எனது கவிதை வரிகளை அவரிடம் வாசித்து காட்டினேன்:

‘காளான்கள் இருக்கவில்லை

துவாரங்கள் மட்டுமே…

ஈரமுடன்,

காளான் மனம் வீசுவதாய்…’

‘நல்லது. மிக மிக நல்லது. நல்ல அவதானிப்பு’

திடீரென ஒரு குழிமுயல் எம்மை வெறித்து பார்த்து கொண்டிருப்பதைக் கண்டோம்.

பெரிதும் கிளர்ச்சியடைந்த அவரது கன்னங்கள் சிவப்பாய் மாறின. வாய்விட்டு கத்தினார். பின் என்னைத் திரும்பிப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார். இச்சிரிப்பானது புத்தி பூர்வமானதாகவும் மிகுந்த மனித நேயம் கலந்திருப்பதாகவும் எனக்குப் பட்டது. என் உள்ளம் அவரைக் கட்டியணைத்தது.

இன்னும் ஒரு சமயம்: வானில் ஓர் பருந்து வட்டமிட்டது. திடீரென அது அசைவின்றி நின்றது. அதனது இறக்கைகள் மெதுவாக அசைந்தன அல்லது அசையாதிருந்தன - இப்போது பாய்வதா அல்லது பொறுத்திருப்பதா என்று நின்று, நிதானிப்பது போல. டால்ஸ்டாய் அவரது கரங்களைக் கண்ணுக்கு மேல் வைத்து உற்றுபார்த்து விட்டு கூறினார்: ‘திருட்டு நாய்… கோழிகளா உன் இலக்கு… வண்டிக்காரனைக் கூப்பிடுவோம்… அவன் பார்த்துக் கொள்வான்’

வண்டிக்காரனைக் கூப்பிட்ட சத்தத்தில் பருந்து பயந்து அவ்விடத்தை விட்டு அகன்றது.

டால்ஸ்டாய் பெருமூச்சொன்றை விட்டு முணுமுணுத்தார்: ‘கத்தியிருக்க வேண்டியதில்லை. அது தன்னாலேயே சென்றிருக்கும்…’

Tiflis பிரதேசம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, (ஜியர்ஜியாவின் ஒரு பகுதி) V.V.Flerovsky Bervi குறித்து கூறினேன் (1829-1918வெறுமைவாதி)

‘அவரை உனக்குத் தெரியுமா’ என்று ஆவலோடு கேட்டார்.

‘அவரைப் பற்றி எனக்குச் சொல்வாயா’.

உயரமானவர். மெலிந்தவர். பெரிய கண்களுடன் பாய்மரத் துணியால் தைக்கப்பட்ட மேலங்கியை அணிந்து, இடைவாரில், சிவப்பு வைனால் வேக வைக்கப்பட்ட மிக சிறிய சோற்று மூட்டையைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு, கையில் ஒரு பெரிய குடையுடன் உலகைச் சுற்றிவரப் புறப்பட்டு விடுவார். ஒருமுறை Transcaucasus மலைகளின் குறுகலான வழியில் ஏறும் போது, திடீரென தோன்றிய முரட்டு மாடு ஒன்று எம்மைப் பயமுறுத்தியது. அவர், உடனடியாகக் குடையை விரித்தபடி பின்நோக்கி மெது மெதுவாகச் சென்றார். மோசமான பள்ளத்தில் விழுந்து விடலாம் என்ற அபாயத்தையும் பொருட்படுத்தவில்லை அவர். டால்ஸ்டாயின் கண்களில் ஈரம் கசிந்தது. கண்ணீர் முட்டுவதைக் கண்டேன். சுதாகரித்தப்படி கூறினார்: ‘அதனைக் கண்டு கொள்ளாதே. சொல். மேலே சொல். நல்ல மனிதர்களை பற்றி கதைப்பது நலமே’.

‘எவ்வளவு ரசனை மிக்க மனிதராக அவர் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான், அவரை நான் கற்பனை செய்தும் வைத்திருந்தேன். அவர் காலத்து, தீவிர எழுத்தாளர்களின் மத்தியில் மிகுந்த ஆரோக்கியமாகவும், புத்தி பூர்வமாகவும் எழுதியவர் அவரே. அவரது ABC நூலில் இந்த முதிர்ச்சி தெளிவாக தெரிகின்றது. (The ABC of Social Sciences:1871). எமது முழுப் பாரம்பரியமுமே அநாகரீகமானது எனும் கருத்து அவருடையது. எங்கள் கலாசாரமானது, பலமான சமூகத்தில் இருந்து வெளிப்படுவதாய் இல்லாமல், பலமிழந்த சமூகத்தாராலேயும், அமைதியான இன குழுக்களாலுமே பிறப்பிக்க படுகின்றது எனும் கருத்தை உடையவர். வாழ்தகவுக்கான போராட்டம் என்பது உண்மையில் வஞ்சனையை மறைக்கக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஓர் தந்திரமே எனவும் கூறுவார். நீ இதனை நிச்சயம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பதை அறிவேன். ஆனால், Daudet ஏற்றுக் கொண்டார். (பிரெஞ்சு நாவலாசிரியர்). இதே போன்றதுத்தான் Paul Astierரும்’.

‘Fet இன் தத்துவத்தை, ஐரோப்பிய வரலாற்றில் நோமன்களின் பாத்திரத்தோடு எப்படி ஒத்திசைப்பது? (Normans)’

‘நோமன்கள் - அவர்கள் வித்தியாசமானவர்கள்’

அவரிடம் உடனடியாக ஒரு பதில் இல்லாத சமயத்தில் அவர் கூறுவது: ‘அது வித்தியாசமானது’ என்பதே.

இலக்கியத்தைப் பற்றி அவர் கதைப்பதை விட, அவ்விலக்கியத்தை உருவாக்கிய மனிதர்களைப் பற்றி கதைப்பது அவருக்கு ஈடுபாடானது. அதிகமாக அவர் கேட்பது: ‘அவரை உனக்குத் தெரியுமா? அவரை நீ அறிவாயா? அவர் எப்படிப்பட்ட ஆள்? அவர் பிறந்தது எங்கே? அந்நபர் குறித்த அவரது சம்பாசனைகள் கிட்டத்தட்ட அந்நபரை ஒரு வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டுவதாய் இருந்தது.

கொரெலென்கோ (V.G.Korolenko) பொறுத்து சிந்தனையுடன் கூறினார்: ‘அவர் ஒரு உக்ரேனியன். ஆகவே நாங்கள் எங்கள் வாழ்க்கையைப் பார்ப்பதை விட அவர் நுணுக்கமாக அதனைப் பார்க்ககூடியவரானார்’.

செக்கோவை பற்றிக் கூறினார்: ‘அவரது தொழில் அவரைப் பாழாக்கி விட்டது. அவர் ஒரு மருத்துவராக இல்லாதிருந்தால், இன்னும் நன்றாகவே எழுதியிருப்பார்’.

‘நீ ஒரு கனவு காண்பவன். உனது Kuvaldas மற்றும் ஏனைய படைப்புகளும் உனது கண்டுப்பிடிப்புகளே’.

‘சொல். நீ அவனை எங்கே எப்போது சந்தித்தாய்!’.

கசான், அரச உத்தியோகத்தரின் அலுவலகத்தில், அவனை இச்சூழ்நிலையில் கண்டேன் என்பதை நான் வர்ணித்தது, அவருக்குப் பெருத்த வேடிக்கையானது.

‘உயர் குடி மக்கள் - உயர் குடி!’ சிரிப்பால் அதிர்ந்த அவர், சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்: ‘என்ன வேடிக்கையான ஆசாமி நீ? எழுதுவதை விட, கதைகளைத் திறம்படச் சொல்கின்றாய் - நீ ஒரு கனவு ஜீவிதான் - சந்தேகமேயில்லை –அதாவது, கண்டுபிடிப்புதான் - ஏற்றுக்கொள்’.

அனைத்து எழுத்தாளர்களும் ஒரு வகையில் கண்டுபிடிப்பாளர்களே. அதாவது ஓரளவில் அவர்கள் கோர்த்து விடவே முயல்கின்றார்கள். உண்மையில் அவர்கள், மனிதர்களை எப்படி நாளாந்த வாழ்வில் காண விரும்புகின்றார்களோ, அப்படியே படைத்தும் விடுகின்றார்கள். நான் கூறினேன்: ‘தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாந்தரை, தீமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மாந்தரை, தமது சக்தி எல்லாவற்றையும் திரட்டி இச்சமூகத்தின் வன் செயல்களை எதிர்க்கும் நபரை நான் படைக்கத் துணிவேன்...’.

‘ஆனால் வன் செயல் என்பதே தலையாய தீமைதான். இதிலிருந்து எப்படி மீளப் போகின்றாய் எழுத்தாளனே… ‘எனது பயணத் தோழன்’ (My Travelling Companion) - இது ஓர் கண்டுபிடிப்பு அல்ல. இயல்பானது. சிறப்பானது. காரணம் இது உன் சிந்தனையில் இருந்து இது உதித்ததல்ல. நீ கண்டுபிடிக்க முயற்சிப்பதனாலேயே Amadises, Siegfrieds போன்றோர் தோன்றுகின்றனர்’.

‘என்ன செய்வது. குரங்குகள் போன்று, எம்மைச் சுற்றிப் ‘பயணத் தோழர்கள்’ சுற்றும் போது நாம் கட்டும் அனைத்தும் வெறும் மணலில் கட்டுவதுதான். ஓர் பகைச் சூழலில் கட்டுகின்றோம்’.

சிரித்துக் கொண்டார். முழங்கையில் என்னை மெதுவாக நைத்தார்: ‘மிக மிக பயங்கரமான முடிவுகளை இதிலிருந்து நாம் பெறக் கூடும். நீ உண்மையான சோசலிஸ்ட்டும் கிடையாது. கற்பனாவாதி-கற்பனாவாதிகள் என்போர் முடியாட்சிக்கு ஆதரவானவர்களே – என்றும், எப்போதும்’.

‘விக்டர் ஹியூகோ (Victor Hugo)’.

‘அவர் வித்தியாசப்பட்டவர். அவரை எனக்கு பிடிப்பதில்லை. வெறும் கூச்சல்’.

அவர் அடிக்கடி எனது வாசிப்பு குறித்து வினவி வைத்துக் கொள்வது வழக்கம். தவிர்க்க முடியாமல், அவரது பார்வையில், மோசமான நூல்களை நான் வாசிப்பதாய் அவர் திட்டுவது வழமை. ‘கிப்பன்ஸ் (Gibbon’s) கொஸ்டமோரோவை விட (Kostomarov) மோசமானவர். நீ Mommsenஐ படிப்பது நன்று. சலிப்பு. ஆனால் திடமானவர்’.

எனது முதல் நூலானது, Les Freres Zemganno என்ற பிரெஞ்சு நாவல்தான் எனக் கண்ட போது கொந்தளித்தார்: ‘பார்த்தாயா! எப்படி முட்டாள்தனமான ஒரு நாவல். ஆரம்பத்திலேயே நீ கெடத் தொடங்கி இருக்கின்றாய். முக்கிய பிரெஞ்சு எழுத்தாளர் மூவர்: Stendhal, Balzac, Flaubert - இவர்களுடன் Maupassantயும் சேர்க்கலாம். –ஆனால், செக்காவ், இவர்கள் அனைவரையும் விட திறம் படைத்தவர். Goncourts என்போர் வெறும் கோமாளிகள். நடிக்கத் தெரிந்தவர்கள். அதாவது, சிரத்தையுள்ள தீவிர எழுத்தாளர்கள் போல் நாடகம் ஆடுவர். வாழ்வை இவர்கள் நூல்களில் இருந்தே பொறுக்கி எடுக்கின்றார்கள். இந்நூல்களும், யாரோ ‘கண்டுபிடிப்பாளர்களால்’ எழுதப்பட்டவைதான். யாருக்காக இவர்களது எழுத்துக்கள் இங்கே தேவைப்படுகின்றன? யாருமே இவர்களைச் சீந்தப் போவதும் இல்லை’.

ஆனால், அனைத்திலும் அவரை நான் ஏற்பதாக இருக்கவில்லை. இது அவரை நிறையவே எரிச்சலடைய வைத்தது. வித்தியாசமான வேறுபட்ட பார்வைகளை அவர் நிராகரிப்பார். அவரது வாதங்கள், சில வேளைகளில் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டது போல் இருக்கும். ‘சீர்கேடு அல்லது சிதைவு அல்லது தரம் தாழ்தல் எனக் கூறப்படுவதில் உண்மை ஒன்றும் இல்லை. (Degeneracy) அவை யாவுமே, அந்த இத்தாலியர் Lombrosoவின் கண்டுபிடிப்புத்தான். மேலும் அந்த யூத தலைவன் Nordau அதனைக் கிளிப்பிள்ளை போல மீளச் சொன்னான். (1849-1923). இத்தாலியானது ஏமாற்றுப் பேர்வழிகளாலும் சாகசகாரர்களாலும் நிறைந்த ஒருவகை நாடு. Aretinos, Casanovas, Cagliostros போன்றவர்கள் அங்கேதான் உதிக்ககூடும். (Aretinos :நாடக ஆசிரியரும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சார்ந்தவராகவும் இருந்தார் (1492-1556)Casanovas: ஊர்சுற்றி –சுயசரிதை எழுதியவர்-(1825-1798) – Cagliostros: கோமகன். ஆவிகளை பற்றி பயின்றவர். மந்திரம் தெரிந்தவர். ஏமாற்று பேர்வழி)’.

‘அப்படியென்றால் கரிபால்டி?’

‘அது வித்தியாசமானது! அது அரசியல்’

வேறு பல உண்மைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கினேன் - ரஷ்ய வர்த்தகக் குடும்பங்களின் வரலாறு முதல்…

‘அவை உண்மை அல்ல. தேர்ச்சியான நூல்கள் அவற்றை வெளிப்படுத்தி விடும்…’.

‘எனக்குத் தெரிந்த ஒரு வர்த்தகக் குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் குறித்துக் கூறினேன். அதில் சிதைவு (Degeneration) என்பது தீவிரமாகச் செயற்பட்ட ஒன்று. என் சட்டைக் கைப்பகுதியைப் பிடித்து இழுத்தவாறே கிளர்ச்சியுற்றுக் கூறினார்: ‘உண்மை. அத்தனையும் உண்மை. நானே அவ்வாறான குடும்பங்கள் இரண்டு மூன்றை அறிவேன். இதை, நீ எழுத வேண்டும். இதை நீ எழுதத்தான் வேண்டும். ஒரு பெரிய நாவல் - இறுக்கமானது – விளங்குகின்றதா? அப்படித்தான் அது எழுதப்படல் வேண்டும்…’.

அவரது கண்கள் ஆர்வத்துடன் பளபளவென்று மின்னுவதைக் கண்டேன்.

‘ஆனால் அவர்கள் அனைவரும் அரச குடும்பத்தால் பட்டம் வழங்கப் பெற்றோரே’. (Knights).

‘அது அல்ல விடயம். சிரத்தை மிக்க ஒரு விடயம். ஒருவன் மதகுருவாகின்றான். இனி குடும்பத்துக்காக அவன் பிராத்தனை செய்யலாம். அதாவது, நீ பாவம் செய். நான் பிராயச்சித்தமாய் வணங்குகின்றேன் - உன் பாவங்கள் களைய. அது அற்புதமானது. முற்றும் முழுதான வாழ்வு. மற்றவன் - அந்தச் சலிப்புற்ற வழிப்பறிக்காரன் - அதுவும் உண்மைதான். குடிப்பதும், மிருகம் போல் அலைந்து திரிந்து காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதும் அனைத்துப் பெண்களையும் காதலிப்பதையும், பின் திடீரென கொலை செய்வதும் - அற்புதமானது இது. இதை நீ எழுதத்தான் வேண்டும். வெறுமனே கதாநாயகர்களைத் திருடர்களிடம் இருந்தும் ஊர்ச்சுற்றிகளின் மத்தியில் இருந்தும் உருவாக்காமல் - அதாவது கண்டுபிடிக்காமலும் - இதை நீ எழுதத்தான் வேண்டும். மக்கள் மாத்திரமே உண்மையானவர்கள். கதாநாயகர்கள் என்போர் வெறும் கண்டுபிடிப்புகளே’.

அவர் அடிக்கடி எனது கதையில் புகுந்துள்ள மிகை கூற்றுக்களை சுட்டிக் காட்டினார். ஒருமுறை, Dead Soulsஇன் இரண்டாம் பாகத்தை வாசித்த அவர் ஆமோதித்துச் சிரித்தவாறே கூறினார்: ‘நாங்கள் அனைவருமே ஒரு வழியில் முற்றான கற்பனாவதிகள்தான். நானும் தான். சில சமயங்களில், எழுதிச் செல்லும்போது யார் ஒருவர் மீதோ பச்சாதாபப்பட்டு அவனுக்குச் சிறந்த கம்பீரங்களை வழங்கத் தீர்மானித்து விடுவோம். மற்ற பாத்திரங்களோடு ஒப்பிடும் போது இது அவர்களைக் கீழ்மைப்படுத்துவதாக இருக்கும் - அவர்களும் ஜொலிக்காமல் விடுவர்…’.

‘இதனால்தான் கூறுவேன்’ அவர் மிக தீவிரமாகப் பேசத் தொடங்கினார்: ‘கலை என்பது பொய் என்றும், ஏமாற்று என்றும், தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்றும் மொத்தத்தில் மனு குலத்திற்கு ஆபத்தானது என்றும் கூறுகின்றேன். நீ, வாழ்வை எப்படி இருக்கின்றதோ – அப்படி காட்டுவதில்லை. வாழ்வு எப்படி இருக்க வேண்டும் - அது பொறுத்து உனது கருத்து என்ன - இவற்றையே நீ முன்னிறுத்த முனைவாய். ஒரு கோபுரம் எவ்வாறு இருக்கின்றது – அல்லது கடல் - அல்லது ஒரு Tatar. யாருக்கு வேண்டுமாம் இவை? இவற்றின் பயன் என்ன?’.

சில வேளைகளில் அவரது சிந்தனையும் பேச்சும் ஏதோ மனம் போன போக்கில் ஆற்றப்படுவதாகவும், திரித்துக் கூற முற்படுவது போலவும் இருக்கும். ஆனால், அவரது தீர்மானமான, உக்கிர நேரடி பேச்சுகளைக் கேட்பவர்கள் இவற்றால் ஆழப் பாதிக்கப்படுவர் - கேட்பவர்களைத் தாக்கி விடும். Job என்பவன் குரூர கடவுளைப் பயமற்று விசாரிக்கும் பண்பைத்தான் அவரிடம் கண்டேன்…’.

உலகில் பலதும் நடக்கலாம். Bogomils எனும் தேவதை, சாத்தான், மனிதனை மிகவும்தான் துன்புறுத்துகிறான் என்பதால், சாத்தானிடமிருந்து அனைத்து சக்திகளையும் பறித்து விட்டாள் - ஆனால், அவனது வேட்கைகளையும் தாபங்களையும் அவனிடமே விட்டு விட்டாள், தொடாது. அனைத்து ஜீவராசிகளுக்கும் இது உண்மையாகின்றது. மனிதன் மாத்திரமே இச்சைகளினால் விளையும் வெட்கத்தையும் கோரத்தையும் உணரக்கூடியவனாக இருக்கின்றான். நாங்கள் அனைவரும் இந்தத் தண்டனையை ஒரு வழியில் அனுபவித்து வருகின்றோம். – ஆனால் எந்தப் பாவச் செயலுக்காக?’.

பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது கண்கள் மாறும். சில சமயங்களில் குழந்தைகள் போன்றும், சில சமயங்களில் கடுமையாகி வரட்சி மிக்கதாய் மாறும். அவரது உதடுகளும் சடுதியாய் வெட்டி இழுக்கும். மீசை துடிக்கும். பேசி முடித்தவுடன், தன் அங்கிக்குள் கையை விட்டு கைக்குட்டையை எடுத்து, முகத்தை அழுந்தத் துடைத்துக் கொள்வார். அது ஈரமற்று இருந்த போதிலும். பின் அவர் ஓர் விவசாயியினது இரும்பு போன்ற விரல்களை, தாடியில் வைத்து மெதுவாய்க் கோதியபடி கூறுவார்: ‘ஆம். என்ன பாவத்திற்காக…’.

ஒருமுறை நான் அவருடன் நடந்து கொண்டிருந்தேன்…

‘எமது தசையானது, எமது ஆன்மாவினால் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நாயாக இருத்தல் வேண்டும். நாய் பின்னால் ஓடி வர வேண்டும், வெறுமனே. ஆனால், எங்களைப் பார். தசை முரண்டு பிடிக்கின்றது – அமைதியற்று. கீழ்படியாது. ஆன்மாவோ வெறுமனே அதைப் பின் தொடர்கின்றது – பரிதாபமாய், ஆதரவற்று’.

‘ஒரு மாலையில் இலையுதிர் காலத்தில், ஒரு பெண் குடித்துவிட்டு, ஒரு சாக்கடையினுள் விழுந்து கிடப்பதைக் கண்டேன். என்னால் உதவி செய்ய முடியவில்லை. ஒதுங்கிக் கொண்டேன். மெலிந்தவள். முழுவதுமாய் நனைந்திருந்தாள். அவளைத் தொட்டு விட்டால், ஒரு மாதத்திற்கு உனது கரங்களும் அழுக்காகவே இருக்கும்… அங்கிருந்த நடைபாதை கல்லில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அவனது கண்கள் இரண்டிலிருந்தும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. மூக்கை உறிஞ்சியவாறு சத்தம் வைத்து அழுதான்: ‘அம்மா… எழும்பு…’. அவ்வப்போது அவள் அசையவே செய்தாள். கரங்களை அசைத்து தலையைத் தூக்கத் தெண்டித்தாள் - ஆனால், அது மீண்டும் அழுக்கிலேயே சாய்ந்தது…’.

‘கோரம்… அப்படியான ஒரு கோரம்… நீ, நிறைய குடித்துவிட்டு சாயும் பெண்களைப் பார்த்திருக்கின்றாயா? ஓ… கடவுளே… அவைகளை எழுதி விடாதே… உண்மையாகத்தான்…’.

‘ஏன்?’

என்னை எனது கண்ணினுள் பார்த்து மெதுவாய்ச் சிரித்தப்படி நான் கூறியதையே எதிரொலித்தார்: ‘ஆம். ஏன்?’.

பிறகு அவர் மெதுவாகவும், சிந்தனையுடனும் தொடர தொடங்கினார்: ‘எனக்குத் தெரியவில்லை… ஒருவேளை… வெட்கம் காரணமாய் இருக்கும் - இந்த மிருகத்தனங்களைப் பற்றி எழுதுவதென்றால்… ஆனால், ஏன், ஒருவன்…? அனைத்தையும் பற்றியும் எழுதத்தான் வேண்டும்…’.

அவரது கண்களில் நீர் முட்டத் தொடங்கியது.

அவர் அதனைத் துடைத்துக் கொண்டார், சிரித்தவாறே.

தன் கசங்கிய கைக்குட்டையையும் நோக்கினார். அவரது கண்ணீர் அவரது கன்னங்களில் வழிகிறதை அவர் பொருட்படுத்தாமல்.

‘நான் அழுகிறேன் போலும்… வயதாகி விட்டதால் இதயம் அவற்றைத் தாங்கிக் கொள்ள மறுக்கின்றது - இவ்வளவு கோரத்தையும்…’.

மெதுவாக என்னை தனது முழங்கையால் இடித்தப்படி கூறினார்: ‘நீயும் வாழ்ந்து முடிப்பாய். அனைத்துமே மாறாது. அப்படியே இருக்கக் காண்பாய். அன்று அழுவாய். என்னை விட மோசமாய். கசந்து, சாதாரண மொழியில் ‘தேம்பித் தேம்பி ஓலமிட்டு’. ஆனால், அனைத்துமே எழுதப்படத்தான் வேண்டும். அனைத்துமே. கல்லில் அமர்ந்திருந்த அச்சிறுவன் பாதிக்கப்பட்டு விடுவான் - அது உண்மையல்ல என்பான். அதாவது, முழு உண்மை அல்ல என்றால் அவன் உன்னையும் என்னையும் தூற்றவும் கூடும், இதனால்’.

அவர் தன்னை ஒரு அதிர்ச்சி வைத்தியத்துக்கு உள்ளாக்கி உலுக்கி எடுத்தார். பின் என்னிடம் ஆறுதலாகக் கூறத் தொடங்கினார்:

‘சரி. இப்போது சொல். சொல்வதில் நீ பெரும் திறமைசாலிதானே. ஒரு குழந்தையைப் பற்றிச் சொல். அல்லது உன்னைப் பற்றி… நீயும் ஒரு காலத்தில் குழந்தையாய் இருந்தாய் என்பதை நம்ப முடியாமல் இருக்கின்றது. வித்தியாசமானவன் நீ. பிறந்தபோதே நீ வளர்ந்திருந்திருப்பாய் என்றே நினைக்கின்றேன். ஆனால் உனது சிந்தனை உலகானது வளர்ச்சியற்றதாய் குழந்தைத்தனம் நிரம்பியதாகவும் காணப்படுகின்றது. உண்மைதான். இருந்தாலும், வாழ்வைப் பற்றி, உனக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கின்றது. இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. சரி. சொல், இப்போது… எதைப் பற்றியாவது…’.

ஒரு பைன் மரத்தின் வெளிக்கிளம்பியிருந்த பருத்த வேரின் மீது வசதியாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டு பைன் மரக் காடுகளில் சுற்றித் திரியும் சின்னஞ்சிறு எறும்புகளை பார்வையிடுவதில் அக்கறை செலுத்தினார். ஒரு வடபுலத்து மனிதனின் பார்வையில், இத்தனைச் செழுமையுடன் அடர்ந்ததாய்க் காணப்படும் இந்தத் தெற்கினது பசுமை நிறைந்த காடுகளில் லியோ டால்ஸ்டாய் என்ற இம்மனிதர், அவரது உள்ளார்ந்த ஆன்ம சக்தியானது வலிமையுடன் பிரகாசிக்க - இதோ, இங்கே அமர்ந்திருக்கின்றார் - தன் வேர்களை மண்ணில் ஆழப் பதித்திருக்கும் இம்மனிதன், பட்டொளி வீசும் இக்கிரைமியாவின், இந்நிலப்பரப்பில், நான் மீண்டும் சொல்வேன், இதோ அமர்ந்திருக்கின்றார் - தனக்கேயான பொருத்தமான ஒரு இடத்தில் - பொருந்தாத வகையில்.

இவர் ஒரு பழங்காலத்து மனிதன். கிராமத்து வாழ்வின் நிபுணன். ஒரு நூறு வருடத்தின் பின் தானே நிர்மானித்த ஓர் அமைப்பின் பின்னணியில்… இவர் கடந்திருக்கக் கூடிய பாதையில், பலவற்றையும் இவர் மறந்திருக்கலாம்… சில இவருக்குப் புதிதாய் தோன்றவும் கூடும்… அவற்றில் ஒரு சில பொருத்தமானதாயும், ஒரு சில பொருந்தாதவையாகவும் தோற்றம் கொள்ளலாம். ஆனால், இவற்றை உடனடியாக கண்டு கொள்வதும் அவற்றுக்கான காரணங்களை உடனடியாகத் தேடுவதும் தேவையாகின்றது. அவர் வேகமாக நடக்க வேண்டியுள்ளது. மேழும் கீழும் - நிமிர்ந்த நடையில்… ஓர் சுறு சுறுப்பான பயணியைப் போல்… அவரது சீறிய துடிப்பான, கூர்மையான கண்கள் முழுமையாகப் பார்த்து, ஒப்பிட்டு, அளந்து, பரிசோதித்து…

அவரைச் சூழ இருப்பவற்றைப் பற்றி ஓயாது சிந்திக்கும் அவர்…Sulerரிடம் சொன்னார்:

‘நீ வாசிப்பதே இல்லை Suler. அது மோசமானது. இது தன்னை உயர்வாகக் கருதி கொள்ளும் போக்கின் பிரதிபலிப்பு. மறுபுறத்தில், இதோ கார்க்கி. இவன் அத்தனையையும் அளவு கடந்து கற்பவனாக இருக்கின்றான். இதுவும் கேடானது – முறையற்றதே. தன்னில் நம்பிக்கை வைக்காததின் விளைவு இது. மறுபுறத்தில் நான் எழுதி குவித்து கொண்டிருக்கின்றேன். பலரும் நினைப்பது போல் முதுமையில் விளைந்த பிசகால் இது ஏற்படுவதாய் இருக்கலாம். இதுவும் பிழையானதே – அனைவரையும் என்னைப் போலாக்கும் ஒரு பிழையான சிந்தனையில் இருந்து எழுவதாய்க் கூட இருக்கலாம். நான் சிந்திக்கும் முறைமையானது என்னைப் பொறுத்த வரையில் சரியானதுதான். ஆனால் கார்க்கி இதனைப் பிழை என்றே கருதுவார். ஆனால் நீ… யோசிப்பதே இல்லை… வெறுமனே கண்ணைச் சிமிட்டி விழிப்பாய் - ஏதாகிலும் உன் கண்ணில் சிக்குமா என்று. அப்படியே சிக்கினாலும் அது உன்னோடு சம்பந்தமற்றதாகவே இருக்கின்றது. நீ அடிக்கடி இதனைச் செய்கின்றாய் என்பதையும் கூறியாக வேண்டும். செக்காவ் எழுதிய The Darling – ஓர் அற்புதமான கதை. அதில் வரும் பெண் பிள்ளையைப் போல இருக்கின்றாய்.. நீ’.

‘எப்படி’ – சிரித்தார் Suler.

‘நீ எப்போதுமே காதலிக்கத் தயாராக இருக்கின்றாய்… ஆனால் தேர்ந்தெடுத்துக் கொள்ளத் தெரியாதவன். உனது சக்திகளை எல்லாம் சிறுமையிலும் சில்லறையிலும் விரயமாக்குகின்றாய்…’

‘அனைவருமே அப்படித்தான்… இல்லையா?’

‘அனைவருமே…?’ டால்ஸ்டாய் கூறினார்: ‘இல்லை. அப்படி ஒன்றும் இல்லை. திடீரென என்மேல் பாய்ந்தார்: ‘கடவுளை நீ நம்புவதில்லை’.

‘எனக்கு நம்பிக்கையில்லை லியோ டால்ஸ்டாய் அவர்களே’.

‘பொய். நீ நம்பிக்கையுள்ளவன்தான் - இயல்பாகவே. கடவுள் இல்லாமல் நீ கரையேற முடியாது – தொடரவும் முடியாது. சீக்கிரமே இதை நீ உணரத் தலைப்படுவாய். பிடிவாதத்தின் காரணமாகவே நீ நம்ப மறுக்கின்றாய். உலகம் நீ விரும்பும் வகையில் படைக்கப்படவில்லை என்ற எரிச்சல் உனக்கு. நம்ப மறுக்கும் சிலர் வெறும் வெட்கத்தால்தான் நம்ப மறுக்கின்றார்கள். இளைஞர்கள் சில சமயங்களில் அத்தகைய செயல்களுக்கு அடிமையாகின்றார்கள். ஆனால், அவர்கள் பெண்களை வணங்குபவர்களாயும் அதனை வெளிக்காட்ட முடியாமலும் இருக்கின்றார்கள். தாங்கள், பிழையாக விளங்கிக் கொள்ளப்படலாம் என்ற பயம் அவர்களுக்கு. மேலும் அவர்களிடம் துணிவும் குறைவானதே. நம்பிக்கை என்பது காதலைப் போன்றது. துணிவும் தைரியமும் தேவைப்படும் ஒன்று’.

‘நீ உன்னிடம் கூறிக் கொள்ளத்தான் வேண்டும்: ‘நான் நம்புகிறேன்’ என. அனைத்துமே உனக்குச் சரியானதாக பட்டுவிடும். அனைத்தையுமே நீ காதலிக்கத் தொடங்கி விடுவாய். அனைத்துமே உனக்கு விளங்கி விட்டதாய்த் தென்பட்டு விடும்’.

‘நீ காதலிக்கக் கூடிய பலதும் உண்டு. நம்பிக்கை என்பது உனது காதலிக்கும் அளவை காட்டும் ஒன்றாகவே இருக்கின்றது. காதலின் உக்கிரத் தன்மையை இது அதிகரிக்கின்றது. நீ காதலிக்கக் காதலிக்க அது உன்னை நம்பிக்கையில் கொண்டுபோய்ச் சேர்த்து விடும்’.

‘உலகத்தில் தலை சிறந்த பெண்ணைத்தான் அத்தனை ஆடவரும் காதலிக்கச் செய்வார்கள் - அத்தனைப் பேரும்தான் - இது எதனைக் காட்டுகின்றது? - இதுதான் நம்பிக்கை என்பது. நம்பிக்கை இல்லாதவன் காதல் கொள்வதில்லை. அவன் ஒருத்தியை இன்று விரும்பலாம் - ஆனால் ஒரு வருடத்தின் பின் வேறு ஒருத்தியின் மேல் மையல் கொள்ளலாம். ஆன்மா என்பது வெறும் ஊர்ச்சுற்றி போன்றது. அது, மலடாக இருப்பது பொருந்தாத ஒன்று. நீ இயல்பிலேயே நம்பிக்கையுடன் பிறந்த ஒரு ஆள். எனவே, இதற்கெதிராய் நீ செயல்படுவது சற்றும் பொருந்தாதது. நீ எப்பொழுதுமே ‘அழகு’ என்கின்றாய். எது அழகு? ஆக, உயர்ந்ததும் முழுமை பெற்றதுமே அழகு: கடவுள்!’.

இவற்றின் முக்கியத்துவம் குறித்து, இது வரையிலும் இவர் கதைத்ததாக இல்லை. நான் எதிர்ப்பாராத ஒன்று இது. என்னைக் கிட்டத்தட்ட, இது திக்குமுக்காடச் செய்துவிட்டது எனலாம். நான் ஒன்றுமே பேசினேன் இல்லை. அவர் வெறுமனே தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து தன் கால்களை இருக்கையின் அடியினுள் நுழைத்தார். அவரது தாடியுள் மறைந்த அவரது புன்னகை பரவுவதாய் இருந்தது. ஒரு விரலையும் என்னை நோக்கி ஆட்டுவது போல இருந்தது:

‘நீ தப்ப முடியாது – அனைத்துமே எனக்குத் தெரியும்…’ – எனக் கூறுவது போல.

கடவுள் நம்பிக்கையற்ற நானோ, அவரை வெறுமையாக, கள்ளத்தனமாய் பார்க்க முயன்றேன்:

‘இவர் கடவுள்தான்’ எனத் தீர்மானித்தேன்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.