இம்மாதம் சித்திரைப் புத்தாண்டுடன், இலங்கை வரலாற்றில் சில விடயங்கள் கவனத்திற்குள்ளாகின்றன. 2019 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மூன்று நட்சத்திர விடுதிகளிலும் சில தற்கொலைக் குண்டுதாரிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டனர். நானூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.40 வெளிநாட்டவர்களுடன் 45 பிள்ளைகளும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.

கடந்த ஆறு ஆண்டு காலத்திற்குள் அரசுகளும் மாறின, அதிபர்களும் மாறினார்கள். எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசு காலத்திலாவது உண்மைகள் கண்டறியப்படுமா? என்பதும் தெரியவில்லை. கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னர், அச்சம்பவம் நடந்த காலத்தில் அந்தப்பதவியில் இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. பிரதமராக இருந்தவர் பின்னாளில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் மாறிய ரணில் விக்கிரமசிங்கா.

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன. குறிப்பிட்ட பதவிகளில் இருந்தவர்கள் தேர்தல்களின் மூலம் மாறினர். எம்.பி. பதவியே இல்லாமல் இருந்த கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானர். அவர் வெளியேறியபோது, எம். பி. பதவியே இல்லாதிருந்த ரணில் விக்கிரமசிங்கா, சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ஜனாதிபதியானார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இவ்வேளையில் சற்று திரும்பிப் பார்த்தால், என்ன நடந்திருக்கிறது..? என்பது நினைவுக்கு வரும். அச் சம்பவங்கள் நடந்தபின்னர், அன்றைய ஜனாதிபதி மைத்திரியால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை, புதிதாக ஜனாதிபதி பதவிக்கு வந்த கோத்தபாய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதில் நீடித்த தாமதங்களினால், ஆண்டகை மல்கம் ரஞ்சித் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஜனாதிபதி பதவிக்கு வந்த கோத்தாவும், அந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். இக்குழுவின் தலைவராக அப்போதிருந்த இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அக்குழுவின் உறுப்பினர்களாக அன்றிருந்த அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டனர். காலிமுகத்திடலில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தொடங்கப்பட்ட கோத்தா கோ போராட்டத்துடன் காட்சிகள் மாறின.குறிப்பிட்ட ஆணைக்குழுவில் இருந்தவர்களுக்கு, தாமும் காலத்தை வீணடித்தோம் என்பதாவது தற்போது நினைவுக்கு வருமோ தெரியாது.

இது இவ்விதமிருக்க, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நூறு மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கும் தலா 75 மில்லியன் ரூபா செலுத்த வேண்டுமெனவும்,  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாக இதுவரையில் ஏதும் நடந்திருக்கிறதா..? என்று கேட்டால், பதில் இல்லை ! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, தமது பதவிக்காலத்தில் வெளியிட்ட ஈஸ்டர் செய்தியில், விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் எனச்சொல்லியிருந்தார்.!

இது இவ்விதமிருக்க, காலிமுகத்திடல் போராட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியானவேளையில் , அதனை முன்னெடுத்தவர்கள், மீண்டும் அத்தகைய பாரிய போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவிடாமல் தடுக்கும் வகையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை ரணிலின் அரசு அப்போது தயாரித்திருந்தது.

ஜனாதிபதி ரணிலின் அன்றைய ஈஸ்டர் செய்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என அமைந்திருந்தாலும், பொதுஜன பெரமுனை கட்சியின் எம். பி. யாகவிருந்தவரும் , முன்னாள் அமைச்சரும், கோத்தபாய முன்னர் அமைத்த குழுவில் அங்கம் வகித்தவருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அன்று தெரிவித்த ஈஸ்டர் செய்தியில், குறிப்பிட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணியிலிருந்தவர்களை மக்கள் முன்னிலையில் தூக்கிலிடவேண்டும் எனக் கூறியிருந்தார். அவர்களை மாத்திரமல்ல காலி முகத்திடல் போராட்டக்காரர்களையும் தூக்கிலிடவேண்டும் எனவும் அவர் சொல்லியிருந்தார். இந்தச்செய்திகளை முன்னைய செய்தி ஏடுகளில் விரிவாகப் பார்க்க முடியும்.

இலங்கையில் போதை வஸ்த்து விற்பனை, விநியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிப்பேன் என்றுதான் முன்னாள் ஜனாதிபதியும், 2019 இல் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின்போது அந்தப் பதவியிலிருந்தவருமான மைத்திரிபால சிறிசேனவும் சூளுரைத்திருந்தார். இறுதியில் அவருக்குத்தான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உயர் நீதிமன்றம் நட்ட ஈடு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

இக்காட்சிகளை பார்க்கும்போது, எமது முன்னோர்கள் சொன்ன வாசகம்தான் நினைவுக்கு வருகின்றது. நீதியற்ற ஊரில் நாதியற்றவள் பிள்ளை பெற்றாலாம். என்பதுதான் அந்தக் கூற்று.

இந்த அரசியல்வாதிகள், மக்களுக்கு நினைவு மறதிநோய் இருக்கிறது என நம்பிக்கொண்டு, காலத்துக்கு காலம் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இயேசு பிரான் ஆறுமணி நேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டார். வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டார். ஆறாம் மணி நேரம் முதல், ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் அந்தகாரம் பூமியை மூடிக் கொண்டது. அந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசுபிரான், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி “ என்று உரத்துச் சத்தமிட்டுக் கூப்பிட்டார் ! அதற்கு “ என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்..? “ என்று அர்த்தம். – ( மத்தேயு 27:45-46 )

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அந்த இன்னுயிர்களுக்கும், அதனால் பாதிக்கப்பட்டு இன்று வரையில் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் உறவுகளுக்கும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. யேசுபிரானைப்போன்று இவர்களும் தொடர்ந்து ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். காலிமுகத்திடல் போராட்டத்தின்போதும் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நினைவு கூரப்பட்டது. அதற்குப்பின்னாலிருந்தவர்களின் கட்சி தற்போது பதவியிலிருக்கிறது. இவ்வாறு இலங்கை அரசியலில் காட்சிகள் மாறிக்கொண்டிருக்கின்றன. நீதி மாத்திரம் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறது ! பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பிலிருந்து, நாமும் யேசுபிரானைப்போன்று “ஏலி! ஏலி! லாமா சபக்தானி “ என்று உரத்துக்குரல் கொடுப்போம் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.