாக மாற்றம் பெற வைப்பதற்கும் இக்கல்வி அவசியமானது என்பதை உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்துகிறது.

இதனை sex education என்று கூறுவதை விட life skill education என்று கூறுவதே அதிக பொருத்தமானது .

பாடசாலைகளில் பாலியல் கல்வியின் அவசியம் பற்றி பெற்றோரிடம் முரணான கருத்துகள் பல இருக்கின்றன. ஆனால் சமூக ஊடகங்களின் அனாவசியமான பாலியல் தகவல்களை திருட்டுத்தனமாக அறிவதை விட பாடசாலைகளில் கற்பிப்பதே சிறந்தது எனவும் ஆசிரியர் அறியத் தருகிறார்.

பெண்கள் மீதான வன்முறை, பாலியல் சீண்டல்கள் மலிந்திருக்கும் இக்காலகட்டத்தில் ஒழுக்கமுள்ள சமுதாயம் ஒன்றினை உருவாக்கவும் பாலியல் கல்வி அவசியமானது.

இவ்வாறான வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள் அவற்றை வெளிப்படுத்தும் போது, களங்கமும் பழிதீர்க்கும் நடவடிக்கைகளும் அப்பெண்கள் மீதே ஏவி விடப்படும் அவலமும் உண்டு.

'மீ டூ' Mee too முதலான இயக்கங்களின் பின் சில பெண்கள் இவற்றை வெளிப்படுத்தவும் தட்டிக் கேட்கவும் துணிவு கொண்டாலும், உலகெங்கும் நாளாந்தம் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

சிக்கல்கள் நிறைந்த குமரப் பருவம் ஆரம்பிப்பதற்கு முதலே மேலை நாடுகளில் இப்பருவ வயது உடையவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகளில் , தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க சாதனங்களை பயன்படுத்தும்படி கூறப்பட்டுள்ளது.

பாலியல் கல்வி ஒழுங்காக  நடைமுறைப்படுத்தப்படாத இலங்கையில் தினமும் சிறுமியரும் பெண்களும் வண்புணர்வுக்கு உட்படுகின்றனர்.

பிள்ளைகளுக்கு ஏற்படும் சகல துஷ்பிரயோகங்களுக்கும்  பெற்றோரின் அறியாமையும் அக்கறையின்மையும் முழுமையான காரணங்களாகும் . இத்துடன் இப்பருவம் பாடசாலை பருவம் என்பதால் ஆசிரியர்கள், மாணவர்களின்  ஒழுக்கம்  மற்றும் அறப்பண்புகளை வளர்ப்பதில் அதிக  அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

 போதைப்பொருள் பாவனையும் ஆணாதிக்க சிந்தனைகளும் இக்குற்றங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக இருப்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.

விழிப்புணர்வு நடைமுறைகளின் மூலம் இப்போதைப் பொருள் பாவனையானது மேற்குலக நாடுகளில் குறைந்து வரும் அதேசமயம் ஆசிய நாடுகளில் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. வருமானம் பெறும் நோக்கில் பெரும்புள்ளிகள் இதற்கு உடந்தையாக இருப்பதும் இதற்குக் காரணமாகிறது.

மேலும் உலகளாவிய ரீதியில் மரணத்திற்குரிய பத்தாவது காரணியாக தற்கொலைகள் உள்ளன என்ற அதிர்ச்சி மிகும் தகவலை ஆசிரியர்  அறியத்தருகிறார்.

எதிர்கொண்டு, புறந்தள்ளக் கூடிய அற்பகாரணங்களுக்காக மிக இளம் வயதிலேயே மனச்சிதைவு மன அழுத்தம் முதலான உளப்பிரச்சனைகளால் பாதிக்கப்படும் இன்றைய இளையோரின் நிலையை சுட்டிக் காட்டுவதுடன் , இவை எவ்வாறு தற்கொலை முதலான அதீத முடிவுகளின் காரணமாக அமைகின்றன என்பது பற்றியும் கூறுகிறார்.

மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் 80% பேருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ மன அழுத்தம் காரணமாக ஏற்படும் நோய்கள் அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

அத்துடன் உலகிலுள்ள எல்லா நோய்களையும் வரிசைப்படுத்தும் போது மனநலப் பிரச்சனைகள் இரண்டாவது பொது நோயாகவும் இனங் காணப் பட்டுள்ளது.

தமது உணர்வுகளை வெளிப்படுத்தாத அல்லது வெளிப்படுத்த இடம் கொடுக்காத சமூகக் கட்டமைப்புகளால், ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்ளுவதாக 2016 இன் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

மன அழுத்தம் என்பது உடல் உள ரீதியான விரும்பத்தகாத உணர்வுகள் ஆகும் .

மனக்கோளாறு உண்டாவதற்கான காரணங்கள் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாத போதிலும், பல உயிரியல் உளவியல் சமூகவியல் காரணிகளின் ஒன்று கூடுதலால் மனக்கோளாறு ஏற்படுகிறது என்பதுதான் தற்போதுள்ள கருத்து. மரபணுக்களும் வெவ்வேறு மனக்கோளாறுகளுக்கு இட்டுச் செல்லலாம்.

இந் நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாமை குற்ற உணர்வு வெறுமையாக உணர்வது தன்னம்பிக்கை இழப்பது முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது ஞாபக மறதி அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை தற்கொலை எண்ணம் ஆகியன காணப்படுகின்றன.

சிந்தனை , கண்ணோட்டம் , உணர்ச்சி , செயலாற்றல் , நினைவாற்றல் , பண்பியல் தொகுப்பு முதலியவற்றில் ஏற்படும் குறைபாடாகவே தோன்றும். ஆரம்பத்திலேயே கண்டறிதல் முறையான சிகிச்சைக்கு வழிகோலும். மனநோயின் வெளிப்பாடுகள் பற்றி விரிவான  தெளிவான விளக்கங்களை ஆசிரியர் தந்துள்ளார்.

 எத்தகைய பதட்டத்தையும் தனித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு . இசை கேளுங்கள் அல்லது வாய் விட்டு பாடுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள். திட்டமிடுவதன் மூலம் மன இறுக்கம் மன அழுத்தம் ஆகியவற்றைத்  தடுத்துக் கொள்ளலாம்

குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சமநிலை, நேர முகாமைத்துவம் , மூச்சுப் பயிற்சி யோகா தியானம் முதலானவை வாழ்வை நெறிப்படுத்த அவசியமானவை.

ஒருவர் வெற்றிகரமான ஒரு ஆளாகவும் வெற்றிகரமான சமூகத்தை நோக்கி செல்வதற்கும்,  நெருக்கீட்டு முகாமைத்துவம் மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

கொடூரமான அல்லது ஆபத்தான உளநெருக்கீடுகளுக்குப் பின் சிலருக்கு மனவடு நோய் (PTSS)உண்டாகிறது. நூலின் 12ம் பகுதியில் (P88 ) மிக விரிவான தகவல்கள் சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளன.

******      *****     *****     *****     *****    

ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கான பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. கவனமுள்ள பெற்றோரால் ( mindful parentig) அன்போடும் ஒழுக்கத்தோடும் வளர்க்கப்படும் குழந்தைகள் சமூகத்திற்கான எதிர்காலத் தூண்களாக உருவாகுவார்கள். இதற்கு பிள்ளைகளுடன் உணர்வுபூர்வமான உளப்பூர்வமாக கலந்துரையாடல் அவசியம்.

பெற்றோரியத்தில் கவனம் கொள்ள வேண்டிய சிந்தனைகளாக, பெற்றோர் தாமே முன்னுதாரணமாக வாழ்தல், வன்முறைகள் அற்ற வளர்ப்பு ,வழிதவறாமல் விழிப்புணர்வுடன் பாதுகாத்தல் என்பன அடங்கும்.

ஆண்பெண் பேதமின்றி சமமான வளர்ப்பு முறை , பெண்கள் மீதான வன்முறை தவிர்ப்பு அதற்கான பயிற்சிகள் என்பன இளவயதிலேயே வீட்டிலும் பின் பாடசாலையிலும் வளர்த்தெடுக்கப்பட்டால் , பின்னாளில் ஆணாதிக்கம் என்ற போக்கிற்கோ வேறு எந்த அத்துமீறல்களுக்கோ பாலியல் வன்முறைகளுக்கோ இடமிருக்காது.

வீட்டைப் பாதுகாப்பது சமையற்கலை முதலான வேலைகளைப் பகிர்வது என சகல விடயங்களையும் குடும்பமாக சேர்ந்து செய்வதும்,  உணவருந்தும் நேரங்களில் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் சிறப்பான நடைமுறை. இவற்றை நேரமேலாண்மையுடன் செய்தலும் அவசியம்.
 
******      *****     *****     *****     *****    

பெற்றோரியம் போலவே  கல்விக் கூடங்களின் பங்களிப்பும் மிகமிக அவசியமானது.

கல்வி கற்பிக்கப்படும் இடமென்பது விதைகளைப் பதப்படுத்தும் இடம் என்பது மிகப்பொருத்தமான கூற்று. சமுதாயத்தின் சமூக அரசியல் பொருளாதார தளங்களுக்கு அடிப்படையாக அமைவது கல்வியும் பண்பாடும் என்பதோடு சமூகக் கட்டமைப்பில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எனும் முக்கோணக் கோட்பாட்டு அரசியலை நிலைநிறுத்தும் பொறுப்பும் கல்விக்கானதே.

மனித ஆற்றலை வளமைப்படுத்தவும் படைப்பாற்றலை அதிகப்படுத்தவும் தாய்மொழிக் கல்வியினால் மட்டுமே முடியும் என்ற கூற்றினை உறுதிப்படுத்தும் அதேசமயம் பன்மொழிக் கல்வியின் அவசியமும் இங்கு வலியுறுத்தப் படுகிறது.

பன்மொழிக் கல்வி என்பது தொடக்க கல்வியை தாய் மொழியில் தொடங்கி மெதுவாக தேசிய மற்றும் சர்வதேச மொழிக் கல்விக்கு மாறுவதாகும்.

தாய்மொழி கல்விதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கிறது . எந்த மொழியைக் கற்றாலும் எத்தனை மொழிகளை கேட்டாலும் ஒருவருக்கு சிந்தனைகள் உருவெடுப்பது தாய்மொழியில்தான். தாய்மொழிக்  கல்வி கற்பதனால் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி தவறான கருத்தாகும் . ஏனெனில் தாய்மொழி கல்வி வாழ்வினை செம்மைப்படுத்துகிறது என்ற கூற்றும் இங்கு வலியுறுத்தப் படுகிறது.

"ஒவ்வொரு மனிதனும் தலைவன்தான். யாரும் பட்டம் சூட்டத் தேவையில்லை. தலைவனுக்கு உரிய குணங்களுடன் செயல்பட்டால் கிரீடம் தானாக வரும்" என்பது பிரபல எழுத்தாளரும் உளவளவியலாளரும் ஆன ராபின் சர்மா அவர்களின் கூற்று.

இவ்வாறான ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் மனநலம் பற்றிய சீரிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும் ஒரு வழிகாட்டியாக இந்நூலைக் கொள்ளலாம்.
 
[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.