
1
“வீட்டை விட்டு அகலும் பேய், வீட்டு சட்டியையும் உடைக்காமல் அகலாது” என்பது சிங்களக் கிராமியப் பழமொழி. இதனையே உக்ரைனிய-ஈரானிய போரில் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. சிறப்பாக, ஈரானிய போரில் அமெரிக்காவின், உலக ஆதிக்கம் இப்படியான ஒரு முடிவை எட்டித்தான் முற்று பெறும் என்றால், அது, அப்படியே விதி வசம் பூண்டதாய் இருக்கட்டும்.
ஈரானின் மீது, இரண்டாவது தடவையாக, இன்று கோர தாக்குதல்களை தொடங்கி உள்ள அமெரிக்கா, ஈரானில், கொமெய்னியின், இறுதி கிரியைகளுக்காக நின்றிருந்த 200 லட்சம் மக்களின் கோபங்களை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. பெண்கள், சவ ஊர்வலத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் பொறுத்து, ஊடகங்கள், ட்ரம்பிடம் வினவிய போது, அது போலி செய்தி வகைப்பட்டது (Fake News)) என்று கூறிவிட்டார் மனிதர். இதனுடன் நிறுத்தாமல், தனது முதலாவது தாக்குதலை விட, தனது இரண்டாம் தாக்குதலை, தீவிரப்படுத்தினார் ட்ரம்ப்.
அவரது, வழமையான “ஈரானிய நாகரிகத்தை கற்காலத்துக்கு அனுப்பி வைப்பேன்” என்ற கூற்று உண்மையாகி விடுமோ என்று பலரும் பயந்திருந்த போது, ஈரானிய பதில் தாக்குதல்களும் அனேகமாக துவங்கி விட்டன. தொடர்ந்து, போர் நிறுத்தத்தில் இருந்து தான் வாபஸ் பெறுவதாகவும் இன்று ஈரான் அறிவித்து முடித்து விட்டது.
பஹ்ரேன், குவைத், கட்டார், சவுதி ஆகிய நாடுகளின், அமெரிக்க தளங்களின் மீது, அதி உக்கிரமான தாக்குதல்களை நடத்திய ஈரான், இவ்வகையில் புதிதாய் இன்று ஜோர்டனையும் (பிந்திய செய்திகளின் பிரகாரம், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது) உள்ளடக்கி கொண்டுள்ளது.
இத்தாக்குதல்களின் பின்னணியில், ரஷ்யா-சீனாவின், அனுசரனையும் உதவியும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. விண்வெளி செய்மதிகளின் உதவி மாத்திரமல்லாமல், ரஷ்யா ரகசியமாக, ஏவுகணைகளை, ஈரானுக்கு வழங்கி உள்ளமை இன்று வெளிவரும் செய்தியாகின்றது. ஆகவே, போர் எங்கு சென்று முடியும் - அது சிரியாவிலா அல்லது ரஷ்யாவிலா அல்லது சீனத்திலா என்பதெல்லாம் தெரியாத புதிராகவே இருக்கின்றது.
2
சீன-ரஷ்யாவின் இவ் உறுதுணை, கொமெய்னியின் இறுதி கிரியைகளின் போது துலாபாரமாக வெளிக்காட்டப்பட்ட ஒன்றானது. ரஷ்யா தனது முன்னை நாள் ஜனாதிபதியையே, புட்டினின் விசேட தூதுவராக ஈரானுக்கு அனுப்பி வைத்தது போல், சீனாவும் தனது உதவி ஜனாதிபதியை இறுதி கிரியைகளில் பங்கேற்கச் செய்து அமர்க்களப்படுத்தி விட்டது.
மேற்கத்தைய நாடுகள், சிறப்பாக, ஐரோப்பாவும் அமெரிக்காவும் கூட்டாக இவ் இறுதி கிரியை, பகிஷ்கரித்த போதும் உலக நாடுகளில், நூற்றுக்கு அதிகமானவை, கலந்து கொண்டமை மாறி வரும் இன்றைய உலக நடப்புகளை எமக்கு தெளிவுற காட்டுவதாக இருந்தது.
“போர் நிறுத்தம் முடிந்து விட்டது” என அறிவித்து ஈரானின் 80 நிலையங்களின் மீது தாக்குதலை தொடங்கிய ட்ரம்புக்கு, பதிலடியாக ஈரானும் 85 அமெரிக்க நிலைகளின் மீது தாக்குதல்களை தொடுத்தததாக அறிவித்தது. (08.07.2026). இருந்தும், ரஷ்யா-சீனா ஆகிய நாடுகளின், இவ் இரண்டாம் தாக்குதல்கள் தொடர்பான, நகர்வுகள் கருத்தை கவருவதாக இருக்கின்றன.
3
ஈரானிய போரில், ரஷ்யாவை ஈடுபடாது, தள்ளி வைப்பதே, ட்ரம்பின் தலையாய அரசியல் சாணக்கியமாக இருந்தது. எனவே, ரஷ்யாவுடன் நட்பு பூணுவது போல, புட்டினுடன் தனது நடனத்தை “காட்ட” ட்ரம்ப் முயற்சி செய்தார். புட்டினும் இந்நடனத்துக்கு இசைந்தாற்போல், தானும் நடனம் ஆடி ஆடியே, உக்ரைனின் மீது, தனது தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கி விட்டார். உக்ரைன் மீது தான் கொண்டிருந்த “சிறப்பு நடவடிக்கை” இப்போது போராக மாறி விட்டது என ரஷ்யா அறிவித்தது. (15.07.2026).
ஈரானிய போர் நிலவரங்களும், உக்ரைனிய போர் நிலவரங்களும், கடுமையாய் மோசமடைந்த ஒரு நிலையில், ட்ரம்ப் தனது “நடன நிகழ்ச்சியை” தள்ளி வைத்து விட்டு, G-7, மாநாட்டில் பங்கேற்க நேர்ந்தது. இது, மேற்கு, தனது பிளான் - B யை நாடி உள்ளதை காட்டுவதாய் அமைகின்றது. ஆனால், புட்டின், வழமைபோல், சிரித்த முகத்துடன், காட்சி தந்து, அலாஸ்கா பேச்சுவார்த்தையை நினைவுபடுத்தினார்.
“அது, உடன்பாடு அல்ல. வெறும் பிரேரணையாகும்” என ரூபியோ அறிக்கை விட்ட போதும், புட்டின், தொடர்ந்து சிரித்துக்கொண்டே, ‘அப்படியா’ என்று கேட்டுக்கொண்டிருந்தார் மனிதர்.
அதாவது, ஐரோப்பிய-அமெரிக்க கூட்டு அம்பலமானதும், தனது நடனம் பிசு பிசுத்துப் போனதும் தெரிந்த நிலையில், அமெரிக்காவால், ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட, 5000க்கும் அதிகமான தாக்குதல்கள், ஐரோப்பிய தளங்களில் இருந்து புறப்பட்ட, அமெரிக்க விமானங்களினாலேயே தொடுக்கப்பட்டது என்ற உண்மையை நேட்டோ தலைமை கக்கி விட்டது. ஆனால், அமெரிக்காவின் முதலாவது விமானம், ஐரோப்பிய தளத்தில் இருந்து பறக்க தொடங்கியதுமே, இது பொறுத்து, புட்டின் முற்றும் அறிந்த ஒருவராகவே இருந்திருப்பார் என நம்ப இடமுண்டு. ஆகவே, இச்சூழ்நிலையில், தனது பிளான் Bயும் தோல்வியடைய, பிளான் C யை களமிறக்க ட்ரம்ப் இன்று துணிந்துள்ளார்.
4
பிளான் C யின் படி, அலாஸ்கா நடனத்தின் பின், G-7 மாநாட்டின் அம்பலமாக்கலும் நடந்தேறிய பின், வெட்கமற்று, ட்ரம்ப், புட்டினை அழைத்து, ஒன்றரை மணி நேரத்திற்கு அதிகமாக உரையாடி உள்ளார். (05.07.2026). அமெரிக்காவின் 250வது ஜனன தினத்திற்கு, புன்முறுவலுடன் வாழ்த்து தெரிவித்த புட்டின், ட்ரம்பின், ஈரான் மீதான, இரண்டாவது தாக்குதலுக்கான தயாரிப்பே, இப்புதிய தொலைபேசி அழைப்பு என்று தெரிந்தே இருப்பார் என நம்பலாம்.
ஆறாவது நாளாக,இன்று தொடரும் அமெரிக்க-ஈரானிய போரில், சீன-ரஷ்யாவின் பங்குபற்றுகை ஆழமானதாக தென்படுவதாய் தெரிகிறது. (17.07.2026). தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (DF-17) ஈரானுக்கு வழங்குவதில் உள்ள தடங்கல் நீக்கப்படலாம் என சீனா, சூசகமாக தெரிவிக்கும் வகையில் (நினைவூட்டும் வகையில்) இவ் ஏவுகணையை சம்பந்தமான செய்திகளையும் அதற்கான காட்சியையும் சீனா ஊடகங்களில் புதிதாக வெளியிடப்பட்டது. (07.07.2026).
இது தவிர சீனம், “மத்திய கிழக்கு நிலவரமானது, கட்டுக்கடங்காமல், கட்டுப்படுத்த முடியாது வெடிக்கும் சூழ்நிலையை கொண்டது” என்ற கடுமை தொணியில் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டது. (08.07.2026).
மறுபுறத்தில், ரஷ்யா தனது DOOMSDAY விமானத்தை (TU-214 PU) ஈரானில் தரையிறக்கியது. (13.07.2026). மேற்படி விமானமானது அனைத்து நவீன முன்னேற்றங்களுடன், செய்மதி தொடர்பாடல்களுடன், ராணுவ தலைமைகள், மிக நெருக்கடி மிகுந்த காலங்களில் மாத்திரம் பிரச்சினையற்று பறப்பதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது போக, ரஷ்யா தனது அணு ஆயுதங்கள், உடனடி, தயார்நிலையில் தற்போது உள்ளதாக அறிவித்துள்ளது. (16.07.2026). இவை அனைத்தும் ரஷ்யாவுக்கும் ஈரானுக்குமிடையிலான உறவு, வெறுமனே மேலெழுந்த வாரியானது அல்ல – ஆனால் மிக மிக ஆழமானது. நெருக்கடி மிக்க காலங்களில் இது காத்திரமாக வெளிப்பட தயங்காது என்பதனை எடுத்துரைக்கும் நிகழ்வுகளாகவும் இருக்கின்றது. (நாகசாகியின் போது, ஜப்பானிடம் இத்தகைய வலிமை மிகுந்த துணை இருக்கவில்லை என்பது குறிக்கத்தக்கது).
ஆக, இது, ட்ரம்பின் இரண்டாவது ஈரானிய தாக்குதல்களை தொடர்ந்து, முக்கியமாக, ஈரானை “கற்காலத்துக்கு அனுப்பி வைக்கும்” முழக்கங்களை (அணு ஆயுத பாவிப்பு) அடுத்து, சீன-ரஷ்ய அனுசரணையால் இடம்பெறுகிறது என்பது குறிக்கத்தக்கது. இச்சூழ்நிலையில், இஸ்ரேலின் நெதன்யாகுவின் நிலை, ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என நம்பலாம்.
ட்ரம்பின் 38 ட்ரில்லியன் டாலர் உள்நாட்டு கடன்களும், உள்நாட்டு கலவரங்களும், அமெரிக்க கம்பனிகளின் பேராசையும் உறுதுணை புரிய, ஹோர்மூஸ் நீரிணையை பலவந்தமாக கபளீகரம் செய்ய துடிக்கும் ட்ரம்பின் இன்றைய செய்கைகள், இன்று புதிய உலகத்தால் தட்டி கேட்கப்படுவது வரலாறாகின்றது. மறுபுறத்தில், இது, புதிய உலகத்தின் முகத்தையும், மத்திய கிழக்கின் புதிய முகத்தையும் (இஸ்ரேல் பலவீனப்படுத்தப்பட்ட) உருவாக்குவதாய் இருக்கின்றது. இவை அனைத்தையும் கூட்டிப் பார்க்கும் போது இன்றைய சவ அடக்கம் யாருக்கானது –கொமெய்னிக்கா அல்லது ட்ரம்புக்கா என்பதனை இன்று சரியாக கூற முடியாமல் இருக்கின்றது.
ஆனால், ஆதிக்கத்தை ருசி கண்டு விட்ட அமெரிக்கா, இலகுவில் விட்டு தர போவதில்லை. சிங்கள பழமொழி கூறுவது போல, “சட்டியை உடைக்காமல் பேய் வெளியேறப் போவதில்லை” என்பதில் கருத்து உண்டு எனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.