‘அறிந்திரன்’ என்றொரு சிறுவர் சஞ்சிகை இலங்கையில் வெளிவருகின்றது என அறிந்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அறிந்திரன், எனச் சொல்லும் அந்தத் தலையங்கமும், சிறுவர்களுக்கு அறிவை ஊட்டவேண்டுமென்ற எழுத்தாளரின் தாகமும் என்னைக் கவர்ந்திருந்தன. ஏதாவதொன்று சிறப்பாக இருக்கின்றதெனக் கருதும்போது, அதை நேரடியாகப் பாராட்டும் என் இயல்பு, கணபதி சர்வானந்தா அவர்களை FB messenger ஊடாக அணுக வைத்திருந்தது. முகம்தெரியாத அவருடனான பழக்கம் அவ்வகையில்தான் எனக்கு ஆரம்பமாகியிருந்தது. ஒரு சில மாதங்களின் பின்னர், இலங்கைக்குச் சென்றிருந்த நண்பர் ஒருவருக்கூடாக 12 அறிந்திரன் சஞ்சிகைகள் என்னை வந்தடைந்திருந்தன. அதன் பெறுமதிக்கான பணத்தைக்கூட அவர் வாங்க மறுத்துவிட்டார். பொருளின் பெறுமதியை உணர்ந்தவர்களுடன் அதனைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பாக அது இருந்திருக்கலாம். நானும் அதை உணர்ந்திருக்கிறேன் என்பதால் சந்தோஷமாக இருந்தது.

அந்தக் கட்டத்தில், கொரோனாவின் பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் இருக்காததால், தமிழ் வகுப்புகள் (2021) மெய்நிகர் வழியில்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. அது, மாணவர்களின் மொழி ஆற்றலுக்கேற்ப அவர்களைக் குழுக்களாகப் பிரித்துச் சுழற்சி முறையில் குறித்த குழுவினருக்கு மட்டும் எவ்வித கவனச் சிதறலுமின்றிக் கற்பிக்கும் வாய்ப்பினைத் தந்திருந்தது. அதனால், தமிழ் மொழி ஆற்றல் மிக்க மாணவர்களுக்கு அறிந்திரன் சஞ்சிகையையும் அறிமுகம் செய்யக்கூடியதாக இருந்தது. கணபதி சர்வானந்தா அவர்களுடன் அதனை நான் பகிர்ந்துகொண்டபோது, அறிந்திரனில் பிரசுரிப்பதற்கு என் மாணவர்களின் ஆக்கங்களையும் அனுப்பும்படி கேட்டிருந்தார். அப்படியே அறிந்திரனில், அவர்களின் படங்களுடன் அவர்களில் சிலரின் ஆக்கங்கள் பிரசுரமாகியிருந்தபோது, அவர்களுக்கு அது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருந்தது.

அதன்பின்னர், ‘இடர் கால இலக்கியங்கள்’ என அவர் எழுதிய தொடரில் ‘ஒன்றே வேறே’ என்ற என் சிறுகதைத் தொகுப்புப் பற்றிச் சில விமர்சகர்கள் கூறிய கருத்துக்களைத் தொகுத்து எழுதியிருந்தார். சென்ற மாதத்தில் ஒரு நாள் எனக்கு அவரிடமிருந்து எதிர்பாராத அழைப்பொன்று வந்தது. இவர்கள் மகாத்மாக்கள் என்ற தனது நூலைத் தன் நண்பருக்கூடாக எனக்கு அனுப்பி வைப்பதாகக் கூறியிருந்தார். அப்படி அனுப்பும்போது, ‘மீராவின் தம்பி’ என்ற என் மும்மொழி நூலின் இரண்டு/மூன்று பிரதிகளை எங்கட புத்தகங்கள் வசீகரனிடம் பெற்று எனக்கு அனுப்பிவிடமுடியுமா எனக் கேட்டேன். உடனேயே அங்கு பெருமழை பொழிந்துகொண்டிருந்தபோதும், வசீகரனிடம் சென்று அவற்றைப் பெற்று எனக்குக் கொடுத்தனுப்பியிருந்தார். ‘ஊர்வேலைகளுக்காக ஓடிக்கொண்டேயிருப்பவர்’ என உதயன் பிரதம ஆசிரியர் பிரபாகரன் சொன்னதை நான் அவரின் முகம் பார்க்கமாலேயே பார்த்திருக்கிறேன்.

இவர்கள் மகாத்மாக்கள் என்ற அவரின் நூலைப் பற்றிக் கூறமுன்பாக, ஏன் அவரைப் பற்றிச் சொல்கிறேன் என நீங்கள் நினைக்கக்கூடும். மகாத்மா என்றால், "புனிதமான, மேலான, உயர்வான ஆத்மாவைக் கொண்டவர்" என்கிறது அகராதி. மகாத்மா என்பவர் பொதுவில் சுயநலமற்ற, சேவை மனப்பான்மை கொண்ட, சமூக மேன்மை தொடர்பான சிந்தனை மிக்க நபராக இருப்பார், முக்கியமாக ஒரு தலைவராக இருப்பார் என்பார்கள். ஆனால், இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பவர்களில், நாய்க்குட்டிக் கிழவி தவிர்ந்த மற்றையோரில் தன்னலமற்ற செயல்களை நான் பார்க்கவில்லை. அவர்கள் மற்றவர்களின் பொருள்களுக்கு ஆசைப்படாத, அறமற்ற வழியில் பெற்ற பொருள்களின் நுகர்ச்சிக்கு எதிர்ப்புக்காட்டும், பழைய கோபங்களை சாதிக்காத, நினைவிழந்துபோன மனைவியை அன்புடன் பராமரிக்கும் உயர்ந்த வாழ்க்கைப் பெறுமானங்களைக் கொண்ட மனிதர்களாகவே இருக்கிறார்கள். உண்மையில் தன்னலமற்றவர்களைப் பார்ப்பதுதான் அரிது.

தியாகம், எளிமை, மனித நேயம் என்பவற்றுடன் வாழ்பவர்களுக்கு அர்ப்பணிப்பாகப்பட்டிருக்கும் ஜீவநதி வெளியீடான 84 பக்கத்தில் இந்த நூலில் கூறப்பட்டிருக்கும் நாய் உள்ளடங்கலாக இவர் சந்தித்த 25 கதாபாத்திரங்களும் நல்லவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் நல்லவர்களாக இருப்பது என்பது அவரவரின் வாழ்க்கைப் பெறுமானங்களை, வளர்ப்பைப் பொறுத்ததாக இருக்கலாம், அல்லது கடவுள், கர்மா தொடர்பான அச்சமாக இருக்கலாம் என்பது என் கருத்து. ஆனால், மனிதர்கள் நல்லவர்களாக இருப்பதுதான் நியமமானது, அதில் என்ன அதியசம் இருக்கின்றது என்பார்கள் இங்கு வளர்ந்த என் பிள்ளைகள். மனிதர்களில் பெரும்பாலோனோர் நல்லவரே இல்லை என்பார்கள் ஒரு சிலர். ஒருவர் இன்னொருவரைக் கணிப்பது தன் இயல்பின் அடிப்படையிலேயே என்கிறது உளவியல். அது கணபதி சர்வானந்தா அவர்களைப் பொறுத்தளவில் முற்றிலும் உண்மையானதாக உள்ளது என்பதைக் காட்டவே அவருக்கும் எனக்குமான தொடர்புகளைக் குறிப்பிட்டிருந்தேன்.

கலாநிதி செல்வமனோகரன் இதுவொரு நல்ல சிறுகதைத் தொகுப்பு என்கிறார், அவர் சொல்வதுபோல இதனை நல்ல சிறுகதைத் தொகுப்பு எனச் சொல்லமுடியுமா என்பது கேள்விக்குரியது. இவை பார்வை நயங்களாக, மனப் பதிவுகளாகவே உள்ளன. ஆனாலும், கதாபாத்திரங்களும் சூழலும் நன்கு வடிக்கப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் சொல்லியிருப்பதை மீளச் சொல்வது விமர்சனமல்ல என்பதால் கதைகளுக்குள் நான் போகவில்லை. இருப்பினும் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இதிலிருக்கும், ‘தண்டனை’ என்ற கதை மிகைப்படுத்தலாக எனக்குத் தெரிந்தது. அது உண்மையிலேயே நடந்திருந்தால் அந்த மனிதனின் சுயமதிப்பு பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. தற்செயலாக பஸ் ரிக்கற் எடுக்காமல் விட்டதால், தண்டப் பணம் கட்ட வேண்டிவந்ததற்காகத் தான் தகுதியற்றவன் எனப் பொது நிறுவனங்களில் வகித்த பதவிகளை யாராவது ராஜினமாச் செய்வார்களா என அது என்னை யோசிக்கவைத்தது.

இந்த நூலில் தலையங்கம், ‘இவர்கள் மனிதர்கள்’ என்றிருந்தால் உதயன் பிரதம ஆசிரியர் சொல்வதுபோல நாமும் இவர்களைப் போல வாழவேண்டுமென மற்றவர்களைத் தூண்டியிருக்கலாமென நான் நினைக்கிறேன். ‘மகாத்மாக்கள்’ என்றதும் தங்களால் அப்படியிருப்பது முடியாத விடயமென மற்றவர்களுக்குத் தொனிக்கக்கூடும். மற்றும்படி எம்மிடையே இவ்வளவு நல்லவர்களா என அவர் ஆச்சரியப்பட்டபடி நான் ஆச்சரியப்படவில்லை. வேற்றினத்தவர்கூட, எந்தவிதமான பிரதியுபகாரமும் நோக்காது செய்த உதவிகள் பற்றிப் பொதுவெளியில் பலதடவைகள் குறிப்பிட்டு நான் நன்றிகூறியிருக்கிறேன். உதாரணத்துக்கு நெடுஞ்சாலையில் ரயருக்குக் காற்றுப்போய் எங்களின் கார் நின்றபோது யாரென்றே அறியாத ஒருவர் அந்த ரயரை மாற்றித் தந்திருக்கிறார். தவறுதலாக நான் கடையில் விட்டுவிட்டு வந்த 300 டொலரை ஒருவரும், கையிலிருந்து நழுவவிட்ட தங்கச்சங்கிலியை இன்னொருவரும் கவனமாக எடுத்துவைத்திருந்து எனக்குச் சேர்ப்பித்திருக்கிறார்கள். இவைகூட மனித நேயம், அறம் சார்ந்த நற்செயல்கள்தான்.

இப்படியான நல்லோர் இருப்பதால்தான் மனித நேயம் வாழ்கின்றது, அதையே ‘நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்கிறார் மூதுரையில் ஒளவை.

இந்த நூலில் வருபவர்கள் முஸ்லீமா, தமிழராக, சிங்களவராக என இன மத பேதமற்ற மனிதர்களாக இருக்கிறார்கள் என்பது சிறப்பாக உள்ளது. அத்துடன் பார்வை நயங்களின் முடிவில் ஆன்மீகம் பற்றிய சில வரிகளும் இடம்பெற்றுள்ளன. அவை அந்த பார்வை நயங்களைத் தொடர்புபடுத்துவதுடன் சிந்திக்கச் செய்கின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'டிஜிட்டல்'  ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி:VNG