சென்ற ஞாயிற்றுக்கிழமை 5-10-2025 அன்று கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினரால் நவராத்திரி விழா திஸ்ரில் நகர ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிராமத்துவதன நிர்வாகக் குழவினரால் வாசலில் விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேடையில் செந்தமிழ்பேரொளி பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம், வதனம் முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், செற்கோ திரு. வி. என். மதியழகன், விரிவுரையாளர் ஸ்ரீகுமரகுரு நாகேஸ்வரி, அம்மன் கோயில் முகாமையாளர் நவா கருணரட்ணராசா, திருமதி பத்மா கரு, திருமதி இராசம்மா இராசதுரை, பொறியியலாளர் திருமதி கேதா கிருபராஜன், திரு ஸ்ரீகுமரகுரு மகாதேவன், நிறுவுனர் கமலவதனா சுந்தா மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.
மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடா தேசியப்பண், தமிழ்தாய் வாழ்த்து ஆகியன இசைக்கப்பெற்று அகவணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து திருமதி வேல்விழி அருள்மாறன் அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து சரஸ்வதி பூசை இடம் பெற்றபின் ‘திருவிளக்கே தேவிபராசக்தி’ என்ற பாடலுக்கு பெண்கள் அமைப்பின் நடனக்குழுவின் நடனம் இடம் பெற்றது. அடுத்து நிறுவுனர் கமலவதனா சுந்தாவின் ‘ஓம் நமசிவாய’ என்ற பாடலுக்குத் தனி நடனம் இடம் பெற்றது.
இதைத் தொடர்ந்து ‘வதனம் - 7’ இளைய தலைமுறையினருக்கான இதழ் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது. இளையதலைமுறை வதனம் இணையாசிரியர் கீஸ் நெல்சன் தயாளன் அவர்களின் அறிமுகவுரையைத் தொடர்ந்து வதனம் நிர்வாக ஆசிரியர் கமலவதனா சுந்தாவின் நூல் அறிமுகவுரை இடம் பெற்றது. தொடர்ந்து விரிவுரையாளர் திருமதி ஸ்ரீகுமரகுரு நாகேஸ்வரி அவர்களின் ஆய்வுரை இடம் பெற்றது. அடுத்து வதனம் முதன்மை ஆசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் வெயீட்டுரை இடம் பெற்று மலர் வெளியிட்டு வைக்கப்பெற்றது.
எழுத்தாளர் குரு அரவிந்தன் ‘தேவாரப்புத்தகம் அச்சடித்துக் கொடுத்து, அதில் உள்ள தேவாரங்களை மனனம் செய்ய உதவிய கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினரையும், அதன் நிறுவுனர் திருமதி கமலவதனா சுந்தாவையும் பாராட்டி உரையாற்றினார். சுமார் 60 மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர். இது போன்று கனடாவின் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தமிழ் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் எங்கள் தமிழ் மொழி இந்தமண்ணில் தொடர்ந்தும் நிலைத்து நிற்கும் என்பதையும், தமிழ் இளையோருக்காகக் கனடாவில் தொடர்ந்து வெளிவரும் ஒரேயொரு இதழ் வதனம் என்பதையும்’ சுட்டிக் காட்டிச் சபையோருக்கு எடுத்துரைத்தார்.
திருமதி பிரியா, திருமதி அபிராமி, திரு. திருமதி பாலேஸ்வரி பிரதீபன், திருமதி ரதி செல்வம் ஆகியோர் சிறப்புப் பிதிகளைப் பெற்றுக் கொண்டனர். அடுத்து தேவாரம், திருக்குறள் மனனப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்;டன. அடுத்து தருணி செல்வம், அட்சயா ரஜீபன், யுகாக்சனா சயந்தன் ஆகியோரது தீபநடனத்தைத் தொடர்ந்து பைரவி அருள்மாறன், லதீசா தயாளன், அபினயா சிவதாசன், நிவ்யா ஜெகன்நாதன் ஆகியோரது வயலின் இசை இடம் பெற்றது. அடுத்து ‘திருக்குறள் கூறும் அறிவுரைகள்’ என்ற சிறுவர் நாடகம் இடம் பெற்றது.
சிறப்பு விருந்தினர் விரிவுரையாளர் ஐ. சண்முகநாதன், பேராசிரியர் இ.பாலசுந்தரம், நவா கருணரட்ணராஜா, சொற்கோ வி.என். மதியழகன் ஆகியோரது உரைகள் இடம் பெற்றன. அடுத்து செல்வி சசிதா நாகராசாவின் நடனம் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து மாணவி மதுரா சியாமளனின் நவராத்திரி விழா பற்றிய உரை இடம் பெற்றது. ஆசிரியர் விமலா புஸ்பநாதனின் நன்றியுரையுடன் நவராத்திரி விழா சிறப்பாக நிறைவு பெற்றது. அரங்கு நெறியாளராக இளைய தலைமுறையைச் சேர்ந்த தருண் செல்வம் இனிய தமிழில் பேசி விழாவைச் சிறப்பித்தார். வருகை தந்தோருக்கு நவராத்திரி விழா பொங்கல், வடை, மோதகம், கடலை போன்ற சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.