
கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை நடத்தும் உதயன் சர்வதேச விருது விழா சென்ற சனிக்கிழமை 6-6-2026 அன்று ரொறன்ரோவில் நகெட் அவென்யூவில் உள்ள எஸ்டேட் பாங்குவிற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வருகை தந்த மனோ கணேசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஐரோப்பாவுக்கான உதயன் கலை இலக்கிய மேன்மை விருது 2026 இம்முறை இலண்டனில் இருந்து வருகை தந்த பிரபல எழுத்தாளரும், தன்னார்வத் தொண்டருமான வவுனியூர் இரா. உதயணனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கல், கலை நிகழ்ச்சிகள், இராப்போசன விருந்து போன்றவையும் இடம் பெற்றன.
வவுனியாவில் உள்ள குடியிருப்பு என்ற ஊரில் பிறந்த வவுனியூர் இரா. உதயணன் மலையகத்தில் உள்ள சென் ஜோன்ஸ், போஸ்கோ, வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி கற்றார். கணக்கியல் துறையில் பட்டம் பெற்று இலண்டன் கைத்தொலைதொடர்பு நிறுவனத்தில் நிதிப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் ‘இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம்,’ ‘இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம்’ போன்ற அமைப்புக்களின் நிறுவுனராவார்.
1985 ஆம் ஆண்டு இவரது ‘ஒரு அத்தியாயம் முடிவடைகிறது’ என்ற முதல் புதினம் தினகரனினல் வெளிவந்தது. 2008 ஆம் ஆண்டு ‘சுருதி பேதமடைகின்றது’ என்ற புதினம் நூலுருவம் பெற்று சாகித்திய மண்டலத்தின் பரிசு பெற்றது. அதைத் தொடர்ந்து விதி வரைந்த பாதையிலே, மாறுபட்ட சூழலில் வேறுபட்ட மனிதர்கள், நூலறுந்த பட்டங்கள், பனி நிலவு, உயிர்காற்று, வலியின் சுமைகள், வன்னிவலி, ஒரு வேங்கை இரை தேடுகின்றது, உதட்டுப் பூச்சுக்கள், சிறகொடிந்த வண்ணத்துப் பூச்சிகள், பாசி படர்ந்த கல்லறை வாசல் போன்ற பல புதினங்களையும் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டு இருக்கின்றார். இவற்றில் பல புதினங்கள் பரிசும் விருதும் பெற்றிருக்கின்றன. இந்தி, மலையாளம், சிங்களம் போன்ற மொழிகளிலும் இவரது ஆக்கங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல இதழான இனிய நந்தவனம் இதழின் ஆலோசனைக் குழுவிலும் இவர் இடம் பெற்றிருக்கின்றார். அவரோடு உரையாடியபோது, தமிழ் மக்களின் நலன் சார்ந்து முன்னெடுக்கும் பல விடயங்கள் பற்றியும் உரையாடினார். இலங்கையில் இருந்து வெளிவரும் ஜீவநதி இதழ் சென்ற சித்திரை மாதம் இவரைப் பற்றிச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. இவரது இலக்கிய, தன்னார்வப் பணி தொடர்ந்தும் சிறப்பாக இடம்பெற வேண்டும் எனப் பாராட்டி வாழ்த்துகிறோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.