அண்மையில், எமது மனோ கணேசன் அவர்கள், மலையக மக்களுக்கென ஒரு தீர்வு திட்டத்தை முன் வைத்திருந்தார்: “காணி வழங்கப்படாவிடின், மலையக மக்கள், வட-கிழக்கில் குடியேறுவது சிறந்தது”.

நடந்து முடிந்த இயற்கை சீற்றத்தை அடுத்து அன்னாரால் முன்வைக்கப்பட்டுள்ள இத்திட்டம் பலருக்கும் அதிர்ச்சியை உண்டுப் பண்ண கூடியதுதான். “புலம் பெயர் நண்பர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை செயல்படுத்த, அவர் உத்தேசிருப்பதாயும் தெரிவித்துள்ளார்” (சூரியன் செய்தி சேவை: 09.12.2025).

இதனை ஆதரித்து, திரு.சுமந்திரன் அவர்களும் அறிக்கை விட்டிருப்பதாய் தெரிகின்றது. (தமிழ்வின்: 11.12.2025). இது, அண்மைக்காலமாய் வீசத் தொடங்கியுள்ள ஜேவிபியின் அலைகளில், வட-கிழக்கின் தேசியம் அள்ளுண்டு போகாமல் இருக்க தெரிவிக்கப்படும் ஒரு கூற்றாகவும் இருக்கலாம்.

இருப்பினும், இன்று உண்மையாகவே வற்ற தொடங்கிவிட்ட வடக்கின் ஜனத்தொகையை, இப்படி குடியேற்றுவதன் மூலம் பெருபிக்கும் செயல்திட்டமும் இதில், அடங்குவதாகவும் இருக்கலாம். ஆனால், மனோ கணேசனின் அறிக்கையில், இத்தகைய சமூக நலன்கள் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளனவா என்பது கேள்வியாகின்றது. காரணம், அன்னார் அவர்களின் கடந்த கால நிலைப்பாடுகள், பல சந்தர்ப்பங்களில் மிக மோசமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளதை நாம் கண்ணார கண்டிருக்கின்றோம். (சென்ற கட்டுரையில் கூட, அன்னார் அவர்கள், மரண ஊசி விசாரணை என, ஐயா விக்னேஸவரன் அவர்களுடன், அமெரிக்க படையினருடன் இணைந்தபடி, விமானம் மூலமாக, வடக்குக்கு விரைந்து சென்றது தொடர்பில் சுட்டி காட்டியிருந்தோம்).

இத்தகைய ஒரு  பின்னணியில், அன்னாரின் மேற்படி “குடியேற்ற திட்டமானது”, பலரையும் சற்று நிதானிக்கவே வைக்கின்றது. “துருவப்படுத்தும் அரசியலை” மீண்டும் வடிவமைக்கக் கூடிய இத்திட்டமானது, முற்று முழுதாய், புதியதுதான் எனவும் சொல்ல முடியாது. 1977, 1981 இனக்கலவரங்களை அடுத்து, மிக மோசமாக பாதிப்புற்ற மலையக மக்களின் மத்தியில், ஒரு காலத்தில், செல்வாக்குப்பெற்ற ஒரு திட்டமே இதுவாகும். “மலையகத்தின் தேசியத்தை” விதந்துரைக்கும் நண்பர்களுக்கும் அனேக பிரச்சினைகளை தோற்றுவிக்க கூடிய இத்திட்டமானது, விரும்பியோ விரும்பாமலோ, மலையக மக்களின் வாழ்நிலைமையை ஆழ பாதிக்கத்தக்கதுதான்.

குடியேறக் கோரப்பட்ட, அந்த தொழிலாளரின் வாழ்நிலை, சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாகி விடுமோ என்பது ஒருபக்கம் இருக்க, மறுபுறம் இங்கேயே இருக்கக்கூடிய மலையக மக்களின் செறிவையும், விகிதாசாரத்தையும் குறைந்து போக செய்து விடுவதாகவே இச்செயற்பாடு முற்றுபெறும் என்பதில் சந்தேகமும் இருக்க முடியாது. மறுபுறம், ஜேவிபியினர் புதிதாய் ஆட்சியை கைப்பற்றியுள்ள இன்றைய நிலைமையில், இந்நாட்டின் இனப்பிரச்சனையானது, ‘ஒப்பீட்டளவில்’ குறைந்த அழுத்தம் கொண்டதாக இன்று உருவெடுத்துள்ளது என்பதும் உண்மையாகின்றது.

இத்தகைய, ஓர் புதிய சூழ்நிலையில், மனோ கணேசன் அவர்களின் பிரேறிப்புகள் சமயம் பார்த்து வெளிப்படுத்தப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும், சாதுவாய் எம்மிடை தட்ட தொடங்கியுள்ளது என்பதனையும் கூறியே ஆக வேண்டும். அதாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டமானது, திருப்திகரமான ஒரு முறையில் ஜேவிபியினரால், இன்னுமே வைக்கப்படவில்லை என்பது உண்மையானாலும், இந்நாட்டின் துருப்பிடித்து போன “துருவப்படுத்தும் அரசியலானது” மீண்டும் மேற்படி பிரேரணைக்கூடு, முன்வைக்கப்படுகின்றதோ என்ற கேள்வியும் இங்கு எழவே செய்கின்றது.

கடந்த காலத்து, எமது ரணில்-ராஜபக்ச-மைத்திரி-கோட்டா ஆகியவர்களின் அபூர்வ ஆட்சியின் போது, “இத்துருவப்படுத்தும் அரசியலே” பிரஞ்ஞைபூர்வமான, கொடிகட்டும் ஓர் அரசியலாக இந்நாட்டில் நிலைக்கொண்டிருந்தது என்பது தட்டிக்கழிக்க முடியாத உண்மையாகின்றது.

இச்சூழ்நிலையில்தான், தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வும் இன்று இடம் பிடித்துள்ளது. ஆனால், இது மாத்திரமே மலையக மக்களின் இன ரீதியான கோரிக்கைகளை, திருப்தியுற செய்யும் ஒரு வேலைத்திட்டமாக இருக்க போவதில்லை என்பதும் உண்மையானதே.

அதாவது, மாகாண சபைகளுக்கான தேர்தல், நியாயமான அதிகார பகிர்வு, விகிதாசாரபடியாக அனைத்திலும் சிறுபான்மையினர் அங்கீகரிக்கப்படுதல் என பல்வேறு கோரிக்கைகள் இன்னமும் நடந்தேற வேண்டிய ஒன்றாகின்றது.

இத்தகைய ஒரு சூழலில்தான் வட-கிழக்கில் தோட்ட தொழிலாளர்களை குடியேற்றி ஆக வேண்டும் என்ற மனோ கணேசனின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாய் உள்ளது.

2

மலையக மக்கள், வட-கிழக்கில் குடியேறுவது தொடர்பில் இதுவரை தமிழ்க்கவி முதல் கலாநிதி.அகிலன் கதிர்காமர் வரை, இச்செயற்பாடுகள் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடப்படாமல் இருந்ததில்லை.

கலாநிதி.அகிலன் கதிர்காமர் அவர்கள், இம்மக்கள் எவ்வாறு ஓரவஞ்சனையாய் நடத்தப்படுகின்றார்கள் என்பதனை உதாரணங்களோடு விளக்குவார். குளத்தின் நீரானது, இம்மக்களுக்கு அருகிருந்தாலும், அதனை பாவிக்க முடியாத சூழலில், அம்மக்கள் தள்ளப்படுவதை கதிர்காமர் அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டுவார். இது குடியேறிய தோட்ட தொழிலாள மக்களின் நடைமுறை வாழ்வை சித்தரிப்பதாய் உள்ளது. ‘வடக்கத்தையான்’ என்று நடைமுறையில் விளிக்கப்படும் இம்மக்கள் கூட்டத்தினருக்கு இவ்வகை குடியேற்றமானது, மீண்டும் ஒரு காட்டை வெட்டி களனியாக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்தாலும், இறுதியில் அக்களனிகளுக்கு யாதாகுமோ அல்லது மீண்டும் ஒரு பிரித்தாளும் முறைமையின் கீழ் இவர்களை தள்ளி விடுமோ – (மீளவே முடியாத வகையில்) என்பதெல்லாம் கேள்வியாகின்றது.

இந்நிலைமையில், இம்மக்களின் பிரச்சினை ஒரு தேசிய மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் என கலாநிதி.அகிலன் கதிர்காமர் அபிப்பிராயப்படுவார்.

3

தேசிய மட்டத்தில், இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு, இரண்டு வழிகள் (கடந்த காலங்களில்) பின்பற்றப்பட்டுள்ளன. இப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள், இம்மக்கள் கூட்டத்தினர் எப்படி ஒரு பொருளியல் ரீதியான வெகுமதிகளாக திகழ்கின்றனரோ, அப்படியே, அவர்கள் மறுபுறத்தில், அரசியல் சுமையாளிகளாகவும் காட்சி தருகின்றனர் என்பார் அவர்.

இக் கூற்றை, மேற்கோள் காட்டும், நித்தியானந்தன் அவர்களும் இம்மக்களின் இருப்பை அல்லது இவர்;கள் உருவாக்கும் இப்பிரச்சினையை டி.எஸ்.சேனாநாயக்க எவ்வாறு அணுகுகின்றார் என கூறுவது தெளிவற்றே இருக்கின்றது.

பெருந்தோட்ட அமைப்பு முறை அல்லது பெருந்தோட்ட உற்பத்தி முறை என்ற பொருளியல் அடிப்படையில் இம்மக்களின் இருப்பானது ‘பொருளியல் மதிப்பு மிக்கது’ என அவர் கூறுவது புரிந்து கொள்ள கூடியது. அதாவது, “உழைக்கும் பட்டாளம்” என்ற அர்த்தத்திலேயே அவர் இப்படி கூறி இருக்க இடம் உண்டு.

டி.எஸ்.சேனாநாயக்க கூறிய இதே அர்த்தமானது, மனோ கணேசனிடமும், சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி.திருமுருகன் அவர்களின் கூற்றிலும் வெளிப்படுத்தப்படாமல் இல்லை.

திரு.மனோ கணேசன் அவர்கள், இம்மக்கள் ஆக்ரோசமாக உழைப்பர் என்று கூறுகையில் திருமுருகன் அவர்களின் கூற்றும் இதே போன்று ஒலிப்பது கவனிக்கத்தக்கது.

அதாவது, “களனியாக்கும் திட்டத்தில்” இம்மக்களின் பங்களிப்பு முக்கியமானது என இருவருமே, ஒரே வகையில் ஏற்பர்.

அதாவது, “உழைக்கக்கூடிய மக்கள்” என மனோ கணேசன் அவர்களும், “நன்மை பயப்பர்” என திரு.ஆறுமுகன் அவர்களும் கூறுவது இயல்பானதே.

இந்த பார்வையின் அடிப்படையில்தான் டி.எஸ்.சேனாநாயக்க உட்பட இந்நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும் இம்மக்களை கடந்த காலங்களில் அணுகியுள்ளனர். ஆனால், கூடவே, டி.எஸ்.சேனாநாயக்கவின் ‘அரசியல்’ பார்வையில் இவர்கள் ஒரு  ‘சுமையாக’ இருக்கின்றனர் என்று அவர் கூறுவது மிகுந்த அர்த்தமுடையது எனலாம். ஓர் இந்திய விரோத பார்வையை அல்லது ஆங்கிலேயர் அன்று சிபாரிசு செய்த ஒரு பார்வையை டி.எஸ்.சேனாநாயக்க செயல்படுத்துகின்றாரோ என்ற கேள்வி எழுவது இயல்பானது.

கார்மேகத்தை, “அசல் மனிதன்” என்று வர்ணித்த திரு.நித்தியானந்தன் அவர்களே டி.எஸ்.சேனாநாயக்கவின் அரசியல் பார்வையையும் அலச துணிந்துள்ளார் என்பது குறிக்கத்தக்கதுதான். ஆனால், திரு.டி.எஸ்.சேனாநாயக்கவின் பார்வையில், இவர்கள் ‘அரசியல் சுமைகள்’ எனும்போது அது இந்திய எதிர்ப்பு வாதத்தை மாத்திரம் உள்ளடங்குகின்றதா அல்லது அதற்கும் மேலாக இம்மக்களின் வரலாற்று மனோநிலையை, சித்தரிக்கும் போக்கும் காணப்படுகின்றதோ என்பது கேள்விக்குரிய ஒன்று. இப்புள்ளியிலேயே, இந்நாட்டின் இடதுசாரியான சண்முகதாசன் வேறுபடுகின்றார்.

சண்முகதாசன், இம்மக்கள் கூட்டத்தினரை, இந்நாட்டின் அரசியலோடு ஒன்று சேர்த்தவர் மாத்திரமல்லர். ஆனால், இந்நாட்டின் அரசியலுக்கு தலைமை தாங்க கூடிய விதத்தில், இவர்கள், ஒரு பெருந்தோட்ட அமைப்பு முறைக்கூடு, உருமாற்றம் செய்யப்பட்ட மனநிலையை உடையோர்கள் ஆவர் என்பது சண்முகதாசனின் கருத்தாகின்றது. அதாவது, இங்கேயே, வெறும் ‘உழைக்கும் பட்டாளம்’ என்பது, அரசியல் ரீதியாக உணர்வு பெற்ற ‘பாட்டாளி வர்க்கமாக’ உருவெடுக்கின்றது.எனவே, 60களில் வீசிய புரட்சிகர அலைகளில், முன்னணி பாத்திரத்தை வகிக்கும் அளவுக்கு இவர்களின் அரசியல் பங்களிப்பை அவர் அங்கீகரித்தது இயல்பாகின்றது.

வேறு வார்த்தையில் கூறினால், இப்புள்ளியிலேயே, டி.எஸ்.சேனாநாயக்கவின் பார்வையில் இருந்து, திரு.சண்முகதாசனின் பார்வை வித்தியாசம் பெறுகிறது. ஒருவர் இந்திய விரோத கண்ணோட்டத்திலும் (காலனிய ஆங்கிலேயரால் பயிற்றுவிக்கப்பட்டது) மற்றவர் புரட்சிகர மனோபாவத்துடனும் (கார்ல்மாக்ஸால் பயிற்றுவிக்கப்பட்டது) இம்மக்களை அணுகுகின்றனர். கூடவே, சண்முகதாசன் வடக்கை சார்ந்த ஒரு புரட்சியாளர் என்றாலும், இந்நாட்டின் பூகோள எல்லைகள் திரு.சண்முகதாசன் போன்றோரை எவ்விதத்திலும் கட்டுப்படுத்துவதாய் இருந்ததில்லை எனவும் கூறலாம்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் திரு.மனோ கணேசனின் கூற்றான “தோட்ட தொழிலாளரை வடக்கில் குடியேற்றுவோம்” எனும் கூற்றும் ஆயப்பட வேண்டி உளது.

4

இந்நாட்டின் “துருவப்படுத்தும் அரசியலானது”, மிகவும் பிரஞ்ஞையுடன், அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால், அவ்வப்போது அவிழ்த்து விடப்பட்ட ஒரு சங்கதியாகியது.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் எனவும், சமயம் பார்த்து அவிழ்த்து விடப்படும் இன அதிர்வெடிகள் என்பதும் (மாவனெலை, தர்கா நகர் தாக்குதல் போன்று பலதரப்பட்டவை) -இவற்றுக்கூடு- மக்களை, முஸ்லிம்கள், தமிழர்கள், கிறிஸ்தவர், சிங்களவர் என வேறுபிரித்து அறிய செய்து, அவர்களை தமது சூழ்ச்சிக்கு இரையாக்கி, ஆட்சி பீடம் ஏறுவது என்பது, இந்நாட்டின் அரசியல்வாதிகளின் கைவந்த கலையாகின்றது.

இது போலவே, (இவ் இனவாதத்தை போலவே), இயற்கை அனர்த்தங்களின் போதும், ஆட்சி பீடம் ஏறும் ஒரு வழிமுறையை கண்டுணரும் அளவுக்கு, எமது அரசியல்வாதிகள் நன்கு முன்னேறி உள்ளனர் எனலாம். அண்மைக்கால இயற்கை அனர்த்தத்தை அடுத்து திரு.சஜித் அவர்கள் ஜேவிபியினரிடம் இருந்து ஆட்சியை கோரியது போன்றே திரு.ஹக்கீமும் முன்னைய ஜனாதிபதிகளிடம், ‘சர்வதேச கொடையாளர் மாநாடு’ தொடர்பில் ஆலோசனையை பெற ஒரு பாராளுமன்ற விவாதத்தை கோரி நின்றதும் முக்கியமானது.

கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்ட இவ் அரசியல் வாதிகள் (கடந்தகால ஜனாதிபதிகள்) எவ்விதத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்க முடியும் என்பது கேள்வியாகின்றது.

சுனாமி நன்கொடைகளின் சுருட்டலின் பின்னணியில் அல்லது அம்பாந்தோட்டை துறைமுக கொள்ளையடிப்பின் பின்னணியில் ஹக்கீமினது இந்த கோரிக்கை வெறுமனே அர்த்தமற்றது என்பது வெளிப்படை. ஆனால், திரு.ஹக்கீமின் இந்த கோரிக்கையானது ஒரு உள்நாட்டு அரசியலால் மாத்திரம் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கருதாமல் இதனை ஒரு பூகோள அரசியலின் ஒரு கூறாக காண முயல்வது விரும்பத்தக்கது என கருத இடமுண்டு.

காரணம், மேற்கு அல்லது கட்டார் அல்லது சவுதி அரேபியா அல்லது ஓமான் போன்றவற்றின் தொடர்பாடலுக்கூடாக, ஹக்கீம் இந்த கோரிக்கையை முன்வைப்பதும் நடைமுறை சாத்தியமே.

இத்தகைய ஒரு பின்னணியில்தான், அருட்தந்தை திரு.சக்திவேல் அவர்கள் மனோ கணேசனின் கூற்று தொடர்பில் ஆற்றியுள்ள கூற்றை இங்கே ஆய்வது பயன்தர கூடியது.

5

மலையக மக்களை சிதைக்க பெருமுயற்சி” என்ற கட்டுரையில் அவர் தெளிவுற கூறுவார்:

“மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிப்படுத்தி வடக்கு-கிழக்கு-மலையகமாக ஒன்றுபடுவோம்”.

“மலையகமே மலையக மக்களின் தாயகம் - அங்கே சலுகைகளோடு மாத்திரமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம்” என வாதிப்பார் அவர். (தமிழ்வின்: 05.12.2025).

சுருக்கமாக கூறுவோமானால், ஒருபக்கம் மலையக மக்களை வட-கிழக்கில் குடியேற்றுவது. மறுபக்கம், மலையக தேசியத்தை மலையகத்துக்குள்ளேயே வளர்ப்பது. ஆக, இரு வேறுபட்ட அரசியல் போக்குகளுமே இங்கு காணக்கிட்டுகின்றன. ஒன்று மனோகணேசனாலும் மற்றது எமது அருட்தந்தையாலும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால்,இவ்விரு அரசியல் போக்குகளுமே எமது ‘புலம் பெயர் அரசியலால்’ கட்டி வளர்க்கப்படும் ஒன்றே என்பது எமது கருத்தில் ஆழமாக பதிக்கத்தக்கதுதான். வேறு வார்த்தையில் கூறுவதானால், மலையகத்தின் உள்ளேயே கிளர்ந்தெழ கூடிய இவ் இருவேறு வித அரசியல் போக்குகளையும் ஒருங்கே பிரதிநிதித்துவப்படுத்தி, ஒட்டுமொத்தமாய், ஒருவித அரசியலை, புலம் பெயர் சமூகத்தின் தீவிர முகம் இங்கு அரங்கேற்றுகிறது என்பதே முக்கியமாகின்றது. இது, ‘துருவப்படுத்தும் அரசியலை’ மீண்டும் விதைப்பது மாத்திரமாய் இல்லாது, வீசக்கூடிய ஜேவிபி அலையை தடுத்து நிறுத்தி, அவர்களது ஆட்சியை கவிழ்ப்பதும் இவற்றின் நோக்கமாகின்றது.

எமது அருட்தந்தையின் கூற்றில், இவ்வாசை, இழையோடாமல் இல்லை:

அனுர குமார திசாநாயக்க அவர்கள் மலையகத்தில் வீடற்றிருக்கும் 150,000 பேருக்கு கொடுப்பதற்கு போதுமான காணி மலையகத்தில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூற தொடங்கி இருக்கின்றார். இது அவர்களின் நீண்ட கால அரசியல் சித்தாந்தம். அதுவே, சிங்கள-பௌத்த கருத்தியலும் ஆகும். தற்போது அவர்கள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களை சிதைக்க முயல்வதை…. தடுத்து நிறுத்தும் முகமாக…. கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்….”

‘கலந்துரையாடல்களை’ மேற்கொண்டு…?

கேள்வி, டி.எஸ்.சேனாநாயக்க காலம் தொட்டு, ரணில்-கோட்டா-ராஜபக்ச - மைத்திரி காலம் வரை, எச்சந்தர்ப்பதிலாவது மலையக மக்களுக்கு காணியை தாரை வார்க்க சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றதா என்பதே கேள்வியாகின்றது. (தொண்டமான், ஓர் அரசியல் சாகசமாய், வீட்டுறுதியை எழுதி, நுவரெலியா மேடையில் வழங்கியது சில காலத்திலேயே பிசுபிசுத்து போன சம்பவங்கள், நடந்து முடிந்தவையே).

மறுபுறத்தில், தொழிலாள பிரச்சினை என்பது, பெருந்தோட்டத்தின் காணியை பிரித்து கொடுப்பதால் மாத்திரம் தீர்வை எட்டக்கூடுமா அல்லது வட-கிழக்கில் அவர்களை குடியேறுவதற்கூடாக இம்மக்களின் பிரச்சினையை தீர்க்கலாமா என்பது கேள்வியாகின்றது. ஏனெனில், அவை, பிரச்சினைகளை தீர்த்துள்ளனவா அல்லது மேலும் மோசமடைய செய்துள்ளதா, என்பதெல்லாம் கேள்வியாகின்றது.

இவ்வகையில், ‘மலையகத் தேசியம்’ என்ற ஒரு மாயையையும் கட்டி வளர்க்கப்படுகின்றது. முக்கியமாக அது இந்நாட்டின் தொழிலாள வர்க்க பின்னணியுடன் இல்லாமல் வெறுமனே குட்டி முதலாளித்துவ பின்னணியுடன் இருப்பது இந்நாட்டின், ‘துருவமய அரசியலுக்கு’ தீண் போடுவதாகத்தான் இருக்கக்கூடும்; என்பது பிறிதொரு விடயம்.

இதுபோலவே, மலையக தேசியம் என கனவு ரீதியில் உரைப்பது, ‘துருவப்படுத்தும் அரசியலின்’ ஆணிவேராக அமையப் போவது மாத்திரமல்ல. மாறாக, பூகோள அரசியலின் ஆணி வேராகவும் இது திகழக்கூடும் என்பதிலேயே, இதில் உள்ளடங்கும் அரசியல் அம்பலமாகிறது. மேலும், இவ் அடிப்படையிலேயே, இந்நாட்டின் தென்னிலங்கை விவசாயியும் தமிழின தொழிலாளியும் நிரந்தர பிரிப்புக்கு இங்கே உள்ளாகுவர் என்ற உண்மையும் மனங்கொள்ளத்தக்கதே.

மொத்தத்தில் மனோ கணேசனும், அருட் தந்தையும் கூறுவதினை மேலோட்டமாய் பார்க்குமிடத்து, அவை ஒன்றையொன்று விரோதிப்பது போல தென்பட்டாலும், இறுதி கணிப்பில் இவ்விரு பார்வைகளும் ஒன்றே. - இவையிரண்டும், ஒரே மறைகரத்தால் ஒன்று சேர இயக்குவிக்கப்படுவதுதான், என்பது தெளிவாகின்றது. ஆனால், இப்படியெல்லாம் கூறுவதற்கூடு இந்நாட்டில் ஓர்  இனப்பிரச்சினை இல்லை என்பதோ, அது தீர்ந்து விட்டது என்பதோ அர்த்தமாகாது.

மக்களின் ஒன்றிணைவை பிரேரிக்கும் ஒரு வழிதடம் அல்லது ஒரு பார்வை, இங்கே புதிதாய் ஜனனமாக வேண்டியுள்ளது. இப்புள்ளியிலேயே கடந்த கால சண்முகதாசனின் எழுச்சியும் சரிவுகளும் ஆழமாக கற்க வேண்டிய தேவையை சுட்டுகின்றன எனலாம்.

6

இயற்கை அனர்த்தத்தை எச்சரிப்பது தொடர்பில் இலங்கையின் வானிலை அவதானிகள் தகுந்த விதத்தில் செயல்படவில்லை - அரசுக்கு எச்சரிக்கை செய்யவில்லை என மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் விசனிப்பார். 12.11.2025 தொலைகாட்சி நிகழ்வொன்றில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வரப்போகும் இயற்கை அனர்த்தம் குறித்து கூறி இருந்தாலும், அரசுக்கு தேவையான தகவல்களை தர மறுத்திருந்ததை அவர் அண்மைக்கால பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். அவரது பார்வையில், இது உள்நோக்குடன் ஆற்றப்பட்ட அதிகாரிகளின் செயலின்மை என கருதுவதாய் தெரிகின்றது.

இந்நாட்டின் அரசியல் யந்திரமானது ஊழல்களாலும், இனவாதத்தாலும் கடந்த ஆட்சியார்களினால் (ரணில்-கோட்டா-ராஜபக்~-மைத்திரி) கட்டமைக்கப்பட்டிருந்தது என்ற அடிப்படையில், மேற்படி செயலின்மையை திட்டமிட்ட ஒரு கொடுஞ்செயல் என வரையறுப்பது தர்க்கரீதியானதே. உதாரணமாக, கடந்த கால மைத்திரியின் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் போன்றவற்றை ஒப்பு நோக்கும் போது, இலங்கையின் அரச யந்திரம் போதைபொருள் வலை பின்னலில் மாத்திரம் அல்ல – ஆனால் தீவிரமான அரசியல் நகர்வுகளின் போதும், ஆழப் பங்கேற்பது வழமையாகிறது.

எனவே, இங்கே, ஹக்கீம் மாத்திரமல்ல, சஜித் மாத்திரமல்ல ஆனால் அரச இயந்திரமே ஜேவிபியின் ஆட்சியை கவிழ்த்து விட இவ் இயற்கை அனர்த்தத்தையும் ஒரு சாதகமான சூழலாக நோக்குவதாய் அமைகின்றது.

இச் சூழ்நிலையிலேயே, தோட்ட தொழிலாளர், வட-கிழக்கில் குடியேற்றப்பட வேண்டியவர்கள் என்ற கோஷமும் எழுவதாய் உளது.

இலங்கையின் இயற்கை அனர்த்தம், இவ்வளவு மோசமாய் மக்களை பாதித்துள்ள இத்தருணத்தில், இத்தகைய கோரிக்கைகளை கிளப்புவது இனங்களுக்கிடையில் பூசலை உண்டு பண்ணுமா – அல்லது தனபாலசிங்கம் குறிப்பிட்ட – நல்ல சமிஞ்ஞைகளை காட்டும் கடப்பாடுகளை உடைக்கும் போக்குக்கு மேலும் மெருகூட்டகூடியதுதானா என்பதெல்லாம் எழக்கூடிய கேள்விகளாகின்றன.

சுருங்க கூறுவோமெனில், மனோ கணேசனின், இக்கோரிக்கையானது திட்டமிடப்பட்ட அரசியல் உள்நோக்குடன் ஆற்றப்பட்ட ஒன்றா என்பதுவே கேள்வி. அதாவது, சஜீத்துடன், ஊழல் மிகுந்த அரச யந்திரத்துடன், அல்லது முன்னால் ஜனாதிபதிகளுடன் மனோ கணேசன் கை கோர்கின்றாரா என்பதுவே கேள்வியாகின்றது. ஏனெனில், நுகேகொடை கூட்டம் (21.11.2025) முடிந்த கையோடு, இவரே ‘நாமல்’ எங்களின் தலைவர் - இனி அவரே எமது எதிர்கட்சி தலைவர் என்று கூறிய சம்பவமும் நினைவில் மீட்ட தக்கதுதான்.

முடிவுரை:

வடக்கில் குடியேறிய மலையக தமிழருக்கு (கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் என ஒரு கணிப்பு கூறுகின்றது) யாது நடந்தது என்பது இன்று வரலாற்று கேள்வியாகின்றது.

தோட்ட தொழிலாளரின் இருப்பு அல்லது அவர்களின் குணாதிசயம் குறித்த கேள்விகளை டி.எஸ்.சேனாநாயக்க முதல் இன்றைய பல்வேறு அரசியல் தலைவர்களும் கேட்காமல் விட்டதில்லை என்பதை மேலே பார்த்தோம். இங்கேயே, சண்முகதாசனின் பார்வைகளும் பங்களிப்புகளும் இது தொடர்பில் வித்தியாசப்பட்டு ஒலித்ததையும் கண்டோம்.

இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே இன்று எமது மனோ கணேசனும் அருட்தந்தை சக்திவேலும் இருவேறுபட்ட முரணான கருத்துக்களை முன்வைப்பது வாடிக்கையாகின்றது. ஒருவர் ‘தோட்ட தொழிலாளர்கள் வடக்கே குடியேற வேண்டும்’ என்று கோருகையில் மற்றவர் ‘மலையக தேசியம்’ என ஓத முற்படுகின்றார்.

இப்பின்னணியிலேயே, எமது, புலம்பெயர் அரசியலின் ஒன்று சேர்கையும் கை கூடுகின்றது. அண்மையில் நடந்த இயற்கை அனர்த்தத்தை பாவித்து, இவ்வித இன அரசியலை கட்டவிழ்த்து, அதற்கூடு ஜேவிபியின் ஆட்சி அதிகாரத்தை கவிழ்க்கும் முயற்சிகளும் நடந்தேறலாம். மேலும், மனோ கணேசன் அவர்கள், ‘நாமலை’ விதந்துரைத்த இதே நாட்களில்தான், திருகோணமலையில், புத்தர்சிலை விவகாரமும் சூடு பிடித்தது. இந்த பின்னணியில் மேற்படி மனோ கணேசன் மற்றும் அருட்தந்தை சக்திவேல் ஆகிய இருவரின் கூற்றுக்களையும் நாம் வைத்து நோக்குவது பயன்தரக் கூடியது.14:56:22